இணையவெளியில், பொது வெளியில் இசைஞானி இளையராஜாவுக்கும் அவரது இசைக்கும் உள்ள மாபெரும் ரசிகர்களின் எண்ணிக்கையை நாடறியும்.
இவர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் இணைத்து, சமூக நலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் இசைஞானி ரசிகர்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார் இளையராஜா.
இணையவெளியில் இயங்கும் ரசிகர்களுக்காக 'இசைஞானி பேன்ஸ் க்ளப் குளோபல்' எனும் இணைய தளத்தை அவருக்காகத் தொடங்கினார்கள்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரு அமைப்பை இசைஞானியே தொடங்கிய பின்னும், இணைய வெளியில் இருக்கும் ரசிகர்கள் இசைஞானி பெயரில் தனித் தனி சமூக வலைதளப் பக்கங்கள் ஆரம்பித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வம் இல்லாமலேயே, 'இது இசைஞானியின் அதிகாரப்பூர்வப் பக்கம்' என்னும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இசைஞானியின் பெயரில் தனித்தனிக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரும், இனி இயங்க வேண்டிய தளம் 'இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (Isaignani Fans Club Global - IFCG)' என்ற பக்கம்தான். தன் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் இளையராஜா.
இதோ அவரது அழைப்பு வார்த்தைகளாகவும் காணொளியாகவும்...
அன்பு ரசிகப் பெருமக்களே... உங்களில் பலர் அதிகாரப்பூர்வமான என்னுடைய இணையதளம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, என்னுடைய அதிகாரம் இல்லாமலே, அதிகாரமற்ற முறையில் நீங்கள் பல வருடங்களாக இந்த இணையதளத்தை குழுமங்களாக நடத்தி வருகிறீர்கள்.
உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வது, நீங்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கின்ற காரணத்தால், என் பெயரை வைத்து உங்களை நீங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து கொண்ட காரணத்தால், உங்களை நான் கேட்டுக் கொள்வது, என்னுடைய இணையதளத்தின் கீழ் நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இணையதளம் இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (IFCG).
-இவ்வாறு இசைஞானி தன் காணொளிப் பேட்டியில் கூறியுள்ளார்.
ரசிகர் மன்றம் தொடங்கிய அடுத்த மாதமே இளையராஜாவின் பிறந்த நாள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை 71001 மரக் கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டனர் அவரது ரசிகர்கள். உலகின் பல நாடுகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைந்தனர். இதுபோன்ற சமூக நல நடவடிக்கைகளில் இறங்க, அனைத்து ரசிகர்கள் ஒருமித்து செயல்படுவது அவசியம் என்று இளையராஜா தெரிவித்தார்.