தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தைகளை கேட்டு வாங்கும் இமான் அண்ணாச்சி தன்னுடைய சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிக்காக கென்யாவிற்கு சென்று புது கெட்டப்பில் கலக்கினார்.
இந்த வாரம் சன்டிவியில் ஞாயிறன்று காலை கென்யாவில் உள்ள தமிழர்களை வைத்து அவர்களின் தமிழறிவை சோதித்தார் இமான்.
முதலில் திருக்குறள் கேட்ட அவர் அதன் விளக்கத்தையும் கேட்டார். ஒரு தமிழர்,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
என்று குறள் சொன்ன அவர், அதற்கு சொன்ன விளக்கம்தான் அதிரவைத்தது.
அதாவது எவ்வளவு பெரிய மாமியாரா இருந்தாலும் கடைசியில மருமகளுக்கு அடங்கித்தான் போகணும் என்றார். இதை அவர் தெரிந்து சொன்னாரா, இல்லை காமெடிக்காக சொன்னாரா? இமான் அண்ணாச்சிக்குத்தான் வெளிச்சம்.
அதற்குப்பிறகு அவர் சந்தித்த இரண்டு பேரும் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தை மட்டும் தவறாக சொன்னார்கள். கடைசியில் ஒருவர் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தையும் சரியாக சொன்னார்.
அதெல்லாம் சரி அண்ணாச்சியின் சன் டிவி புகழ் படவாய்ப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறதாமே. தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படங்களில் இவருக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 50 ஆயிரமாம். இது தற்போதைய சம்பளம் தான் படம் ஹிட்டாகிவிட்டால் ஆயிரங்களை லட்சமாக்க முடிவு செய்திருக்கிறாராம்.
ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர் அண்ணாச்சி, எவ்ளோ வரி கட்டணும்.. சரியான பதில் சொல்வாரா? இமான் அண்ணாச்சி?