இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்.சில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்: கமல்

ஹைதராபாத்: விஸ்வரூபம் 2 படத்தை இந்தியாவில் வெளியிட எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படமே டிடிஹெச்சில் வெளியிடுவதாக இருந்தது. அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் கமல் விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய கமல் கூறுகையில்,

இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்.சில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்: கமல்

படங்களை டிடிஹெச் மூலம் டிவிகளில் வெளியிடுவது அதை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஆகும். டிவியில் ஒளிபரப்புகையில் உரிய கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் படத்தை டிவியில் மட்டுமே பார்க்க முடியும் என்று இல்லை. தியேட்டர்களிலும் படம் ரிலீஸ் செய்யப்படும். இருப்பினும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அனைத்து வீடுகளிலும் சமையல் அறைகள் உள்ளது. இருப்பினும் எதற்காக ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காவிட்டால் அமெரிக்காவில் ஒளிபரப்புவேன் என்றார்.

 

நல்ல படங்களை ஆதரியுங்கள், ஆபாசப் படங்களைப் புறக்கணியுங்கள்: வி.எஸ்.ராகவன் வேண்டுகோள்

ஈரோடு: நல்ல படங்களை ஆதரிக்குமாறும், ஆபாசப் படங்களைப் புறக்கணிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவன்.

நேற்று, ஈரோட்டில் கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது, வி.எஸ். ராகவன் தெரிவித்ததாவது...

நல்ல படங்களை ஆதரியுங்கள், ஆபாசப் படங்களைப் புறக்கணியுங்கள்: வி.எஸ்.ராகவன் வேண்டுகோள்

அறிமுகம்....

1954-ஆம் ஆண்டு வெளிவந்த "வைரமாலை' என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக நான் அறிமுகம் ஆனேன்.

அப்பா கேரக்டர்....

முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன்.

ஆரோக்கிய சினிமா....

என்னைப் பொருத்த வரை சினிமா என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசமாக இருக்கக் கூடாது.

ஆதரவும் புறக்கணிப்பும்....

நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆபாசப் படங்களை மக்கள் புறக்கணித்தால் மீண்டும் ஆபாசப் படங்களை தயாரிக்க அஞ்சுவார்கள்.

திருப்தியான படங்கள்...

நான் நடித்ததிலேயே, சவாலே சமாளி, வாழையடி வாழை ஆகிய படங்கள் எனக்கு திருப்தி தந்த படங்களாக அமைந்தன.

நாகேஷால் வந்த நகைச்சுவை...

திரையுலகில் நாகேஷுடன் பழகிய பிறகுதான் நகைச்சுவையாகப் பேசுவதைக் கற்று கொண்டேன்.

சாகும் வரை நடிக்க ஆசை...

எனக்கு இப்போது 89 வயதாகி விட்டது. சாகும் வரையிலும் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்தார்.

 

டிடிகே பிரஸ்டீஜின் புதிய பிராண்ட் அம்பாசிடரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்

சென்னை: சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பாளரான டிடிகே பிரஸ்டீஜ் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராயை தங்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது.

பிரசவத்திற்கு பிறகு படங்களில் நடிக்காத ஐஸ்வர்யா ராய் விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வது என்று பிசியாகத் தான் இருக்கிறார்.

டிடிகே பிரஸ்டீஜின் புதிய பிராண்ட் அம்பாசிடரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும், இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோரை டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனம் தங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரூ.2,500 கோடி மதிப்புள்ள டிடிகே குழுமத்தின் ஒரு பகுதி தான் சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பாளரான டிடிகே பிரஸ்டீஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: ஆர்யா, நயன்தாரா, ஜெய், சந்தானம், நஸ்ரியா

இசை: ஜிவி பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ஏஆர் முருகதாஸ்

இயக்கம்: அட்லீ


ஒவ்வொரு ஜோடியின் காதலுக்கும் அவர்களின் பிரிதலுக்கும் காரணம் என்று தேடினால் சில பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். அது

ஒரு காதல் தோல்விக்குப் பின் வரும் அழுத்தமான காதல்தான் இந்த ராஜா ராணியின் கதை.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

ஆர்யாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள், பெற்றோர் விருப்பத்தின்படி. ஆனால் இருவருக்கும் ஏற்கெனவே வெவ்வேறு காதல் பின்னணி இருக்கிறது. அந்தக் காதல்களிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பவர்கள், வேறு வழியின்றி நிரந்தரமாகப் பிரிய முடிவெடுக்கிறார்கள். பிரிந்தார்களா.. என்பது, கொஞ்சம் இழுவையான க்ளைமாக்ஸ் (அரை மணி நேரம் பாஸ்!).

மவுன ராகத்தின் சாயல், குறிப்பாக ஜெய்யின் பாத்திரப் படைப்பு, இருந்தாலும், திரைக்கதையை ஜோடித்த விதத்தில் மனதில் இடம்பிடிக்கிறது ராஜா ராணி.

குறிப்பாக சந்தானம் படத்தின் ப்ளஸ்களில் முக்கியமானவர்!

படத்தில் இரு காதல் ஜோடிகள். ஆர்யா - நஸ்ரியா, ஜெய் - நயன்தாரா. இரு ஜோடிகளுமே காதல் காட்சிகளில் மகா இயல்பாய், அனுபவித்து நடித்திருக்கிறார்கள்.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

ஜெய்யின் பாத்திரம் எப்படிப்பார்த்தாலும் மவுன ராகம் கார்த்திக்கை நினைவுபடுத்துவதை மறுப்பதற்கில்லை. இத்தனைக்கும் இரு பாத்திரங்களின் அடிப்படைத் தன்மையிலும் வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன.

வயது முப்பதைத் தாண்டினாலும், நயன்தாராவை ஏன் இன்னும் இளம் நடிகர்கள் துரத்துகிறார்கள் என்பதற்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது (ஆனாலும் அநியாயத்துக்கு ஓவர் மேக்கப்!)

நஸ்ரியாவின் இளமையிலும் அழகிலும் சலனப்படாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நடிப்பில் கோட்டை விட்டாலும் 'கண்டுக்காதபா... கண்ணுக்குக் குளிர்ச்சியா பாத்துட்டு வா' என்கிறது ரசிக மனசு!

சத்யராஜுக்கு இன்னொரு ஜென்டில்மேன் அப்பா வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார்.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

சத்யன் கிச்சு கிச்சு மூட்ட முயன்று தோற்றாலும், சந்தானம் அவருக்கும் சேர்த்து சிரிக்க வைத்துவிடுகிறார். குறிப்பாக இயல்பாய் வந்து விழும் அந்த காமெடி பஞ்ச்கள்!

க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அந்த முடிவு என்ன என்பது நமக்கே தெரிந்து போகிறது. தமிழ் சினிமாவில் கசந்த மனங்கள் மீண்டும் சேருமிடம் ஒன்று ரயில் நிலையம் அல்லது விமான நிலையம்!

தொழில்நுட்ப ரீதியாக படம் முதல் தரம். ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தை ஜொலிக்க வைக்கிறது. ரொமான்ஸுக்கு புது நிறம் தந்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையில் நிறைய பழைய படங்களின் சாயல்.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

பழக்கப்பட்ட சென்டிமென்ட் பாதையில் முதலில் பாதுகாப்பாக பயணிப்போம் என்று இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருப்பார் போலிருக்கிறது அட்லீ. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீளும் படத்தின் காட்சிகளை இன்னும் கூடக் குறைத்திருந்தால் படத்தின் மைனஸ்கள் தெரிந்திருக்காது.

ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில், பார்வையாளர்களை அலுப்பின்றி வைத்திருக்கும் வித்தை முதல் படத்திலேயே கைவந்திருக்கிறது அட்லிக்கு.

ரசிக்கத்தக்க ராஜா ராணிதான்!

 

கோபத்தில் காஸ்ட்லி போனை போட்டுடைத்த விஷால்...

கோபத்தில் காஸ்ட்லி போனை போட்டுடைத்த விஷால்...

விஷால்: சமீபகாலமாக மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறாராம் விஷால். மதகஜ ராஜா படப் பிரச்சினையே விஷாலின் மன அழுத்தத்திற்கு பிண்ணனியில் உள்ளதாம்.

இந்நிலையில், சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் ‘பாண்டிய நாடு' படத்தின் ஷூட்டிக்கின் போது, கோபத்தில் தனது காஸ்ட்லியான செல்போனைத் தூக்கி கீழே போட்டு உடைத்து விட்டாராம் விஷால்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, திடீரென மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் அற்புதமான நடிகரான விஷால் இவ்வாறு கோபமாக செல்போனை கீழே போட்டு உடைத்து ஆவேசமானதைப் பார்த்து யூனிட்டில் உள்ளவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

 

ரசிகர்கள் என்னை மறந்து விடுவார்களோ... குழப்பத்தில் நடிகை

வாட்டசாட்டமான் சிங்கத்தின் ஜோடியான அந்த யோகா டீச்சருக்கு கைவசம் மூன்றே படங்கள் தான் உள்ளன. அதில் இரண்டு சுந்தரத் தெலுங்கு, மற்றொன்று மற்றொரு உலகப் படம்.

இது தவிர தற்போதைக்கு வேறு படங்களில் அம்மணி ஒப்பந்தமாகவில்லையாம். தமிழ்ப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்ற போதும், தெலுங்குப் படங்கள் ரிலீசாக வருடக் கணக்கில் ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் ரசிகர்கள் தன்னை மறந்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளூர இருக்கிறதாம் அம்மணிக்கு.

ஆனபோதும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத நடிகை, புதிய படங்கள் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், ‘விரைவில் திருமணம் செய்து கொள்ளலாமா என்ற யோசனையில் இருக்கிறேன்' என மழுப்பலாகக் கூறுகிறாராம்.

புதிய திறமைசாலிகளின் வரவால், படவாய்ப்பு இல்லாததைக் கூட எவ்வளவு பாலிசாக நடிகை கூறுகிறார் என சிரித்துக் கொள்கிறார்களாம் திரையுலக நண்பர்கள்.

 

சாண்டலுக்கு இணையாக வளர்ந்து வரும் காமெடியன்...

சென்னை: முன்பெல்லாம் சாண்டல் காமெடி நடிக்க முடியாத, நாட்கள் இல்லாத படங்கள் தான் சுந்தர படத்தில் நடித்த அந்த இரண்டெழுத்து நடிகருக்கு கை மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.

தொடர்ச்சியாக நடிகர் நடித்த படங்களில் காமெடி காட்சிகள் பேசப்படுவதால், இயக்குநர்களின் பார்வை இப்போது அந்த இரண்டெழுத்து நடிகர் பக்கம் திரும்பியுள்ளதாம். மனிதர் செட்டில் இருந்தால் ஷூட்டிங்கே கலகலப்பாக மாறி விடுவதாக படக் குழுவினர் புகழுகிறார்களாம்.

சாண்டலுக்கு இணையாக கதாநாயகியோடு டூயட் பாடும் அளவிற்கு, பரோட்டா நடிகரும் கேரக்டர் வித் காமெடி ரோல்களில் வளர்ந்து வருவதால் பல காமெடியர்களின் காதில் புகை வருகிறதாம்.

 

தெலுங்கிலும் பாடும் கார்த்தி!

தெலுங்கிலும் பாடும் கார்த்தி!

ஒரு காலத்தில் பாடத் தெரிந்தால்தான் நடிக்கவே வாய்ப்பு என்ற நிலை இருந்தது.

பின்னர் ஒழுங்காகப் பேசத் தெரியாவிட்டாலும் கூட வாய்ப்பு தந்தார்கள்.

இப்போது மீண்டும் இளம் நடிகர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாட விரும்புகிறார்கள்.

அந்த வகையில் கார்த்தியும் தொடர்ந்து பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் பிரியாணி படத்தில் முதல் முறையாகப் பாடிய கார்த்தி, தொடர்ந்து தெலுங்கிலும் அதே படத்துக்காக பாடியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இது அவரது 100வது படம். கார்த்திக்கு ஜோடியாக முதன்முறையாக ஹன்சிகா நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்துக்காக கார்த்தி தமிழில் ஒரு பாடலை பாடியிருந்தார். இப்போது அதே பாடலை தெலுங்கிலும் கார்த்தியை வைத்தே பாட வைத்துள்ளார்

 

55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான் - கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்!!

55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான் - கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்!!

சென்னை: 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மான்.

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கல்பட்டு பெண்

வஹீதா ரஹ்மான் ஒரு தமிழ் முஸ்லிம் பெண்மணி என்பது பலருக்குத் தெரியாது. செங்கல்பட்டில் பிறந்த இவரது தாய் மொழி தமிழ். மதம் சார்ந்த முறையில் உருது, இந்தியைக் கற்றுக் கொண்டவர். பின்னர் ஹைதராபாத் போய், குருதத் பார்வையில் பட்டு ஹிந்தியில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றவர்.

தமிழில்..

இந்தியில் கொடிகட்டிப் பறந்தாலும், வஹீதா ரஹ்மான் முதலில் நடித்தது இரு தமிழ்ப் படங்களில்தான். ஒன்று எம்ஜிஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்.

அடுத்து ஜெமினி கணேசன் நடித்த காலம் மாறிப்போச்சு. இரண்டுமே சூப்பர் ஹிட். இவர் அந்தப் படங்களில் நாயகி இல்லை என்றாலும், ராசியான நடிகை என்ற பெயர் கிடைக்க, தொடர்ந்து நான்கு தமிழ்ப் படங்களில் நடித்தார்.

ஹிந்தியில்...

பின்னர் இந்தியில் சிஐடி படத்தில் தன் கேரியரைத் தொடங்கினார். ஏராளமான வெற்றிப் பங்களில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த வஹீதா, கணவர் இறந்த பிறகு 2002-லிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

55 ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வஹீதா ரஹ்மான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படம் விஸ்வரூபம் 2.

கமலுக்கு அம்மாவாக...

இந்தப் படத்தில் கமல்ஹாஸனுக்கு அம்மாவாக நடிக்கிறாராம் வஹீதா. இந்தியிலும் விஸ்வரூபம் 2 வெளியாகிறது. வஹீதா ரஹ்மான் நடிப்பது இந்தி ஏரியாக்களில் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பை உருவாக்கும் என்பதால் வஹீதாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்.

 

புடாபெஸ்ட் பறந்த செல்வராகவன் - அனிருத்

புடாபெஸ்ட் பறந்த செல்வராகவன் - அனிருத்

இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகருக்குப் பறந்துள்ளனர் இயக்குநர் செல்வராகவனும் இசையமைப்பாளர் அனிருத்தும்.

இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், படத்துக்குப் பின்னணி இசையமைக்க முடியாமல் ஒதுங்கிவிட்டார்.

வேறு படங்களில் பிஸியாகிவிட்டதால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக விளக்கமும் சொல்லிவிட்டார்.

முதலில் ஒப்புக் கொண்ட படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களுக்கு எப்படி முக்கியத்துவம் தரலாம் என அவரை நோக்கி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன், தனது புது கூட்டாளியான இசையமைப்பாளர் அனிருத்தை அழைத்துக் கொண்டு, ஹங்கேரி நாட்டுத் தலைநகரான புடாபெஸ்டுக்குப் பறந்திருக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசையை இங்கு வைத்துதான் உருவாக்கப் போகிறார்களாம். பத்து நாட்கள் புடாபெஸ்டில் தங்கியிருந்து இசையமைப்புப் பணியை முடித்துக் கொண்டு வருகிறோம் என செல்வராகவன் அறிவித்துள்ளார்.

அப்படியெனில் படம் தீபாவளிக்கு கன்பர்ம்தானா!

 

மீண்டும் சேரும் ராஜா ராணி கூட்டணி!

மீண்டும் சேரும் ராஜா ராணி கூட்டணி!

ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் படத்தை இயக்கிய அட்லியை வைத்து மீண்டும் படம் தயாரிக்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

ராஜா ராணி குறித்து பாஸிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. கிராமம் சார்ந்த திரையரங்குகளில் பெரிய வரவேற்பில்லாவிட்டாலும், மல்டிப்ளெக்ஸ் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது.

திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படத்தை தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் சத்யராஜ் மட்டும் நிச்சயம் இருப்பார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அட்லி.

 

பாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா

பாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா

பெங்களூர்: பிரபல நடிகை மாளவிகா கர்நாடக பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அண்ணி டிவி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா.

தமிழ் சினிமாவில் ஆறு, ஜெ.ஜெ ஆதி, ஜெயம்கொண்டான், டிஷ்யூம்' உட்பட, தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, கர்நாடகாவில், தேவகவுடாவின், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். கட்சியை வளர்க்க பாடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார் இந்த நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

செல்லமே

ராதிகாவின் செல்லமே தொடரில் நடித்தார் மாளவிகா. கன்னட திரையுலகிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

மோடியின் சுயசரிதை

பாஜகவில் இணைந்தது பற்றி கருத்து கூறியுள்ள மாணவிகா, நரேந்திர மோடியின் சுயசரிதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அவரது, வாழ்க்கை, மக்கள் நலச்சேவைகளின் செயல்பாடு எனக்கு பிடித்திருந்தன. அவர் எனக்கு முன்னுதாரணமாக தெரிந்தார். அவரது கருத்துக்கள் என்னை ஈர்த்தது. எனவே,பா.ஜ.,வில் இணைந்தேன்' என, தெரிவித்துள்ளார்.

மாளவிகாவின் கணவர்

மாளவிகாவின் கணவர் அவினாஷ் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.

பூஜா காந்தியை பின்பற்றி பாஜகாவில் சேர்ந்தீர்களா என்று மாளவிகாவிடம் கேட்டதற்கு. அரசியலில் நான் பூஜா காந்தியை பின்பற்ற வில்லை. என்னை அவரோடு ஒப்பிடவேண்டாம் என்று கூறியுள்ளார் மாளவிகா.