பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தவறான இருப்பிட முகவரியைத் தந்த 'ஜோசப்' விஜய்!

சென்னை: சேவை வரி விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், தன் இருப்பிட முகவரியைத் தவறாகத் தந்துள்ளார் விஜய்.

அந்த முகவரியில் இப்போது வசிப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஆகும்.

சேவை வரி விலக்கு அளித்து சினிமாவைக் காப்பாற்றுங்கள் என்று சில தினங்களுக்கு முன் நடிகர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தவறான இருப்பிட முகவரியைத் தந்த 'ஜோசப்' விஜய்!

இந்த இரு பக்க கடிதத்தில் அவருடை முகவரி என குறிப்பிடப்பட்டிருப்பது, '86/86 ஸ்டேட் பேங்க் காலணி, மூன்றாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை - 92' என உள்ளது.

ஆனால் இந்த வீட்டில் விஜய் இப்போது வசிக்கவில்லை. வீடு அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்குச் சொந்தமானது என்றாலும், இப்போது அவர்கள் யாரும் அந்த வீட்டில் வசிக்கவில்லை. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு அந்த வீட்டை விட்டுவிட்டார்கள். அவருடைய ஸ்டுடியோ கம் வீடாக இப்போது இருந்து வருகிறது.

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தவறான இருப்பிட முகவரியைத் தந்த 'ஜோசப்' விஜய்!

சச்சின் படம் வெளியாவதற்கு முன்பே நீலாங்கரையில் கட்டியுள்ள புதிய வீட்டில்தான் விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது இரு திருமண மண்டபங்கள்தான் அவரது ரசிகர் மன்ற அலுவலகம் செயல்படும் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தன் இருப்பிடத்தை மாற்றிவிட்ட ஜோசப் விஜய், பிரதமர் என்ற மிக உயர் பொறுப்பில் உள்ளவருக்கு எழுதிய கடிதத்தில் தவறான முகவரி இருப்பதைக் கூட கவனிக்கவில்லையா!

 

நிலமோசடி: நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு!

திண்டுக்கல்: நிலமோசடி செய்ததாக நடிகர் வாகை சந்திரசேகர் அவரது மனைவி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு பகுதியில் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சிவசங்கரன் மனைவி கவுசல்யா. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

நிலமோசடி: நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு!

எனது தந்தை குமரவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 15 சென்ட் நிலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மாலையகவுண்டன்பட்டியில் இருந்தது. இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் 18 சென்ட் நிலத்தை ஆர்ஜிதம் செய்தது போக மீதி இருந்த 2 ஏக்கர் 97 சென்ட் நிலத்தை 31.8.2012-ந் தேதி எனது தந்தை குமரவேல் எனக்கும் எனது சகோதரிகள் வித்யா, ரம்யா ஆகிய 3 பேருக்கும் தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தார். இதற்கு பட்டாவும் உள்ளது.

இதில் 38 சென்ட் நிலத்தை கோவை சரவணம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி கவுடர் சுப்பம்மாள், மாலைய கவுண்டன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மனைவி பாப்பம்மாள், மகன் சரவணன், ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கடந்த 11.3.2010-ந் தேதி நிலக் கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் பேரில் எழுதிக்கொண்டனர்.

இந்த இடத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பகுதியை சேர்ந்த ராஜம்பாடி மகன் பகீரதன், இவரது மனைவி சங்கீதா மேனன், பரசுஅரசன், பள்ளப்பட்டி சின்னச்சாமி, அம்மையநாயக்கனூர் துரைராஜ், நடிகரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான வாகை சந்திரசேகர், இவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்த கந்தப்பகோடையை சேர்ந்த முருகபாண்டி என்பவரது துணையுடன் நடிகர் சந்திரசேகரின் மனைவியான ஜெகதீஸ்வரியின் தங்கை மகன் பகீரதன் பெயரில் எழுதிக்கொண்டனர்.

இது குறித்த விவரம் எனது தந்தைக்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார். நியாயம் கேட்க சென்றபோது 1997-ம் ஆண்டு அரசு நிலத்தை கைப்பற்றியவர்களுக்கே அது கிடைக்கவில்லை. நீ இது குறித்து புகார் செய்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார்.

எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் நடிகர் சந்திரசேகர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்னர்.

 

'இனியா வீட்டில் திருடியது நான்தான்'... சரணடைந்தார் மாப்பிள்ளை ஷாபினின் நண்பன்!

திருவனந்தபுரம்: நடிகை இனியா வீட்டில் திருடியது தானே என்று ஒப்புக் கொண்டு ராஜன் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார்.

தமிழில் பிரபல நடிகையாக உள்ளவர் இனியா. இவரது சகோதரி சுவாதிக்கும் திருவனந்தபுரம் பாற்றூரைச் சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

'இனியா வீட்டில் திருடியது நான்தான்'...  சரணடைந்தார் மாப்பிள்ளை ஷாபினின் நண்பன்!

இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு இனியா வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதனை சுவாதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஷாபினும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொள்ளை அடித்ததாகக் கூறப்பட்டது.

இதுபற்றி திருவனந்தபுரம் கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகன் ஷாபினையும், அவரது கூட்டாளி ஷஜி என்பவரையும் கைது செய்தனர். இன்னொரு நண்பனான ராஜன் என்பவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜன், நேற்று திருவனந்தபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த தகவல் கரமனை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராஜன் என்பவர் ஷாபினின் நண்பன். இவர்கள் நால்வரும் சேர்ந்துதான் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை நடத்தியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இப்போது தான் மட்டும் திருடியதாக ராஜன் கூறியுள்ளார்.

சுவாதி - ஷாபின் திருமணம் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதாங்க கத்தி 'முதல் தோற்றம்'.. விஜய் பிறந்த நாளையொட்டி இன்று வெளியானது!

சென்னை: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படமான கத்தியின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் தோற்ற போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.

நாளை ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதாலேயே இன்று மாலையே இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இதாங்க கத்தி 'முதல் தோற்றம்'.. விஜய் பிறந்த நாளையொட்டி இன்று வெளியானது!

விஜய், சமந்தா நடிக்க, லைக்கா புரொடக்ஷன்ஸும் ஐங்கரனும் இணைந்து தயாரிக்கும் படம் கத்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடக்கின்றன.

இதாங்க கத்தி 'முதல் தோற்றம்'.. விஜய் பிறந்த நாளையொட்டி இன்று வெளியானது!

இந்த நிலையில் நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஜய்யைச் சிறப்பிக்கும் வகையில், இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர், முன்னோட்டக் காட்சிகளை இன்று மாலை வெளியிட்டனர். இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பே, வெளியூர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன.

வரும் தீபாவளிக்கு வெளியாகிறது கத்தி!

 

குயின் படத்தை நான்கு மொழிகளில் ரீமேக் செய்யும் தியாகராஜன்.. பிறந்த நாளில் அறிவிப்பு!

இந்தியில் வெளியான குயின் என்ற படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ள நடிகர் - தயாரிப்பாளர் - இயக்குநர் தியாகராஜன், அதனை நான்கு மொழிகளில் தயாரிக்கிறார்.

அலைகள் ஓய்வதில்லையில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன், அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பூவுக்குள் பூகம்பம், சேலம் விஷ்ணு, ஷாக், பொன்னர் சங்கர், மம்மபட்டியான் போன்ற படங்களை இயக்கித் தயாரித்தார். மேலும் பல படங்களைத் தயாரித்துள்ளார்.

குயின் படத்தை நான்கு மொழிகளில் ரீமேக் செய்யும் தியாகராஜன்.. பிறந்த நாளில் அறிவிப்பு!

அவருக்கு இன்று பிறந்த நாள். தி நகரில் உள்ள பிரசாந்த் கோல்ட் டவர்ஸில் பிறந்த நாளைக் கொண்டாடிய தியாகராஜன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், "இந்தியில் வெளியான குயின் வெற்றிப் படத்தின் தென் மொழிகளுக்கான உரிமையை நான் பெற்றுள்ளேன்.

கதாநாயகியை முன்னிலைப்படுத்தி வெற்றிப் பெற்ற படம் இது. இந்த படத்தை தமிழில் ரீமெக் செய்தால் அதில் நடிக்கலாம் என்று பல முன்னணி நடிகைகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குயின் படத்தை ரீமேக் செய்கிறேன். குயின் படத்தின் மையக் கருத்து பெண்களுக்கு முன்னோடியாக, உதாரணமாக இருக்கும் என்பதாலும் பல இன்னல்களில் சிக்கி தவிக்கும் அப்பாவி பெண்கள் துயரத்தில் இருந்து தங்களை மீட்டு வாழ்க்கையில் இடற்பாடுகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து இதில் சொல்ல முடியும் என்பதாலும் இந்தப் படத்தை நானே தயாரிக்க முன்வந்தேன்.

இப்படத்தை தமிழில் ராணி என்ற பெயரில் தயாரிக்கிறேன். இப்படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் தேர்வாகவில்லை. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். குயின் படத்தில் நடித்த கங்கனா ரணவத் வேடத்தில் நடிக்க தேர்வாகும் நடிகைக்கு ராணி பட்டம் சூட்டப்பட்டு ஒரு விழா நடைபெறும்.

இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளேன். இயக்குநர் பெயரும் விரைவில் அறிவிக்கப்படும்," என்றார்.

 

நடிகை அனுஷ்காவின் உடற்பயிற்சி வீடியோக்கள் இணையதளத்தில் வெளியீடு!

சென்னை: யோகாவில் கைதேர்ந்தவரான நடிகை அனுஷ்காவின் உடற்பயிற்சி வீடியோவானது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அருந்ததி படத்தில் ராணி வேடத்தில் கலக்கிய அனுஷ்காவிற்கு தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

நடிகை அனுஷ்காவின் உடற்பயிற்சி வீடியோக்கள் இணையதளத்தில் வெளியீடு!

அப்படி அவர் தற்போது நடித்து வரும் படங்கள்தான் ராணி ருத்தரம்மா தேவியும், பாகுபாலியும் ஆகும். இந்த படங்களில் நடிப்பதற்காக தீவிரமான வாள் சண்டை, குதிரையேற்றம், உடற்பயிற்சி எனப் பல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் அனுஷ்கா.

பாகுபாலி படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் அனுஷ்கா உட்பட அனைவரும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பது இயக்குனர் ராஜமவுலியின் கட்டளையாகும்.

அப்படி அவர் பல மாதங்களாக செய்து வந்த உடற்பயிற்சி வீடியோக்கள்தான் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிக்கலில் பெரிய தயாரிப்பு நிறுவனம்... 80 சி இருந்தாத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியுமாம்!

ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கும் போக்கை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளர் அவர். விருதின் பெயரில் அமைந்த அவரது பட நிறுவனம் இன்றைக்கும் 4 படங்களைத் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிரமாண்ட இயக்குநரின் படம், உலக நடிகர் படம் என கெத்துக்கு குறைவில்லை.

ஆனால் எந்தப் படத்தையும் வெளியிட முடியாத சூழல். காரணம் நிதிச் சிக்கல்தான்.

மே மாதமே வரவேண்டிய பிரமாண்ட படம், இன்னும் இரண்டு மாதங்களிலாவது வருமா என்றால், உதட்டைப் பிதுக்குகிறார்கள்.

போன ஜனவரிக்கே வந்துவிடும் என அறிவிக்கப்பட்ட உலக நடிகர் படமோ, வரும் ஜனவரியிலாவது வருமா என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மற்ற சின்னப் படங்களையாவது வெளியிடலாம் என்றால், உலக நடிகர் படத்துக்காக அட்வான்ஸ் கொடுத்த தியேட்டர்காரர்கள் வழிமறித்து நிற்கிறார்களாம்.

பேரு பெத்த பேரு, தாக நீலு லேது-ன்னு ஊர்ப்பக்கம் தமிழ் - தெலுங்கில் ஒரு வழக்குச் சொல்லிருக்கிறது. அப்படியாகிவிட்டதே நிலைமை!

 

அஜீத் ரூட்டில் ஜெய்... முதல் முறையாக கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்!

சென்னை: அஜீத்தைப் போலவே, நடிகர் ஜெய்யும் கார் பந்தயத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ள ஒரு தேசிய கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தேசிய கார் பந்தயப் போட்டியில் நான் பங்கேற்கிறேன்.

அஜீத் ரூட்டில் ஜெய்... முதல் முறையாக கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்!

இரண்டு சுற்றுகள் சென்னையிலும், பின்னர் கோவையிலும் நடைபெறும் இந்தப் பந்தயத்தின் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது. பார்முலா பந்தயத்தில் பங்கு பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த போட்டிதான் அடிப்படை.

நான் கடந்த ஏழு மாதங்களாக இந்தப் போட்டிக்காக பயிற்சி பெற்று வருகிறேன். இருந்தாலும் இப்போதும் பதட்டமாகத்தான் இருக்கிறது. முதல் ஐந்து இடத்திற்குள் நான் முடிக்கவேண்டும். அப்போதுதான் அடுத்த சுற்றுக்கு வரமுடியும்.

சிறு வயதிலிருந்தே கார் பந்தயத்தில் எனக்கு விருப்பம் அதிகம். அப்துல்லா என்ற வீரரைச் சந்தித்த பிறகே இதில் இறங்க முடிவு செய்தேன். என்னால் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் இரு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தம் நடிகர் அஜீத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு தைரியம் வந்தது.

அதன்பிறகுதான் ஞாயிற்றுக் கிழமைகளில் கார் பந்தயத்தில் நான் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனது இந்த ஆர்வத்திற்கு தடை போடாமல் தயாரிப்பாளர்களும் எனது கால்ஷீட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள்," என்றார்.

 

நடிகை பிரியங்காவை கன்னத்தில் அடித்து காயப்படுத்திய களஞ்சியம்... தந்தை புகார்!

சென்னை: நடிகை ப்ரியங்காவை ஓங்கி கன்னத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் களஞ்சியம். இதனால் நடிகையின் தந்தை ஆவேசப்பட்டு, போலீசில் புகார் தர யோசித்து வருகிறார்.

கங்காரு படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா, இப்போது கோடை மழை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்காவின் அண்ணன் வேடத்தில் இயக்குநர் களஞ்சியம் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது.

நடிகை பிரியங்காவை கன்னத்தில் அடித்து காயப்படுத்திய களஞ்சியம்...  தந்தை புகார்!

பிரியங்காவுக்கும் களஞ்சியத்துக்கும் வாக்கு வாதம் நடப்பது போலவும், அப்போது கோபமாகி பிரியங்கா கன்னத்தில் களஞ்சியம் அறைவது போலவும் ஒரு காட்சியை எடுத்தனர்.

இதில் களஞ்சியம் நிஜமாகவே கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாராம். இதனால் பிரியங்கா நிலை குலைந்து மயங்கி விழுந்தார். காது கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது.

உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்தக் காட்சிக்கான ஒத்திகையின்போதும் பலமாக அறைந்துள்ளார் களஞ்சியம்.

களஞ்சியம் மீது இதுவரை புகார் அளிக்கவில்லை பிரியங்காவின் தந்தை. இதுகுறித்து அவர் கூறுகையில், "களஞ்சியம் முதல் முறை அடித்தபோதே என் மகள் பிரியங்காவுக்கு கன்னத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை அவரிடம் குறிப்பிட்டுச் சொன்ன பிறகும், வேண்டும் என்றே ஓங்கி அறைந்துள்ளார். காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ அறிக்கையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. களஞ்சியத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். புகார் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்றார்.

 

சொதப்பல்களைச் சுவாரஸ்ய டீசராக்கிய ஐஸ்வர்யா தனுஷ்!

வை ராஜா வை படத்தின் ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்துவிட்டார் ஐஸ்வர்யா தனுஷ். கிட்டத்தட்ட 9 மாதங்கள் நடந்திருக்கிறது படப்பிடிப்பு.

பட்ஜெட் மீறாமல், தயாரிப்பாளருக்கு சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் மகள். இத்தனைக்கும் சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் என நாடு கடந்து ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்.

சொதப்பல்களைச் சுவாரஸ்ய டீசராக்கிய ஐஸ்வர்யா தனுஷ்!

எடுத்த காட்சிகளை எடிட் செய்யும்போது, பல காட்சிகளில் நடிகர்கள் சொதப்பியிருப்பதையும் சேர்த்தே படமாக்கியதும் தெரிந்ததாம்.

சட்டென்று ஒரு யோசனை வந்தது ஐஸ்வர்யாவுக்கு. எந்தெந்த காட்சிகளில், நடனத்தில், ஆக்ஷனில் நடிகர்கள் சொதப்பியிருந்தார்களோ.. அவற்றையெல்லாம் எடிட் செய்து தொகுத்து தனி வீடியோவாக்கிப் பார்த்தாராம்.

அதையே படத்துக்கான ஒரு நிமிட டீசராக மாற்றி, வெளியிட செம ஹிட்!

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், சதீஷ் இடம்பெறும் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் ஏக வரவேற்பு.

அட, சொதப்பல் காட்சிகளைக் கத்தரித்து எறிந்துவிடாமல், படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்திய ஐஸ்வர்யாவின் திறமையை தயாரிப்பாளர் மெச்சிக் கொண்டிருக்கிறாராம்!

 

சந்தானம் படத்தின் இசையை வெளியிடும் கமல் ஹாஸன்!

சென்னை: சந்தானம் நடித்துள்ள வாலிப ராஜா படத்தின் இசையை வெளியிடுகிறார் நடிகர் கமல் ஹாஸன்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துக்குப் பிறகு, அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘வாலிப ராஜா'.

சந்தானம் படத்தின் இசையை வெளியிடும் கமல் ஹாஸன்!

இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற படநிறுவனம் தயாரிக்கிறது. லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரதன் இசையமைத்திருக்கிறார்.

முழுநீள காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இப்படத்தின் இசையை ஜூன் 25-ம் தேதி வெளியிடுகின்றனர். இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு முதல் இசைத் தட்டை வெளியிடுகிறார்.

 

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா!

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் அவரது தீவிர பக்தரான இசைஞானி இளையராஜா.

மதுரை மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதிலேயே பக்தி நிலையை அடைந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட அவர், தன் இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்தார்.

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா!

இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக குருவாகப் போற்றப்படும் ரமணரின், ஆசிரமம் திருவண்ணாமலையில் உள்ளது. இசைஞானி இளையராஜா இந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

ரமணரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. தமிழில் வெளியாகும் இந்தப் புத்தகம், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ரமண மாலை, குரு ரமண கீதம் என இரு ஆல்பங்களை ரமண மகரிஷிக்காக இளையராஜா உருவாக்கியுள்ளது நினைவிருக்கலாம்.