"பாயும் புலி" விவகாரத்தில் திடீர் திருப்பம்... விஷாலுக்கு சரத்குமார் ஆதரவு

சென்னை: பாயும் புலி படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை திரையுலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், நடிகர் சரத்குமார் தனது ஆதரவை விஷாலுக்கு தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமாரும், விஷாலும் மோதிக் கொள்ளும் விஷயம் ஊரறிந்த ஒன்று. எனினும் விஷாலின் படத்திற்கு ஏற்பட்ட இந்தத் தடையை நீக்க நடிகர் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி அதில் சரத்குமாரும் கலந்து கொண்டிருக்கிறார்.

Paayum Puli Issue: Sarathkumar Joint Hands With Vishal

மேலும் விஷால் படத்தை நிறுத்தக்கூடாது திட்டமிட்டபடி படம் வெளியாகவேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது சொல்லியிருக்கிறார் சரத்குமார்.

நடிகர் சங்க விவகாரத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருக்கும் சூழ்நிலையில் பாயும் புலிக்கு ஏற்பட்ட தடையை நீக்க நடிகர்சங்கம் சார்பாக படம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் சரத்குமார் பங்கேற்றிருக்கிறார்.

மேலும் திட்டமிட்டபடி படம் வெளியாகியே தீரவேண்டும் என்றும் பேச்சு வார்த்தையில் சரத்குமார் சொல்லியிருப்பது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாயும்புலி விவகாரத்தில் சற்று முன்பு கிடைத்த தகவல்படி தயாரிப்பாளர்கள் சங்கம் தாங்கள் விதித்த தடையை நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

'குண்டு' நமீதா 20 கிலோ எடைகுறைத்து 'ஸ்லிம் பியூட்டி' ஆனது எப்படி?

மச்சான்ஸ் மச்சான்ஸ் என கொஞ்சலாகப் பேசி, ஹார்ட் பீட்டை எகிற வைத்துக் கொண்டிருந்த நமீதாவை கொஞ்ச நாளாக எங்குமே பார்க்க முடியவில்லை. உடல் பருமன் பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதையும் வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் கூட நிறுத்திக் கொண்டார்.

ஒரு சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் நேற்று தரிசனம் தந்தார். அட, எங்கள் அண்ணா, ஏய் பட காலத்து நமீதாவாக திரும்பியிருந்தார்!

How Namitha becomes slim beauty again?

ஆம், 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்பட்டார் நமீ. அவரைப் பார்க்கிற யாரும் நம்ப முடியாமலேயே பார்த்தார்கள். பத்திரிகையாளர்களில் சிலர் உடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.

காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.

எப்படி முடிந்தது இது? அந்த அனுபவத்தை நடிகை நமீதா இப்படிக் கூறினார்:

''உண்மையைச் சொல்கிறேன். ஒரு கட்டத்தில் என் எடை அதிகமாகிக்கொண்டே இருந்தது. பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன. நான் மிகவும் மனச் சோர்வுக்கு ஆளானேன். இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை. எடையைக் குறைக்க எவ்வளவோ வழிகளில் முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள் எல்லாம் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.

How Namitha becomes slim beauty again?

மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம். அப்படிப்பட்ட சூழலில்தான் சாக்ஷி வெல்னஸ் பற்றி . தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.

எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது. எடை மட்டும் குறையவேயில்லை. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன். ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையில்லை.

முதலில் ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது, பிறகுதான் நம்பிக்கை வந்தது. இப்படி முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்தது. அவர்கள் சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை சரிவர பார்த்துக் கொண்டார்கள். நம்பிக்கையையும் ஊக்கமும் கொடுத்தார்கள். இப்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன்.

என்னை இப்போது பார்ப்பவர்கள் என் உணவு பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்ஸாப் பிரியை. பீட்ஸா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர் நான். அந்தஅளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிட்ட நான் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்.

இனி பட வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். இப்போதைய என் உடல் கட்டுக்கு ஏற்ப ஆக்ஷன் நாயகியாக நடிக்க விரும்புகிறேன்.

என் ஊர் சென்னைதான்!

என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி ரக்ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. இங்கு கொண்டாடப்படும் பொங்கல்தான் இனி எனக்கு பண்டிகை. என் மாநிலம் தமிழ்நாடு. என் ஊர் சென்னைதான். இந்த ஊரை விட்டு இனி எங்கும் செல்லமாட்டேன்,'' என்றார்.

நிகழ்ச்சியில் சாக்ஷி வெல்னஸ் நிறவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவாஜி குணா, சிகிச்சைப் பிரிவுத் தலைவர் ஸ்ரீமன் நாராயணா, தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்த வித்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பங்கேற்றனர்.

 

பிலிமில் படமாக்கப்பட்ட கடைசி தமிழ்ப் படம் தனி ஒருவன்!- ஒளிப்பதிவாளர் ராம்ஜி தகவல்

டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சினிமாவில், பிலிம் ரோலில் படமாக்கப்பட்ட கடைசி படம் என்ற பெருமை தனி ஒருவனுக்குக் கிடைத்துள்ளது.

இதனை படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ‘பருத்தி வீரன்', ‘ராம்', ‘ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', ‘இரண்டாம் உலகம்' என பல வெற்றிப் படங்களுக்கு வித்தியாசமான ஒளியையும் கோணங்களையும் தந்தவர்.

Cinematographer Ramji shares his Thani Oruvan Experience

மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘தனி ஒருவன்' படத்திற்கும் ராம்ஜிதான் ஒளிப்பதிவு.

பொதுவாக ராம்ஜி வரும் வாய்ப்புகளையெல்லாம் ஏற்பவர் அல்ல. தனது ஒளிப்பதிவுத் திறமைக்கான வாய்ப்பிருக்கும் படங்களை ஒப்புக் கொள்வார். அந்தப் படம் முடியும் வரையில் வேறு வாய்ப்புகளை ஏற்கவும் மாட்டார்.

தனி ஒருவன் படத்துக்காக நான்கு ஆண்டுகள் வேறு வாய்ப்புகளை ஏற்காமல், மோகன் ராஜாவுடன் பயணித்த ராம்ஜி, அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இனி ராம்ஜி...

தனி ஒருவன் படம் வெற்றி எனக்கு மிகுந்த நிறைவையும் சந்தோஷத்தையும் தருகிறது. காரணம் அதற்கான உழைப்பு அப்படி. நான்கு ஆண்டுகள். மோகன் ராஜா சிறந்த இயக்குனர். ஒளியமைப்பு, கோணங்கள் அனைத்தையும் என் முடிவுக்கே விட்டுவிட்டார். என்னிடமிருந்து என்ன சிறந்த பணியைப் பெற முடியுமோ அதை என்னை சுதந்திரமாக இயங்க விட்டுப் பெற்றார்.

என்னுடைய முதல் படம் முதல் ‘தனி ஒருவன்' படம் வரை பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். ‘தனி ஒருவன்' படம்தான் பிலிமில் செய்த கடைசி படமாக இருக்கும் என நினைக்கிறேன். இனி பிலிம் வருமா, வராதா என்று தெரிய வில்லை. ஹாலிவுட்டில் இன்றும் பிலிம்தான். பிலிமில் ஒளிப்பதிவு செய்யும்போது கிடைக்கும் அழுத்தம், டிஜிட்டலில் வருவது கஷ்டம்தான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிலிம் வரும் என்கிறார்கள். பார்க்கலாம்!

தனி ஒருவனில் அனைவரும் பாராட்டும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போது, அதற்கு மட்டும் தனி வண்ணத்தை நிர்ணயித்தேன். குறிப்பாக அந்த பேக்டரி சண்டை. அந்த வண்ணத்தை மாற்றலாம் என இயக்குநர் முதலில் கூறினார். பின்னர் நான் நிர்ணயித்ததை ஏற்றுக் கொண்டார்.

Cinematographer Ramji shares his Thani Oruvan Experience

அதே போல, இந்தப் படத்தில் வில்லனைத்தான் அழகாகக் காட்ட வேண்டும் என தீர்மானித்தேன். ஹீரோ, ஹீரோயினை விட வில்லனுக்கு தனி வண்ணம் கிடைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுதான்.

அதே போல, மசூரியில் பனியாற்றில் படகு சவாரி செய்யும் காட்சிகளை மிகுந்து சவாலான சூழலில் படமாக்கினோம்.

படத்தின் வெற்றி, தோல்விகள் என்னைப் பாதிப்பதில்லை. ஆனால், ‘ஆயிரத்தில் ஒருவன்,' இரண்டாம் உலகம் படங்களை ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கினோம். ஆனால், படம் வெளிவந்த பிறகு ஒளிப்பதிவு நன்றாக இல்லை என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அந்தப் படங்களைப் பற்றி யாரும் ஒரு கருத்தும் கூறவில்லை. அப்படியே அனாதையாக விட்டுவிட்டார்கள். மிகக் கடுமையான உழைப்பை யாரும் பாராட்டக்கூட இல்லை. அப்போதுதான் எனக்கு மிகவும் வலித்தது.

எனக்கு அமைந்த கதைகள் எல்லாம் நீண்ட நாட்களை எடுத்துக்கொள்ளும் படங்களாகவே அமைந்துவிட்டன. இனி வருடத்துக்கு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்," என்றார்.

 

நயனுக்கு எதிராக நாங்க எந்தப் புகாரும் கொடுக்கலையே- சிம்பு

சென்னை: இது நம்ம ஆளு பட விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நாங்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

இது நம்ம ஆளு படத்தில் 2 பாடல் காட்சிகள் பாக்கி இருப்பதாகவும் அதில் நடித்துக் கொடுக்க நயன்தாரா மறுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

Simbu Says

இந்த விவகாரத்தில் நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை சிம்புவும் அவரது அப்பாவும் தான் நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்தனர் என்று இயக்குநர் பாண்டிராஜ் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் "நாங்கள் நயன்தாரா மீது எந்தப் புகாரும் கொடுக்கவில்லை அவரிடம் இருந்து கால்ஷீட் வாங்கித் தாருங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை மட்டும் தான் விடுத்தோம்.

மேலும் நாங்கள் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுகிறோம் அவர் கால்ஷீட் தந்தால் பாடல்களை இணைத்து வெளியிடலாம். இல்லையெனில் பாடல்களை சேர்க்காமலேயே படத்தை வெளியிட்டு விடலாம் என்று தான் கூறியிருந்தோம்" என்று தற்போது இந்த விவகாரத்தில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார் நடிகர் சிம்பு.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது நம்ம ஆளு திரைப்படம் விரைவில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சிம்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு ஏரியாவுக்காக ஏன் நிறுத்தணும்... திட்டமிட்டபடி பாயும் புலி நாளை ரிலீசாகும்..!- விஷால்

திட்டமிட்டபடி பாயும் புலி படம் நாளை தமிழகம் மற்றும் உலகெங்கும் வெளியாகும் என நடிகரும் படத்தின் நாயகனுமான விஷால் கூறியுள்ளார்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பாயும் புலி. இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது.

Paayum Puli to hit screens on Sep 4th - Vishal

இந்தப் படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை வெளியிட பெரும் தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்று செங்கல்பட்டு பகுதி திரையரங்க உரிமையாளர்களை வைத்து ரோகினி பன்னீர் செல்வம் என்பவர் மிரட்டுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

திரையுலகை அழிக்கும் தீய சக்தியாக பன்னீர் செல்வம் மற்றும் அவர் தலைமையில் இயங்கும் சிலர் செயல்படுவதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தீரும் வரை புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என்று நேற்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த சூழலில், திட்டமிட்டமிட்டபடி நாளை செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி படம் வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

"மாதக் கணக்கில் சும்மா இருந்துவிட்டு, திடீரென ரிலீசுக்கு முந்தின நாள் படத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்.. ஒரு ஏரியா மற்றும் சில தியேட்டர்களுக்காக ஏன் ரிலீசை தள்ளிப் போட வேண்டும்...

திட்டமிட்டபடி படத்தை நாளை ரிலீஸ் செய்வோம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் இருக்கும்," என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார் விஷால்.

அமெரிக்காவில் 22 நகரங்களில் உள்ள 40 க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், பிரிட்டனில் கணிசமான அரங்குகளிலும் படம் வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

கேரளாவில் 70 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் 300 அரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகிறது.

 

சவாலே சமாளி படம் 170 அரங்குகளில் திட்டமிட்டபடி ரிலீசாகும்!- அருண்பாண்டியன்

சவாலே சமாளி படம் நாளை திட்டமிட்டபடி உலகெங்கும் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் அறிவித்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களிடம் இருவரும் கூறுகையில், "சவாலே சமாளி திரைப் படம் திட்டமிட்ட படி நாளை (04.09.2015) உலக முழுவதும் 170 க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும்.

Savale Samali to hit 170 screens tomorrow - Arunpandiyan

படத்தை திடீரென நிறுத்த முடியாது. என்னெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப் பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப் பட்டுள்ளது. நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வீ.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்சனைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை.

செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது," என்றனர்.

 

போக்கிரி மன்னனை நிறுத்தினால் கோடிக்கணக்கில் இழப்பு!- தயாரிப்பாளர் எச்சரிக்கை

தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தின்படி போக்கிரி மன்னன் படத்தை நாளை வெளியிடாமல் நிறுத்தினால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே நாளை அறிவித்தபடி படத்தை வெளியிடப் போகிறோம் என்று தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல் அறிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.தணிகைவேல் வழங்க, ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் ராகவ் மாதேஷ் இயக்கத்தில் ஸ்ரீதர், ஸ்பூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்‘போக்கிரி மன்னன்'.

Pokkiri Mannan producer announced the release

நாளை முதல் புதிய படங்கள் வெளியாகாது என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் இந்தப் படம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

இந்தப் படம் நாளை வெளிவரும் என்று முன்னரே திட்டமிட்டு, அதற்காக பல திரையரங்குகளையும் ஒப்பந்தம் செய்துள்ளோம். சுமார் 1 கோடி ரூபாய் வரை படத்திற்காக விளம்பரப்படுத்தி செலவு செய்துள்ளோம். தயாரிப்பாளர் சங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தன்னிச்சையாக நேற்று, 4ம் தேதி முதல் படம் வெளிவராது என அறிவித்துள்ளனர்.

அப்படி நாளை நாங்கள் படத்தை வெளியிடவில்லை என்றால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே எங்களது ‘போக்கிரி மன்னன்' படத்தை நாளை நாங்கள் திட்டமிட்டபடி வெளியிடுகிறோம். அதற்கு அனைவரும் தங்களது மேலான ஆதரவை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மிருதன்... ஜெயம் ரவி- லட்சுமி மேனன் முதல் முறையாக ஜோடி சேரும் படம்!

ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக ஒரு படத்தில் ஜோடி சேர்கிறார்கள். படத்துக்கு மிருதன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கியவர் இவர்.

Jayam Ravi - Lakshmi Menon in Miruthan

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி.

மிருதன் படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது.

கத்தி படத்தில் ஆத்தி பாடலைப் பாடிய விஷால் தட்லானி மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இரண்டு பாடல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

Jayam Ravi - Lakshmi Menon in Miruthan

மிருதன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழுப் படப்பிடிப்பும் முடிவடைகிறது.

மிருதன் படத்தில் புகைபிடிப்பதுபோன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் வடகறி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, படத்தொகுப்பு: கே.ஜெ. வெங்கட் ரமணன். இவர் ஆடாம ஜெயிச்சோமடா படத்துக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். நடனம் - பாபி, சண்டைப்பயிற்சி - கணேஷ். இவர் சிறுத்தை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்.

உடைகள் - ஜாய் கிறிசில்டா தயாரிப்பு நிர்வாகம் - குமார், சிவகுமார், ராஜ்குமார், மஞ்சு

தயாரிப்பு: செராஃபின் சேவியர்.

 

கபாலி... ஏவிஎம்மில் பூஜை... ஏர்போர்ட்டில் ஷூட்டிங்!- பரபர அப்டேட்ஸ்!!

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் பூஜை மற்றும் ஆரம்ப விழா வரும் செப்டம்பர் 17-ம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடக்கிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படம் முதலில் மலேசியாவில் படமாவதாக இருந்தது. ஆனால் அங்கு தற்போது நிலவும் அரசியல் சூழல் காரணமாக முதலில் சென்னையிலும் பின்னர் மலேசியாவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தனர்.

Kabali Pooja at AVM on Sep 17

அதன்படி படத்தின் ஆரம்ப பூஜை ரஜினிக்கு ராசியான ஏவிஎம் ஸ்டுடியோ பிள்ளையார் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடக்கிறது. அங்கேயே க்ளாப் அடிக்கப்பட்டு முதல் காட்சியை படமாக்குகிறார்கள்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் படத்தின் சில காட்சிகளை படமாக்குகிறார்கள். ரஜினி மலேசியாவிலிருந்து விமானத்தில் திரும்புவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்து நாட்கள் படப்பிடிப்புக்குப் பின்னர், ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா செல்கின்றனர்.

 

"அவுக" மட்டும் போதும்... நம்பர் ஒன் நடிகையின் புது முடிவு

சென்னை: திருமணம் வரை சென்ற காதல் முறிந்து போனதால் மீண்டும் நடிப்பிற்கே திரும்பினார் அந்த நம்பர் நடிகை, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக தமிழ்த் திரையுலகமே அவரை உற்சாகத்துடன் வரவேற்றது.

2 வது ரவுண்டில் நடிக்க வந்து முன்னணி நடிகையாக மாறிய அவர் சமீபகாலமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று கூறுகின்றனர். அதாவது இதுநாள்வரை பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடின்றி தனது கதாபாத்திரம் பிடித்தால் நடிக்க ஒப்புக் கொண்டுவந்தார்.

Number Actress New Decision

ஆனால் இனிமேல் அப்படி நடிக்கப் போவதில்லையாம் நேற்று வந்த நடிகைகள் கூட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

நாம் மட்டும் இன்னும் இரண்டாம் தர நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கிறோம் இப்படியே சென்றால் கூடிய சீக்கிரம் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம்.

நடிகையின் இந்த முடிவால்தான் அந்த வளர்ந்து வரும் இசை நடிகரின் படத்தை நடிகை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆக இனி நம்பர் நடிகை முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் டூயட் பாடுவார்.

 

ஸ்ருதி ஹாஸனின் 'நண்பிடா' யார் தெரியுமா?

மும்பை: ஸ்ருதி ஹாஸனும், நடிகை பூஜா குமாரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம்.

ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள புலி படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியில் அவர் ஜான் ஆபிரகாம் ஜோடியாக நடித்துள்ள வெல்கம் பேக் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது.

Pooja Kumar is Shruti's best friend

ஸ்ருதி யாருடனாவது பழகினால் மிக விரைவிலேயே அந்த நபரின் நெருங்கிய தோழியாகிவிடுவாராம். இந்நிலையில் தனது தந்தை உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள பூஜா குமாரின் நெருங்கிய தோழியாகிவிட்டாராம் ஸ்ருதி.

மும்பை சென்றால் பூஜா ஸ்ருதியின் வீட்டில் தான் தங்குகிறாராம். இருவரும் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்களாம், ஷாப்பிங் செய்கிறார்களாம். சென்னை, மும்பையில் அவர்களை ஒன்றாக காண முடிகிறதாம்.

ஸ்ருதி அஜீத்துடன் சேர்ந்து தல 56 படத்தில் நடித்துள்ளார். கால்ஷீட்டை சொதப்பி படப்பிடிப்பை தான் தாமதப்படுத்தியதாக வந்த செய்தியை ஸ்ருதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.