அடக் கருமமே... நானா இது... வெட்கி நெளியும் பிரீடா பின்டோ!

The Scene That Left Freida Embarrassed   

திரிஷ்னா என்ற பெயரில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரீடா பின்டோ, அதில் ஒரு காட்சியில் தான் படு நெருக்கமாக நடித்ததைப் பார்த்து வெட்கம் கூடிப் போய் நிற்கிறாராம்.

வழக்கமாக கவர்ச்சிக் காட்சிகளைப் பார்த்து மற்றவர்கள்தான் நெளிவார்கள். ஆனால் அதில் நடித்த சம்பந்தப்பட்ட நடிகையே நெளிந்த கதைதான் இது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டில் ஈசியாக டிக்கெட் எடுத்து விட்ட பிரீடா பின்டோ அங்கு தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

அவரும் ரிஸ் அகமது என்பவரும் இணைந்து நடித்துள்ள புதிய படம் திரிஷ்னா. அதில் இருவரும் சேர்ந்து படு நெருக்கமான காதல் காட்சியில் அரை குறை உடையுடன் நடித்துள்ளனர். இந்தக் காட்சிதான் தற்போது பிரீடாவை நெளிய வைத்துள்ளதாம்.

இந்தப் படத்தின் டிரெய்லர் காட்சியில், இந்த சீன் இடம் பெற்றுள்ளதாம். படு நெருக்கமாக, சூடான காட்சிகளுடன் கூடியதாக இந்த காட்சிகள் உள்ளன. உடன் நடித்திருக்கும் ரிஸ் அகமது, இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானி நடிகர் ஆவார்.

மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்கியிருக்கிறார். ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரரின் மகளுக்கும், பெரும் பில்டர் ஒருவரின் மகனுக்கும் இடையே நடக்கும் காதல், கசமுசாதான் கதையாம்...!

 

விஜய்க்கு வில்லனாகும் விஜய் யேசுதாஸ்

Vijay Fight With Vijay Al Vijay

'இளைய தளபதி' விஜயை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் எடுக்கும் படத்தில் பாடகர் யேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிக்கிறார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது தாண்டவம் படத்திற்கு அடுத்து நடிகர் விஜயை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். தற்போது தாண்டவம் முடிந்துவிட்ட நிலையில் விஜயின் படத்திற்கு நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து வருகிறார் இயக்குனர்.

ஒரே படத்தில் 3 விஜய் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ, விஜய்க்கு வில்லனாக இதுவரை நமக்கு பாடகராக மட்டுமே தெரிந்த விஜய் யேசுதாஸை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் விஜய் யேசுதாஸ் நடிகராகிறார். இந்த புதிய படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை லக்ஷ்மி ராயை இயக்குனர் விஜயிடம் தெரிவித்தபோது நிச்சயம் உங்களை அவருடன் நடிக்கை வைக்கிறேன் என்று உறுதியளித்தார். அப்போ இந்த படத்தில் லக்ஷ்மி ராய் இருக்கிறாரா?

 

பாலிவுட்டில் யாரையும் மணக்கமாட்டாராம் கத்ரீனா கைப்

Katrina Go An Arranged Marriage

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் பெற்றோர் பார்ப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வாராம்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்கள். அவர்கள் பிரிந்துவிட்டாலும் ஒரு வேளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்களோ என்று பலர் சந்தேகிக்கின்றனர். காரணம் கேட் மீது சல்லு காட்டும் பாசம், சல்லு மீது கத்ரீனா காட்டும் அக்கறை.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 1.30 மணிக்கு கத்ரீனா நடிகர் ரன்பிர் கபூர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அன்றைய இரவை அவர் ரன்பிருடன் கழித்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கத்ரீனாவுக்கும், ரன்பிருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அவரது பாலிவுட் தோழிகள் கூறுகையில்,

கத்ரீனா திரையுலகில் உள்ள யாரையும் மணக்கமாட்டார். அவர் ரன்பிர் கபூரை காதலிப்பதாக சொல்வதெல்லாம் பொய். அவர் ஒரு குடும்ப பெண். அதனால் பெற்றோர் பார்த்து வைப்பவரைத் தான் மணப்பார் என்றனர்.

 

பாட்டுப் பாடறவர நான் ஏன் வில்லனாக்கப் போறேன்? - மறுக்கிறார் இயக்குநர் விஜய்!!

Vijay Villain Vijay Yesudas Director Vijay Deniesreport

'இளைய தளபதி' விஜயை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் எடுக்கும் படத்தில் பாடகர் யேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிக்கிறார் என இன்று யாரோ கொளுத்திப் போட, என்னப்பா இது கண்டபடி செய்தி வருகிறதே என அதிர்ந்து நிற்கிறார் இயக்குநர் விஜய்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது தாண்டவம் படத்திற்கு அடுத்து நடிகர் விஜய்யை இயக்கப் போகிறார். இந்த ஒரு செய்திதான் இப்போதைக்கு உண்மை.

ஆனால் இதைவைத்து ஓராயிரம் செய்திகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் விஜய் யேசுதாஸ் வில்லன் என்ற சமாச்சாரமும்.

இதுகுறித்து இயக்குநர் விஜய்யிடமே நாம் கேட்டோம்.

விஷயத்தைக் கேட்டவர், காட்டிய ரியாக்ஷனைத்தான் தலைப்பாகத் தந்திருக்கிறோம்.

அவர் கூறுகையில், "நான் இன்னும் தாண்டவத்தையே தாண்டவில்லை. இந்தப் படம் முடிந்ததும் அடுத்த படம் பண்ணப் போகிறேன் என்பது மட்டும்தான் உண்மை. அதுபற்றி வேறு எதையும் நான் யோசிக்கக் கூட இல்லை. தாண்டவம், ஆடியோ ரிலீஸ், பட வெளியீடு என எக்கச்சக்க வேலை மூச்சு முட்டுது.

விஜய் யேசுதாஸ் நல்ல பாடகர். பாட்டுப் பாடற அவரை ஏங்க நான் வில்லனாக்கப் போறேன்.. எதுவா இருந்தாலும் ஒரு வாட்டி எங்கிட்ட கேட்டுக்கங்க," என்றார்.

 

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஏக்தா கபூர்

Ekta Kapoor Likely Be Arrested

‘க்யா சூப்பர் கூல் ஹைன் கம்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக திரைப்பட தயாரிப்பாளரும், தொலைக்காட்சி தயாரிப்பாளருமான ஏக்தா கபூர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமல்லாது தமிழ் சேனல்களிலும் சீரியல்களை தயாரித்து வருபவர் ஏக்தா கபூர். ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி அதன் மூலம் பிரபலமடைவது அவரது வாடிக்கை. இப்பொழுது மதரீதியான சர்ச்சை ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான க்யா சூப்பர் கூல் ஹைன் ஹம் திரைப்படத்தில் இரண்டு நாய்களுக்கு பாதிரியார் ஒருவர் திருமணம் நடத்தி வைப்பதாக காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இது கிருஸ்துவமதத்தை சார்ந்தவர்களின் மனதை புண் படுத்தும் விதமாக இருப்பதாக அமைந்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் முறையிட்டனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்கிவிடுமாறு ஏக்தா கபூரிடம் அறிவுறுத்தப்பட்டது. அந்தக் காட்சி சென்சார் செய்யப்பட்டப்பட்ட பின்னரே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவா சட்டமன்றத்திலும் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. இதனிடையே ஏக்தா கபூரின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிருஸ்துவ மதத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

துப்பாக்கி Vs கள்ளத்துப்பாக்கி... சோதனை தீரவில்லே... தடை தொடர்கிறது!

Thuppakki Still Trouble   

சென்னை: விஜய்யின் துப்பாக்கி படத்தின் தலைப்பு குறித்த வழக்கு மேலும் தள்ளிப் போயுள்ளது. விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

துப்பாக்கி படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் டிசைன்கள் வெளிவந்ததும், கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்துவரும் ரவிதேவன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை 2009-லேயே தாங்கள் பதிவு செய்துவிட்டதாகவும், தங்களது டிசைன், பெயரை ஒத்து துப்பாக்கி தலைப்பும் டிசைன் செய்யப்பட்டுள்ளதால், அதனை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், வரும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

திரைப்படங்களுக்கு தலைப்பு பதிவு செய்தல் தொடர்பாக 1994-95ம் ஆண்டு பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

 

கனடாவில் கச்சேரி... கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி!

Ilayaraaja Perform Canada

சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி.

கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா'.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் - சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா.

முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் நவம்பர் 3-ம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

விரைவில் டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வரவிருக்கிறது.

இதன் பிறகு கலிபோர்னியாவிலும் ஒரு நிகழ்ச்சி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முன் அவர் இரு நிகழ்ச்சிகளை சென்னையில் செய்கிறார். ஒன்று வரும் ஆகஸ்ட் 20-ல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார்.

அடுத்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி நீதானே என் பொன்வசந்தம் பட இசைவெளியீட்டில் அந்தப் பட பாடல்களை நேரடியாக மேடையில் இசைக்கிறார்.

 

'ஏழுபேரு ஆட்டம்... கபடிக்கு திரண்டு நிக்குது கூட்டம்'... ஜெயா டிவியில் நாளை கேபிஎல்!

Jaya Tv Telecast Kpl Kabbadi

'உலகத்துல எத்தனையோ விளையாட்டு இருக்கு. அது எதுக்குமே இல்லாத பெருமை கபடிக்கு மட்டும்தான். அது என்ன தெரியுமா? உடம்பு முழுக்க மண்ணுல படுற விளையாட்டு இது ஒண்ணுதான்'!

காமெடி சந்தானத்தின் கலக்கல் பஞ்ச் இது. இவர் மட்டுமல்ல, முன்னணி நடிகர்கள் பலரையும் பேச வைத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி கலக்கல் கபடி கே.பி.எல். ஜெயா தொலைக்காட்சியில் வரும் 25 ந் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த நிகழ்ச்சி.

'ஏழுபேரு ஆட்டம்... திரண்டு நிக்குது கூட்டம்' என்று இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை ஒரு வரியில் விவரித்து விடலாம். முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த இடமான ஈரோட்டில் அப்படி திரண்டு நின்றது கூட்டம். ரசிகர்களின் உற்சாகமான விசிலுக்கு ஈடு கொடுக்கும்படி ஆடியது திடகாத்திரமான ஆண்கள் அல்ல.... தில்லான பெண்கள்!

பள்ளி கல்லூரிகளில் பயின்று வரும் இந்த பெண் பிள்ளைகள் 32 மாவட்டங்களின் சார்பாக 32 அணியாக திரண்டு போட்டியிட்டிருக்கிறார்கள். யாருக்கு வெற்றி என்பதை அறிய ரசிக மகாஜனங்கள் துடியாக துடிக்கப் போகிறார்கள். ஏனென்றால் களத்தில் நிலவிய சூடு அப்படி...

இந்த நிகழ்ச்சியின் சுமார் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை நாளைய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒளிபரப்பவிருக்கிறது ஜெயா டி.வி. ஆகஸ்ட் 15 ந் தேதி மாலை 5 மணிக்கு ஏக தடபுடலாக ஒளிபரப்பாகவிருக்கிறது கலக்கல் கபடி கே.பி.எல்.

 

இணையத்தை அதிர வைத்த 'கொலவெறி' அனிருத் - ஆன்ட்ரியா ரியல் லிப் லாக்!

சமூக வலைத்தளங்கள், சினிமா தளங்களை நேற்றிலிருந்து ஒரு படம் அதிரவைத்துக் கொண்டிருக்கிறது... அது கொலவெறி புகழ் அனிருத்தும், ஆன்ட்ரியாவும் அடித்துக் கொள்ளும் ஒரு படு டீப் லிப் லாக்!

kolaveri anirudh actress andria lip lock goes viral   
Close
 

சினிமாவில் கூட இப்படி ஒரு முத்தக் காட்சியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு முத்தம்...

அனிருத்துக்கும் ஆன்ட்ரியாவுக்கும் எப்படி 'இது' பத்திக்கிச்சு என பலரும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இந்தப் பையனுக்கு 18 வயசுதான் ஆகுது. ஆன்ட்ரியாவோ, ஓரிரு வருடங்களில் ஆன்ட்டியாகும் வயதிலிருக்கிறார். இந்த இருவரின் உறவும் பொருந்தா காதலா, காமமா என்ற சர்ச்சைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக நெருங்கிய உறவுக்காரர்.

அனிருத் ஒரே ஒரு படத்துக்குதான் இசையமைத்திருக்கிறார். பார்க்க ரொம்ப அப்பாவி சாதுப் பையன் போல இருந்தவர், இப்படி அடுத்த படம் தொடங்குவதற்குள்ளேயே ஆழமான காமத்தில் சிக்கிக் கொண்டாரே... என உச்சுக் கொட்டுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

அது கிடக்கட்டும். அவர்களின் பர்சனல் சமாச்சாரம் அது. நமக்கென்ன வந்தது என்று ஆதரவளிப்போரும் இல்லாமலில்லை!

யார் கண்டது... அது நாங்கள் இல்லை... கிராபிக்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!

 

சிவாஜி 3 டி ட்ரைலர் வெளியீட்டு விழா- எதிர்பாராமல் வந்த ரஜினி!

Rajini Surprises Visit During Sivaji 3d Trailer Launch

சென்னை: சிவாஜி 3 டி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், யாரும் எதிர்பாராதபடி, அனைவருக்கும் வந்து இன்ப அதிர்ச்சியைத் தந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

5 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான மெகா ஹிட் படம் சிவாஜி - தி பாஸ்.

உலகெங்கும் உள்ள ரசிகர்களை, மொழிகளைத் தாண்டி ரசிக்க வைத்தது அந்தப் படம். நேரடி தமிழ்ப் படமாகவே வட இந்தியாவில் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பியது சிவாஜி.

இப்போது 5 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை முழுவதுமாக 3 டியில் வெளியிட ஏவிஎம் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் சில 3 டி படங்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றில் ஏதாவது சில காட்சிகளில் மட்டும்தான் 3 டி எபெக்ட் இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க 3 டி தொழில் நுட்பத்தில் வரும் படம் என்ற பெருமையையும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படம் பெற்றிருக்கிறது.

அதன்படி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு விழா தொடங்கவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி வருவார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

6 மணிக்கு பிரசாத் லேப் தியேட்டரின் ஓரத்தில் ரஜினியைப் பார்த்ததும் சூழ்ந்து கொண்டனர் புகைப்படக்காரர்கள்.

பின்னர் சிவாஜியின் 3 டி ட்ரைலர் திரையிடப்பட்டது. அனைவருக்கும் அதைப் பார்க்க சிறப்புக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ரஜினியும் அந்தக் கண்ணாடியை அணிந்து ட்ரைலர் பார்த்தார்.

 

சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்கள்தான்!' - சூப்பர் ஸ்டார் ரஜினி

3d Is Futuer Cinema Says Rajini

சென்னை: இனி சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்கள்தான் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜி படத்தின் 3 டி பதிப்பின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு திடீரென்று வந்த ரஜினி, ட்ரைலரை ரசித்துப் பார்த்தார். பின்னர் நிருபர்களிடம் பேசினார். நீண்ட காலத்துக்குப் பிறகு நடக்கும் ரஜினி பிரஸ் மீட் இது.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் - பதில்களும்...

சிவாஜி படம் 3டியில் உருவாகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஆண்டவன் எப்போதும் என் கூடவே இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். என் ரசிகர்களுக்கு என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனம் `சிவாஜி' படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்பதை மறந்து, நானே கைதட்டி ரசித்தேன்.

`கோச்சடையான்' படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். உங்களுக்கே (நிருபர்களுக்கே) இந்த படம் பிடித்து இருக்கிறது. என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

எந்திரன்-படையப்பா

கேள்வி: அடுத்ததாக உங்களுடைய எந்த படத்தை 3டி படமாக உருவாக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? விரும்புகிறீர்கள்?

பதில்: எந்திரன், படையப்பா போன்ற பிரமாண்டமான படங்களை 3டியில் கொண்டு வரலாம். இனிமேல் செய்கிற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கதைகளை உருவாக்க வேண்டும். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கி விட்டன.

3 டிக்கு மாத்தின காட்சிகள்ல உங்களுக்குப் பிடிச்ச காட்சிகள் என்னென்ன?

ரஜினி : எனக்கு இன்னும் முழுப் படத்தையும் அவங்க போட்டு காட்டலே. மூணு ரீல்தான் காமிச்சாங்க. வாஜி வாஜி சாங் பார்த்து நானே பிரமிச்சு போயிட்டேன். மூணு வாட்டி அதை திரும்ப திரும்ப போடச் சொல்லிப் பார்த்தேன். இதுவே இப்படி இருக்குன்னா அந்த கண்ணாடி மாளிகை சாங், அதிரடிக்காரன் பாட்டு, அப்புறம் அந்த க்ளைமாக்ஸ் பைட் இதெல்லாம் எப்படி இருக்கும்.... நீங்க ஏற்கனவே படம் பார்த்திருபீங்க. அதெல்லாம் 3 டியில எப்படியிருக்கும்னு நீங்களே விஷுவலைஸ் பண்ணிப் பார்க்கலாம்!

அதிர்ஷ்டசாலி

கேள்வி: கறுப்பு-வெள்ளை பட காலத்திலும் இருந்தீர்கள். கலர் பட காலத்திலும் இருந்தீர்கள். இப்போது 3டி பட காலத்திலும் இருக்கிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் அதிர்ஷ்டசாலி. எதையும் நான் சாஸ்தி `பிளான்' பண்ணி செய்வதில்லை. எல்லாமே ஆண்டவன் அருளால் நடக்கிறது. கடவுளுக்கு நன்றி.''

பேட்டியின்போது பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், பிரசாத் லேப் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

 

தாண்டவம்: ஒரே தலைப்பை இரு நிறுவனங்களுக்கும் கொடுத்ததால் பிரச்சினை - வழக்கு!

Thaandavbam Title Clash Producer Files Case   

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள `தாண்டவம்' படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சென்னை 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில், ஸ்டார் நைன் மீடியாஸ் உரிமையாளர் எஸ்.விஜய் தாக்கல் செய்துள்ள மனுவில், "தாண்டவம்' என்ற தலைப்பில் புதுமுக நடிகர்கள் நடிக்கும் சினிமா படத்தை தயாரித்து வருகிறேன்.

இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் 2010 டிசம்பர் மாதம் பதிவு செய்துள்ளேன். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணி பிரசாத் பிலிம் லேப்பில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிக்க பணம் தேவைப்பட்டதால், இந்த படத்தை ஹேப்பி மீடியா நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளேன்.

இந்த நிலையில், யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை 'தாண்டவம்' என்ற தலைப்பில் தயாரிக்கிறது. இதுசம்பந்தமாக பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிடம் 2011 அக்டோபர் மாதம் புகார் செய்தோம்.

இதையடுத்து இருதரப்பினரிடம் தயாரிப்பாளர் கவுன்சிலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஆர்.சங்கரின் `தாண்டவம்' என்ற தலைப்பை நாங்களும், விக்ரமின் `தாண்டவம்' அல்லது `சிவதாண்டவம்' என்ற தலைப்பை யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை செலவு செய்து, படத்தின் 90 சதவீத பணிகளை முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில், 1.8.2012 அன்று யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில், `தாண்டவம்' படத்தின் டிரைய்லர் மற்றும் ஆடியோ கேசட் வெளியீடும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ந் தேதி நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

`தாண்டவம்' படத்தின் தலைப்பை யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பயன்படுத்தினால், எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். எனவே `தாண்டவம்' படத்தின் தலைப்பை பயன்படுத்தவும், அந்த தலைப்பில் படத்தை வெளியிடுவதற்கும் யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

இந்த மனு நீதிபதி இந்திராணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வக்கீல் சிவம் சிவானந்தராஜ் ஆஜராகி, வழக்கு விசாரணை 3 வாரத்துக்கு தள்ளிவைக்கவேண்டும் என்று வாதம் செய்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.கோதண்டபாணி எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கை 14-ந் தேதிக்கு (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அப்போது யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஒரே தலைப்பை இருவருக்கும் கொடுத்த சங்கம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த யுடிவி நிறுவன தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன், "ஒரே தலைப்பை இருவருக்கும் கொடுத்ததால் வந்த பிரச்சினை இது. தவறு எங்களுடையதல்ல. பிரச்சினை நல்லவிதமாக முடியும் என நம்புகிறோம்," என்றார்.

 

சுதந்திர தம்பதி: சிநேகா – பிரசன்னாவின் சிறப்பு நிகழ்ச்சி

Independence Day Special Sneha Prasanna Interview

சுதந்திர தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் திரையுலகத் தம்பதியர் சிநேகா - பிரசன்னா பங்கேற்று தங்களின் மணவாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

சுதந்திர தினத்திற்கும் திரையுலகினருக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் கேட்கலாம். ஆனால் திரையுலகினர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால்தானே பலரும் ரசித்து பார்க்கின்றனர். பொதிகை தொலைக்காட்சி தொடங்கி சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வரை திரையுலக நடிகர் நடிகையர்கள் பேட்டி இன்றி எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்புவதில்லை.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் நட்சத்திர தம்பதியர் சிநேகா - பிரசன்னாவின் மகிழ்ச்சிகரமான விசயங்களை நேயர்களுக்கு ஒளிபரப்புகின்றனர். சினிமாவில் ஜோடியாக நடித்தது தொடங்கி மண வாழ்க்கையில் இணைந்தது வரை மகிழ்ச்சிகரமான தருணங்களை சிநேகா - பிரசன்னா தம்பதியர் நேயர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

சுதந்திர தம்பதி என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி புதன்கிழமை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் திரளும் இளையராஜா ரசிகர்கள்!

Ilaiyaraaja Yahoo Group Meet Chennai Aug 19

உலகெங்கும் கோடிக்கணக்கான உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி கூடவுள்ளனர். இது இளையராஜாவின் யாஹூ குரூப் உறுப்பினர்களின் 25வது கூட்டமாகும். இதற்கான ஏற்பாடுகளை, குரூப்பை உருவாக்கி நிர்வகித்து வரும் டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமனும் அவரது சகாக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருப்பார்கள். ஆனால் அதற்கு நிகராக, ஏன் அதை விட ஒரு படி மேலான, உயர்வான, நிறைவான, அழகான ரசிகர்களைக் கொண்ட ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. உண்மையில் இவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் இவர்தான் ஹீரோவாக திகழ்ந்திருப்பார். கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் இசையைக் கொடுக்கும் ஒரு சில இசை ஹீரோக்களில் ராஜாவுக்கு முதலிடம் உண்டு.

கடந்த தலைமுறையினரை மட்டுமல்லாமல் இப்போதைய தலைமுறையினரையும் கூட வியக்க வைத்த, லயிக்க வைத்த பெருமைக்குரியவர் இளையராஜா. அவரது தென்றல் இசைக்கு அடிமையானவர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் இந்த யாஹூ ராஜா குரூப

இளையராஜாவின் ரசிகர்களுக்கான இணையதள ரசிக மேடை இது. இதை கோவையைச் சேர்ந்த பிரபல டாக்டரும், ராஜாவின் முன்னணி ரசிகர்களில் ஒருவருமான டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு மே 17ம் தேதி உருவாக்கினார். வெறுமனே ராஜாவின் இசையை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், ராஜாவின் இசை குறித்து கிட்டத்தட்ட ஒரு ஆய்வையே இந்த குரூப் மேற்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமானது. தமிழ் இசையமைப்பாளர் ஒருவருக்கு இந்த அளவுக்கு உயர்ந்த தரத்திலான ஒரு ரசிகர் குழாம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

எந்தவித சர்ச்சையும் இல்லாமல் முழுக்க முழுக்க ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே அலசும் அருமையான குரூப்பாக இந்த யாஹூ இளையராஜா ரசிகர் குழு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இந்தக் குழு படிப்படியாக விரிவடைந்து இன்று உலகம் முழுவதும் 4400 உறுப்பினர்களுடன் அட்டகாசமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது - ராஜாவின் இசையைப் போல கம்பீரமாக.

இந்த குழுவினர் சுய கட்டுப்பாட்டைக் காப்பதில் மிக நேர்த்தியாக செயல்படுகிறார்கள். இந்த குழுவின் விவாதங்களில் ராஜா மற்றும் அவரது இசையை மட்டுமே விவாதிக்கிறார்கள். ராஜாவைத் தாண்டி யாரைப் பற்றியும் இவர்கள் விமர்சிப்பதில்லை, ஒப்பிடுவதில்லை, பேசுவதில்லை.

டாக்டர் விஜய் வெங்கட்ராமனுடன் இணைந்து முப்பெரும் தூண்கள் போல பி.எஸ்.ராம்ஜி, வி.ஸ்ரீதர், எம்.ஸ்ரீவித்யா ஆகியோரும் இந்த குழுவை வழிநடத்திச் செல்கிறார்கள். இவர்கள் தவிர மேலும் பலரும் இந்தக் குழுவை சிறப்பாக கொண்டு செல்ல உதவி வருகிறார்கள்.

இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் 'திருவாசகம் பை இளையராஜா', 'தி மியூசிக் மெஸையா' ஆகிய படைப்புகளில் இந்த ரசிகர் குழுவுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.

ராஜாவின் யாஹூ குரூப்பை யாஹூ இந்தியா நிறுவனம் முறையாக அங்கீகரித்துள்ளது இந்த குரூப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும். மேலும் 2008ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மும்பையில் நடந்த 3வது யாஹூ குரூப் மாடரேட்டர்கள் சங்கத்தின் மாநாட்டுக்கும் இளையராஜா யாஹூ குரூப் அழைக்கப்பட்டிருந்தது. குரூப் சார்பில் உறுப்பனர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஆண்டில் சில நாட்கள் ஒன்றாக சந்தித்து ஆரோக்கியமான விவாதங்களை எடுத்து வைக்கிறார்கள். 2002ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2005 முதல் 2010 வரை சென்னையில் உள்ள மாபோய் அகாடமியில் தொடர்ந்து இவர்களின் கூட்டங்கள் நடந்து வந்தன.

இளையராஜாவின் இசைப் படைப்புகள் குறித்து விவாதங்கள் இந்த கூட்டத்தில் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இளையராஜாவின் இசையில் பொதிந்து கிடக்கும் பல்வேறு சிறப்பம்சங்களையும் விவாதிக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் ஆர்கெஸ்டிரா மூலம் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களையும் ஒலிக்கச் செய்து இசை விருந்தும் படைக்கிறார்கள். உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக இதில் பங்கெடுத்து பாடுகிறார்கள்.

வெறுமனே கூடி விவாதித்துக் கலையாமல் ஆய்வுத் தாள்களையும் சமர்ப்பிப்பது இந்த குரூப்பின் முக்கிய அம்சமாகும்.

கடந்த 2009ம் ஆண்டு மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவையில் ராஜா குரூப்பின் 10வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் ஆகஸ்ட் 19ம் தேதி இக்குழுவின் 25வது கூட்டம் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்குத் தொடங்கும் கூட்டம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

கூட்டம் நடைபெறும் முகவரி

கிளினிமைன்ட்ஸ்
எண் 9, தாமோதரன் தெரு, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம்
சென்னை -10

மேல் விவரங்களுக்கு 9600055773 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு அறியலாம்.