ட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்!

தன்னை ட்விட்டரில் திட்டிய நபரை கைது செய்த போலீசாரிடம், அவரை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய்.

ரசிகர்களுடன் ட்விட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார் விஜய்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அசிங்கமாகத் திட்டினார். இதனால் விஜய்யும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியானார்கள்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் என். ஆனந்த் ரசிகர் மன்றத்தினரை தொடர்பு கொண்டு அவதூறாக பேசியவரை கண்டுபிடிக்கும்படி அறிவுறுத்தினார்.

அந்த நபர் பட்டாபிராமை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில், அவதூறாக பேசியவர் வீட்டை முற்றுகையிட்டனர் ரசிகர்கள். அவரை பிடித்து பட்டாபிராம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் கணேஷ் என்பது தெரிய வந்தது.

போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

ட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்!

விஷயம் கேள்விப்பட்ட விஜய், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல.. ரசிகர்கள் தங்கள் வேலை மற்றும் குடும்பத்தினரைக் கவனிப்பதுதான் இப்போது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

 

அஜீத்... என்ன மனுஷன் இவர்!- பாலாவின் பிரமிப்பு

அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தவர்கள், தொடர்ந்து ஆறு மாச காலம் அவர் புகழ் பாடுவது வாடிக்கை.

அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தவர்.

அஜீத்துடன் நடித்த அனுபவத்தை இவர் சும்மா சொல்லவில்லை... கைக்காசை செலவழித்து பிரஸ் மீட் வைத்து ஊருக்குச் சொல்லியிருக்கிறார்.

அஜீத்... என்ன மனுஷன் இவர்!- பாலாவின் பிரமிப்பு

இதோ அவரது 'தல' புராணம்:

"அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி நிறைய சொல்லலாம்... ஆனால் அவ்வளவையும் எழுத முடியாதே..

நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத் சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார்.

அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது', என்றார்.

நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்க வைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம்.

அஜீத்... என்ன மனுஷன் இவர்!- பாலாவின் பிரமிப்பு

அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார். சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது.

அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார்.

'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்," என்றார்.

 

சுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு!

எம் சசிகுமார் நடித்து இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் திரைக்கதை வடிவம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

முதல் பிரதியை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட எழுத்தாளர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.

சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்த முதல் படம் சுப்பிரமணியபுரம். இதில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி உள்பட பலர் நடித்திருந்தனர்.

சுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு!

மதுரையை களமாகக் கொண்டு உருவான இந்தப் படத்துக்கு பெரும் வெற்றி கிட்டியது. இந்தப் படம் தெலுங்கிலும் தயாரானது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் அழுத்தமான திரைக்கதைதான்.

இந்தத் திரைக்கதை புத்தகமாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இப்போது அதன் ஆங்கில வடிவம் புத்தகமாக வெளியாகியுள்ளது.

சுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு!

இதன் முதல் பிரதியை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநர் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்பட பலரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

 

இயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்!

இயக்குநர் கவுதம் மேனன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் விண்ணைத் தாண்டி வருவாயா பட தயாரிப்பாளர் ஜெயராமன்.

சிம்பு - த்ரிஷா நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார். ஜெயராமன் தயாரித்தார்.

தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய கவுதம் மேனன் முடிவு செய்தார். ரேஷ்மா கட்டாலா என்பவர் உதவியுடன் போட்டான் கதாஸ் நிறுவனம் மூலம் டப்பிங் செய்யும் பணி நடந்தது.

இயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்!

இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.99 லட்சம் ‘ராயல்டி' தர வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் ஜெயராமன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதை கவுதம் மேனன் ஏற்கவில்லை.

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உதவியை அவர் நாடினார். போலீசார் வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

அதன்பேரில் மாஜிஸ்திரேட், போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமைநாதன் வழக்குப்பதிவு செய்தார். இயக்குனர் கவுதம்மேனன், ரேஷ்மா கட்டாலா, சசிகலா தேவி உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், 406, 417, 419, 426 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு!

'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு!

சென்னை: புதுப் படத்துக்கு விளம்பரம் தேவை... அல்லது ஏதாவது பரபரப்பு கிளப்ப வேண்டுமென்றால் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களுக்கும்கூட ரஜினிதான் தேவைப்படுகிறார்.

ரஜினி மற்றும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டப் பெயரைச் சீண்டாமல் இவர்களுக்குப் பொழுதுபோவதில்லை.

சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து மற்றும் அடைமொழி, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கூட ரஜினியைத் தவிர வேறு எந்த ஹீரோவுக்கும் வைத்து அழைக்கப்படாத நிலையில், இந்தியாவில் - குறிப்பாக தமிழில் மட்டும் யாரையாவது ஒருத்தரை அந்த அடைமொழிக்குள் பொருத்திப் பார்க்க முடியுமா என அடிக்கடி முயற்சிக்கும் கேவலமான வேலையை மீடியாவும் சில தயாரிப்பாளர்களும் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் அப்படி ஒரு முயற்சியில் இறங்கி, ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது யுடிவி நிறுவனம்.

நடிகர் சூர்யாவுக்கு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அந்த நிறுவனம் அடைமொழி கொடுத்து, ரசிகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்துள்ளது.

"புரட்சித் தலைவர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அதை இன்னொருத்தருக்கு வைத்து அழைக்கும் தைரியம், ஆண்மை இங்கு எந்த மீடியா அல்லது தயாரிப்பாளர்களுக்கு உண்டா? சூப்பர் ஸ்டார் என்ற பெயர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் பிரபலம். இந்த அடை மொழிக்குச் சொந்தக்காரர் ரஜினி மட்டும்தான் என்பதும் இந்திய கலைஞர்கள் - உலக கலைஞர்களுக்கு தெரியும். இதில் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என அழைப்பது தேவையற்ற வேலை. ஏற்கெனவே சந்தானத்தை காமெடி சூப்பர் ஸ்டார் என அழைத்து அவரை காலி பண்ணியது யுடிவி. இப்போது அந்த வேலையை சூர்யாவுக்குப் பார்த்திருக்கிறது," என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

விஜயி, அஜீத் போன்றவர்கள் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப் பட்டு, தங்கள் நிலை உணர்ந்து தங்கள் தங்கள் பாதையில் பயணிக்கின்றனர்.

சூர்யாவோ தனக்கு எந்த பட்டப் பெயரும் வேண்டாம் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் யாரைத் திருப்திப்படுத்த அவரை தென் இந்திய சூப்பர் ஸ்டார் என அழைக்க ஆரம்பித்துள்ளது யுடிவி?

 

அட... விஜய்யின் ட்விட்டர் சாட்டும் செம ஹிட்டு!

பொங்கலுக்கு வந்த விஜய்யின் ஜில்லா மட்டுமல்ல, அந்தப் படத்தையொட்டி விஜய் ட்விட்டரில் பங்கேற்ற கலந்துரையாடலும் செம ஹிட்டடித்துள்ளது.

தலைவாவுக்குப் பிறகு வெளியான விஜய்யின் ஜில்லா படம் அவரே எதிர்ப்பார்க்காத அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கேரளாவிலும் இந்தப் படம் சூப்பர் கலெக்ஷன் பார்த்து வருகிறது.

அட... விஜய்யின் ட்விட்டர் சாட்டும் செம ஹிட்டு!

இந்த நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ட்விட்டரில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார் (Live chat @Vijay_cjv).

இந்த கலந்துரையாடலிலு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பங்கேற்று விஜய்யுடன் பேசினர். அப்போதுதான் தனது ரசிகர்கள் அஜீத்தின் ரசிகர்களுடன் மோதுவதை விரும்பவில்லை என்று கூறி, இனி இவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரையும் சொன்னார் விஜய்.

தொடர்ந்து, ரசிகர்கள் தங்கள் வேலை, குடும்பத்தை கவனிப்பதில்தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அவரது இந்த கலந்துரையாடல் நிகழ்வு பெரிய வரவேற்பைப் பெற்றது. ஊடகங்களிலும் கடந்த இரு தினங்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

பெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை!

ஹைதராபாத்: கதாநாயகியை நாய் போல சித்தரித்து போஸ்டர் அடித்த மகேஷ்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தார் நடிகை சமந்தா.

இதற்கு பதில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு.

சமீபத்தில் வெளியான மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படத்துக்கு ஹைசதராபாத் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர்.

பெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை!

அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர் பின்னால் கதாநாயகி கை, கால்களை தரையில் ஊன்றி நாய் போல் மண்டியிட்டு செல்வது போலவும் போஸ்டர் அமைந்திருந்தது.

இதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளதாக அவர் கருத்து வெளியிட்டார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் ஆத்திரமுற்றனர். மகேஷ்பாபு கால்களை சமந்தா பிடிப்பது போன்ற அவரது பழைய பட போஸ்டர்களை வெளியிட்டு கண்டித்தனர். சமந்தாவை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க கூடாது என்றும் எதிர்த்தனர். பிறகு இப்பிரச்சினை அடங்கியது போலத் தெரிந்தது.

ஆனால் மகேஷ்பாபு தற்போது திடீரென்று சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேனொக்கடய்னே படம் எதிர்பார்த்த படி நன்றாக ஓடவில்லை. இதற்கு சமந்தாவின் விமர்சனம்தான் காரணம் எனக் கருதி, அவரை காய்ச்சி எடுத்துள்ளார்.

இதுகுறித்து மகேஷ்பாபு கூறுகையில், "சமந்தாவுக்கு என்னையும் எனது மனைவியையும் நன்றாகத் தெரியும். பட போஸ்டரில் அவருக்கு மன உறுத்தல் ஏற்பட்டு இருந்தால் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். மாறாக இன்டர்நெட்டில் கருத்தை வெளியிட்டு இருக்க வேண்டாம். அவரது கருத்து பெண்களை திசை திருப்பிவிட்டது, படத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது," என்றார்.

 

ஆஸ்கர் விருது... இந்தியப் படங்களுக்கு இடமில்லை!

ஆஸ்கர் விருது... இந்தியப் படங்களுக்கு இடமில்லை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை.

சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

86-வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார் அகாடமியின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் அறிவித்தனர்.

இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு சினிமா படமோ அல்லது நடிகர், நடிகைகளின் பெயரோ இடம் பெறவில்லை .

சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் கூட இந்தியப் படமோ, இந்தியாவில் தயாரான வேறு எந்தப் படமோ இடம்பெறவில்லை.

 

சூர்யாவின் 'அஞ்சான்' - தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாகத் தயாராகிறது!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் அஞ்சான் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகிறது.

சூர்யா நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.

'அஞ்சான்' என்றால் அஞ்சாதவன், அச்சம் இல்லாதவன் என்பது இதன் பொருள் (இந்தியில் கூட இதே பெயரில் வெளியிட்டுக் கொள்ளலாம்.. தலைப்புக்கு அர்த்தம் மாறுபட்டாலும்!!)

சூர்யாவின் 'அஞ்சான்' - தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாகத் தயாராகிறது!

'அஞ்சான்' படம் பற்றி டிஸ்னி -யூடிவியின் தென் பிராந்திய வணிகம் மற்றும் ஸ்டுடியோஸின் முதன்மை அதிகாரி ஜி.தனஞ்ஜெயன் கூறுகையில், "மூன்றாவது முறையாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. எங்களுக்குள் அழுத்தமான நட்புறவும் ஆழமான புரிதலும் இருக்கின்றன. அவை மேலும் தொடரும். ஏற்கெனவே நாங்கள் இணைந்த 'வேட்டை' 'இவன்' வேற மாதிரி' இரண்டுமே வசூலில் வெற்றி பெற்றவை. அடுத்த மெகா பட்ஜெட் படமாக 'அஞ்சான்' இருக்கும். அதை நோக்கி பயணப் படுகிறோம். எங்கள் வெற்றி வரிசையின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும், " என்றார்.

இயக்குநர் என். லிங்குசாமி கூறுகையில், "நாங்களும் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமான நாங்கள் இணை தயாரிப்பாளர்களாக இருக்கும் யூடிவியுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம். முந்தைய எங்கள் படங்கள் எல்லாமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நாங்கள் அவர்களின் ஆதரவையும் புரிதலையும் மதிக்கிறோம். அடுத்த படமான 'அஞ்சானு'டன் இணைத்துக் கொள்வதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். தொழில் ரீதியாக அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.வியாபார திறமையும் விநியோக பலமும் கொண்டவர்கள் அது எங்களுக்கு பெரிய,பலமான பின்னணி சக்தியாக விளங்கும்.

சூர்யாவின் 'அஞ்சான்' - தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாகத் தயாராகிறது!

இந்தப் படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்,"என்றார்.

மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த 'அஞ்சான்' படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது.

அடுத்தகட்டம் ஜனவரி இறுதியில் புறப்பட உள்ளது படக்குழு. கோவா மற்றும் மகாராஷ்டிரா செல்லும் இந்தக் குழு, தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது.

முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 'அஞ்சான்' ஒரே நேரத்தில் நேரடிப் படமாக உருவாகிறது.

 

வங்க நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் மரணம்

கொல்கத்தா: உடல் நலம் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பெங்காலி நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

பெங்காலி திரை உலகை பல காலமாக ஆட்சி செய்து வந்தவர் நடிகை சுசித்ரா சென். அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆதிநாத் சென் என்பவரை திருமணம் செய்தார். அவர்களின் மகள் மூன் மூன் சென் முன்னாள் நடிகை ஆவார். மூன் மூன் சென்னின் மகள்களான ரியா மற்றும் ரைமா சென் ஆகியோர் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். ரியா சென் பிரஷாந்துடன் சேர்ந்து குட் லக் படத்தில் நடித்தார்.

வங்க நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் மரணம்

சுசித்ரா சென்னுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதியில் இருந்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை டிசம்பர் 28ம் தேதி இரவு மோசமானது. இதையடுத்து ஜனவரி 3ம் தேதி அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவரின் உடல் நிலை நேற்று இரவும் மிகவும் மோசமானது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

 

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பும் விஜய்

சென்னை: ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பும் விஜய்

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

முன்னதாக தலைவா படம் ஓடாததால் அதை இயக்கிய ஏ.எல். விஜய்யை கண்டாலே தளபதி காத தூரம் ஓடுகிறார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத்தின் 'வீரம்' பார்த்தேன், மீண்டும் பார்க்கப் போகிறேனே: சிம்பு

சென்னை: வீரம் படத்தை பார்த்த சிம்பு அஜீத்தை பாராட்டியுள்ளார். மேலும் வீரம் படத்தை மீண்டும் பார்க்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர். அஜீத்தின் படங்களை முதல்நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவார். ஆரம்பம் ரிலீஸான அன்று காலை காட்சியை சென்னையில் உள்ள காசி தியேட்டரில் பார்த்தார். ஆனால் வீரம் ரிலீஸான அன்று சிம்பு வெளிநாட்டில் இருந்ததால் படத்தை உடனே பார்க்க முடியவில்லை.

அஜீத்தின் 'வீரம்' பார்த்தேன், மீண்டும் பார்க்கப் போகிறேனே: சிம்பு

இந்நிலையில் அவர் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சாரி, ஊரில் இல்லை. மேலும் பிசியாக வேறு இருந்தேன். தற்போது வீரம் படம் பார்த்தேன். தலயை மிகவும் பிடித்திருந்தது. பண்டிகை காலத்திற்கு ஏற்ற படம். மீண்டும் இந்த படத்தை பார்க்கப் போகிறேன். இயக்குனர் சிவா தல-இன் மாஸை புரிந்து கொண்டு படத்தில் சரியான அளவு சென்டிமென்ட், ஆக்ஷன் வைத்துள்ளார்...மாஸ்ஸ்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

 

தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை படம் ஆகிறது

ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படவிருக்கிறது.

தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் உதய்கிரண். பொய் படம் மூலம் கோலிவுட் வந்தவர் வம்பு சண்டை, பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உதய்கிரண் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை படம் ஆகிறது

உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். உதய் கிரணுக்கு படங்கள் கிடைக்காமல் இருக்க தெலுங்கு திரை உலகின் ஜாம்பவான்கள் சிலர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் குடும்ப பிரச்சனையும் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உதய் கிரணின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உதய் முடிவுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் காரணம் என்று கூறப்பட்டதும் படத்தில் காண்பிக்கப்படுமாம்.

 

நேர் எதிர் லாபத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ஒரு பாதி... கலைப்புலி தாணு

தான் தயாரித்துள்ள நேர் எதிர் படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப் போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

ரிச்சர்ட், பார்த்தி, ஜஸ்வர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘நேர் எதிர்'. பிரதீப் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பி.வாசு தலைமை வகித்தார்.

நேர் எதிர் லாபத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ஒரு பாதி... கலைப்புலி தாணு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் டிரெய்லரை வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் விழாவில் பேசும்போது, "நேர் எதிர்' அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இந்த படத்துக்கு பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளது. இதன் டிரெய்லரே சீட் நுனிக்கு இழுக்கிறது. நான் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன். கதை தயாராகி விட்டது. விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம். ஆனால் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

நான் இயக்கிய ‘துப்பாக்கி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அவர் படத்துக்கு வந்த எல்லா பிரச்சினைகளையும் அம்மா மாதிரி தாங்கிக் கொண்டார். சினிமாவில் இப்போது நன்றி உணர்வு, நல்ல நட்பு குறைந்துவிட்டன," என்றார்.

கலைப்புலி தாணு வரவேற்று பேசும்போது, ‘நேர் எதிர் படம் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவப் போகிறேன்,' என்றார்.