மும்பை ஜூஹுவில் சொந்த வீடு வாங்கிய சமீரா!


மும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா வாங்கியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார்.

சொந்தவீடு வாங்கியது குறித்து சமீரா கூறுகையில், " மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர்.

எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம்.

தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வருகிறேன்.

எனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன்தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன்," என்றார்.
 

மூவருக்குத் தூக்கு: நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம்-பாரதிராஜா அறிவிப்பு


சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடுவதைக் கண்டித்து திரையுலகினரை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

மூன்று பேரையும் தூக்கிலிட இன்று தேதி குறித்துள்ளது வேலூர் சிறை நிர்வாகம்.இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சங்க அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. இதை எதிர்த்து திரையுலகம் சார்பில் பெரும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்.

முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக அவருக்கு கடிதம் எழுதவுள்ளோம். மேலும் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இதைச் செய்யும் தகுதியும், அதிகாரமும் அவருக்கு உள்ளது. எனவே அவர் தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும்.

மீடியா உலகம் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் லோக்பால் உண்ணா விரதத்தை ஒரே மாதத்தில் உலகளாவிய பிரச்சினையாக மாற்றிவிட்ட மீடியா, உயிர் போகிற இந்த அத்யாவசிய, அவசரப் பிரச்சினைக்காக ஆதரவு காட்ட வேண்டும், என்றார் பாரதிராஜா.
 

சினிமா துறையின் நலன் பாதுகாக்கப்படும்! - அமைச்சர் செந்தமிழன்


சென்னை: தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள்.

கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை.

தமிழ் பெயருக்கு வரி விலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் உறுதி

இதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது:

திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை.

எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.

இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்


நடிப்பு: பரத், சந்தானம், ரீமா கல்லிங்கல், சம்பத்
இசை: விஜய் ஆன்டனி
ஒளிப்பதிவு: கோவி ஜெகதீஸ்வரன்
கதை வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன்
தயாரிப்பு: பைஜா
பிஆர்ஓ: மவுனம் ரவி

இந்தியாவே வேண்டாம், எப்படியாவது அமெரிக்கா போய் செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவு. ஆனால் அவரது கோடீஸ்வர கிராமத்து அப்பா சம்பத்தோ உள்ளூர் ஜட்ஜ் மகளுடன் திருமணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார்.

அமெரிக்க விசா பெறுவதற்காக தூதரக வாசலில் காத்திருக்கும்போது ரீமா கல்லிங்காலை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பில் முட்டிக் கொள்கிறார்கள். அந்த மோதல், அவர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தொடர்கிறது. அதுவே பரத்துக்குள் காதலாக உருவெடுக்கிறது. பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்ட ரீமாவுக்கு ஒருகட்டத்தில் பரத் உதவ, அப்போதுதான் ரீமா பரத்துடன் நட்பாகிறார்.

ரீமா மீதான தன் காதலைச் சொல்லிவிட பரத் முயலும்போதுதான், ரீமா விசா பெற்றதே அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகத்தான் என்ற உண்மை தெரிகிறது.

அப்பா பார்த்த பெண்ணை பரத் கட்டினாரா? அமெரிக்க மாப்பிள்ளையை ரீமா மணம் முடித்தாரா? என்பதெல்லாம் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள்.

ரொம்ப சிம்பிளான காதல் கதை. அதன் பெரும்பகுதியை சீஷெல்ஸ் தீவின் அழகிய லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் நச்சென்று சொல்லத் தவறியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் சந்தானம். பின்னி பெடலெடுத்துவிட்டார் மனிதர். அவர் தோன்றும் காட்சிகளில் அப்படியொரு அதிர்வெடி சிரிப்பு. ஆனால் சீஷெல்ஸில் அந்த நீக்ரோக்களைப் பார்த்து அவர் பேசும் வசனம் கொஞ்சம் ஓவர்தான். “மச்சான் போதைல பாத்ரூம்னு நெனச்சி ப்ரிஜ்ஜுக்குள்ள ஒண்ணுக்குப் போயிட்டேன்,” எனும் போது அக்மார்க் குடிகாரன் தோற்றான்!

பரத் ரொமான்டிக்காக நடிக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பாஸ்போர்ட்டுக்காக வரும் ரீமாவை வேண்டுமென்றே அவர் ஈசிஆரில் இழுத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

ஆனால் பிள்ளைப் பாசத்தில் நல்ல விஷயங்களைச் செய்யும் தந்தையுடன் பரத் முறைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகளில் பரத் மீது எரிச்சல்தான் வருகிறது.

கோதுமை நிற அழகி ரீமா கல்லிங்கால் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளார்.

ஒரேயொரு காட்சியில் வரும் சத்யன் கலகலக்க வைக்கிறார்.

எந்த வேடமென்றாலும் அப்படியே 100 சதவீதம் பொருந்திப் போகிறார் சம்பத். அந்த கிராமத்து தாதா வேடத்தை இவரைவிட சிறப்பாக செய்ய முடியாது.

கோவி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், சீஷெல்ஸுக்கே போய் வந்த உணர்வு. அதேபோல, உசிலம்பட்டி என படத்தில் காட்டப்படும் இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு.

விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி பாடல்கள் கேட்க வைக்கின்றன. வசனங்களில் எஸ் ராமகிருஷ்ணனை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக கிராமத்தில் மகனிடம் சம்பத் பேசும் காட்சிகள்.

படத்தின் பின்பாதியில் நிறைய சம்பவங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது கூட புதுப்புது பாத்திரங்கள். அதேபோல க்ளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது. இதைத் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும் யுவன் யுவதி!

 

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது!


அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் ‘மல்டி ஸ்டாரர்’ படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு ‘மங்காத்தாவே’ நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

 

நாடு முழுக்க ஹஸாரே கதிர்வீச்சு! - விவேக் பேச்சு


சென்னை: நாடு முழுக்க இன்று அன்னா ஹஸாரே எனும் கதிர்வீச்சு பரவியுள்ளது என்றார் நடிகர் விவேக்.

பன்னாட்டு அரிமா சங்கம், சென்னை அரிமா மாவட்டம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மரம் நடுவிழாவை தொடங்கி வைத்து விவேக் பேசுகையில், “பசுமை கலாம் திட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டத்திற்கு அரிமா மணிலால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தருவதாக கூறினார்.

இன்று நாடு முழுவதும் ஒரு கதிர்வீச்சு பரவுகிறது. அது அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு தான்.

அன்னா ஹசாரே ஊழலை ஓழிக்க பாடுபடுகிறார். இங்கு உள்ள மாணவ தம்பிகளை தம்பி ஹசாரேவாக பார்க்கிறேன். இந்தியாவில் 100 கோடி மரங்களை நடவேண்டும் என்று அப்துல்கலாம் விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை பசுமை கலாம் திட்டத்தில் நட உள்ளோம். இதில் எக்ஸ்னோரா உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள் சேர்ந்துள்ளன.

மரம் வளர்க்கும் விழிப்புணர்வை மாணவர்கள் கிராமத்து மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் வளர மழைநீர் தேவை. அதற்கு மரங்கள் தேவை. மரத்தை வளர்த்து வளத்தை பெருக்குவீர்,” என்றார்.

பன்னாட்டு அரிமா இயக்குனர் கிருஷ்ணாரெட்டி, போலீஸ் ஐ.ஜி.ஆறுமுகம், அரிமா மாவட்ட கவர்னர் பி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வரவேற்றார். அரிமா டி.சேகர் நன்றி கூறினார்.

 

சிங்கப்பூரில் 7-ஆம் அறிவு இசை வெளியீடு... சன் டிவியில் ஒளிபரப்பு!


சூர்யா – ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 7-ஆம் அறிவு படத்தின் இசை வெளியீடு சிங்கப்பூரில் நடக்கிறது.

செப்டம்பர் 10-ம் தேதி பிரமாண்டமாக நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிறது சன் டிவி.

ரஜினி நடித்த எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்த அரங்கிலேயே ஏழாம் அறிவு பாடல்களையும் வெளியிடுகிறார்கள்.

படத்தின் வெளியீட்டு உரிமையையும் சன் பிக்சர்ஸ்தான் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.