ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி இலக்கியத்தில் காவியங்கள் படைத்த வாலி

ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி இலக்கியத்தில் காவியங்கள் படைத்த வாலி

சென்னை: கவிஞர் வாலி தன் வாழ்க்கையை ஓவியராகத்தான் தொடங்கினார்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். நேதாஜி எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார்.

பாடல்கள் புனைய ஆரம்பித்த பிறகு, ஓவியம் வரைவதை நிறுத்திக் கொண்டார்.

ஏன் என்று கேட்டபோது, "ஒருத்தனுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் எது சரியாக வருகிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்தி செய்தால்தான் மேல வர முடியும்," என்றார்.

வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்திருந்தாராம். அந்தப் பாடல்தான் டிஎம்எஸ்ஸுடன் பழக்கத்தை ஏற்படுத்தியது.

நடிகர் நாகேஷும் வாலியும் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியவர்கள்.

திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

'கலியுக கண்ணன்', 'கடவுள் அமைத்த மேடை', 'ஒரு செடியில் இரு மலர்கள்', 'சிட்டுக்குருவி', 'சாட்டை இல்லாத பம்பரங்கள்', 'ஒரேயொரு கிராமத்திலே' உள்பட 17 திரைப்படங்களுக்கு வாலி திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதி ராவுடன் சேர்ந்து 'வடைமாலை' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், நிஜ கோவிந்தம், அம்மா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வாலி 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார். 1 எங்கள் தங்கம் (1970), இவர்கள் இப்படித்தான் (1979), வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள் (1989), கேளடி கண்மணி (1990), தசாவதாரம் (2008) ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த 2007-ம் அண்டு மத்திய அரசு வாலிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.

வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.

 

சில்க் ஸ்மிதாவில் இருந்து முகமது அசாருத்தீனுக்கு தாவிய ஏக்தா கபூர்

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருத்தீனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் தயாரிக்கவிருக்கிறார் ஏக்தா கபூர்.

பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தை தயாரித்தார் ஏக்தா. இந்நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கையை படமாக்கும் ஆசை வந்துள்ளது.

சில்க் ஸ்மிதாவில் இருந்து முகமது அசாருத்தீனுக்கு தாவிய ஏக்தா கபூர்

இதையடுத்து அவர் படத்தை எடுக்க அசாருத்தீனிடம் அனுமதி வாங்கி பெரிய தொகையையும் அவருக்கு கொடுத்துள்ளாராம். மேலும் திரைக்கதை எழுதும் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.

இது தவிர அசாராக நடிக்க வைக்க 3 ஹீரோக்களை ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்துள்ளாராம். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி. ஆனால் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டாலும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கமுக்கமாக உள்ளார் ஏக்தா. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே துவங்கவிருக்கிறதாம்.

 

அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை

அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை

தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ்.

ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்...

"ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;
அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

மாமனிதனின் மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது உன் -
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று...
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது

நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;

நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது
காடையர்க்கு கிலியானது!

'தம்பி!
தம்பி!" என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ் வாழ் -
இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன் கும்பி!

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை...
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்டவெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
தப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!


'இருக்கிறானா?
இல்லையா?"
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு -
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ...
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி -
வந்தாய் சென்னை; அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித்தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம்தராத - எங்கள்
தமிழ்மண் -
நிரந்தரமாய்த்
தேடிக்கொண்டது பழி!


(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது)

 

உலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி அஞ்சலி!

உலகம் உள்ளவரை கவிஞர் வாலியின் தமிழ் வாழும் என்று புகழஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளாலும் பண்பட்ட குணத்தாலும் கோலோச்சிய கவிஞர் வாலியின் மரணம், எல்லோரையும் உலுக்கிப் போட்டுள்ளது.

இலக்கியம், திரையுலகம், அரசியல் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆளுமைகள் வாலிக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் -  ரஜினி அஞ்சலி!

கவிஞர் வாலி அதிகம் பாட்டெழுதிய நாயகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினியின் இயல்பை மனதில் வைத்து அவர் படிக்காதவன் படத்தில் எழுதிய ராஜாவுக்கு ராஜா நான்டா... பாடல் ரஜினிக்கு எப்போதும் விருப்பமான பாடல்.

ரஜினிக்கு சிவாஜி - தி பாஸ் வரை தொடர்ந்து பாடல் எழுதிய வாலி, அடுத்து வெளியாகவிருக்கும் கோச்சடையான் படத்திலும் பாடல் எழுதியுள்ளார்.

மறைந்த கவிஞர் வாலிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினி. வாலி குறித்து அவர் கூறுகையில், "அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும்," என்றார்.

 

வாலியின் பெருமை யாருக்கும் வாய்க்காது - வைரமுத்து இரங்கல்

வாலியின் பெருமை யாருக்கும் வாய்க்காது - வைரமுத்து இரங்கல்

சென்னை: கவிஞர் வாலியின் பெருமை யாருக்கும வாய்க்காதது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

நிரப்ப முடியாத வெற்றிடம்

தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.

வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க முடியும். எம்.ஜி.ஆர். - சிவாஜி தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய பெருமை அவருக்கு உண்டு.

சுப்பையா நாயுடு முதல் ரஹ்மான் வரை...

கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார்.

எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு பெரும்பங்கு உண்டு. திராவிட இயக்க அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் மைந்தர் மு.க.முத்துவுக்கு "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ" என்று எழுதினார்.

தனக்கு தானே இரங்கல் பாடல்

மூன்று என்ற தொடங்கும் பல்லவியை இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாராரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவர்; தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர்.

வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர். "தாய்கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா" என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்.

தமிழ் மரணம்

அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்து கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

 

காமெடி சந்தானம் என் இடுப்பை கிள்ளிவிட்டாரே: புலம்பித் தள்ளும் சந்தியா

சென்னை: யா யா படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா.

சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் யா யா படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம்.

காமெடி சந்தானம் என் இடுப்பை கிள்ளிவிட்டாரே: புலம்பித் தள்ளும் சந்தியா

சில காட்சிகளில் சந்தானம் சந்தியாவின் இடுப்பை கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என்று ரொம்பவே ரொமான்டிக்காக நடித்துள்ளாராம். இப்படி காமெடி நடிகரோடு முத்த காட்சியில் நடித்துவிட்டோமே என்று சந்தியா நொந்து கொண்டிருக்கிறாராம். மேலும் இதுவரை ஹீரோக்கள் கூட கிள்ளாத தனது இடுப்பை சந்தானம் கிள்ளிவிட்டதை நினைத்தால் அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம்.

இனியும் இங்கிருந்தால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்த அவர் மலையாள படங்களில் நடிக்க சொந்த மாநிலமான கேரளாவுக்கு கிளம்பிவிட்டாராம்.