நயன்தாராவுக்கு நந்தி விருது - அமிதாப் வழங்கினார்!

ஹைதராபாத்: ஆந்திர திரையுலகில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் மாநில அரசின் நந்தி விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் அமிதாப் பச்சன்.

சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்ட நயன்தாரா உள்ளிட்ட கலைஞர்களுக்கு அவர் விருது வழங்கினார்.

ஹைதராபாதில் நேற்று இரவு நடந்த வண்ணமிகு விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

nayanthara recives nandi award
2011-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகருக்கான விருதை தூக்குடு படத்தில் நடித்ததற்காக மகேஷ்பாபு பெற்றார். நாகார்ஜூனா, லட்சுமி மஞ்சு, சார்மி, மூத்த நடிகர் கைகாலா சத்யநாராயணா உள்ளிட்டோருக்கும் விருதுகள் பெற்றனர்.

அமிதாப்பச்சனுக்கு என்.டி.ஆர். நினைவு விருதினை முதல்வர் கிரண்குமார் ரெட்டி வழங்கினார்.

விழாவில் அமிதாப்பச்சன் பேசுகையில், "உலகை ஒற்றுமையாக வைத்து இருப்பது சினிமாதான். தியேட்டர்களில் அருகருகே உட்கார்ந்து படம் பார்ப்பவர்கள் சாதி, மதம், மொழி போன்றவற்றை பார்ப்பது இல்லை. எந்த வேறுபாடும் பார்க்காமல் சமமாக இருந்து படம் பார்க்கிறார்கள்.

சந்தோஷம், துக்கம் போன்ற காட்சிகளோடு உணர்வுபூர்வமாக இணைந்து படம் பார்க்கின்றனர். எனவே மக்களை ஒற்றுமையாக வைத்துக் கொள்ள படங்கள் உதவுகிறது.

என்.டி.ராமராவ் தெலுங்கில் சிறந்த நடிகராக இருந்தார். அவரது படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அவற்றில் நான் நடித்துள்ளேன். அவரது பெயரில் அமைந்த விருதினை பெறுவது எனக்குப் பெருமை," என்றார்.