ஹைதராபாத்: அனுமதியில்லாமல் தனது கேரக்டர் பற்றி ட்விட்டரில் தகவல் வெளியிட்ட சமந்தாவை கடுமையாக எச்சரித்துள்ளார் நாகார்ஜுனா.
முன்பெல்லாம் ஒரு படத்தின் அல்லது அதில் நடிப்பவர்களின் விவரங்களை அந்தப் படத்தின் பிஆர்ஓதான் சொல்வார்.
இப்போது அந்த விவரங்கள் எல்லாமே தெரிய வேண்டுமானால் ட்விட்டர் அல்லது பேஸ்புக் போனால் போதும்.
நடிகர், நடிகைகள், இயக்குநர்கல் தங்களின் படங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் நடிகை சமந்தா ட்விட்டர் - பேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.
தன்னைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்கிறார். சித்தார்த்தை இவர் காதலிப்பதும் ட்விட்டர் வாயிலாகத்தான் தெரியவந்தது.
தற்போது தெலுங்கில் அவர் நடிக்க உள்ள ‘மனம்' படத்தில் தனது கேரக்டர் என்ன என்பதையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால் இப்படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடிக்கும் நாகார்ஜுனா அதிர்ச்சியானார். படத்தின் ரகசியம் வெளியாகி விட்டதே என கொதித்துப் போனாராம்.
சமந்தாவை தொடர்பு கொண்டு கேரக்டர் பற்றிய விவரத்தை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு கண்டித்தாராம். படப்பிடிப்பு முடியும்வரை தனது அனுமதியில்லாமல் படம் சம்பந்தமான எந்த விஷயத்தையும் ட்விட்டரில் வெளியிடக் கூடாது என்று தடை போட்டுள்ளார்.
நாகார்ஜூனாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதால் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவு செய்வதை சமந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.