குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ரோஜா – செல்வமணி மகள்

ரோஜா - செல்வமணியின் மகள் அஞ்சுமாலிகா தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'செம்பருத்தி' படத்தில் அறிமுகமானவர் நடிகை ரோஜா, அதன்பின்னர் இந்து, உழைப்பாளி, வீரா, ராசையா, மக்களாட்சி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும்  ரோஜா – செல்வமணி மகள்

இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தற்போது நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ள ரோஜா, தொலைக்காட்சிகளில் கேம் ஷோக்களும் நடத்தி வருகிறார்.

மகள் அறிமுகம்

இவர் விரைவில் தனது மகள் அஞ்சு மல்லிகாவை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு நட்சத்திரம்

பல முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் வாரிசுகளை சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் ரோஜாவும் தனது மகளை திரையுலகில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரோஜா சம்மதம்

இவரது மகள் அஞ்சுமாலிகாவிற்கு 12 வயது ஆகிறது. இவர் ரோஜாவுடன் இருக்கும் சமீபத்திய படங்கள் வெளிவந்தன. இதையடுத்து சினிமாவில் குழந்தைகள் நட்சத்திரமாக அறிமுகபடுத்த இயக்குனர்கள் பலர் அணுகியுள்ளனர். ரோஜாவும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

சின்னத்திரையில்

ரோஜா மகள் அஞ்சு ஏற்கனவே குழந்தைகள் பங்கு பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அம்மாவிற்கு ஆதரவாக நகரி தொகுதியில் வாக்கு சேகரித்தார் அஞ்சுமாலிகா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெரிய பட்ஜெட் படங்களா... இனி இந்த பத்து நாட்களில்தான் ரிலீசாகணும்!- தயாரிப்பாளர் சங்கம்

இனி ஆண்டில் பத்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டிப்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இதுபோன்ற தீர்மானங்கள் ஒவ்வொரு புதிய நிர்வாகம் பதவிக்கு வரும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன இதற்கு முன்.

ஆனால் கலைப்புலி தாணு தலைமையிலான அணி இந்த முறை பதவிக்கு வந்ததிலிருந்து பல நல்ல விஷயங்களை உறுதியாகக் கடைப் பிடித்து வருகிறார்கள்.

அவற்றில் முக்கியமானது, திரைப்பட வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவது.

அதன் ஒரு பகுதியாகத்தான் ரூ 15 கோடி பட்ஜெட்டுக்கு மேல் செலவழித்து எடுக்கப்படும் படங்களை ஆண்டின் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே வெளியிடுவது என்ற முடிவு.

நேற்று கூடிய தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், பெரிய படங்கள் அனைத்தும் இனி கீழ்வரும் நாட்களில்தான் வெளியாக வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

பெரிய பட்ஜெட் படங்களா... இனி இந்த பத்து நாட்களில்தான் ரிலீசாகணும்!- தயாரிப்பாளர் சங்கம்

அந்த நாட்கள்:

ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 15 பொங்கல்

ஜனவரி 26 குடியரசு தினம்

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு

மோ 1 உழைப்பாளர் தினம்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்

செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 21 ஆயுத பூஜை

நவம்பர் 10 தீபாவளி

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்

(ரம்ஜானை விட்டுட்டீங்களே!!)

 

அவ்ளோ பெரிய டைரக்டர் கூப்பிடறார்... எப்படி நோ சொல்றது?- நானி

மம்முட்டி மகன் துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடிப்பில், மணி ரத்னம் உருவாக்கியுள்ள அடுத்த படமான ஓகே கண்மணியை முதலில் தமிழில் மட்டும் வெளியிடுவதாகத்தான் திட்டமிட்டிருந்தார்.

ஹீரோ ஹீரோயின் இருவருமே மலையாளிகள் என்பதால் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியிடத் திட்டமிட்டார் (கேரளாவில் அதிகமாக ஓடுவதும் நேரடித் தமிழ்ப் படங்கள்தானாம்).

இந்த நிலையில் படத்தை தெலுங்கிலும் வெளியிடும் ஆசை வந்துவிட்டதாம். உடனே அவர் தெலுங்கு டப்பிங்குக்காக பக்காவாக ஆள்தேடினார். நினைவில் பளிச்சிட்டவர் நடிகர் நானி.

அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், துல்கர் சல்மானுக்காக தெலுங்கு டப்பிங் பேச சம்மதமும் பெற்றுவிட்டார்.

அவ்ளோ பெரிய டைரக்டர் கூப்பிடறார்... எப்படி நோ சொல்றது?- நானி

இதுகுறித்து நடிகர் நானி கூறுகையில், "அவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரே போனில் கூப்பிட்டு டப்பிங் பேசக் கேட்கும்போது மறுக்கவா முடியும்?" என்றார்.

ஓகே கண்மணியின் தெலுங்கு உரிமையை தில் ராஜூ பெற்றுள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் ஓகே பங்காரம்!

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

விரைவில் 'குட்டி தல'க்கு பெயர்சூட்டு விழா

சென்னை: அஜீத் தனது மகனுக்கு விரைவில் பெயர் சூட்டு விழா நடத்தப் போவதாக கூறப்படுகிறது.

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவி ஷாலினி கடந்த 2ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த சில மணிநேரத்திலேயே அதன் புகைப்படம் வெளியாகி தீயாக பரவியது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது குட்டி தல இல்லை என்றும் சீனாவைச் சேர்ந்த குழந்தை என்றும் பின்னர் தெரிய வந்தது.

விரைவில் 'குட்டி தல'க்கு பெயர்சூட்டு விழா

இந்நிலையில் ஜாதகத்தை கணித்து அஜீத் தனது மகனுக்கு பெயரை தேர்வு செய்துவிட்டாராம். விரைவில் செல்ல மகனுக்கு பெயர் சூட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

வரும் ஏப்ரல் 14ம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற உள்ளது. என்னை அறிந்தால் படத்தை முடித்த பிறகு ஷாலினியுடன் நேரம் செலவிட அஜீத் 2 மாத பிரேக் எடுத்தார்.

தற்போது குட்டி தல பிறந்தாகிவிட்டது. அடுத்து அவர் தனது பட வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட உள்ளார்.

 

மேக்சிம் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக ஏமி கவர்ச்சி போஸ்

சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் மேக்சிம் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை ஏமி ஜாக்சன் மேக்சிம் பத்திரிக்கையின் மார்ச் மாத இழதின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். படுக்கையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

மேக்சிம் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக சூட்டை கிளப்பிய ஏமி

மேக்சிம் பத்திரிக்கைக்கு பொதுவாகவே நடிகைகள் படுகவர்ச்சியாகத் தான் போஸ் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஏமியின் கவர்ச்சி கொஞ்சம் குறைவே எனலாம். ஏமி தமிழ் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க ஏமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேக்சிம் பற்றி ஏமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் அட்டைப்படத்துடன் கூடிய மார்ச் மாத மேக்சிம் பத்திரிக்கை வெளிவந்துவிட்டது என்று தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

மூன்று மாதங்களுக்கு புதுப்பட வெளியீடு இல்லை? - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

சென்னை: தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டை அடுத்த 3 மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை செய்து வருகிறது
.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மாதாந்திர பொதுக் குழுக் கூட்டம், அதன் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், திரைப்படத் தொழிலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு, பட வெளியீட்டில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மூன்று மாதங்களுக்கு புதுப்பட வெளியீடு இல்லை? - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

அப்போது பேசிய தயாரிப்பாளர் மன்னன், 'நடிகர்களுக்கான சம்பளம், படப்பிடிப்பு உபகரணங்களுக்கான வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திரைப்படத் தயாரிப்புகளுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி தயாரிக்கப்பட்டு வரும் படங்களை வெளியிடுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கூட மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு முன்பாகவே திரையரங்குகளில் இருந்து தூக்கப்படுகின்றன. இதற்கு பட வெளியீடுகள் சீரமைக்கப்படாததே காரணம். இந்த நிலை தொடர்ந்தால் சினிமா தொழில் வீழ்ச்சியடையும்.

எனவே, சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதற்காக சினிமா சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் அடுத்த 3 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இக் கோரிக்கையை சங்க உறுப்பினர்கள் பலர் கைதட்டி வரவேற்றனர்.

இதுகுறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கலைப்புலி எஸ்.தாணு நிருபர்களிடம் கூறியதாவது:

தயாரிப்பாளர் மன்னனின் கோரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள கோரிக்கை என்பதால் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.

தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பு மட்டும் இதுகுறித்து முடிவு எடுக்க முடியாது. ஏனென்றால், பல தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதில் அடங்கியுள்ளது.

எனவே, சினிமா தொடர்பான அனைத்து சங்கங்களையும் கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கான பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும்," என்றார்.

 

ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு '36 வயதினிலே'!

திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு 36 வயதினிலே என்று தலைப்பிட்டுள்ளனர்.

சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு '36 வயதினிலே'!

முதல் படமாக, மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை தமிழ் ரீமேக்கில் நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்திலும் வருகிறார் (ஏற்கெனவே ஜூன் ஆர் படத்தில் இவ்வாறு தோன்றியுள்ளார்).

இந்தப் படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்காமல் இருந்தனர்.

இப்போது 36 வயதினிலே என்று பெயர் சூட்டியுள்ளனர். மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ்தான் தமிழ்ப் பதிப்பையும் இயக்குகிறார். கோடையில் வெளியாகிறது 36 வயதினிலே.

 

ஆர்கே வழி தனி வழி.... தள்ளுபடி விலையில் சினிமா பார்க்க ஸ்பெஷல் ஏற்பாடு!

தொழிலதிபரும் நடிகருமான ஆர்கே ஒரு முறை பேசுவதைக் கேட்டால் போதும்,கேட்பவர்கள் மனங்கள் முழுவதும் அவர் பக்கம் திரும்பிவிடும்.

இதிரையுலகில் விடாமுயற்சியால் தனக்கான ஓர் இடத்தைத் தேடிப்பிடித்துஅடைந்திருக்கிறார் ஆர்கே.

ஆர்கே வழி தனி வழி.... தள்ளுபடி விலையில் சினிமா பார்க்க ஸ்பெஷல் ஏற்பாடு!

எதிலும் தனித்து வெளிப்பட விரும்பும் அவர், வியாபாரம் தொடர்பாகவும் ,சுயமுன்னேற்றும் சார்ந்தும் தன்னம்பிக்கை கருத்துக்களை பல்வேறு கூட்டங்கள் மூலம் பரப்பி வருகிறார்.

தனது 'வாங்க சாப்பிடலாம்' ஓட்டலில் சினிமா தொடர்பானவர்கள் சங்க உறுப்பினர் கார்டுடன் சாப்பிட வருகிறவர்களுக்கு உணவு விலையில் 10 சத விகித சலுகை வழங்கினார்.

அண்மையில் தன் 'என்வழி தனி வழி' படத்தின் ட்ரெய்லரை வெளியிடும்போது கூட ஒரு புதுமை செய்தார். பட விளம்பரம் வந்த செய்தித் தாளில் அந்த விளம்பரத்தின் மீது மொபைல் போனைக்காட்டி க்ளிக் செய்தால் போதும் ட்ரைலர் தெரியும். அது இந்தியாவில் முதல் முயற்சி என்று பேசப் பட்டது.

இப்போது அவரது 'என் வழி தனி வழி' படம் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு சலுகைக் கூப்பனை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூப்பன்கள் படம் வெளியாகியுள்ள எல்லா திரையரங்கு வாசலிலும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்ற கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைத்துக் கொள்வார்கள். அதாவது டிக்கெட்100 ரூபாய் என்றால் 90 ரூபாய் போதும்.

ரசிகர்களுக்கு ஆர்கே வழங்கும் சலுகைக் கட்டணத்தில் மீதமாகும் பணத்தில் நொறுக்குத் தீனியையும் வாங்கிக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்த சலுகை என ஆர்கே தெரிவித்துள்ளார்!

 

இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நேற்று கூடியது.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

இதில் தமிழ் சினிமாவை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டன. சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் சாதனையைப் பாராட்டி பெரும் விழா எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இளையராஜாவின் பாடல்களை ஒளி ஒலிபரப்பும் உரிமை மற்றும் படங்களில் பயன்படுத்தும் உரிமையின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை தயாரிப்பாளர் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக இளையராஜா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.