திரைப்படங்களின் இனி பின்னணி பாடப்போவதில்லை என்று பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று லதா மங்கேஷ்கரை கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது.
பிரபல திரைப்பட பின்னணி பாடகிகளில் ‘கவிக்குயில்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் லதா மங்கேஷ்கர். 13வது வயதில், சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கருக்கு இப்போது 83 வயதாகிறது.
மராட்டிய திரைப்படம், ‘கஜாபாகு'வில், முதன் முதலாக பின்னணி பாடத் துவங்கிய லதா மங்கேஷ்கர், இதுவரை 36 மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கு மேல் பின்னணி பாடியுள்ளார். சினிமா பாடகராக மட்டுமின்றி புகழ் பெற்ற கஜல் மற்றும் பஜனை பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்த நிலையில், சினிமாவில் பாடியது போதும் என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற, ‘தீனாநாத் மங்ககேஷ்கர் விருது' வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லதா மங்கேஷ்கர் பேசியதாவது: "இசை உலகில் எதிர்பார்க்காத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பரிணாம வளர்ச்சி, வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், என்னை அதில் ஐக்கியப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.
சமீப காலத்தில், திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடினேன். ஆனால் என் பணியை நான் தொடர முடியாத நிலையில் உள்ளேன். இந்த சூழ்நிலையில், பின்னணி பாடகியாக நீடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால், இனி பாடுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறேன்'' என்றார்.
வட மாநில மக்களின் மனதை தனது இனி குரலால் மயக்கியவர்கள் பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், அவரது சகோதரி ஆஷா போஸ்லே. ரசிகர்களை தனது பாடலால் உருக வைத்த லதா மங்கேஷ்கரின் அறிவிப்பினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவினை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.