'உங்க புது சட்டம் அஜீத்துக்கும் சந்தானத்துக்கும் பொருந்தாதா?' - நடிகைகள் காட்டம்

'உங்க புது சட்டம் அஜீத்துக்கும் சந்தானத்துக்கும் பொருந்தாதா?' - நடிகைகள் காட்டம்

நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள்.

தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது.

நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர்.

இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார்.

'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார்.

அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே...

"நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள்.

படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்!

 

அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அஜீத் நடிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம் படத்தை ஆரம்பித்தார் அஜீத்.

அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இப்போது வீரம் படம் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், அடுத்த படம் யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டார்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல, இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஆரம்பம் படம் தயாரித்த ஏஎம் ரத்னத்தின் சத்யசாய் நிறுவனத்துக்கே தந்துள்ளார் அஜீத்.

இயக்குபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்று அஜீத் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீசத்யசாய் நிறுவனத்துக்காக அஜீத் நடிக்கும் படத்தை இயக்க, இன்று கவுதம் மேனன் கையெழுத்திட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனும் அஜீத்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இணையவிருந்தனர். படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கூடிவந்துள்ளது.

ஆரம்பம் படத்தைத் தயாரித்தாலும், கடன்கள் முழுமையாக அடையாமல் ஏஎம் ரத்னம் சிரமப்படுவதைப் பார்த்து அவருக்கு மீண்டும் படம் நடித்துத் தருகிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இளம் நடிகரின் ரகளையால் அலறிய ஏழு நட்சத்திர ஹோட்டல்!

இளம் நடிகர் ஒருவரின் ரகளையால் கலகலத்துப் போயிருக்கிறது எம்ஆர்சி நகரில் உள்ள அந்த புத்தம் புதிய ஏழு நட்சத்திர ஹோட்டல்.

வரிசையாக வெற்றியை ருசித்து அடுத்து ரம்மி அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அவர். ஆனால் மனிதர் உற்சாக பானத்தில் இறங்கிவிட்டால் அவ்வளவுதான், ரகளையில் இருக்கும் ஏரியாவையே ரணகளமாக்கிவிடுவார்.

வெளிநாடுகளுக்குப் போனாலோ கேட்கவே வேண்டாம். நள்ளிரவு, அதிகாலை என்ற நேரம் காலமெல்லாம் கிடையாது.

சமீபத்தில் ஒரு சேனலின் தொடக்கவிழா விருந்துக்கு அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார் நடிகர். விருந்து ஆரம்பித்ததிலிருந்தே சரக்கில் மூழ்க ஆரம்பித்தவர், ஒரு கட்டத்தில் ஹோட்டல் ரிசப்ஷனில் வைத்தே சாப்பாடு, சிக்கன் சாப்பிட்டாராம்.

போதையின் உச்சத்தில் கையிலிருந்தவற்றையெல்லாம் ரிசப்ஷன் முழுக்க வீச ஆரம்பிக்க திணறிப் போனார்களாம் ஹோட்டல்காரர்கள்.

அவரை அங்கிருந்து வெளியேற்றினால் போதும் என்ற நிலைக்குப் போய்விட்டதாம் நிலைமை.

 

மெகா கோடீஸ்வரர் ஆன ஷாரூக் கான்! சொத்துமதிப்பு ரூ. 2500 கோடி

மும்பை: நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் இடம் பிடித்துள்ளார்.

ஹரூ‌ன் இந்தியா நிறுவனம் 1800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் ஷாரூக் கான் 114வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மெகா கோடீஸ்வரர் ஆன ஷாரூக் கான்! சொத்துமதிப்பு ரூ. 2500 கோடி

ஷாரூக் கானிடம் 2500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் சினிமா மற்றும் விளம்பர தயாரிப்பு நிறுவனம் நடத்தும் ஷாரூக்கான், திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பெறுகிறார்.

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களிடம் மட்டும் 15,50,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மும்பையில்தான் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் 33 சதவிகிதம் பேர் இருக்கின்றனராம். டெல்லியில் 16 சதவிகிதம் பேரும், பெங்களூருவில் 11 சதவிகிதம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடிகர் திலகத்தின் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது!- இயக்குநர்கள் சங்கம்

சென்னை: காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை எக்காரணம் அகற்றக்கூடாது என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காமராஜர் சாலையில் காந்தி சிலை எதிரில் சிவாஜி கணேசன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ஒருபக்கம் வரும் வாகனங்களை மறைப்பதாகவும் கூறி, அச்சிலையை அகற்ற உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் திலகத்தின் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது!- இயக்குநர்கள் சங்கம்

இதுகுறித்து விளக்கம் தருமாறு உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிவாஜி கணேசன் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் விக்ரமன், பொருளாளர் வி சேகர், செயலாளர் ஆர்கே செல்வமணி ஆகியோர் விடுத்துள்ள போக்குவரத்து காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் தமிழகத்தின் தவப்புதல்வன். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அரிய சாதனைகள் புரிந்தவர் என்பது உலகறியும்.

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனையும் வ உ சிதம்பரம் பிள்ளையையும் உலக மக்கள் கண்முன் நடமாட வைத்து விருதுகள் பல பெற்றவர்.

தமிழர் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான ஒன்றாகும்.

அவரது திரு உருவச் சிலையை அங்கிருந்து அகற்றுவது நம் நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றக்கூடாது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்துக்கு இயக்குநர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

-இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

'நல்லாத்தானே இருக்க.. ஐந்நூறு ஆயிரத்துக்கே போயேன்!'- கொதிக்க வைத்த சந்தானம் டயலாக்

'நல்லாத்தானே இருக்க.. ஐந்நூறு ஆயிரத்துக்கே போயேன்!'- கொதிக்க வைத்த சந்தானம் டயலாக்

சென்னை: என்றென்றும் புன்னகை படத்தின் ஒரு காட்சியில், பெண் ஊழியர் ஒருவரை, 'நல்லாத்தானே இருக்க.. ஐநூரு ஆயிரத்துக்கே போயேன்' என்று இரட்டை அர்த்தத்தில் நடிகர் சந்தானம் கமெண்ட் அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நேற்று முன்தினம் என்றென்றும் புன்னகை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் விளம்பரப் படப்பிடிப்புக் காட்சி ஒன்று வருகிறது.

அதில் சந்தானத்திடம் ஒரு பெண் வந்து 'அஞ்சு பத்துக்குப் போகட்டுமா' என்று அனுமதி கேட்கிறார்.

உடனே சந்தானம் டைமிங் என்ற பெயரில், 'ஏன்? நீ நல்லாத்தானே இருக்கிறே..? ஆயிரம் ஐநூறுக்கே போலாமே!" என்று கமெண்ட் அடிக்கிறார்.

இந்தக் காட்சி பெண்களை சிறுமைப்படுத்துவதாகவும், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தக் காட்சியை நீக்காவிட்டால், தணிக்கைச் சான்றிதழ் தரக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ள மகளிர் அமைப்பினர், இதுகுறித்து தணிக்கை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் அகமது தரப்பில் விசாரித்தபோது, அந்த காமெடி பகுதியை எழுதியவர் சந்தானம்தான். அவரைத்தான் கேட்க வேண்டும் என்றனர்.

 

நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம்- கேயார் அறிவிப்பு

நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம்- கேயார் அறிவிப்பு

சென்னை: படங்களின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இனி அவர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் வரை பிடித்துக் கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாகவே, படங்களின் விழாக்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கதாநாயகிகள் மட்டும் பங்கேற்காமல் தவிர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா, கோலாகலம், உயிர்மொழி போன்ற படங்களின் விழாக்களில் தொடர்ந்து அவற்றின் நாயகிகள் தவிர்த்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, விழாக்களுக்கு வராத நடிகைகள் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்றும் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் நடிகைகளுக்கு மட்டும் அந்த தொகையை திருப்பி கொடுப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் ரூ.20 லட்சத்தை குறைத்து வாங்க வேண்டி இருக்கும். பட விழாக்களுக்கு வராமல் போனால் அந்த தொகையை இழக்க வேண்டி வரும்.

இப்போது த்ரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, அமலா பால் போன்ற முன்னணி நாயகிகள் நடித்து வரும் பெரிய படங்களில், அவர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தில் 20 சதவீதத்தை படம் வெளியாகும் வரை தராமல் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூறுகையில், "நடிகைகள் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் வருவது இல்லை என்று தயாரிப்பாளர் பலர் புகார் அளித்துள்ளனர். எனவே நடிகைகளுக்கு இனி முழு சம்பள தொகையையும் கொடுப்பது இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்து உள்ளது.

20 சதவீதம் சம்பளத்தை பிடித்தம் செய்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பிறகு அதில் 10 சதவீதத்தை கொடுப்பது என்றும், மீதி 10 சதவீதத்தை படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு கொடுப்பது என்றும் முடிவு எடுத்துள்ளோம்.

நடிகைகளை அவர்களின் படவிழாக்களுக்கு போக வேண்டாம் என தடுக்கும் மேனேஜர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

 

சினிமாவை விட்டு விலகுகிறாரா காஜல் அகர்வால்?

நடிகை காஜல் அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போடவிருப்பதாக திடீரென கிளப்பிவிட்டுள்ளன ஆந்திர மீடியாக்கள்.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில்தான் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். அதுவும் மகதீராவுக்குப் பிறகு அவரது மவுசு எங்கேயோ போய்விட்டது.

சினிமாவை விட்டு விலகுகிறாரா காஜல் அகர்வால்?  

ஆனால் இப்போது பார்த்தால் தெலுங்கில் காஜலுக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. யவடு என்ற படத்தில் மட்டும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அதுவும் விரைவில் ரிலீசாகப் போகிறது.

தெலுங்கில் புதுப்பட வாய்ப்புகள் வந்தாலும் வேண்டாம் என மறுக்கும் காஜல், இப்போது ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதன் பிறகு தமிழில் வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. எனவே அவர் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று செய்தி கிளம்பியுள்ளது.

காஜல்அகர்வால் தங்கை நிஷாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. எனவே காஜல்அகர்வாலும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும், இதற்காகவே பட வாய்ப்புகளை அவர் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அப்பாடா.. யு கிடைச்சிடுச்சி!- விஷால் நிம்மதி

சென்னை: ஒருவழியாக விஷாலின் பாண்டிய நாடு படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துவிட்டது.

நடிகர் விஷால் தயாரித்து, லட்சுமி மேனனுடன் சேர்ந்து நடித்துள்ள படம் 'பாண்டிய நாடு'. ஆதலால் காதல் செய்வீர் படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் இது. டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. தியேட்டர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அப்பாடா.. யு கிடைச்சிடுச்சி!- விஷால் நிம்மதி

சில தினங்களுக்கு முன் இப் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கினர். இதனால் சற்று நெருக்கடியான நிலை ஏற்பட்டது.

எனவே முடிவை மறுபரிசீலனை செய்ய தணிக்கைக் குழுவுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இப்படம் தணிக்கை குழுவினருக்கு மீண்டும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று படத்திற்கு தற்போது 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். தீபாவளிக்கு அஜீத்தின் 'ஆரம்பம்' படமும், கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் சென்சார் போர்டு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

சீரடி ஜெய் சாய்பாபா... சினிமாவாக வரும் மகானின் வாழ்க்கை!

மனிதராக அவதரித்து மகானாக உயர்ந்த சீரடி (ஷிர்டி) சாய்பாபாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். இதற்கு சீரடி ஜெய் சாய்ராம் என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி நடிக்கிறார்.

இப்படத்துக்கு திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து பாஸ்கர் பாபா இயக்குகிறார்.

சீரடி ஜெய் சாய்பாபா... சினிமாவாக வரும் மகானின் வாழ்க்கை!

படம் பற்றி அவர் கூறும்போது, "சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப்பட்டு உள்ளது. இதுவரை பாபாவின் வாழ்க்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெறுகிறது. பாபாவை பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது என் வாழ்க்கை லட்சியம். தற்போது நிறைவேறிவிட்டது," என்றார்.

சீரடி ஜெய் சாய்பாபா... சினிமாவாக வரும் மகானின் வாழ்க்கை!

இந்த படத்தில் ராஜ்குமார், சக்திவேல், நளினிகாந்த், விஜயகுட்டி, பாவனா, நாராயணராவ், ரேகா லட்சுமி பாய், லஷ்மா ரெட்டி போன்றோரும் நடிக்கின்றனர். சாகித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பழனிபாரதி, பிறைசூடன், எம்.உசேன் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.

சாய்வெங்கடேஸ் வரம்மா, ஸ்ரீ சாய்கல்பா வி.ராதிகா ஆகியோர் தயாரித்துள்ளனர்.