கமல்ஹாசனின் அடுத்த ஜோடி 7 வயது சிறுமி!

Kamal Haasan Next Co Star Is 7 Year Old Girl

எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.

ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும். எனவே படம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், பார்க்க கியூட்டாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான் கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயதுக் குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவ ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் என்றார்.

தனது ஹாலிவுட் படம் குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் சொன்ன கதை பேரிக்கு உடனே பிடித்துப் போய் விட்டது. உடனே ஒப்புக் கொண்டு விட்டார். மேலும் ஒரு குழந்தையும் என்னுடன் படம் நெடுகிலும் வரப் போகிறது என்பதும் அவருக்குப் பிடித்து விட்டது என்றார் கமல்.

கமல்ஹாசன் சமீப காலத்தில் ஏகப்பட்ட புதுமுக நடிகைகளுடன் நடித்து விட்டார். 22 முதல் 35 வயது வரையிலான நாயகிகளுடன் இணைந்து நடித்து விட்டார். விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா குமாருக்கு 35 வயதாம்.

விஸ்வரூபம் ஹீரோயின் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், இப்படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு வயது முக்கியம் இல்லை. அந்தப் பெண் மெச்சூர்டாக இருக்கிறாரா என்பதே முக்கியமாக இருந்தது. இதனால்தான் நான் சோனாக்ஷி சின்ஹா, சித்ராங்கதா சிங் ஆகியோரைப் பரிசீலித்தேன். எனவே வயதை விட பொறுப்பான முகமும், மெச்சூர்டான முகமும்தான் தேவையாக இருந்தது என்றார்.

 

பல நாட்களுக்கு முன்பே இறந்து விட்டாரா சில்வஸ்டர் ஸ்டாலோன் மகன்?

Sylvester Stallone S Son Dead Days Reports

சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ், பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ் தனது லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேஜின் உடல் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அதற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் வழக்கமான பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பாமல், தடயவியல் சோதனைக்கு போலீஸார் உடலை அனுப்பியிருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் உடலைப் பரிசோதிக்க வந்த டாக்டர்களும் கூட வந்த வேகத்தில் அங்கிருந்து கிளம்பிப் போயுள்ளனர். எனவே உடல் அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சேஜ், அதிகப்படியாக மருந்துகளை சாப்பிட்டிருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் வருகிறது. அவரது உடலுக்கு அருகே மருந்துகள் அதிக அளவில் இருந்துள்ளன. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

காரணம், அவர் சமீப நாட்களில் சந்தோஷமாகவும், நல்ல மன நிலையிலும்தான் இருந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எனவே இது நிச்சயம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். உடல் ரீதியாகவும் அவர் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார்.

சில்வஸ்டர் ஸ்டாலோனின் முதல் மனைவி சாஷா ஜாக்குக்குப் பிறந்தவர்தான் இந்த சேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபுதேவா படத்தில் ஸ்ருதி ஹாசன் இல்லை?

Shruti Haasan Not Finalised Prabhu Deva   

பிரபுதேவா இயக்கும் புதிய இந்திப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் குமார் தரானி கூறியுள்ளார்.

இந்தியில் பிரபுதேவா புதிய படம் இயக்குகிறார். அதில் குமார் தரானியின் மகன் கிரிஷ்தான் நாயகன். இதில் கிரிஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை குமார் தரானி மறுத்துள்ளார். இதுவரை ஹீரோயின் குறித்து முடிவு செய்யவில்லை, இறுதி செய்யவில்லை. இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள். அதன் பிறகு ஹீரோயின் குறித்துத் தெரிய வரும் என்றார் குமார்.

ஓ.கே. குமார்ஜி, முடிவு பண்ணிட்டு சொல்லுங்க.. நியூஸ் போடனும்!

 

அஜீத் படத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலாக அதுல்குல்கர்னி?

Athul Kulkarni Joins Ajith Next Film

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கப்போவதில்லை என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அரவிந்த்சாமி கேட்ட சம்பளம்தானாம்.

அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் விஷ்ணுவர்த்தன். இந்த படத்தில் அஜீத்தும் அரவிந்த்சாமியும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகின. அரவிந்த் சாமியிடம் கதை சொன்ன உடன் திருப்தியடைந்த அவர் உடனே ஒகே சொல்லி விட்டாராம். ஆனால் அவர் கேட்ட சம்பளம்தான் இயக்குநரை மயக்கமடைய வைத்திருக்கிறது. ரெண்டுகோடி கேட்டதுதான் தாமதம் தலை தெறிக்க ஓடிய விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். இப்போது அரவிந்த்சாமிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி நடித்துக்கொண்டிருக்கிறார். சம்பளம் இருபது லட்ச ரூபாய்தானாம்.

 

பழனி, கேரளா என பயணிக்கும் செல்லம்மா!

Chellame Serial Shooting Moves Palani

செல்லமே தொடர் தனது பயணத்தின் திசையை மாற்றிக்கொண்டுள்ளது. இனி கதைக்களம் பழனி, கேரளா என மாறிவருவதால் அதற்கான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

ராடான் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பான செல்லமே தொடர் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருவிடை மருதூரில் தொடங்கி தற்போது பழனி, கேரளா என தனது கதைக்களத்தை மாற்றிக்கொண்டுள்ளது.

சினேகாவின் சூழ்ச்சியால் தொலைந்த செல்லம்மாவின் குழந்தை வேறு இடத்தில் வளர்வதாக நம்பிய செல்லம்மா அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து தன் கணவன் வடமலையிடம் தருகிறாள். இதனால் பிரிந்து வாழ்ந்த வடமலையும் செல்லம்மாவும் இணைகின்றனர். இதுவரை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்த செல்லம்மா.. தன் பொறுப்புகளை சுரேஷிடம் ஒப்படைத்து விட்டு, உறவுகளிடம் விடை பெற்று புதிய வாழ்க்கை தொடங்க பழனிக்கு பயணமாகிறாள்.

அங்கே அமைதியான வாழ்க்கையை வேண்டி பழனிக்கு வந்த செல்லம்மாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம் உண்டாகிறது. அங்கு நடக்கும் சம்பவம் செல்லம்மாவின் வாழ்க்கையே புரட்டி போடுகிறது. பழனியில் நடை பெறும் சம்பவம் என்ன..? அந்த சம்பவத்தின் முடிவில் செல்லம்மா எடுத்த முடிவு என்ன..? வடமலை எதற்காக கேரளா பயணிக்கிறான்..? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான முடிவுகளோடு பயணிப்பதே இந்த கதையின் நீண்ட பயணம்.

750வது எபிசோடுகளை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் செல்லமே தொடரின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றபோது ராதிகாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விட்டனர். குறிப்பாக பெண்கள் ராதிகாவை தங்கள் வீட்டு பெண்போல் பாவித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.. தன்னை காண வந்த மக்களிடம் பேசிய ராதிகா, எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப மக்கள் வெள்ளத்துக்கு நடுவில் அமைதியாக படப்பிடிப்பு நடைபெற்றது.

செல்லமே தொடரின் இனிவரும் காட்சிகள் பழனி, கேரளாவில் இருந்து ஒளிபரப்பாக உள்ளதால் கதையில் முக்கிய திருப்பங்களை காணலாம் என்று தொடரின் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா தெரிவித்துள்ளார்.

 

அறுஅறுவென்று அறுத்த சிரிப்பு லோகத்துக்கு கல்தா: புது தொடர் ஆரம்பம்!

Curtains Siripulokam New Serial Begin

சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான மொக்கை காமெடித் தொடரான சிரிப்பு லோகத்திற்கு கல்தா கொடுத்துவிட்டனர். அதற்கு பதிலாக புதிய மர்மத் தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

இரவு பத்துமணி ஆனாலே சிரிப்பு லோகம் என்ற பெயரில் இம்சை செய்து வந்தனர் சின்னி ஜெயந்த் கோஷ்டியினர். வென்னிற ஆடை மூர்த்தி, சின்னிஜெயந்த், சிட்டிபாபு, ஆர்த்தி என நகைச்சுவை பட்டாளங்கள் அதிகம் இருந்த காரணத்தினால் பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆரம்பித்த நாளில் அமோகமாக இருந்த நிகழ்ச்சி நாளடைவில் போராடிக்க ஆரம்பித்து. டிஆர்பியும் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிரிப்பு லோகத்திற்கு விரைவில் கல்தா கொடுக்கப்படாலாம் என்று நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி சிரிப்பு லோகம் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக திங்கட்கிழமை முதல் இரவு பத்து மணிக்கு ‘அந்த 10 நாட்கள்' என்ற புதிய மர்மத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் ஸ்ரீவித்யா, ஆர்த்தி கணேஷ்கர் உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது குறுந்தொடர் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. தொடரின் முன்னோட்டமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரிப்பு லோகம் காமெடி என்ற பெயரில் பயமுறுத்தினர். இப்போது மர்மத் தொடரை கையில் எடுத்துள்ளனர். இது பயமுறுத்துமா அல்லது சிரிக்க வைக்குமா என்பதைப் போகப் போகப் பார்க்கலாம்.

 

போதும், போதும், இது படந்தானே டிரைலர் இல்லையே?

Billa 3 Coming Soon   

பில்லா படத்திற்கு ‘ஏ' சர்டிபிகேட் கொடுத்திருப்பதால் நீண்ட யோசனைக்குப் பின்னர் குழந்தைகளை விட்டுவிட்டு தனியாகத்தான் படத்திற்கு போக நேரிட்டது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கொலைகள்தான். யாராவது யாரையாவது சுடுகிறார்கள். கழுத்தை அறுக்கிறார்கள். குண்டு வைக்கிறார்கள். (குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தனியாக வந்தது நல்ல வேலையாக போயிற்று என்று நினைக்கத் தோன்றியது) வன்முறை அதிகம் என்பதால்தான் படத்திற்கு ‘ஏ' சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

டேவிட் பில்லாவாக இருக்கும் அஜீத் டான் பில்லா! ஆவதுதான் படத்தின் ஒன் லைன். இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அகதியாக வரும் டேவிட் பில்லா, ஜார்ஜியாவில் உள்ள சர்வதேச கடத்தல்காரனுடன் டீல் பேசுகிறான். அதெப்படி அகதியாக வந்த டேவிட் பில்லா படம் ஆரம்பித்து அரைமணி நேரத்தில் கடத்தலில் எக்ஸ்பர்ட் ஆகிவிடுகிறான்? என்பதைப்பற்றி தெளிவான பின்னணியை கூற தவறி விட்டார் இயக்குநர் சக்ரிடோலட்டி. ஆனால் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றதற்காக இயக்குநருக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அஜீத் ப்ளாஸ்பேக் என்று கூறி நேரத்தை கடத்தாமல் சிறுவயது நிகழ்வுகளை எழுத்துப் போடும்போதே போட்டோ வடிவில் காட்டியது புதிய முறை.

என்னதான் அண்டர்கிரவுண்டு தாதா படம் என்றாலும் தமிழ்நாட்டில் நடுரோட்டில் போலீஸ் அதிகாரிகளை சுட்டுவிட்டு மீனுக்குள் வைரம் கடத்தும் அஜீத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா என்ன?. அதேபோல் சைவ ஓட்டல் நடத்தும் இளவரசு செய்யும் கடத்தல் தொழில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மீனுக்குள் வைரம் கொடுத்துவிட்டு அதை போலீசுக்கு போட்டுக்கொடுத்த நபரை ஒரே போடாக போட்டுவிட்டு ரூமுக்குள்ள பல்லி செத்து கிடக்கு அதை கிளீன் பண்ணிருங்க என்று சொல்லிவிட்டு செல்வது அசால்ட்.

தமிழ்நாட்டில் போதை மருந்தை கைமாற்றுவது அவ்வளவு எளிதான வேலையா என்ன? அதையும் அசராமல் செய்து முடிக்கும் அஜீத் கடைசியில் அந்த பொருளோடு கோவாவிற்கும் பயணமாகிறாராம்!. அங்கே சர்வதேச தாதா ஒருவரின் பொருட்களை அதிகாரிகள் முன்னிலையிலே எடுத்துக்கொண்டு வருகிறாராம். லாஜிக் என்பது துளிகூட இல்லாமல் எப்படி சார் படம் எடுக்கிறீர்கள் என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.

அகதிகள் முகாம் பாதுகாப்பு அதிகாரி, கோட்டியாக வரும் மனோஜ் கே. ஜெயன், கோவாவில் வசிக்கும் அப்பாசி (சுதன்சு பாண்டே) சர்வதேச டான் டிமிட்ரியாக வரும் (வித்யூத் ஜமால்), என படத்தில் வில்லன்களுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வில்லன்களையும் சமாளிக்கும் அஜீத்துக்கு ஒரே ஒரு நண்பன்தான். வேறு எந்த அடியாள் பலமோ, படைபலமோ கிடையாது. ஆனாலும் எல்லோரையும் கொன்றுவிட்டு அவர் மட்டும் தப்பிவிடுகிறார். (ஒருவேளை பில்லா 3 எடுப்பாங்களோ?)

படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்று ஆவலோடு எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பார்வதி ஓமனக்குட்டன், புருணா அப்துல்லா இரண்டுபேருமே வேஸ்ட் ரகம்தான். கவர்ச்சிக்குப் பஞ்சமில்லாத உடைகள், பட தயாரிப்பாளர் நாயகிகளின் உடைக்காக அதிக செலவு செய்திருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் அப்பாசியின் காதலியாக வரும் புருணா பின்னர் பில்லாவின் காதலியாகிறார். அவரே வில்லியாக செயல்படுகிறார் என்பது ரொம்ப லேட்டாகத்தான் பில்லாவுக்கு தெரியவருகிறது. கடைசியில் அவரையும் கழுத்தை இறுக்கி கொன்று விடுகிறார்கள்.

படம் தொடங்கி பத்து நிமிடத்தில் 11 கொலைகள் என்பதை ஜீரணிக்கமுடியாத ஒரு ரசிகர் போதும் போதும் இது படந்தானே டிரைலர் இல்லையே என்று சத்தமாய் சொன்னது தியேட்டரில் சிரிப்பை ஏற்படுத்தியது. படத்தில் காமெடிதான் இல்லை, ஆனால் கதையும் இல்லை என்பதை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் இயக்குநர்.

இசை யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் நா. முத்துக்குமார். இருவரையும் இதில் காணோம். பின்னணி இசையில் வேண்டுமானால் யுவன் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார். ஒளிப்பதிவை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பனிபடர்ந்த வில்லனின் வீடு படம் முடிந்த பின்னரும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதேபோல் கோவாவில் அப்பாசியின் படகு வீடு, குளுகுளு கோவா என ஒளிப்பதிவிற்கு கொஞ்சம் பாராட்டலாம்.

'எழுத்து' போடும் போது வசனம் இரா. முருகன், முகம்மது ஜபார் என்று போட்டார்கள். மொத்தமே இரண்டு பக்கத்தில் வசனத்தை எழுதி முடித்திருப்பார்கள் போல. யாருமே அதிகம் பேசியதாக தெரியவில்லை. அஜீத் பேசுவது கூட பஞ்ச் டயலாக் போல இரண்டே வரிக்கள்தான். "என்னோட ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கியது" விசிலும் கைத்தட்டலும் தூள் பறக்கிறது. அதேபோல் தீவிரவாதிக்கும், போராளிக்கும் அஜீத் சொல்லும் விளக்கம் சூப்பர்.

படம் முழுக்க அஜீத் ராஜாங்கம்தான். அவர் நின்றால்- கொன்றால், கைத்தட்டல் பறக்கிறது. இது முற்றிலும் அஜீத் ரசிகர்களுக்கான படம் மட்டுமே என்பதில் சந்தேகமே இல்லை. மற்றவர்களுக்கு படம் பிடிக்குமா என்பதும் சந்தேகமே...

படம் முடிந்து வெளியே வரும் போது பில்லா 3 எப்போ எடுப்பாங்க? என்று ஒரு ரசிகர் கேட்டது காதில் விழுந்தது. ஒரு வேளை எடுத்துருவாங்களோ....!

பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம்

 

சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் மர்ம மரணம்

Sylvester Stallone Son Found Dead

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டாலோனின் 36 வயது மகன் சேஜ் தனது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.

சேஜின் முழுப் பெயர் சேஜ் மூன்பிளட் ஸ்டாலோன். 1990ல் ராக்கி பல்போ ஜூனியர் என்ற பெயரில் நடித்தவர். ஹாலிவுட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். காலையில் அவர் பிணமாகக் கிடந்தார். அவரது உடலை முதலில் வேலைக்காரப் பெண் பார்த்ததாக தெரிகிறது. அவரது காதலிதான் முதலில் உடலைப் பார்த்ததாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

டாக்டர்கள் வந்து அவரைப் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார் சேஜ். அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை என்று கூறப்படுகிறது. மகனின் மறைவுச் செய்தி சில்வஸ்டர் ஸ்டாலோனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். அவர் பெரும் துயரத்தில் இருக்கிறார் என்று சேஜின் வக்கீல் கூறியுள்ளார்.

சேஜின் மரணம் குறித்து லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே சேஜ் எப்படி மரணமடைந்தார் என்பது தெரிய வரும்.

 

யுவன் சங்கர் ராஜாவின் 100 வது படம்

Yuvan Is Gearing Up His 100th Film

நூறு என்ற வார்த்தை பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. நூறு மார்க், நூறு நாள் ஓடும் திரைப்படம். நூறாவது படம் என்பது பெருமையாக பேசப்படும். அந்த வரிசையில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தனது 100 வது படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார்.

இளம் இசை அமைப்பாளர்களில் தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்திருப்பவர் யுவன் சங்கர்ராஜா. 1996 - ல் சரத்குமார் நடித்த அரவிந்தன் திரைப்படத்தில் தொடங்கி அஜீத்குமார் நடித்துள்ள பில்லா 2 வரை 99 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். அடுத்ததாக தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படம் யுவனின் 100 படமாகும்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 தொடங்கி மங்காத்தா வரை வெங்கட் பிரபுவின் படங்களுக்கு யுவன் சங்கர்ராஜாவின் இசை பெரும் பலமாக அமைந்தது. இப்போது பிரியாணி திரைப்படம் யுவனின் 100 வது படமாக அமைவதல் இசை சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யுவன் நூறாவது படத்தை எனது சகோதரரின் படத்திற்கு இசை அமைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல் வெங்கட் பிரபுவும், எனது தம்பி இசை அமைக்கும் நூறாவது படத்தை இயக்குவதில் எனக்கு பெருமையாகவும், அதேசமயம் அதிக ஆர்வமாகவும் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.