'பாக்ஸ் ஆபீஸ் கிங்' ஷங்கருக்கு பிறந்தநாள்... ரஜினி வாழ்த்து!


பாலிவுட்டில் ஷோ மேன் ஆப் இந்தியா என்ற பெருமைக்குரிய அடைமொழியைப் பெற்றவர்கள் இருவர்தான். ஒருவர் ராஜ்கபூர். அவருக்குப் பிறகு சுபாஷ் கய்.

இன்று அந்தப் பட்டப்பெயர் பாலிவுட்டில் யாருக்குமே இல்லை. மாறாக தென்னிந்திய திரைப்பட உலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங் எனப் புகழப்படும் இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமாகியுள்ளது.

எந்திரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரைத்தான் பாலிவுட்டிலிருப்பவர்களும் ஷோமேன் ஆப் இந்தியா எனப் புகழ்கின்றன.

அந்த ஷோமேன் இன்று தனது 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்!

இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார் ஷங்கர். அவற்றில் இந்தியில் அவர் எடுத்த நாயக் (முதல்வன் ரீமேக்) தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள்தான். குறிப்பாக பாய்ஸ் மட்டும்தான் இவற்றில் 100 நாட்கள் ஓடியது. மற்ற படங்கள் வெள்ளி விழா கண்டன.

அவரது கடைசி இரு படங்கள் சிவாஜி மற்றும் எந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடித்தவை. எந்திரனின் வெற்றிதான் ஷங்கரின் இத்தனை வருட திரைவாழ்க்கையின் உச்சம் என்றால் மிகையல்ல.

பொதுவாக ரஜினியின் படங்களில் அவரைத் தவிர, வேறு யாரையும் ரசிகர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் எந்திரன் வெற்றியில் ரஜினிக்கு இணையான முக்கியத்துவத்தை ஷங்கருக்கும் அளித்தனர் ரசிகர்கள். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்தப் படம் அவரது வெற்றிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையுமா என்ற கேள்வியோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிறந்த நாள் காணும் அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரமுகர்களும் இன்று வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஷங்கரின் ஹீரோ ரஜினியும் இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.

 

கால்ஷீட் சொதப்பல்... ரஜினி மகள் படத்திலிருந்து அமலா பால் நீக்கம்!


ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டார் நடிகை அமலா பால்.

சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி, மைனா படத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர் அமலா பால். அதன் பிறகு அவருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள். விக்ரமுடன் நடித்த தெய்வத் திருமகன் வெற்றிபெற்றதால், அவரை முன்னணி நடிகர்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தனர்.

ஐஸ்வர்யா தனுஷ், தான் முதல் முதலாக தனுஷை வைத்து இயக்கும் படத்தின் ஹீரோயினாக அமலாவை ஒப்பந்தம் செய்திருந்தார். அமலாவுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகும். சொல்லப் போனால் அவர் முதல்முதலாத முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிப்பது இந்தப் படத்தில்தான். இதன்மூலம் அவர் முதல்நிலை நாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் நடந்தபோது, அதில் பங்கேற்று, இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றார் அமலா பால்.

இந்த நிலையில் இப்போது திடீரென படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான பின்னணி குறித்து விசாரிக்கையில், ஐஸ்வர்யா தனுஷ் படத்தில் ஒப்பந்தமான பிறகு அமலா பால் தெலுங்கு படங்களுக்கு தனது கால்ஷீட்டை வாரி வழங்கிவிட்டது தெரியவந்தது.

இதனால் ஐஸ்வர்யா தனுஷ் படத்தின் போட்டோ ஷூட்டுக்குக் கூட வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டாராம் அமலா. தெலுங்கில் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ராம்கோபால் வர்மான உதவியாளர் இயக்கும் ஒரு படத்திலும் வாய்ப்பு கிடைத்ததால் தேதிகளை மொத்தமாக அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, தனுஷ் படத்தை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

தமிழில் அறிமுகமாக 3 படங்கள் முடிப்பதற்குள் பிரச்சினைக்குரிய நாயகி என்ற பெயரையும், கால்ஷீட் சொதப்பலால் மிகப்பெரிய வாய்ப்பையும் உதறியிருக்கிறார் அமலா பால்.

தொடங்கிய இடத்திலேயே முடிவது என்பது இதுதான் போலிருக்கிறது!
 

ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹாசன்


அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன்.

நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப் பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.
 

ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை... பூரண குணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு!


சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்துள்ள ரஜினியை, முதல் முறையாக மருத்துவர்கள் குழு மீண்டும் பரிசோதித்துப் பார்த்தது. ரஜினி மிகவும் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ரஜினிக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சிறுநீரக பாதிப்பு இருந்ததால் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பூரண குணமடைந்து கடந்த மாதம் 13-ந் தேதி சென்னை திரும்பினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீடு மற்றும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுவரை யாரையும் அவர் சந்திக்கவில்லை.

இதற்கிடையில் ரஜினி உடல் நிலையை மீண்டும் பரிசேதித்தனர் மருத்துவர்கள். டாக்டர்கள் ரஜினி வீட்டுக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் பூரண நலமடைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் ராணா படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் இன்னொரு முறை ரஜினி உடல் பரிசோதனை செய்து கொள்வார் என கூறப்படுகிறது.
 

சண்டையெல்லாம் இல்லை... நல்லமாதிரிதான் பிரிஞ்சோம்! - அமலா பால் விளக்கம்


ஐஸ்வர்யா தனுஷுடன் தனக்கு சண்டை எதுவும் இல்லை என்றும் சமாதானமாகவே பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தேடி வருகின்றனர் ஐஸ்வர்யாவும் தனுஷும்.

இதற்கிடையே, பெரிய படத்திலிருந்து அமலா நீக்கப்பட்டதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழில் அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். இன்னொன்று அறிமுகமான தமிழ் சினிமாவை விட, தெலுங்குப் படங்களில் நடிப்பதையே அவர் கவுரவமாகக் கருதுகிறார்.

சமீபத்தில் தனது முதல் தெலுங்குப் படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பேட்டி கொடுத்திருந்தார். மேலும் மேலும் அதிக தெலுங்குப் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். '3' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்," என்றார்.
 

அன்னா ஹசாரே விவகாரம்.... போலீசுக்கு நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு கண்டனம்


அன்னா ஹஸாரேவை உண்ணாவிரதம் இருக்க விடாமல் தடுத்து கைது செய்ததற்கு நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு போன்றவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் மாதவன் கூறுகையில், “அன்னா ஹசாரேவை தடுத்த விதம், அதிகாரிகளின் மிகவும் முட்டாள்தனமான, அற்பத்தனமான நடவடிக்கை என்பது எனது கருத்து. இது பெரிய தவறு. அமைதியாக போராட்டம் நடத்தும் ஹசாரேவின் உரிமை, அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மவுனமாக இருப்பது ஏன்?

தகவல் பெறும் உரிமை சட்டம் போல, லோக்பால் சட்டமும் பின்னாளில் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறதா?”, என்றார் வேகமாக.

பிபாஷா

நடிகை பிபாஷா பாசு கூறுகையில், “நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் ‘ஊழல்` என்னும் பேயை கொல்ல ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும்ட என்று கூறியுள்ளார்.

நடிகைகள் ஷபனா ஆஸ்மி, தியா மிர்சா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த முறை கருத்து தெரிவிக்கவில்லை.

 

'களவாணி' பட இயக்குநர் சற்குணம் போல பேசி நடிகைகளிடம் மோசடி செய்ய முயன்ற ஆசாமி!


களவாணி பட இயக்குநர் சற்குணம் குரலில் பேசி புதிய நடிகைகளிடம் பணம் பறிக்க முயன்ற ஆசாமியை போலீஸ் தேடி வருகிறது.

‘களவாணி’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சற்குணம். இப்போது வாகை சூடவா படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் சற்குணம் ஒரத்தநாடு அருகில் உள்ள பாப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், “நான் இப்போது, ‘வாகை சூடவா’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளேன். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், நான் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாகவும், அந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிப்பதாகவும் கூறி, யாரோ ஒரு ஆசாமி மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம்.மில் போட்டால், சற்குணம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு புதுமுக நடிகையிடம் பேசியிருக்கிறார். இன்னொரு புதுமுக நடிகையிடம், ரூ.34 ஆயிரம் கேட்டு இருக்கிறார்.

மறுநாள், அதே நடிகையிடம் நான் பேசுவது போல் போனில் பேசியிருக்கிறார். படத்தின் கதாநாயகன்தான் தயாரிப்பாளர் என்றும், அவருடன் போனில் பேசும்படியும் கூறி, ஒரு நம்பரை கொடுத்து இருக்கிறார்.

என் பெயரை சொல்லி மோசடி செய்ய முயன்ற அந்த ஆசாமியை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, இயக்குநர் சற்குணம் பெயரை சொல்லி மோசடி செய்ய முயன்ற ஆசாமியை தேடி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் இயக்குநர் சசிகுமார் பெயரில் புதிய நடிகைகளிடம் போனில் பேசி பணம் பறிக்க ஒரு ஆசாமி முயன்றதாக சசிகுமார் புகார் தந்தது நினைவிருக்கலாம். இதே ஆசாமிதான் சற்குணம் பெயரிலும் மோசடிக்கு முயல்கிறாரா என போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.