'ஐ லவ் யூ நமீதா!'


கவர்ச்சிப் பெருங்கடல் நமீதா நடித்து வெளியாகியுள்ள கன்னடப் படமான ஐ லவ் யூ நமிதா, நமீதா ரசிகர்களுக்கேற்ற ரகளையான விருந்தாக அமையத் தவறியுள்ளது.

ஜெயசிம்ம ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதாதான் நாயகி, நாயகன் எல்லாமே. ஆனால் அவரது பலமான கவர்ச்சியை சரிவர பயன்படுத்தாமல் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர்.

இப்படத்தை மிகத் தீவிர, வெறி பிடித்த நமீதா ரசிகர் கூட நிம்மதியாகப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு படத்தைக் கொம்புத்தனமாக எடுத்துள்ளார்கள். படத்தில் ரசிப்பதற்கோ, லயிப்பதற்கோ எதுவுமே இல்லை. இரண்டு பாடல்களில் நமீதாவை முழு நீள கவர்ச்சிக் கோலத்தில் காட்டியுள்ளனர், அவ்வளவுதான். மற்றபடி படத்தில் நமீதாவையோ அல்லது படத்தின் கதையையோ ரசிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை இயக்குநர்.

இந்தப் படத்தில் யோகா டீச்சராக வருகிறார் நமீதா. லவ் காலேஜில் (அதாவது லயோலா ஓரியன்டல் வெர்சடைல் எஜுகேஷன் காலேஜ் என்பதன் சுருக்கமாம்) செக்ஸ் வெறியால் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் யோகா ஆசிரியராக வருகிறார் நமீதா. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் போதிக்கிறார். நமீதாவின் போதனையால் மனம் மாறும் மாணவர்கள் கல்விதான் முக்கியம், காமம் பிறகுதான் என்பதை உணர்ந்து, திருந்தி, நல்ல ஸ்கோருடன் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். நமீதாவும் அங்கிருந்து திருப்திகரமாக பேக்கப் செய்கிறாராம்.

இதுதான் படத்தின் கதை. படத்தில் நமீதாவுக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியில் நனைய விட்டிருக்கின்றனர். மற்றபடி படம் முழுவதும் அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அதை அழகான கதையோட்டமாக அமைக்காமல் குப்பைத்தனமாக காட்டியிருப்பதால் படம் பப்பரப்பா என்று போயுள்ளது.

படத்தில் நடித்துள்ள பலரும் உணர்ச்சிகளை கொஞ்சம் கூட காட்டாமல் மரக்கட்டை போல நிற்பதும், பேசுவதும் பார்ப்பவர்களுக்கு கொலை வெறியை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தை தமிழுக்கும் டப் செய்து கொண்டு வரவுள்ளனர். நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...
 

இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு


தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் துணை தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வரும் 19-ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நடக்கிறது. இயக்குனர் சங்கத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த முறை தலைவராக இருந்த பாராதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ். முரளி போட்டியிடுகிறார்.

சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதேபோன்று எஸ்.பி. ஜனநாதன் போட்டியின்றி பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 இணைச் செயலாளர் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிடுகின்றனர்.
 

தமிழுக்கு வந்த இன்னொரு மாளவிகா!


கேரளாவிலிருந்து இன்னும் ஒரு கவர்ச்சிக் கடல் தமிழை நோக்கி பாய்ந்து வந்துள்ளது. பெயர் மாளவிகா வேல்ஸ்.

பெயர்தான் வேல்ஸ் என்று வெள்ளைக்காரத்தனமாக இருக்கிறதே தவிர மாளவிகா சுத்தமான மலையாளியாம்.

அறுசுவை அரசன் என்ற படத்தில் தமிழில் நடிக்கிறார் மாளவிகா. வினய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கும் மாளவிகா, தமிழில் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறி கவர்ச்சிகரமாக சிரிக்கிறார். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். விரைவில் 2வது கட்டப் படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார் மாளவிகா. படத்தில் முக்கிய வேடத்தில் கருணாஸ் நடிக்கிறாராம்.

மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படம்தான் மாளவிகாவுக்கு முதல் படம். இதில் நடிகர் சீனிவாசனின் மகன் வினீத் நாயகனாக நடித்துள்ளார்.

டான்ஸில் பட்டையைக் கிளப்பும் மாளவிகா, கிளாசிகல் டான்ஸராம். டான்ஸ் என்றால் இவருக்கு உயிராம். நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்திற்காக சம்பளத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் நடித்துக் கொடுப்பேன் என்கிறார்.

2009ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டப் போட்டியில் பங்கேற்ற மாளவிகாவுக்கு அந்தப் போட்டிதான் சினிமாவுக்கான கதவைத் திறந்து விட்டதாம். அப்போது அவருக்கு வயசு 16தானாம். போட்டியாளர்களிலேயே மிகவும் இளையவர் அவர்தானாம். அப்போட்டியில் அவர் மிஸ் அழகிய கண்களாக தேர்வு செய்யப்பட்டார். சும்மா சொல்லக் கூடாது, மாளவிகாவுக்கு படு க்யூட்டான கண்கள்தான்.

எனக்கு எல்லாமே டான்ஸ்தான், டான்ஸைத்தான் நான் காதலிக்கிறேன், சுவாசிககிறேன் என்று கூறும் மாளவிகா, நல்ல கதைகளைத் தேடி தேடி நடிக்கக் காத்திருப்பதாக கூறுகிறர்.

நடிப்பு, டான்ஸ் என்று பேசினாலும், ஐஏஎஸ் அதிகாரி ஆவதுதான் மாளவிகாவின் முதன்மையான லட்சியமாம்!.
 

ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்


வாஷிங்டன்:  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆஸ்கர் குழு மறுத்துள்ளது.

இது குறித்து அந்த குழு கூறியதாவது,

ஆஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடு்த்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான வழியில் விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது, நம்ப முடியாதது.

எங்களுக்கு இஸ்மாயில் தர்பார் பற்றி தெரியாது. அவர் எந்த ஆதாரத்தை வைத்து ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது அதை கேலியான விஷயம் என்று எடுத்துக் கொண்டதால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றார்.

இது குறித்து ஆஸ்கர் குழு வேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு முறையில் தான் விருது வழங்கப்படுகிறது. அகாடம் அதிகாரி யாராவது குளறுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பாகத் தான் நடத்தப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசை பிரிவுக்கான வாக்கெடுப்பைக் கவனித்து வருகிறது என்று தர்பாருக்கு தெரியாது.

விருது பெறுபவர்களின் பெயர்கள் இருக்கும் கவர்களை 2 அதிகாரிகள் தயார் செய்வார்கள். மேடையில் அந்த கவர்களைத் திறக்கும் வரை அது அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் கூறிய குற்றச்சாட்டு,

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.
 

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரிய ஜெ.வுக்கு நன்றி-விஜய்


சென்னை: உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும், சரி சம உரிமைகளோடும் வாழ இந்த தீர்மானம் முதல் படியாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.
 

நிலாவுக்கு ஆபாச மெயில்-போலீஸில் புகார்!


மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நிலாவுக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வருகிறதாம். இதுகுறித்து டெல்லி போலீஸில் அவர் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாபைச் சேர்ந்தவர் நிலா. இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தார். சில படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழிர் இவருக்கு மார்க்கெட் டவுன் ஆகவே டெல்லிக்குப் போய் விட்டார். தற்போது டெல்லியில்தான் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சமீப நாட்களாக தொடர்ந்து ஆபாச இமெயில்கள் வருகிறதாம். குறிப்பிட்ட ஐடியிலிருந்து மட்டும் தொடர்ந்து இந்த ஆபாச இமெயில்கள் வந்து கொண்டிருந்ததால் அப்செட் ஆன நிலா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மெயில்கள் டெல்லி மற்றும் பிரான்ஸிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளதாம்.

இதற்கிடையே, இந்த மெயில்களை அனுப்பியது யார் என்பது தனக்குத் தெரியும் என நிலா கூறியுள்ளார். ஆனால் அதை வெளியில் சொல்ல மாட்டேன். எனக்கு எதிராக செயல்படும் அவர்கள் குறித்து விரைவில் மீடியாக்களுக்குத் தகவல் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் நிலா.

நிலா தற்போது எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. வீட்டோடு ஓய்வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.