தன்னுடன் நடித்த முன்னணி நடிகர்களை வரிசைப்படுத்திய நடிகை த்ரிஷா, அஜீத்துக்கு முதலிடம் தந்தார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் தலைமை அமைப்பான ஃபெட்னாவின் 27வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் முன்னணி நடிகை த்ரிஷா.
மிசௌரி மாநிலத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்ற த்ரிஷாவிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டனர்.
இந்தக் கேள்விகளில் ஒன்று... 'உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகர்களில் யாருடன் உங்களுக்கு கெமிஸ்ட்ரி சரியாக அமைந்தது என்பதன் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள்... முதல் 5 நடிகர்களைச் சொல்லுங்கள்,' என்றனர்.
முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கிய த்ரிஷா, பின்னர் சட்டென பதில் கூறத் தொடங்கினார்.
'அஜீத், சூர்யா, விக்ரம், கமல், விஜய்....னு சொல்லலாம்' என்றார்.
உடனே வந்திருந்த ரசிகர்களைப் பார்த்து, த்ரிஷாவுக்கு எந்த ஹீரோ பொருத்தம் என்று தொகுப்பாளர்கள் கேட்க, அவர்களில் ஒரு பகுதியினர் பெரும் குரலில் 'தல அஜீத்' என்றும், அவர்களுக்கு இணையான பலத்துடன் 'இளைய தளபதி விஜய்' என இன்னொரு பகுதியினரும் குரல் கொடுத்தனர்.