பெங்களூர்: பெங்களூரில் நடிகர் ரஜினி காந்த் படித்த பள்ளியில் நவீன கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நேற்று கர்நாடக துணை முதல்வர் ஆர்.அசோக் தொடக்கிவைத்தார்.
பெங்களூர், கவிபுரம், குட்டஹள்ளியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில்தான் நடிகர் ரஜினி காந்த் 7-ம் வகுப்பு வரை கல்வி பயின்றார். மிகவும் பழமை வாய்ந்த இந்தப் பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க ரஜினி ரசிகர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி இதற்காக பெருமளவு நிதி திரட்டிக் கொடுத்துள்ளது.
மேலும் மூத்த கன்னட நாடகக் கலைஞர் மாஸ்டர் ஹீரணையா, ரஜினியுடன் படித்த கவிகங்காதரேஷ்வரா கோயில் அர்ச்சகர் சோமசுந்தர தீட்சிதர் உள்பட பலர் அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், பசவனகுடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிசுப்பிரமணியனின் முயற்சியால் பள்ளியின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.1.67 கோடியில் அதிநவீன கட்டடம் கட்ட அரசு முன்வந்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, விழாவில் கர்நாடக துணை முதல்வர் ஆர்.அசோக் பேசியது:
நடிகர் ரஜினிகாந்த் படித்த ஆரம்பப் பள்ளி ஏதோ ஒரு மடத்திற்கு சொந்தமானது என்று பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். அது எந்த ஒரு மடத்திற்கும் சொந்தமானது அல்ல. அது அரசின் ஆரம்பப் பள்ளி. மூத்த நாடகக் கலைஞர் மாஸ்டர் ஹீரணையா மற்றும் ரவிசுப்பிரமணியனின் பெரும் முயற்சியால் இப்போது இந்தப் பள்ளி அதிநவீன முறையில் கட்டப்படுகிறது.
இந்த ஆரம்பப் பள்ளி கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும்படி கட்டப்படும்.
இதில் படிக்கும் ஏழைகள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் நடிகர் ரஜினி காந்தைப் போல உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும். அதுமட்டுமல்லாது நாட்டின் பிரதமராக, மாநிலத்தின் முதல்வராக, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களாக வந்து நாட்டின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.
பாஜக தேசிய பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அனந்த்குமார் பேசியது:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உலகப் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். இது நமக்கு பெருமை. அவர் படித்த ஆரம்ப் பள்ளியை இடித்துவிட்டு, ரூ. 1.67 கோடியில் நவீன முறையில் கட்டடம் கட்டப்படவுள்ளது.
மாநில அரசு ரூ.81.5 லட்சமும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 25 லட்சமும், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 20 லட்சமும், பெங்களூர் மாநகராட்சி ரூ. 10 லட்சமும் வழங்குகிறது. மீதமுள்ள தொகை நன்கொடையாக பெறப்படுகிறது.
உரியகாலத்திற்குள் நவீன கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்தை அழைக்க வேண்டும்," என்றார்.
நிகழ்ச்சியில் ஜவுளித்துறை அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ், மேயர் வெங்கடேஷ்மூர்த்தி, எம்.எல்.ஏ. ரவிசுப்பிரமணியா, கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி தலைவர் ரஜினி முருகன்ஜி, சாய்கோல்டு சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.