விஜய் - அஜீத்தை இணைத்து படம் : செல்வராகவன் பேட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது: 'மயக்கம் என்ன' படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.

யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை. எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் 'இரண்டாம் உலகம்'. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. 'ஆயிரத்தில் ஒருவன்' பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன். இவ்வாறு செல்வராகவன் கூறினார்.


 

‘ஒய் திஸ் கொல வெறிடி..’ பாடலுக்கு ரஜினி நடனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒய் திஸ் கொல வெறிடி..Õ பாடலுக்கு ரஜினியை நடனம் ஆட கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இயக்கும் '3Õ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய, 'ஒய் திஸ் கொல வெறிடிÕ பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது. இப்பாடலை சிரித்தபடி கேட்டு ரசித்தார் ரஜினிகாந்த். பாடலுக்கான சூழல் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதை அவர் விளக்கினார்.  

ஏற்கனவே '3Õ படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியை நடிக்க கேட்க எண்ணி இருந்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில், 'ஒய் திஸ் கொல வெறிடிÕ பாடல் பிரபலமாகிவிட்டதால் அந்த பாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினியை நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லி இருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிப்பது உறுதியானால் படத்தில் 2 முறை இப்பாடலை இடம்பெற செய்ய ஐஸ்வர்யா திட்டமிட்டிருக்கிறார். சோலோவாக தனுஷ் பாடுவதுபோல் ஒரு முறையும், ரஜினியுடன் சேர்ந்து மற்றொரு முறை பாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.


 

'கொலைவெறி' பாடலில் ரஜினி?


சூப்பர் ஹிட் ஆகியுள்ள கொலை வெறிடி பாடலில் ரஜினியை தோன்ற வைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இப்பாடல் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதாம்,. பாடலைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தாராம் ரஜினி.

எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு இன்னொரு பெருமையும் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அது ரஜினிகாந்த் இந்தப் பாடலில் தோன்றலாம் என்ற செய்தி.

இப்பாடலை ரஜினிக்குப் போட்டுக் காட்டியபோது விழுந்து விழுந்து சிரித்தாராம். ட்யூனையும், பாடல்வரிகளையும் பாராட்டித் தள்ளி விட்டாராம். இப்பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்றும் தனுஷிடமும், மகள் ஐஸ்வர்யாவிடமும் கூறினாராம் ரஜினி. அவர் சொன்னபடியே தற்போது பாடலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இப்போது இந்தப் பாடலில் ரஜினியைத் தோன்றவைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ரஜினியிடம், தனுஷும், ஐஸ்வர்யாவும் கோரிக்கை வைத்துள்ளனராம். இதுகுறித்து தனுஷிடம் கேட்டால், எங்களது எல்லா முயற்சிகளிலும் ரஜினி சார் இருந்தால் பெருமைதானே என்றார்.

3 படத்தில்தான் இந்த கொலைவெறிடி பாடல் இடம் பெறுகிறது. ஏற்கனவே படு பாப்புலராகி விட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. ஹீரோவாக நடித்திருப்பது அவரது கணவர் தனுஷ். ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். இந்த வரிசையி்ல ரஜினியும் சேர்ந்தால் இந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
 

மண்ணுலகை விட்டு மறைந்தும் ரசிகர்கள் நெஞ்சில் மறையாமல் வாழும் ‘சில்க்’ ஸ்மிதா


சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று.

வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை ( சில்க்கின் இயற்பெயர்) தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் அவர்.

அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.

தென்னிந்திய மொழிகளில் ராஜ்ஜியம்

தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

நடனத்தால் வெற்றி வாகை

1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. லயனம் (1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது.

இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.

மரணத்தை தழுவினார்

பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் திடீரென்று ஒருநாள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.

சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோடானு கோடி ரசிகர்களை கொள்ளை கொண்ட சில்க்கின் நிழலைக் கூட இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள வித்யா பாலன் தொட முடியாது என்பது சில்க்கைத் தெரிந்தவர்கள் கூறும் கூற்று. இருப்பினும், சில்க்கின் வாழ்க்கையை ஒரு ரீவிசிட் செய்ய, நினைத்துப் பார்க்க இந்தப் படம் உதவலாம் என்று எதிர்பார்க்கலாம்.
 

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் புதிய படம்!


பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அஜீத்.

இந்தப் படத்தை 'சிறுத்தை' படத்தை இயக்கிய ஷிவா இயக்குகிறார்.

எங்க வீட்டுப் பிள்ளை, நம்நாடு, உழைப்பாளி என பிரமாண்ட படங்களைத் தயாரித்த இந்த நிறுவனத்தின் நிறுவனரும் அதிபருமான மறைந்த பி நாகிரெட்டியின் 100 வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் முறையான அறிவிப்பு இன்று விஜயா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பி வெங்கட்ராம ரெட்டி, பி பாரதி ரெட்டி தயாரிக்கின்றனர்.

படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

2012-ல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 

நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்குநடிகருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை!


சென்னை: 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் 11-வது பிரதான சாலையில் வசித்தவர் வைஷ்ணவி. பாபா, தீனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில டி.வி. தொடர்களிலும் நடித்தார்.

இவருக்கும் தேவ் ஆனந்த் (வயது 34) என்ற டிவி. நடிகருக்கும் நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவர், 'செல்லமே' டி.வி. தொடரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு 2-வது மனைவியாக இருக்க வேண்டுமென்று வைஷ்ணவியை தேவ் ஆனந்த் வற்புறுத்தியதாகவும், நண்பர்களாகவே தொடரலாம் என்று தான் கூறியதாகவும் பெற்றோரிடம் வைஷ்ணவி கூறியுள்ளார்.

17.4.06 அன்று வைஷ்ணவியின் தாயாரும், தங்கையும் வெளியே சென்றுவிட்ட நிலையில், வீட்டில் வைஷ்ணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

5 ஆண்டு கடுங்காவல்

வைஷ்ணவியை 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தியதாலும், தாங்க முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாலும், திருமணத்துக்கு மறுத்ததால் வைஷ்ணவியை அடித்து காயப்படுத்தி மோசமாக நடந்துகொண்டதாலும், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தேவ் ஆனந்த் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த அக்டோபர் மாதம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இடைக்கால தடை

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்தார். தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர்- குஷ்பு மீண்டும் கருத்து


சென்னை: தேர்தல் முடிவு வெளியானபோதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கவும் முடியாது. மக்கள்தான் தோற்று விட்டனர் என்று மீண்டும் கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து அது வெளியானபோது கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் இது மக்களின் தோல்வி, திமுகவின் தோல்வி அல்ல என்று கூறினார் குஷ்பு. இதையடுத்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் தீர்ப்பை குஷ்பு அவமதித்து விட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீண்டும் அதே போல பேசியுள்ளார் குஷ்பு. சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசுகையில், தலைமைச்செயலகத்தை வாஸ்து பார்த்து ஒதுக்கி வச்சுட்டாங்க. அதனால அங்கே போக மறுக்கிறாங்க.

எதுக்கெடுத்தாலும் மருத்துவமனை கட்டுகிறேன் என்று சொல்கிறாங்க. மருத்துவமனை மீது அவருக்கு திடீருன்னு அப்படி என்ன ஆசை வந்துவிட்டது என்று தெரியவில்லை.

ஆட்சியில் இல்லாதபோதுதான் கொடநாடு போய் ஓய்வு எடுத்தாங்க. ஆட்சியில் இருக்கும்போதும் கொடநாடு போய் ஓய்வு எடுக்கிறாங்க.

மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓட்டுப் போட்டாங்க. ஆனா, அவுங்க தலையில பாறாங்கல்லை தூக்கிப்போட்டுட்டாங்க.

ஏன் இந்த கொலைவெறி - இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.

திமுக என்றைக்குமே தோற்காது. மக்கள்தான் தோற்று விட்டார்கள். இதைத்தான் நான் வாக்கு எண்ணிக்கை முடிவின்போதே சொன்னேன் என்று கூறினார் குஷ்பு.
 

வாடகைக்கு எடுத்த காரை அபேஸ் செய்துவிட்டார் - நடிகை புவனேஸ்வரி மீது புகார்


சென்னை: வாடகைக்கு எடுத்த காரை, திருப்பிக் கொடுக்காமல் 10 மாதங்களாக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார் என நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் சினிமா மற்றும் பத்திரிகை துறையில் பெரும் புகைச்சலைக் கிளப்பியவர் புவனேஸ்வரி.

கொஞ்சநாள் அமைதியாக இருந்த இவர் மீது இப்போது மீண்டும் புகார் கிளம்பியுள்ளது. இந்த முறை வடிவேலு பாணியில், வாடகைக்கு எடுத்த வண்டிக்கு பணமும் கொடுக்காமல், வண்டியைத் திருப்பியும் தராமல் 10 மாதங்களாக இழுத்தடிப்பதாக புகார் தரப்பட்டுள்ளது.

தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி. முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் அசோக்குமார்.

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நடிகை புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் நேரில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நடிகை புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் மோசடி புகார்கள் உள்ளன. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

எல்லீஸ் ஆர் டங்கனுடன் பணியாற்றிய 102 வயது நடிகர் மரணம்!


சென்னை: பழம்பெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் காலத்தில் இருந்து திரைப்படங்களில் மிருகங்களுக்கு பயிற்சி அளிப்பவராக பணிபுரிந்த புலிக்குட்டி கோவிந்தராஜ் நேற்று மரணமடைந்தார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் மிருகங்களின் பயிற்சியாளராக பணிபுரிந்தவர் கோவிந்தராஜ். சேலத்தைச் சேர்ந்தவர். 'புலி பெற்ற பிள்ளை' என்ற படத்தை சொந்தமாக தயாரித்ததுடன், அதில் கதாநாயகனுக்கு அண்ணனாக நடித்திருந்தார். 102 வயதான புலிக்குட்டி கோவிந்தராஜ், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.

அவருடைய உடல், சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உடல் அடக்கம் நடக்கிறது.

மறைந்த புலிக்குட்டி கோவிந்தராஜுக்கு சரோஜா (வயது 85) என்ற மனைவியும், ஜெயபால், நேரு என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள்.
 

"ரசிகன் எக்ஸ்பிரஸ்" பயணத்துடன் ரஜினி பிறந்த நாள் ஆரம்பம்!

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பும் ரசிகர்களுக்காக 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் வாகனத்தை இயக்குகிறது விஜய் டிவி. திங்கள்கிழமை காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்ட இந்த வாகனம் தமிழகமெங்கும் ஒரு ரவுண்ட் அடித்து ரசிகர்களின் வாழ்த்துக்களைச் சுமந்துகொண்டு மீண்டும் வரும் டிசம்பர் 10-ம் தேதி சென்னை வந்து சேர்கிறது.

எதற்காக இந்த எக்ஸ்பிரஸ்?

"ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. நேரில் சொல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்த வாகனம் அவர்கள் இருக்குமிடத்துக்கே சென்று ரஜினிக்கு ரசிகனின் வாழ்த்துக்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. அனைத்து ரசிகர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாழ்த்துக்கள் பின்னர் தலைவருக்கு சேர்க்கப்படும்," என்றார் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் என் ராமதாஸ்.

இந்தப் பேருந்தை ஏவி எம் சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 62 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பேருந்தை வழியனுப்பி வைத்தனர் சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலிருந்து வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள்.

சைதை பகுதி தலைமை மன்றத்திலிருந்து சைதை ரவி, ரசிகர்களுடன் வந்து பேனர் வைத்து கலக்கியிருந்தார். அவருடன் சைதை முருகன், தாம்பரம் கேசவன், தி நகர் பழனி, பிஆர்ஓ ரியாஸ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், ஏற்கெனவே சேலம், நாமக்கல் மாவடங்களைக் கடந்து, நாளை ஈரோடு செல்கிறது. டிசம்பர் 2-ம் தேதி கோவை, டிசம்பர் 3-ல் திருப்பூர், கரூர், காங்கேயம், டிசம்பர் 4 -ம் தேதி மதுரை, டிசம்பர் 5-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, டிசம்பர் 7-ம் தேதி கும்பகோணம், சிதம்பரம், டிசம்பர் 8-ம் தேதி கடலூர், பாண்டி, டிசம்பர் 9-ம் தேதி வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பயணிக்கிறது.

டிசம்பர் 10-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறது.