இளையராஜாவைச் சந்தித்தார் நல்லக்கண்ணு!

சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இசைஞானி இளையராஜாவை அவரது பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துப் பேசினார்.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப நாட்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தவை. தன் அண்ணனும் குருவுமான பாவலர் வரதராசன் மற்றும் சகோதரர்களோடு, கம்யூனிஸ இயக்க மேடைகளில் பிரச்சாரப் பாடல்களாக ஒலித்தவை ராஜாவின் குரலும் இசையும்.

இளையராஜாவைச் சந்தித்தார் நல்லக்கண்ணு!

கம்யூனிச இயக்கங்கள் எப்போதும் எந்த மேடையிலும் இதை நினைவு கூறத் தயங்கியதில்லை. இளையராஜாவும் அப்படியே. ராஜாவின் சாதனைகளை பெருமையுடன் அவ்வப்போது கொண்டாடவும் தவறுவதில்லை கம்யூனிஸ்ட் அமைப்புகள்.

அந்த வகையில் இளையராஜா மீது பெரும் அன்பும் மதிப்பும் கொண்ட மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இளையராஜாவை அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில் வைத்து சந்தித்தார்.

அவரை வரவேற்று அழைத்துச் சென்ற இளையராஜா, நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இளையராஜாவின் குரல் ஒலித்த முதல் மேடை, பாவலர் சகோதரர்கள் கச்சேரி செய்த கம்யூனிஸ மேடைகள், ஊர்கள் பற்றியெல்லாம் நல்லக்கண்ணு நினைவு கூற, அவற்றை மகிழ்வுடன் ஆமோதித்தார் இளையராஜா.

பின்னர் ஈரோட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு இளையராஜாவுக்கு நல்லக்கண்ணு அழைப்புவிட, ராஜாவும் வர ஒப்புக் கொண்டார். பின்னர் விடைபெற்றுச் சென்றார் நல்லக்கண்ணு.

 

சிவப்பு படத்தை வெளியிடுகிறார் ராஜ்கிரண்!

சென்னை: சிவப்பு படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண்.

எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் முன்னணியில் இருந்தவர் ராஜ்கிரண். அவரது என் ராசாவின் மனசுல, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்கள் வசூலில் சாதனைப் படைத்தவை.

ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை கவனித்து வந்தவர், பின்னர் மாயி கிரியேட்டர்ஸ் என்ற பெயரிலும் தயாரித்தார்.

சிவப்பு படத்தை வெளியிடுகிறார் ராஜ்கிரண்!

பின்னர் பத்தாண்டு காலத்துக்கும் மேல் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் சிவப்பு என்ற படத்தை விநியோகிக்க முடிவு செய்துள்ளார்.

புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'சிவப்பு'.

நவீன்சந்திரா - ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்து கழுகு சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகிவிட்டாராம்.

மஞ்சப்பை படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி சிவப்பு படமும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண்.

இலங்கை அகதிகளின் வாழ்க்கைப் பதிவாக உருவாகி உள்ள சிவப்பு படத்தை ராஜ்கிரணே வாங்கி தன் பேனரில் திரையிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

 

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சாட்சிகள்... ப்ரீத்தி ஜிந்தா வழக்கில் பின்னடைவு?

மும்பை: சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகையும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், தற்போதைய தொழில் ரீதியான பார்ட்னருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சாட்சிகள்... ப்ரீத்தி ஜிந்தா வழக்கில் பின்னடைவு?

அதில், தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா பொது இடத்தில் தன்னை மிரட்டியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மே 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நெஸ் வாடியா ப்ரீத்தியிடம் தகராறு செய்ததை நேரில் பார்த்த 2 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே மைதானத்தில் இருந்த கண்காணிப்புக் காட்சிகளைப் போலீசார் சோதனையிட்டனர். ஆனால், அவற்றில் சண்டை காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நேரடி சாட்சியங்கள் மட்டுமே வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உதவிகரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக ப்ரீத்தி ஜிந்தா குறிப்பிட்ட இரண்டு சாட்சிகளும் தற்போது போலீசாருக்கு தேவையான ஒத்துழைப்பை தர மறுக்கிறார்களாம். இதனால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


 

நடிகை ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் அவ்ளோ தான்: நுஸ்லி வாடியாவை மிரட்டிய தாதா

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை தொந்தரவு செய்வதை விடாவிட்டால் வாடியா குழுமத்தை சும்மா விட மாட்டோம் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி வாடியா குழும தலைவர் நுஸ்லிக்கு ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

வாடியா குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா மீது பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா பாலியல் புகார் கொடுத்தார். கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தனது முன்னாள் காதலரும், பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான நெஸ் வாடியா தன்னை தரக்குறைவாகப் பேசி கண்ட இடத்தில் தொட்டதாக ப்ரீத்தி புகார் கொடுத்தார்.

நடிகை ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் அவ்ளோ தான்: நுஸ்லி வாடியாவை மிரட்டிய தாதா

இந்நிலையில் நெஸ் வாடியாவின் தந்தையும், வாடியா குழும தலைவருமான நுஸ்லி மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

நிழல் உலக தாதா எனக்கு ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்தார். ப்ரீத்தியை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது. இல்லை என்றால் வாடியா குழுமம் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார். எனவே மிரட்டல் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பேசியவர் தன்னை ரவி பூஜாரி என்று கூறிக் கொண்டதாகவும் வாடியா தெரிவித்துள்ளார்.

 

ஸ்டைல் நடிகர் படத்தின் முதல்நாள் வசூலை நெருங்கிய பேக் பட வசூல்: பார்ட்டி கொடுத்த ஹீரோ

சென்னை: தன் நடிப்பில் வெளியான பை படத்தின் முதல் நாள் வசூலை பார்த்த களவாணி நடிகர் பார்ட்டி கொடுத்துள்ளார்.

களவாணி நடிகர், மங்களகரமான மேனன் நடிகையுடன் சேர்ந்து நடித்த பை படம் அண்மையில் ரிலீஸானது. இந்த படத்தை நடிகர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

படம் ரிலீஸான முதல் நாளே நல்ல வசூல் செய்துள்ளது. நல்ல வசூல் என்றால் சும்மா இல்லை ஸ்டைல் நடிகரின் பிரமாண்டமான அனிமேஷன் படத்தின் முதல் நாள் வசூலை பை பட வசூல் நெருங்கியுள்ளது என்றால் பாருங்களேன்.

இப்படி ஸ்டைல் நடிகர் படத்தின் முதல்நாள் வசூலை தன் படத்தின் வசூல் நெருங்கிய செய்தி அறிந்த நடிகருக்கு மகிழ்ச்சியில் மயக்கமே வந்துவிடும் போல் இருந்திருக்கிறது.

இதையடுத்து மகிழ்ச்சியை கொண்டாட அவர் தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார்.

 

ஆமா.. இவ்ளோ திமிரா தம்மடிக்கிற போஸ் தரும் தனுஷை கேட்பாரில்லையா?

ரஜினி, அஜீத், விஜய், சூர்யா... இவர்களில் யாராவது சிகரெட் புகைப்பது மாதிரி படங்களில் தோன்றினால் அதற்கு கிளம்பும் எதிர்ப்பு கொஞ்சமல்ல. சமூகக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பலரும் விழுந்து விழுந்து அறிக்கை விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

பாபா படத்தோடு புகைக்கும் காட்சிகளுக்கு விடை கொடுத்தார் ரஜினி. இனி படங்களில் புகைக்கும் காட்சியே வைக்க மாட்டேன் என அவர் அறிவித்தும் விட்டார். பாமக போன்ற கட்சிகள், இளம் நடிகர்கள் ரஜினியைப் பின்பற்றுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

ஆமா.. இவ்ளோ திமிரா தம்மடிக்கிற போஸ் தரும் தனுஷை கேட்பாரில்லையா?

அஜீத்துக்கும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு கிளம்ப, அவர் அசல் படத்தோடு புகைப்பதை நிறுத்தினார்.

அடுத்து விஜய். இவர் துப்பாக்கி படத்தில் சுருட்டோடு காட்சி தர, அதற்கு பாமகவும் பிற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு காட்டின. அதன் பிறகு, இனி புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிக்கை விட்டார்.

இப்படியொரு நிலை வரும் அளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை சூர்யா. அவர் பெரும்பாலும் நல்ல பிள்ளையாகவே நடித்துவிடுவதால் அவருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இப்போதைய அவர் படங்களில் புகைக்கும் காட்சிகள் கிடையாது.

கமல் ஹாஸன் இந்த விஷயத்தில் ரொம்ப க்ளீன். அவர் ரொம்ப வருஷங்களாக புகைக்கும் காட்சிகளில் நடிப்பதையே விட்டுவிட்டார். நிஜத்திலும் அவர் புகையை விட்டு ரொம்ப நாட்களாயிற்று.

இப்படி முதல் நிலை ஹீரோக்கள் யாருமே புகைக்கும் காட்சிகள் வேண்டாம் என விடைகொடுத்த நிலையில், தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ் தன் வேலையில்லா பட்டதாரி படத்துக்காக கொடுத்துள்ள போஸ்கள் கடுப்படிக்கின்றன.

ரொம்பத் திமிராக (வேலை வெட்டி இல்லேன்னா அப்படித்தான் இருப்பாங்களாம்!) தம்மடிக்கிற மாதிரி அவரது படங்கள் இடம்பெற்றுள்ள போஸ்டர்களும், டீசர்களும்தான் இப்போது இணையதளங்களில் பரவிக் கிடக்கின்றன. இதற்கு இதுவரை எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.

விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானவர் இல்லை தனுஷ் என்ற நினைப்பில் பாமக உள்ளிட்டோர் விட்டுவிட்டார்களா.. அல்லது இன்னும் யார் கவனத்துக்கும் வரவில்லையா!