32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால் - பூர்ணிமா

Mohan Lal Poornima Reunite After 32 Years

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் மோகன்லாலும் பூர்ணிமா பாக்யராஜும்.

விஜய் நடிக்கும் ‘ஜில்லா' படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

1980-ல் ‘மஞ்சள் விரிஞ்ச பூக்கள்' என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இப்படம் பெரிய ஹிட்டானது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜில்லா' படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை நேசன் இயக்குகிறார்.

பூர்ணிமாவுடன் நடிப்பது மகிழ்ச்சி தருவதாக மோகன்லால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மோகன்லாலுடன் நடிப்பது குறித்து பூர்ணிமா கூறுகையில், "மோகன்லாலும் நானும் ஜோடியாக நடித்த ‘மஞ்சள் விரிஞ்ச பூக்கள்' பெரிய வெற்றிப் படம். அதன் பிறகு இருவரும் நிறைய படங்களில் நடித்தோம். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை. அதன் பிறகு எனக்கு திருமணம் மற்றும் குழந்தைகள் என்று ஆன பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் சென்னையில் மோகன்லால் படங்களை தொடர்ந்து பார்ப்பேன்.

மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்று விஜய் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். 32 ஆண்டுக்கு பிறகு நானும் மோகன்லாலும் காதல் ஜோடியாக இல்லாமல் கணவன் மனைவியாக நடிக்கிறோம்," என்றார்.

 

இளமை, காதல், ஆக்ஷனுடன் வரும் பக்கா த்ரில்லர் 'கண்டனம்'!

ராதா ராம்தாரி புரொடக்‌ஷன் சுப்ரமணிய ஜனார்தன் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள 'கண்டனம்' திரைப்படம் வெளிவரத் தயாராக உள்ளது.

அக்‌ஷய் குமார் நடித்த ஜக்மி தில், ரிஷி கபூர் - மனீஷா கொய்ராலா நடித்த கன்யாதன் உட்பட நான்கு இந்திப் படங்களை இயக்கியவர் சுப்ரமணிய ஜனார்தன்.

தமிழில் சிக்கி முக்கி, மனிதாக இரு ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். இப்போது புதுமுகங்கள் நடிக்கும் 'கண்டனம்' திரைப்படத்தைத் தமிழில் தனது முதலாவது படமாக இயக்கி இருக்கிறார். இளமை, காதல், ஆக்ஷனுடன் வரும் பக்கா த்ரில்லர் படம் இது.

kandanam ready release

ஹிந்தியில் ராஜு சுப்ரமணியன் என்கிற பெயரில் படங்களை இயக்கியவர் தமிழுக்காக சுப்ரமணியன் ஜனார்தன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ராதா ராம்தாரி புரொடக்‌ஷன் - அசோக் கோஸ்வாமி & ராம்தாரி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜெய் பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விரைவில் வெளிவர உள்ளது.

நிழல்கள் ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நாயகன் - நாயகியாக புதுமுகங்கள் விஷால், கார்த்திக் கட்டாக், ஸ்ரீ, ப்ரிதிக்க்ஷா மைதிலி, கமலி மற்றும் ஜிடா மரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கிறது .

'கண்டனம்' படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம் இம்மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

’நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணுந்தான்...’ திருமண வீட்டில் டான்ஸ் ஆட 8 கோடி வாங்கிய ஷாருக்!

Shahrukh Khan Charge Rs 8 Crore A Wdding Performance

மும்பை: துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம் ஷாருக்கான்.

நடித்து கல்லா கட்டுவது தவிர கடை திறப்பு, விளம்பர படங்கள், நட்சத்திர நிகழ்ச்சி, விருது விழா, ஸ்டார் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் நடிகர், நடிகைகள் லட்சணக் கணக்கில் பணம் பார்த்து வருகின்றனர்.

கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், கோலிவுட் ஹீரோயின்கள் அனுஷ்கா, காஜல் அகர்வால், அசின் போன்ற நடிகைகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர்.

இது தவிர இப்போது திருமண வீடுகளில் நடனம் ஆடுவதற்காக அதிரடியாக சம்பளம் கேட்கிறார்களாம். சமீபத்தில் ஷாருக்கான், ஒரு திருமணத்துக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடுவதற்காக ரூ. 8 கோடி கேட்டாராம்.

இதுபற்றி பாலிவுட் பிரமுகர் கூறும்போது,‘துபாயில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அரை மணி நேரம் நடனம் ஆட ஷாருக்கானை கேட்டார்கள். இதற்கு அவர்கள் ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க தயார் என்றபோது ஓகே சொன்னார். திருமண விழாக்களில் நட்சத்திரங்கள் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இப்போது பேஷன் ஆகி வருகிறது. தாங்கள் ஆசைப்பட்ட நடிகரோ, நடிகையோ வந்து ஆடுவதற்கு எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தர தயாராக இருக்கிறார்கள் என்றார்.

 

தயாரிப்பாளர் ஆனது அலாரம் கடிகாரத்தை விழுங்கிய மாதிரி இருக்கிறது!- விஷால்

Actor Vishal S Experience As Producer

சென்னை: சொந்தமாக படம் தயாரிக்க முடிவெடுத்ததிலிருந்து அலாரம் கடிகாரத்தை விழுங்கியது மாதிரியே இருக்கிறது, என்கிறார் நடிகர் விஷால்.

' விஷால் பிலிம் பேக்டரி' என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை தொடங்கியுள்ள விஷால், தன் முதல் படத்துக்கு ‘பாண்டிய நாடு' என்று தலைப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அப்பாவாக இயக்குநர் பாரதிராஜா நடிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தை பற்றி நடிகர் விஷால், சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், "என் சினிமா வாழ்க்கையை முதலில் உதவி இயக்குநராகத் தொடங்கினேன்.

‘செல்லமே' படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். மூன்றாவதாக இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறேன். எங்க அப்பா தயாரிப்பாளர். அண்ணனும் தயாரிப்பாளர். மூன்றாவதாக நானும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். அவர்களிடம் கற்றுக் கொண்டதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

இந்த பேட்டிக்கு வருவதற்கு முன்பு தயாரிப்பாளர் போல் உடை அணியலாமா, கதாநாயகன் போல் அணியலாமா? என்று யோசித்தேன். இந்த நேரத்தில் என்னை செதுக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஆனதை, ஒரு ‘அலாரம் கடிகாரத்தை' விழுங்கியது போல் உணர்கிறேன். காலையில் வழக்கமாக விழிக்கும் நேரத்தை விட, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு விழிப்பு வந்து விடுகிறது,'' என்றார்.

அவரிடம் திருமணம் குறித்து சில நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "திருமணம் நடக்கும்போது நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு என் கவனம், ‘பாண்டிய நாடு' படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தை நவம்பர் 3-ந்தேதி, தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வரவேண்டும்," என்றார்.

 

யுவனைப் பாட அழைத்தது ஏன்? - ஏ ஆர் ரஹ்மான்

Why I Invite Yuvan Sing Dhanush Ar Rahman

மரியான் படத்தில் ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். அந்தப் பாடலுக்கு ரஹ்மான் இசையமைக்க யுவன் பாடியுள்ளார்.

திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவரை ரஹ்மான்தான்.

இந்த நிலையில் யுவனைப் பாட அழைத்தது ஏன் என நேற்று நடந்த மரியான் பிரஸ் மீட்டில் விளக்கினார் ஏஆர் ரஹ்மான்.

அவர் கூறுகையில், "தனுஷ், யுவன் சங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் கூட்டணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். மரியானில் வரும் கடல் ராசா நான் பாட்டை நான்தான் பாடினேன். ஆனால் தனுஷுக்கு அது செட் ஆகவில்லை. அப்போதுதான் யுவனை பாட அழைத்தேன். அந்தப் பாடலுக்கு அவர் குரல் மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டது," என்றார்.

மரியான் படப் பாடல்கள் அனைத்துமே வந்த வேகத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் ஏஆர் ரஹ்மான், தனுஷ், பார்வதி, இயக்குநர் பரத்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

துவார் சந்திரசேகர் தயாரிக்கும் 'தொட்டால் தொடரும்'!

தொட்டால் தொடரும் என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்தை கேபிள் சங்கர் என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார்.

எப் சி எஸ் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் மூலம் வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை போன்ற படங்களைத் தயாரித்த துவார் சந்திரசேகரன், அடுத்து பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தயாரிக்கிறார்.

அடுத்து துவார் சந்திரசேகரன் தயாரிக்கும் படம் தொட்டால் தொடரும்.

கேபிள் சங்கர் ஏற்கெனவே கலகலப்பு படத்துக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

இந்த தொட்டால் தொடரும் படத்தில் முழுக்க முழுக்க காமெடியில் மிரட்டப் போகிறாராம்.

இந்தத் தலைப்பு குறித்து அவர் கூறுகையில், "ஒருதவறான விஷயத்தை தொடப்போய் அது விடாமல் எப்படி துரத்துகிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்ல இருக்கிறோம். படத்தின் ஹீரோ மற்றும் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். மிக முக்கியமான நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது," என்றார்.

 

விபச்சாரியாக நடிக்க வெட்கப்படவில்லை! - ஸ்ரேயா

Shriya As Call Girl Pavithra   

தெலுங்குப் படத்தில் விபச்சாரி வேடத்தில் நடித்ததற்காக வெட்கப்படவில்லை என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்தார்.

எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.

இப்போது ‘பவித்ரா' (தெலுங்கு) என்ற தெலுங்குப் படத்தில், அவர் விபசார அழகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜனார்த்தன் மகரிஷி என்பவர் இயக்கியுள்ளார்.

பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். படம், ஆந்திராவில் வருகிற 24-ந்தேதி திரைக்கு வருகிறது.

விபசார அழகியாக நடித்த அனுபவம் குறித்து ஸ்ரேயா கூறுகையில், "என்னுடைய சிறந்த படங்களில் ஒன்று பவித்ரா என நான் நம்புகிறேன். விபசார அழகியாக நடிப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் ஆபாசம் துளி கூட இல்லை. குறிப்பாக, படுக்கை அறை காட்சிகள் இல்லை.

படத்தின் கதைப்படி, நான் விபசார அழகியாக இருந்து அரசியல் தலைவர் ஆகிவிடுவேன். ஏழை - எளிய, ஆதரவற்ற பெண்களை கயவர்களிடம் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது போன்ற வேடம் அது," என்றார்.

தமிழில் தொடர்ந்து படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் அடுத்து நாகார்ஜூன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ரேயா.

 

சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா?- ப்ரியா ஆனந்த் விளக்கம்

Priya Anand Denies Affair With Sivakarthikeyan

சென்னை: சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை, என்றார் நடிகை ப்ரியா ஆனந்த்.

‘எதிர் நீச்சல்' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சந்திப்பில் படத்தின் ஹீரோ சிவகார்த்திக்கேயன், கதாநாயகிகள் பிரியா ஆனந்த், நந்திதா, டைரக்டர் துரை செந்தில் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பிரியா ஆனந்திடம், "தங்கள் படங்களில் ஹீரோயின்களை சிபாரிசு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"எனக்கு எந்த கதாநாயகனும் சிபாரிசு செய்யவில்லை என்பதால், அதுபற்றி கருத்து சொல்ல முடியாது," என்றார்.

அடுத்து, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகுவதாகக் கூறப்படுகிறதே, என்ற கேள்விக்கு, "இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரை விட்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறேன்,'' என்றார் ப்ரியா ஆனந்த்.

 

தவறான பதிவு எண்ணைப் பயன்படுத்தியதாக கமல்ஹாஸன் மீது எக்ஸிபிட்டர்ஸ் சங்கம் வழக்கு!

Exhibitors Association Files Case Kamal

சென்னை: எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் எனும் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் சார்பில் கமல்ஹாஸன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சங்கத்தின் பதிவு எண்ணை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் திரைப்பட வளர்ச்சிக்காகவும், திரையரங்க உரிமையாளர்களின் நன்மைக்காகவும் எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் விஸ்வரூபம் என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை 11-1-2013 அன்று திரையரங்குகளிலும் டி.டி.எச்சிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படம் ரீலிஸ் ஆகும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் முஸ்லீம் அமைப்பினர் எதிர்ப்பால் தமிழக அரசு இப்படத்துக்கு தடை விதித்தது.

இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து தடை நீக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் எங்கள் சங்கத்தின் மீதும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மீதும் இந்திய போட்டி கமிஷனில் புகார் செய்துள்ளது.

அதில் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கமும் தியேட்டர் உரிமையாளர் சங்கமும் விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று இயற்றிய சட்டவிரோத தீர்மானத்தால் படத்தை வெளியிடும் தேதியை தள்ளி வைக்க நிர்பந்திக்கப்பட்டோம் என்று கூறியுள்ளது. நாங்கள் இதுபோல் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால் எங்கள் சங்கத்தின் பதிவு எண்ணை பயன்படுத்தி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதனை எங்களை தவிர யாரும் பயன்படுத்த முடியாது.

எங்கள் பதிவு எண்ணை பயன்படுத்தி மேலும் தீர்மானம் தயாரித்தற்காக ராஜ் கமல் நிறுவனம் மற்றும் கமல்ஹாசன், ஸ்ரீதர் ராமானுஜம் ஆகியோர் மீது 17-4-2013 அன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறுகிறது.

 

என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் - விஜய்யின் பாராட்டு

Vijay Hails Dhanush

சிறந்த நடிகருக்கான விருதுகள் எனக்குக் கிடைத்திருந்தாலும், என்னைவிட சிறந்த நடிகர் தனுஷ்தான் என்று பாராட்டு தெரிவித்தார் நடிகர் விஜய்.

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான பிரிவுகளில் இரு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்ட விஜய், மேடையில் பேசுகையில், "எனக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் என்னைவிட சிறந்த நடிகர் ஒருவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்... அவர் தனுஷ். உண்மையிலேயே மிகச் சிறந்த நடிகர்," என்று பாராட்டினார்.

விஜய்யின் பாராட்டுக்கு நன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.

அதில், "விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று ‘விஜய் விருதுகள்', மற்றொன்று ‘விஜய்' சாரின் பாராட்டு எனும் விருது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வுண்டர்பார் ஸ்டுடியோ: சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கினார் தனுஷ்!

Dhanush Launch Own Music Company

தயாரிப்பாளராக முதல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்து சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கியுள்ளார்.

நிறுவனத்துக்கு வுண்டர்பார் ஸ்டுடியோ என்று பெயர் சூட்டியுள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனத்துக்கும் இதே பெயர்தான் என்பது நினைவிருக்கலாம்.

வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் முதலில் தயாரித்த படம் 3. அனிருத் இசையில் இதில் இடம்பெற்ற கொல வெறிடி பாடல் உலகையே கலக்கியது. சோனி நிறுவனம் இந்தப் பாடல்களை வெளியிட்டது.

மீண்டும் அதே அனிருத் இசையில், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படப் பாடல்களும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் பாடல்கள்தான் இன்று சக்கை போடுபோடுகின்றன.

இந்த தொடர் வெற்றியைக் கண்ட தனுஷ் இப்போது சொந்த இசை நிறுவனம் தொடங்கியுள்ளார். தன் தயாரிப்பு நிறுவனப் பெயரையே இந்த இசை நிறுவனத்துக்கும் சூட்டியுள்ளார்.

விரைவில் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு குறித்து அறிவிக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தனுஷ்.

 

எல்ரெட் குமாரின் அடுத்த படம்... அனிருத் இசையமைக்கிறார்!

Anirudh Compose Music Elred Kumar Next Movie

3 படத்தைத் தொடர்ந்து, எதிர்நீச்சலிலும் அனிருத்தின் பாடல்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. விளைவு பெரிய இயக்குநர்கள் பலரும் அனிருத்தின் கால்ஷீட் கேட்டு அணிவகுத்து வருகின்றனர்.

இயக்குநர் கவுதம் மேனன் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள அனிருத், அடுத்து எல்ரெட் குமார் தனது ஆர் எஸ் இன்போடைன்மென்ட் மூலம் தயாரித்து இயக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.

எல்ரெட் குமார் இயக்கிய முதல் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்போது தனது பார்ட்னர் ஜெயராமனுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் காதல் படமான இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக அனிருத்துக்கு பெரிய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன்வசந்தம், இப்போது யான் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது ஆர் எஸ் இன்போடைன்மென்ட்.