சென்னை: என் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு மகத்தானது. அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் உயிருள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன், என்று கூறி கண்கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஜெயா டிவியில் இன்று ரஜினியின் சிறப்புப் பேட்டி ஒளிபரப்பானது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பான இந்த பேட்டியில் ரஜினி நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பேட்டியின் பெரும்பகுதி நேரத்தில் விவேக்கே ஆக்கிரமித்துக் கொண்டாலும், ரஜினி சொன்ன பதில்களில் நூறு சதவீத நேர்மை, உண்மை இருந்தது.
இந்த நேர்காணலில் ரஜினியிடன் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் (கோச்சடையான் தவிர்த்து)....
விவேக்: உங்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற நினைப்பு இருக்கிறதா?
ரஜினி: இல்லை... இல்லை.. என்கிட்ட நிறையப் பேரு இப்படி கேட்டுட்டாங்க. எனக்கு இல்ல.. என் மனைவிகிட்ட இதை கேட்டேன். அவங்களும் கூட எனக்கு எந்த வருத்தமும் இல்லீங்கன்னுட்டார்.
விவேக்: மகன் செய்ய வேண்டியதை மகள்களே இப்போ செய்துட்டாங்க இல்லையா..
ரஜினி: ஹ..ஹா..ஹ..
விவேக்: ரெண்டு பேர்ல யார் சார் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. ஸாரி, குடும்பத்துல குழப்பம் உண்டாக்கக் கேக்கல...
ரஜினி: ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ரெண்டு பேருமே 'பெட்'தான்...
விவேக்: ஆனா உங்களுக்கு ஒண்ணுன்னா ஒரே வேவ் லெங்த்ல டக்குன்னு புரிஞ்சிக்கிட்டு உடனே ஓடி வர்றது யாரு?
ரஜினி: ஐஸ்வர்யா... ஆக்சுவலா.. சௌந்தர்யா பிறந்த நேரத்தில், நான் பிஸி. குழந்தையை பாத்துக்க முடியாததால ஐஸ்வர்யாவை என் மாமியார் வீட்டில் 6 ஆண்டுகள் விட்டிருந்தோம். அதனால ஒரு குழந்தையை கொஞ்ச காலம் பாக்காம இருந்ததால வரும் ஈர்ப்பு அது..
ஸ்டைல் ஐகான்
விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...
ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர்...
விவேக்: உடல் அசைவில், நடையில், ஒரு பொருளைக் கையாள்வதில் என அனைத்திலும் புதுமை, ஸ்டைலைப் புகுத்தியவர் நீங்கள்தான் சார். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று அமிதாப்பச்சனே அறிவித்துவிட்டார். அது இந்தியாவே அறிந்தது. இந்த ஸ்டைலில் சிகரெட்தான் முக்கியம். அந்த ஸ்டைல் மூலம் பல லட்சம் பேரை இழுத்தீங்க.
வரமே சாபமாயிடுச்சி
ரஜினி..: ஆமா, அந்த வரமே பின்னாடி சாபமாயிடுச்சி... ஹ ஹாஹா...
விவேக்: இப்பவும் பல லட்சம் பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையா வைச்சிருக்கிற இளைஞர்களுக்கு உங்க அட்வைஸ்...
ரஜினி: எதையும் லிமிட்டா வச்சிக்கங்க.. எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகிடாதீங்க.
மறுபடியும் புராணப் படங்களுக்கு..
விவேக்: கோச்சடையான் பார்த்த பிறகு, மகாபாரதம் போன்ற காவியங்களை மீண்டும் எடுத்தால் நீங்கள் எந்த பாத்திரத்தில் நடிப்பீர்கள்?
ரஜினி: கண்ணன்.. கிருஷ்ணர்.
விவேக்: ஆனால் நீங்கள் முதன் முதலில் நடித்ததே துரியோதனன் வேடம்தானே... அதிலயும் உங்களுக்கு ஈர்ப்பு இருக்குதானே?
ரஜினி: ஆமா.. வில்லன் வேஷம் பொதுவாகவே ஈர்ப்பு மிக்கது. நெகடிவ் கேரக்டர் பண்ணும்போது எந்த கன்ட்ரோலும் கிடையாது. ஹீரோன்னா நியாயமான வழியில போராடித்தான் ஜெயிக்கணும்.
அபூர்வராகங்கள் - கோச்சடையான்
விவேக்: பொதுவா ஒரு படத்தின் முதல் காட்சிக்கு தேங்காய் உடைப்பதும், முடிவில் பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். அபூர்வ ராகங்களில் தேங்காய் ஷாட் எது? கோச்சடையானின் பூசணிக்காய் ஷாட் எது?
ரஜினி: அபூர்வ ராகங்களில் கேட்டைத் திறந்துட்டு வர்ற காட்சி... இல்ல இல்ல.. அதுக்கு முன்ன பைரவி வீடு இதானேன்னு கமல் கிட்டே கேட்கிற சீன். அந்த சீன் ஒரே ஷாட்ல முடிஞ்சது. ஆனால் அடுத்த ஷாட் பத்து டேக் போச்சு. ஏன்னா கமல் பெரிய நடிகர். அவர்கூட நடிச்சப்ப கொஞ்சம் தயக்கமா இருந்துச்சி.. பின்னர் கமலே என்னை அமைதியாக்கி நடிக்க வச்சார்.
கோச்சடையானில் மெதுவாகத்தான் பாடல் காட்சிதான் பூசணிக்காய் உடைத்த காட்சி.
எப்படி வந்தது இந்த ஸ்டைல்?
விவேக்: உங்களுக்கு மட்டும் எப்படி சார் இப்படி ஒரு ஸ்டைல் வந்தது... எப்படி இதையெல்லாம் யோசிக்கிறீங்க?
ரஜினி: கேபி சார்தான் இதுக்கெல்லாம் மூல காரணம். நான் நடிக்க வந்த புதிதில், 'இதோ பாரப்பா... இன்டஸ்ட்ரில இனி உன்னை அவங்க மாதிரி நடிக்க சொல்வாங்க.. அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் சொல்ற மாதிரியெல்லாம் கூட நடிக்க சொல்வாங்க. அதையெல்லாம் கேட்க வேண்டாம். உன்னோட தனித்தன்மையை மாத்திக்க வேணாம்னார். நானே சொன்னேன்னு சொல்லு.. உன் ப்ளஸ் பாயின்டே உன் ஸ்பீட்தான். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு புது ஸ்டைல் பண்ணுன்னு.. கேபி சார்தான் என்கிட்ட இருந்ததை கண்டு பிடிச்சி, அவர்தான் இந்த செடிக்கு தண்ணி ஊத்தி வளர்த்துவிட்டார்.
விவேக்: நீங்க செஞ்சதிலேயே உங்களுக்குப் பிடிச்ச ஸ்டைல் எது?
ரஜினி: சிகரெட் ஸ்டைல்தான். ஆனா அதைக் கூட சரியான கேப்ல பண்ணனும்... சீன், ஷாட், சிச்சுவேஷன் எல்லாம் அமையணும்...
காமெடி
விவேக்: ஆக்ஷன் ஹீரோவா இருந்து திடீர்னு காமெடியிலும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க.. தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊருன்னு.. எப்படி சார் இது? காமெடி நடிகர்கள் பத்தி உங்க அபிப்பிராயம்?
ரஜினி: எல்லாமே கேபி சார்தான். அவர்தான் என்னை தில்லு முல்லுவில் நடிக்க உற்சாகப்படுத்தினார். உனக்கு நடிப்பு, டான்ஸ் எல்லாம் வருது. காமெடி டைமிங் நல்லாருக்கு. ஆனா யாரும் அதை சரியா பயன்படுத்தல. நான் தில்லுமுல்லுல அதைப் பயன்படுத்தறேன்னு அந்தப் படம் எடுத்தார். அடுத்து பெரிய இன்ஸ்பிரேஷன் அமிதாப் பச்சன். நான் அவரோட பெரிய பேன். சர்வசாதாரணமா அவர் ஹீரோ கம் காமெடி பண்ணுவார்.
நடிப்பிலேயே கடினமானது காமெடிதான். மத்ததெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் காமெடி சொல்லிக் கொடுத்து வராது. அது பெரிய விஷயம். காமெடியனை மக்கள் ஏத்துக்கணும். அதான் முக்கியம். இப்போ சுருளிராஜனை எடுத்துக்கிட்டீங்கன்னா, நீங்கள்லாம் அவர்கூட ஆக்ட் பண்ணியிருக்கீங்களா.. இல்லையான்னு தெரியாது... ஆனா ஜஸ்ட் ஒரு டயலாக்.. அதை பேச நீங்க வீட்ல நிறைய ஹோம் ஒர்க் பண்ணி, செட்ல அடிஷனலா ஒண்ணைச் சேப்பீங்க. ஆனா சுருளி சார், அந்த டயலாக்கை அப்படியே வாங்கி ஜஸ்ட் சொல்வார்.. அப்படி சிரிப்பு வரும்.. அது போல வீகே ராமசாமி சார்... நாகேஷ், தேங்காய் சீனிவாசன்.. இவங்க கூட எல்லாம் நடிச்சது ஒரு வரம்தான்.
ரசிகர்கள்...
விவேக்: சார், உங்க ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க சார். நீங்க, கண்ணா நான் திரும்ப வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனீங்க... அதுக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் உங்க ரசிகர்களின் பிரார்த்தனைதான். இன்னிக்கு உங்க உயிரைத் திருப்பிக் கொண்டு வந்துட்டாங்க. அந்த ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?
ரஜினி: அப்போ வந்து... எனக்கு இவங்கள்லாம் இந்த அளவு ப்ரே பண்ணிக்கிட்டிருக்கான்னு தெரியாத நிலைமையில இருந்தேன். ராமச்சந்திராவிலிருந்து சிங்கப்பூர் போறப்போ, பேன்சுக்கு ஏதாவது சொல்லணும்னு சொன்னப்போ... என் வாய்ஸ் சரியா இல்ல. இருந்தாலும் அப்ப நான் சொன்னேன்... நான் வந்திடறேன். நீங்கள்லாம் பெருமைப்படற அளவுக்கு ஏதாவது செய்வேன்னு நான் சொன்னேன். இந்த கோச்சடையான் மூலம் என் ரசிகர்களை நான் பெருமைப்படுத்தறதா நினைக்கிறேன்.
அதுக்கப்புறம் ரசிகர்கள் எனக்காக செய்ததையெல்லாம் பேப்பர்ஸ், மேகஸின்ஸ், டிவி எல்லாத்தையும் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல. நான் அப்பவே சொன்னேன்.. பணத்துக்காக நடிச்சேன்னு. என் மேல இவ்வளவு அன்பு செலுத்தறாங்களே, இவ்வளவு செய்யறாங்களே.. இவங்களுக்கு என்ன செய்ய முடியும்னு நினைப்பேன். சில சமயம் எனக்கு அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெட்கமா இருக்கும். உங்களுக்காக மண்சோறு சாப்பிட்டேன், நாப்பது நாள் நடந்து போனேன்னு சொல்லும் அவங்களுக்கு நன்றின்னு சொல்றது ரொம்ப சின்ன வார்த்தை. ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க, பண்ணீங்கன்னு கேட்டுக்குவேன். இதெல்லாம் விவரிக்கவே முடியாத விஷயம்.
இதையெல்லாம் நான் உயிருள்ள வரைக்கும் மறக்க முடியாது. மறந்தா மனுஷனே கிடையாது. இதுக்கு கைம்மாறா என்ன செய்யப் போறேன்னு இன்னும் எனக்குத் தெரியல...