டோக்யோ: சிவாஜி 3டி படத்தின் சிறப்புக் காட்சிக்காக டோக்யோ சென்ற அப்படத்தின் நாயகி ஸ்ரேயாவுக்கு ஜப்பான் ரஜினி ரசிகர்கள் மிக உற்சாகமான வரவேற்பளித்தனர்.
ரஜினி - ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘சிவாஜி' படம் 2007-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பெரும் லாபம் ஈட்டியது. உலகளாவிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவுக்குப் பெற்றுத் தந்தது.
‘சிவாஜி' படத்தை தற்போது ரூ 17 கோடி செலவில் ‘3டி'யில் உருவாக்கியுள்ளனர். . ‘3டி' டிரெய்லரை சமீபத்தில் சென்னையில் ரிலீஸ் செய்தனர். இதில் ரஜினி பங்கேற்று பாராட்டினார்.
ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ரசிகர் மன்றங்களும் உள்ளன. ரஜினியின் சமீபத்தில் படங்கள் அனைத்துமே ஜப்பானில் திரையிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் அங்கு வெளியான ரஜினியின் எந்திரனை ஜப்பானே கொண்டாடியது.
எனவே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘சிவாஜி 3டி'யின் சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடு செய்திருந்தது ஏவிஎம்.
படத்தைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கென சென்னையிலிருந்து நடிகை ஸ்ரேயாவும் டோக்கியோ சென்றிருந்தார்.
அங்கு ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து ஜப்பான் பாரம்பரியபடி கை ரிக்ஷாவில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அழைத்து சென்றனர்.
ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ரேயாவை பேட்டி கண்டன.
ஸ்ரேயா கூறுகையில், "டோக்கியோ அழகான நகரம். இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள். ரஜினி சார் மீது அவர்கள் வைத்துள்ள அன்பும் மரியாதையும் வியக்க வைக்கிறது.
‘சிவாஜி'யில் தமிழ்செல்வி கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்த ரஜினி சாருக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ரஜினி மற்றும் ஷங்கருடன் பணிபுரிந்தது என் அதிர்ஷ்டம்," என்றார்.