மீண்டும் மேக்கப் போட வரும் பூவே உனக்காக சங்கீதா..

நல்ல நடிகை என்ற பெயருடன் சில காலம் தமிழ் சினிமாவில் வலம் வந்த பூவே உனக்காக சங்கீதா, காதலித்து திருமணம் செய்து கொண்டதும், இருக்கும் இடம் பற்றிய தகவலைக் கூட வெளியிடாமல் அமைதி காத்தார்.

இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவரது மறுபிரவேசம் அமைந்திருப்பது தமிழில் அல்ல.. மலையாளத்தில்.

மீண்டும் மேக்கப் போட வரும் பூவே உனக்காக சங்கீதா..

மலையாளத்தில் நடிகரும், திரைக்கதையாசிரியரும், இயக்குனருமான சீனிவாசன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஷிபு பாலன் என்பவர் இயக்குகிறார்.

சீனிவாசனும், சங்கீதாவும் ஏற்கெனவே 1998-வது வருடம் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா' என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்துக்காக சங்கீதாவுக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது கிடைத்தது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார். தமிழிலும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறார்.

 

அரண்மனை கதை காப்பி.. ரூ 50 லட்சம் மோசடி செய்ததாக சுந்தர் சி மீது தயாரிப்பாளர் புகார்

சென்னை: ரஜினிகாந்த் நடித்த படமான ஆயிரம் ஜென்மங்கள் கதையைக் காப்பியடித்து அரண்மனை படத்தை எடுத்த சுந்தர் சி, அந்த கதையின் உரிமைக்காகத் தருவதாகக் கூறிய ரூ 50 லட்சத்தைத் தராமல் மோசடி செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் தயாரிப்பாளர் முத்துராமன்.

ரஜினிகாந்த், லதா நடித்து நீண்ட ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஆயிரம் ஜென்மங்கள். அன்றைக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

அரண்மனை கதை காப்பி.. ரூ 50 லட்சம் மோசடி செய்ததாக சுந்தர் சி மீது தயாரிப்பாளர் புகார்

பேய் பிடித்த தங்கையையும் அவள் கணவனையும் ஒரு அண்ணன் காப்பாற்றும் கதை இது.

அரண்மனை படமும் பெருமளவு இதே போன்ற கதைதான். ஆனால் எடுத்த விதம், காட்சி அமைப்புகள் சற்றே வித்தியாசப்பட்டிருந்தன.

படம் வெளி வருவதற்கு முன்பே, ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையை மூலமாக வைத்துதான் அரண்மனை படம் உருவாக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.

இப்போது படம் வெளியாகி சில மாதங்கள் கடந்த நிலையில், ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளரான முத்துராமன் என்பவர் சுந்தர் சி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், அரண்மனை படத்தின் கதைக்காக தனக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு தருவதாகவும், படத்தின் தெலுங்கு மற்றும் கன்னடப் பட உரிமையிலும் தனக்கான பங்கை தருவதாகவும் உறுதியளித்த சுந்தர் சி, இதுவரை எதுவுமே தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஆயிரம் ஜென்மங்கள் கதையை தெலுங்கு மற்றும் இந்தியில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த தன்னை, அப்படிச் செய்ய விடாமல் தடுத்து ரூ 50 லட்சமம தருவதாக சுந்தர் சி வாக்குத் தந்ததாகவும், இப்போது வாக்கை மீறிவிட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

ட்விட்டரில் டிரெண்டாகும் என்னை அறிந்தால் டீஸர்

சென்னை: அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் டீஸர் ஹேஷ்டேக் ட்விட்டர் இந்தியாவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டீஸரை பார்த்த பலரும் அது சூப்பராக உள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் டிரெண்டாகும் என்னை அறிந்தால் டீஸர்

டீஸரில் அஜீத் மூன்று விதமான கெட்டப்புகளில் அமைதியாக, அழுத்தமாக அதே சமயம் கெத்தாக வந்துள்ளார். படத்தின் இசை வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் தேசிய அளவில் கிரிக்கெட் சேப்டி முதல் இடத்தில் டிரெண்டாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் #YennaiArindhaalTeaserStormOnDec4 டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் மூன்றாவது இடத்தில் #VIJAY_22YearsOfGloriousJourney என்பது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜேம்ஸ்பாண்ட் 24... இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்!

ஆக்ஷன் பட ரசிகர்களின் ஆதர்ச நாயகன் ஜேம்ஸ் பாண்ட்டின் 24 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.

உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களைக் கொண்ட பாத்திரம் ஜேம்ஸ்பாண்ட். ரோஜர் மூர், சீன் கானரி, பியர்ஸ் பிராஸ்னன் என பல புகழ்பெற்ற நடிகர்கள் ஜேம்ஸ் பாண்டாக வந்து மக்களின் மனங்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் 24... இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்!

இப்போது அந்த 'வேலையை'ச் செய்வர் டேனியல் க்ரெய்க். இதுவரை அவர் நடித்து மூன்று படங்கள் (கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலேஸ், ஸ்கைபால்) ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளியாகியுள்ளன.

ஸ்கைபால் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாண்டு இடைவெளியில் வெளியாக வேண்டிய அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தது சோனி நிறுவனம்.

ஹீரோ அதே டேனியல் க்ரெய்க். மற்றபடி படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியாமல் இருந்தது.

இன்று இந்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக சோனி அறிவித்துள்ளது. ஜேம்ஸ்பாண்ட் வலைத் தளத்தின் இந்த அறிவிப்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதாகம் அறிவித்துள்ளது சோனி நிறுவனம்.

 

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.. மீண்டும் மிரட்ட வரும் அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர்

அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர் மற்றும் டெர்மினேட்டர்... சர்வதேச அளவில் மொழிகளைக் கடந்து அதிக அளவில் ரசிக்கப்பட்ட நாயகன் மற்றும் திரைப்படம் இது என்றால் மிகையல்ல.

டெர்மினேட்டரில் டி 500 மற்றும் ஜட்ஜ்மென்ட் டேயல் டி 550 ரோபாவாக வந்து ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக அமர்ந்த அர்னால்ட், பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே ரோபோவாக வருகிறார். இந்த முறை அதி சக்தி பெற்ற டி 1000 ரோபாவாக!

ஆலன் டெய்லர் இயக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் முதல் டீசர் நேற்று வெளியானது. இன்னும் 15 மணி நேரத்தில் படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகவிருக்கிறது.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.. மீண்டும் மிரட்ட வரும் அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர்

இந்தப் படத்தில் அர்னால்டுடன் எமிலா க்ளார்க் (சாரா கன்னோர்), ஜாசன் க்ளார்க் (ஜான் கன்னோர்), ஜெய் கர்ட்னி ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

வரும் ஜூலை 2015-ல் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம்.

டெர்மினேட்டர் வரிசையில் இதுவரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் மூன்றில் அர்னால்ட் நாயகனாக நடித்துள்ளார். முதல் இரு டெர்மினேட்டர்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார்.

 

காவியத் தலைவன் வசந்த பாலனுக்கு... ஒரு மனம் திறந்த மடல்!

-தேனி கண்ணன்

மரியாதைக்குரிய இயக்குனர் வஸந்த பாலன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் திரையுலகில் தங்குக்கென்று தனிப்பதை வகுத்து செல்லும் தங்களின் படைப்புகள் போற்றத்தக்கவை. அந்த வகையில் தமிழில் சினிமாவிற்குக்கிடைத்த முக்கியமான படைப்பாளிகள் ஒருவர் நீங்கள். தற்போதும் வெளி வந்திருக்கும் தங்களின் ‘காவியத்தலைவன்' படம் பார்த்தேன். அதில் அசாத்தியமான தங்களின் உழைப்பும், மெனக்கெடலும் பிரமிக்க வைத்தன. நிச்சயம் இந்த படத்திற்கு ஏதாவது ஒரு விருது உங்களுக்குக் கிடைக்கும். அதற்கு என்னுடைய முன் வாழ்த்துகள்.

காவியத் தலைவன் வசந்த பாலனுக்கு... ஒரு மனம் திறந்த மடல்!

நிற்க... ஒரு சராசரி ரசிகனாக எனக்குள் பல கேள்விகள் எழுந்து தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. இப்படி ஒரு காதல் கதையை சொல்வதர்கு எதற்காக இந்த நாடக உலக பின்னனியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் சாரமற்ற, கொஞ்சமும் நேர்மையற்ற காட்சிகளுடன் ஏன் இதைக் காட்ட வேண்டும். இந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முதலில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா பாகவதர் இரண்டு பேரின் காதல் கதையை எடுக்கப்போவதாக சொன்னீர்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் சுந்தரம்பாள் என்பதற்கு பதில் வடிவாம்பாள் என்றும் கிட்டப்பா பாகவதர் என்பதற்கு பதில் காளியப்பா பாகவதர் என்று மாற்றி வைத்திருக்கிறீர்கள்.. ஏன் இந்த மாறுவேடம்.? இப்படி எதற்கும் ஒப்பாத படத்தை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் கேஎ.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை வரலாற்றையே எடுத்திருந்தால் இந்த தமிழ்ச் சமூகம் உங்களைக் காலம் உள்ளவரை நினைவில் வைத்திருந்திருக்கும்.

வெறும் காதல் மட்டுமா சுந்தரம்பாளின் வாழ்க்கை... தங்களுக்கு தெரிந்திருந்தாலும் ஒரே ஒரு சம்பவம் சொல்கிறேன். சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம் காந்தியார் மதாரஸ் வந்திருந்தார். ஹிந்தி பிரச்சார சபாவில் அவர் தங்கியிருந்தபோது தீரர் சத்தியமூர்த்தியோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது மதாராஸில் சுதந்திரப் போராட்டத்தை தீவிரமாக்குவது பற்றி பேச்சு எழுந்திருக்கிறது. சத்தியமூர்த்தி சுந்தராம்பாளின் பாட்டுத் திறனும் அவருக்கு தமிழகத்தில் இருக்கும் செல்வாக்கையும் காந்தியாரிடம் எடுத்துச்சொல்லி அவர் தீவிரமாக சுதேசி பாடல்களை பாடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை கேள்விபட்ட காந்தியார் கொடுமுடியிலுள்ள கே.பி.எஸ். வீட்டிற்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார். சுந்தராம்பாள் காந்தியாருக்கு தங்கத் தட்டில் உணவிட்டு, வெள்ளித் தம்ளரில் தண்ணீர் கொடுத்ததும், பின்னர் அந்த தட்டையும் தம்ளரையும் காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்துக்கே அன்பளிப்பாகத் தந்ததும் வரலாறு. இப்படி கே.பி.எஸ் வாழ்க்கையில் சினிமாவை மிஞ்சும் நிஜம் நெஞ்சைத் தொடும்..

‘ஒருவேளை அதில் வரும் வடிவாம்பாள் கதாபாத்திரம், தானே தேடிச்சென்று எனக்கு பிள்ளை வேண்டும்' என்று கேட்கும் அந்த கட்டம் உங்களுக்குப் பிடித்துப்போனதால் பிடிவாதமாக இந்தப் படத்தை எடுத்தீர்களோ என்னவோ? ,நாங்கள் அவர்களை மனதில் வைத்து எடுக்கவில்லை என்று நீங்கள் இனி சொல்லக்கூடும். அதுதானே கோடம்பாக்கத்தில் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று நாடகக் கால வாழ்க்கை என்பதால் பின்னனி இசையை வித்தியாசமாக இருக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் என்னைப் போல பலர் படம் பார்க்க வந்திருந்தார்கள்.

யாருடைய கதையும் இல்லாமல் இதை வெறும் படமாக வைத்துக்கொண்டால் கூட படத்திற்கு உயிரோட்டமாக இருக்க வேண்டிய இசை தன் பணியைச் சரியாக செய்ததா? பின்னனி இசையிலோ பாடல்களிலோ எங்காவது நாடக சாயலைக் கேட்க முடிந்ததா? ஆர்மோனிய இசை இல்லாத அந்தக் கால நாடகமா? இது போன்ற படங்களுக்கு இதயத்திலிருந்து இசையமைத்திருக்க வேண்டும். ஈ மெயிலில் இசையமைத்தால் இப்படித்தான் இருக்கும். இப்படி ஒரு படத்திற்கு இசை என்றவுடன் கொஞ்சமாவது அந்த கால நாடக உலகை நன்கு அறிந்தவர்களை நினைவு வைத்திருக்கலாமே.. ஏன் அப்படி யாரும் கிடைக்கவில்லையா. சாந்தோம் சாலை பக்கம் போய் பாருங்கள் தமிழ் சினிமாவை தன் விரல்களால் ஆட்டுவித்த எம்எஸ்வி என்ற அந்த கிழட்டு சிங்கம் இப்போதும் ஆர்மோனியமும் கையுமாக உற்சாகத்தோடு உட்கார்ந்திருக்கிறது.

என் ராசாவின் மனசிலே என்றொரு கிராமியப் படம். அதில் பாரிஜாதப் பூவே என்ற பாடலை அப்படியே பாகவதர் காலத்து பாணியில் போட்டு மனதை மக்கிய இசைஞானி இருக்கும் பிரசாத் ஸ்டுடியோ பக்கம் போயிருக்கலாமே.. அவதாரம் படத்தின் காட்சியைப் பிரதியெடுத்த உங்களால், அந்த அவதாரத்துக்கு உயிர்தந்த இளையராஜா நினைவுக்கு வரவில்லையா...

அவ்வளவு ஏன்.. யார் மாதிரி மியூசிக் பண்ணனும் ராஜா சார் மாதிரியா இல்ல ரகுமான் மாதிரியா என்று கேட்டு கேட்டு இசையமைத்து தந்த தேவா கூட இந்த நாடகக் கதைக்கு உயிரோட்டமாய் இசை தந்திருப்பாரே!

இந்த நேரத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வேண்டுகோள். உங்கள் உயரம் வேறு. ஆனால் இது மாதிரியான படைப்புகள் உங்களிடம் வரும்போது முழுக் கவனத்தைச் செலுத்தி இசையமைக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதிலிருந்து விலகி இருப்பதே அந்த படைப்பிற்கு நீங்கள் செய்யும் மரியாதை. அதை விடுத்து நான் லண்டனில் இருக்கிறேன், இங்கிருந்தே இசையமைக்கிறேன் என்பது தொழிலுக்குச் செய்யும் துரோகம். தொழிலுக்கு மட்டுமல்ல எஸ்.எம் சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்ற ஜாம்பவான்களுக்கு நீங்கள் செய்யும் அவமரியாதையாகவே இருக்கும்.

வசந்த பாலன் அவர்களே, இது உங்கள் மீதான வசை மாறி என வழக்கம்போல தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கம்... எப்படி வந்திருக்க வேண்டிய படைப்பு இப்படி வந்துவிட்டதே என்ற ஆதங்கம். அவ்வளவுதான்!

 

கோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன்; அந்தப் பக்கம் போயிட்டேன்னா... ரொம்ப கெட்டவன்! - அஜீத்

மேலே நீங்கள் படித்ததுதான் என்னை அறிந்தால் படத்தின் டீசரில் இடம்பெற்றிருக்கும் அஜீத்தின் பஞ்ச் வசனம்.

அஜீத் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க, கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படத்தின் டீசர் வழக்கம்போல நேற்று நள்ளிரவு வெளியானது.

கோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன்; அந்தப் பக்கம் போயிட்டேன்னா... ரொம்ப கெட்டவன்! - அஜீத்

வெளியான வேகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த டீசரில், அஜீத் பேசும் முத்திரை வசனம் அனைவரையும் கவர்வதாக உள்ளது.

"ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்தப் பக்கமா அந்தப் பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சி வாழ்க்கைல ஒரு நாள்... "

-இதுதான் டீசரில் அஜீத் பேசும் வசனம்.

படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்படுகிறது. அதன் பிறகே தியேட்டர்கள் விவரம் இறுதி செய்யப்படும்.

 

அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை! - கேஎஸ் ரவிக்குமார்

சென்னை: அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை.. என்றைக்கும் அப்படி இருந்ததும் இல்லை, என்று இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறியிருந்தார்.

அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை! - கேஎஸ் ரவிக்குமார்

அந்தப் பேட்டியின் ஒரு பகுதி:

கேள்வி: '' 'பாட்ஷா' வெற்றி விழா நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்த சூழ்நிலையில் 'முத்து' படம் இயக்கினீர்கள். அந்தப் படத்தில் அரசியல் டச் வசனங்கள் இருந்தன. இப்போ 'லிங்கா' வெளியாகும் சமயம் திரும்பவும் ரஜினியைச் சுற்றி அரசியல் சர்ச்சை. இது திட்டமிட்ட பப்ளிசிட்டினு ஒரு பேச்சு ஓடுதே...''

கேஎஸ்ஆர்: ''நம்மாளுங்க எதையும் தப்பான ஆங்கிள்லதான் பார்ப்பாங்களா? 'சிவாஜி', 'எந்திரன்' படங்கள் வெளியானப்போ ரஜினி சார் பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே! அந்த ரெண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே. தன் பட ரிலீஸுக்கு முன்னாடி அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி சார் என்னைக்கும் இருந்தது இல்லை. 'என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை'னு அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல?!''

கேள்வி: '' 'லிங்கா' இசை வெளியீட்டு விழா திடீர்னு அரசியல் மேடை ஆனது ஏன்?''

கேஎஸ்ஆர்: ''முதல்ல 'லிங்கா' படத்தைப் பத்தி மட்டும்தான் எல்லாரும் பேசினாங்க. அமீர் பேச்சுதான் அரசியல் பக்கம் எல்லாரையும் திருப்பிருச்சு. ஆனா, ரஜினி சார் அப்பவும் அரசியல் பத்தி எதுவுமே பேசலையே. 'அரசியல் எனக்கும் தெரியும்'னு மட்டும்தான் சொன்னார். 'அரசியலில் இறங்கப்போறேன்'னு எந்த உத்தரவாதமும் கொடுக்கலை!''

கேள்வி: ''அரசியல் ஆர்வம் இல்லைன்னா, இமயமலைக்குப் போவாரா?''

கேஎஸ்ஆர்: ''இல்லை. இனிமேல் ரஜினி சார் இமயமலைக்குப் போக மாட்டார். அப்படியே ஏதோ ஒரு மாற்றம் விரும்பி போனாலும், ஒரு சுற்றுலாப் பயணியாகத்தான் போவாரே தவிர, சாமியார் மனநிலையில போக மாட்டார்!''