டன்டனக்கா விவகாரம்.... ஜெயம் ரவி படத்துக்கு எதிராக டி ராஜேந்தர் வழக்கு

டன்னடனக்கா பாடல் தன்னை இழிவுபடுத்துவதாகக் கூறி ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் இயக்குநர் - நடிகர் டி ராஜேந்தர்.

ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்'. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டண்டனக்கா' என துவங்கும் பாடல் பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

‘டண்டனக்கா' என்ற வாரித்தை டி.ராஜேந்தர் தன் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அது இப்போதைய காமெடியன்களான சந்தானம் போன்றவர்கள் தங்கள் படங்களில் தமாஷாகப் பயன்படுத்தி வந்தனர்.

டன்டனக்கா விவகாரம்.... ஜெயம் ரவி படத்துக்கு எதிராக டி ராஜேந்தர் வழக்கு

இந்த வார்த்தையைப் பயன்படுத்தித்தான் ரோமியே ஜூலியட்டில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அதனை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தப் பாடல் குறித்த சர்ச்சை வெளியானதுமே, ‘டண்டனக்கா' பாடலில் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தவில்லை என்று ஜெயம்ரவி மறுத்தார்.

இந்த நிலையில் ‘டண்டனக்கா' பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ‘ரோமியோ ஜுலியட்' தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் லஷ்மன், இமான், அனிருத் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ராஜேந்தரிடம் கேட்டபோது, "டண்டனக்கா பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி எனது வக்கீலிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன'' என்றார்.

இந்தப் படம் மற்றும் பாடலை ராஜேந்தருக்கு போட்டுக் காட்டத் தயாராக உள்ளதாகவும், அவர் ஆட்சேபித்தால் காட்சிகளை நீக்குவதாகவும் ரோமியோ ஜூலியட் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

 

சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’!

குற்றம் கடிதல் படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’!

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்' திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்று வருகிறது.

சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’!

இன்னமும் திரைக்கு வராசத இந்தப் படம், 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்' திரைடப்படதிற்கு இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது வெல்லும் பெருமையை பெற்றுள்ளது. ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம்.

சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’!

இதுகுறித்து ஜே சதீஷ்குமார் கூறுகையில், "தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு தேசிய விருது கிடைத்திருக்கிறது மிகப் பெருமிதமான தருணம் இது. நல்ல படங்கள் அதற்கான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந் நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க ஊக்கப் படுத்துகிறது," என்றார்.

 

ரூ 62 கோடி கடன் பாக்கி... சொந்த ஸ்டியோவுக்குள் நுழைய நாகார்ஜுனாவுக்கு தடை!

ஹைதராபாத்: ரூ 62 கோடி கடன் பாக்கிக்காக நடிகர் நாகார்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணை ஸ்டுடியோவை பறிமுதல் செய்துள்ளன வங்கிகள்.

இதைத் தொடர்ந்து அந்த ஸ்டுடியோவுக்குள் நுழைய நாகார்ஜூனா உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ 62 கோடி கடன் பாக்கி... சொந்த ஸ்டியோவுக்குள் நுழைய நாகார்ஜுனாவுக்கு தடை!

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜூனா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகி.

இவருக்கு சொந்தமான அன்னப்பூர்ணா ஸ்டூடியோ ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. இது 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஸ்டூடியோ பங்குதாரர்களாக நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் வெங்கட் அக்கினேனி, சுப்ரியா, சுரேந்திரா, நாகா சுசீலா, வெங்கட் ரோத்தம் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஸ்டூடியோ மீது ரூ 32.3 கோடியை ஆந்திரா வங்கியிலும், 29.7 கோடியை இந்தியன் வங்கியிலும் கடனாகப் பெற்றிருந்தார் நாகார்ஜூனா.

வங்கிகளின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகும் இந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் அன்னபூர்ணா ஸ்டூடியோ முழுவதையும் பறிமுதல் செய்ததாக அறிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழையவோ, வர்த்தக ரீதியில் செயல்படவோ, வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

 

மும்பையில் வீடு வாங்கிய தனுஷ்: ஜாகையை மாற்றுகிறாரா?

மும்பை: தனுஷ் மும்பை அந்தேரி பகுதியில் வீடு வாங்கியுள்ளார்.

ஆனந்த் எல் ராயின் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். அந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்த பாலிவுட் மற்றும் வட இந்திய ஊடகங்கள் அவரை புகழ்ந்து தள்ளியது. ரசிகர்களும் தங்களின் அன்பை தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் நடித்த ஷமிதாப் படமும் நல்ல வசூல் செய்துள்ளது.

மும்பையில் வீடு வாங்கிய தனுஷ்: ஜாகையை மாற்றுகிறாரா?

இந்நிலையில் தனுஷ் மும்பை அந்தேரி பகுதியில் ஆனந்த் எல் ராய் வசிக்கும் அதே கட்டிடத்தில் ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கியுள்ளாராம். தனுஷ் மும்பையில் வீடு வாங்கிவிட்டாரா, அப்படி என்றால் ஜாகையை மாற்றிவிடுவாரா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கும் ஆசை இருந்தாலும் கோலிவுட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று தனுஷே தெரிவித்துள்ளார். அதனால் அவர் ஜாகையை எல்லாம் மாற்ற மாட்டார். படப்பிடிப்புக்காக மும்பை செல்கையில் ஹோட்டலுக்கு பதில் வீட்டில் தங்கலாமே என்று நினைத்து வாங்கிப் போட்டிருப்பார்.

மேலும் நடிகர், நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வரும் வேளையில் தனுஷ் மும்பையில் வீடு வாங்கியது பெரிய விஷயம் அல்ல.

 

கன்னட நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் தேசிய விருது.. சிறந்த நடிகை கங்கனா ரனவத்

நானு அவனல்ல அவளு படத்தில் நடித்த கன்னட நடிகர் விஜய், குயீன் படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரனவத் ஆகியோருக்கு சிறந்த நடிகர் - நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கன்னட நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் தேசிய விருது.. சிறந்த நடிகை கங்கனா ரனவத்

தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம், சிறந்த இந்திப் படமாக கங்கனா ரனவத் நடித்த குயீன் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோர்ட்

62-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ‘கோர்ட்' படம் தேர்வாகியுள்ளது. இது மராத்திய மொழிப் படமாகும்.

கங்கனா

மேலும் சிறந்த நடிகையாக ‘குயின்' படத்தில் நடித்ததற்காக கங்கனா ரனவத் தேர்வாகியுள்ளார். ‘குயின்' படம் சிறந்த இந்தி திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

விஜய்

சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கன்னட நடிகர். நானு அவனல்ல அவளு படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு சைவம் படப் பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கும், அப்பாடலை பாடிய உத்ரா உண்ணி கிருஷ்ணன் சிறந்த பின்னணி பாடகியாகவும் தேர்வாகியுள்ளனர்.

தேசிய விருதுக்கு தேர்வான படங்கள் / கலைஞர்களின் முழு விவரம்:

சிறந்த படம் - கோர்ட் (மராத்தி)

சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (குயின்)

சிறந்த இந்தி படம் - குயின்

சிறந்த நடிகர் - கன்னட நடிகர் விஜய் (நானு அவனல்ல அவளு)

சிறந்த துணை நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த இயக்குனர் - ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டோஜ் கோனே - பெங்காலி)

சிறந்த பொழுதுபோக்கு படம் - மேரிகோம் (இந்தி)

சிறந்த இசையமைப்பாளர் - விஷால் பரத்வாஜ் (ஹைடர்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - கோபி சுந்தர் (1983-மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகர் - சுக்வீந்தர் சிங் (ஹைடர் - பிஸ்மில் பாடல் - இந்தி)

சிறந்த பின்னணி பாடகி - உத்ரா உண்ணி கிருஷ்ணன் (சைவம்-அழகே அழகு பாடல்)

சிறந்த சுற்றுச்சூழல்/பாதுகாப்பு படம் - ஓட்டல் (மலையாளம்)

சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் - குற்றம் கடிதல் (தமிழ்)

சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் (சைவம்)

சிறுவர்களுக்கான சிறந்த படம் - காக்கா முட்டை

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது - ஆஷா ஜோகர் மாஜே
(வங்காளம்)

சிறந்த அசாமிய படம் - ஒதெல்லோ

சிறந்த வங்க மொழிப் படம் - நிர்பஷிடோ

சிறந்த கன்னடப் படம் - ஹரிவு

சிறந்த கொங்கனி படம் - நாசோம் - ஐஏ கும்பசார்

சிறந்த மலையாளப் படம் - ஐன்

சிறந்த மராத்திப் படம் - கில்லா

சிறந்த ஓடிய படம் - ஆடிம் விச்சார்

சிறந்த பஞ்சாபி படம் - பஞ்சாப் 1984

சிறந்த தெலுங்குப் படம் - சந்தமாமா காதலு

சிறந்த ஹரியான்வி படம் - பக்டி தி ஹானர்

சிறந்த ராபா இன படம் - ஓரோங்

சிறந்த துப்பறியும் படம் - பும் ஷாங்

 

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எப்படி? … மூன்றாவது கண் பாருங்க

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க காரணம் மலேஷியாவில் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த தர்காதான் என்கிறார் நடிகர் பாண்டு. வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "மூன்றாவது கண்" நிகழ்ச்சியில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். நமது ஐம்புலன்களால் உணரமுடியாத, நம்மால் புரிந்துகொள்ளமுடியாத, அறிவியலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்களை தேடும் பயணம்தான் மூன்றாவது கண்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எப்படி? … மூன்றாவது கண் பாருங்க

திருப்பதி மலையில் இருக்கும் மூலவர் சிலை, வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு பொருள் என்பதை திருமலையின் தலைமை அர்ச்சகரான டாக்டர் ரமண தீட்சிதர் இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். திருப்பதிக்கு அடிக்கடி போய் வரும் பக்தர்கள் கூட இந்த வியப்பான செய்தியை கேள்விப்பட்ட ஆச்சரியமடைந்தார்கள்.

அதேபோல், போகர் பிரதிஷ்டை செய்த பழனி நவபாஷாண சிலை தற்போது, சேதமடைந்து விட்டது. ஆனால், இதேபோல் இன்னொரு சிலையை போகர் செய்து பழனிமலை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக சில குறிப்புகளை வைத்துக்கொண்டு, அந்த காட்டுப்பகுதிகளுக்கெல்லாம், மூன்றாவது கண் குழு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியது.

போகர் சிலை செய்த போகர்கெஜத்திற்கு போய் பூஜை செய்தால் மழை வரும் என்று அங்கிருந்த மக்கள் சொல்லியபடி, மழை வந்த அதிசயம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்தது.

பழனி சித்தர்கள்

பழனி மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்களால் வணங்கப்படும் சாக்கடை சித்தர், சென்னையில் அடித்து ஆசிகூறும் சிகரெட் சித்தர், வேலூர் பஸ் ஸ்டேண்டில் கடவுள் சிலைக்கு போடுவதுபோல் பூவால் அர்ச்சனை செய்து வழிபடப்படும் பஸ் ஸ்டேண்ட் பாபா இப்படி பலரும் நிகழ்த்தும் அதிசயங்களை மூன்றாவது கண் நிகழ்ச்சி பதிவு செய்து ஒளிபரப்பி வருகிறது.

110 வயது பெண் துறவி

சமீபத்தில் பிரான்சில் இருந்து சில சாமியார்கள் தமிழகத்திற்கு வந்து ஒரு 110 வயது பெண் துறவியை சந்தித்து ஆசி பெற்றார்கள். இங்கே ராஜபாளையத்தில் இருந்தபடியே, பிரான்சில் வசிப்பவர்களின் புற்றுநோயை குணப்படுத்தியிருக்கார் அந்த பெண்துறவி. சமீபத்தில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் வெளியான தகவல்கள் பெரும் வரவேற்பினை பெற்றது.

வெள்ளியங்கிரி மலை

ஊடகங்கள் பயணிக்காத வெள்ளியங்கிரி மலைக்கு முதன்முறையாக நமது மூன்றாவது கண் டீம் பயணம் செய்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிரத்யேகமாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம், வெள்ளியங்கிரி மலையில் இன்றும் சித்தர்களின் நடமாட்டம் இருக்கிறது. இதை உணர சில அனுபவமுள்ளவர்கள் சில அறிகுறிகளை சொல்கிறார்கள்.

அதன்படி வெள்ளியங்கரி மலை பயணம் செய்த நமது மூன்றாவது கண் டீமிற்கு, ஓர் அமானுஷ்ய அனுபவம் வீடியோ ஆதாரமாக கிடைத்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலையில் பஞ்சவாத்திய சத்தங்களான, பிரணவ ஒலி, மணியோசை, சிகண்டி ஒலி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கும் என்று சொல்லியிருந்தார்கள். அப்படி ஒரு அமானுஷ்யம் நம்மாலயும் கேட்க முடிஞ்சது. அந்த அமானுஷ்ய ஒலி எப்படி இங்கே கேட்குதுன்னு யாராலயும் விளக்கமுடியாத அதிசயம், இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இதை நீங்களும் பார்க்கலாம்.

அமானுஷ்யங்களைத் தேடி

தமிழகம் மட்டுமின்றி, அமானுஷ்யங்களை தேடி எல்லா திசைகளிலும் மூன்றாவது கண் டீம் பயணித்துக்கொண்டிருக்கிறது. வரும் வாரம் பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்கள் நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்.

நடிகர் பாண்டு

சினிமா காமெடி நடிகர் பாண்டு நம்மோட மூன்றாவது கண் நிகழ்ச்சியை பார்த்துட்டு, போன் பண்ணியிருந்தாரு. அடையாறுல சித்தர்கள் வழிபடும் பாலாகுட்டி ஒரு இளைஞர் மேல வந்து சிறுமியோட குரல்ல பேசறாங்க. இதை பார்த்துட்டு நடிகர் பாண்டு தன் குடும்பத்தோட இந்த பாலாகுட்டி இருக்கிற இடத்துக்கு போகவே அங்கே சில அதிசயங்கள் நடந்தது. அதனை மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியிருந்தனர்.

மலேசியா தர்கா

இப்போது இன்னொரு புது தகவலோட மீண்டும் நடிகர் பாண்டு மூன்றாவது கண் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். பாண்டு மலேஷியாவுல இருக்கிற ஒரு தர்காவுக்கு அடிக்கடி போய் வந்துட்டு இருக்காரு . சில வருஷங்களுக்கு முன்னால, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் குடும்பத்தை, மலேஷியாவுல இருக்கிற ஒரு பவர்புல்லான தர்காவுக்கு தான் அழைச்சிட்டு போன அனுபவங்களை இதுல சொல்லியிருக்காரு.

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார்

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எப்படி? … மூன்றாவது கண் பாருங்க

இந்த தர்காவுக்கு போனதுல இருந்துதான், ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைச்சிருக்கு அப்படின்னும், இப்போ அடிக்கடி ஏஆர் ரகுமான் இந்த தர்காவுக்கு போறதை எல்லாம் நம்ம நிகழ்ச்சியில விவரிச்சிருக்காரு. அந்த தர்காவோட அமானுஷ்யங்களும், இதே தர்காவுக்கு போய் வரும் தமிழ் சினிமா பிரபலங்களை பத்தியும் இந்த வாரம் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

சினிமா நடிகர் சிங்கமுத்து

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எப்படி? … மூன்றாவது கண் பாருங்க

காமெடி நடிகர் சிங்கமுத்து, இந்த வார மூன்றாவது கண் நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். தான் சித்தர்களை வழிபடுவதில்லை. 63 நாயன்மார்களோட ஒவ்வொரு பதிகமும், ஒவ்வொரு காரியசித்திக்கானது. அப்படி ஒரு பதிகம் பாடித்தான் சினிமா வாய்ப்பே தனக்கு கிடைத்தது என்றும் அதை நமக்கு பாடியும் காட்டியிருக்கார் நடிகர் சிங்கமுத்து. நீங்களும் சினிமா நடிகராக பாடவேண்டிய பதிகம் எதுன்னு நமக்கு சொல்லித்தருகிறார் நடிகர் சிங்கமுத்து.

நடிகர் டெல்லிகணேஷ்

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எப்படி? … மூன்றாவது கண் பாருங்க

தன்னோட வாழ்க்கையில பல அற்புதங்களை செஞ்ச ஒரு சாமியாரை பத்தி பலவிதமான அமானுஷ்யங்களை பதிவு செஞ்சிருக்காரு நடிகர் டெல்லி கணேஷ். எந்த நேரமும் காயத்ரி மந்திரத்தையே ஜெபிச்சிட்டு இருந்ததால, அந்த சாமியாரோட பேரே காயத்ரி சாமியார்னு ஆயிடுச்சுன்னு சொல்றாரு நடிகர் டெல்லி கணேஷ். இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத காயத்ரி சாமிகளின் அமானுஷ்ய சக்தி பற்றி விவரிக்கிறார் டெல்லி கணேஷ்.

ஐ.பி.எஸ் அதிகாரி நட்ராஜ்

முன்னாள் டிஜிபி, டிஎன்பிஎஸ்சி தலைவர் இப்படி பல முக்கியமான பொறுப்புகள்ல இருந்தவரு ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ். இவர் தன்னோட வாழ்க்கையில் நடந்த அமானுஷ்ய அனுபவங்களை நம்மோட பகிர்ந்து கொள்கிறார்.

அமானுஷ்ய தகவல்கள்

இப்படி, இந்த வாரம் பிரபலங்களின் அமானுஷ்ய அனுபவங்களும், வெள்ளியங்கிரி மலை பயணத்தின் மூலம் மூன்றாவது கண் நிகழ்ச்சி உங்களை பிரமிக்க வைக்கும் அனுபவங்களை தரவிருக்கிறது இந்த நிகழ்ச்சி தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி இரவு 9.30 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

 

அப்பா போல முதல் பாடலில் விருது... அப்பாவுக்கு மாமா.. மகளுக்கு மாப்பிள்ளை!

அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர். ரகுமான் இசையில் மகள் பாடியது அவரது மருமகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் என்பதுதான்.

அப்பா போல முதல் பாடலில் விருது... அப்பாவுக்கு மாமா.. மகளுக்கு மாப்பிள்ளை!

நான்கு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாலும் முதன் முதலாக சைவம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் குழந்தைக்காக பாடல் பாடினார் உத்ரா.

இவர் பிரபல கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பாடகருமான உன்னிகிருஷ்ணனின் மகளாவார். சைந்தவி வீட்டில் கொலுவிற்கு பாடிய உத்ராவிற்கு திடீரென ‘அழகே அழகு' பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது என்கிறார் உன்னி கிருஷ்ணன்.

சில நிமிடங்கள் மட்டுமே சினிமா பாடலை பயிற்சி செய்த உத்ரா பாடியது இசையமைப்பாளருக்கு பிடிக்கவே,இயக்குநரும் ஓகே சொல்ல இந்த பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் உன்னி கிருஷ்ணன்.

அப்பா போல முதல் பாடலில் விருது... அப்பாவுக்கு மாமா.. மகளுக்கு மாப்பிள்ளை!

முதல் பாடலுக்கு விருது

கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசைகள் பாடினாலும் புதிய பாடலை முதன் முறையாக சைவம் படத்தில் அழகே... அழகு என்று பாடி அதற்கு தேசிய விருது பெற்றுள்ளார்

முத்துக்குமாரின் வரிகள்

பாடலாசிரியர் முத்துக்குமாரின் அழகான எளிமையான வரிகள் தனது மகளுக்கு பாட எளிதாக இருந்தது என்று கூறியுள்ள உன்னி கிருஷ்ணன் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

அப்பாவுக்கும் தேசிய விருது

21 ஆண்டுகளுக்கு முன்னர் காதலன் படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் முதன் முதலாக ‘என்னவளே... அடி என்னவளே...' என்று பாடி தேசிய விருது வாங்கினார் உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என் பெயரை பயன்படுத்த கஸ்தூரிராஜாவுக்கு அனுமதி இல்லை! - ரஜினி

சென்னை: எந்த இடத்திலும் தனது பெயரைப் பயன்படுத்துவதற்கு இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்தார்.

"மே ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி பைனான்சியர் போத்ரா மனு தாக்கல் செய்தார்.

என் பெயரை பயன்படுத்த கஸ்தூரிராஜாவுக்கு அனுமதி இல்லை! - ரஜினி

அந்த மனுவில், இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்த ரஜினி தடை உத்தரவு பெற்றுள்ளார். ஆனால், அவரது பெயரைப் பயன்படுத்தி, இயக்குநர் கஸ்தூரிராஜா என்னிடம் ரூ.65 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.

ரஜினியின் சம்பந்தியே அவரது பெயரை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, இந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தையும் கேட்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரஜினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், என்னைப் பற்றி படம் தயாரித்த பட நிறுவனத்துக்கு எதிராகத்தான் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதற்கும், போத்ராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது மனு விசாரணைக்கு உகந்தல்ல.

இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு, எனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள எந்த அதிகாரமும், வாக்குறுதியும் அளிக்கவில்லை. அது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

ஃபேஸ்புக்கில் நேரடியாக இளையராஜா... மூன்றே நாட்களில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள்!

ஃபேஸ்புக்கில் இளையராஜாவுக்கென அவரது ரசிகர்கள் ஏராளமான தனிப் பக்கங்கள் உருவாக்கி வைத்திருந்தனர். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக் கணக்கில் லைக்குகள், ஃபாலோயர்கள்.

அவரவருக்குத் தோன்றிய, தெரிந்த கருத்துகளை எழுதிப் பகிர்ந்து வந்தனர். அவற்றில் தவறான பல தகவல்களும் சேர்ந்தே வெளியாகின. சிலர் அந்த பக்கங்களை தவறாகவும் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

ஃபேஸ்புக்கில் நேரடியாக இளையராஜா... மூன்றே நாட்களில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள்!

இதையெல்லாம் சரி செய்து, ஒரே பெயரில் இயங்க வைக்க வேண்டும் என பெரும் முயற்சி மேற்கொண்டார் இளையராஜா. அதன் விளைவாக தாமே நேரடியாக ஃபேஸ்புக்கில் இணைந்து, ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடிவு செய்தார்.

அதன்படி கடந்த மார்ச் 20 ம் தேதி முதல் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தார் ராஜா.

அவர் ஃபேஸ்புக்கில் நுழைந்த மூன்றே தினங்களில் 1.2 மில்லியன் பேர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

தான் பேஸ்புக்கில் நுழைந்தது குறித்து இளையராஜா பதிவேற்றியுள்ள வீடியோ:

 

மே மாதத்துக்கு தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தின் வெளியீடு மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மே மாதத்துக்கு தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்

லஷ்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்ற டன்டனக்கா பாடலும் சூப்பர் ஹிட்டாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மே மாதத்துக்கு தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்

இந்த நிலையில் அந்தப் பாடலைப் பயன்படுத்த, டன்டனக்கா வார்த்தைக்குச் சொந்தக்காரர் என்று அறியப்படும் டி ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். தன்னை அவமானப்படுத்தும விதமாக அந்தப் பாடல் உள்ளதாகக் கூறி அவர் நீதிமன்றம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மே மாதத்துக்கு தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்

இன்னொரு பக்கம் ஏப்ரல் மாதம் முழுவதும் பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கொம்பன், உத்தம வில்லன், நண்பேன்டா, ஓ காதல் கண்மணி போன்ற படங்கள் வரவிருப்பதால், ரோமியோ ஜூலியட் தேதியைத் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

 

லிங்காவுக்கு விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டது தவறு! - கமல் ஹாஸன்

லிங்கா படத்துக்கு விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தவறு என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.

தனது அடுத்த படமான உத்தம வில்லன் குறித்து முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்.

அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, கமலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன.. சமீபத்தில் நடந்தது (லிங்கா) உங்களுக்கே தெரியும்.. என்று கேட்டனர்.

லிங்காவுக்கு விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டது தவறு! - கமல் ஹாஸன்

அதற்கு பதிலளித்த அவர், "சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது தவறு.

ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதிப் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அதுபோல்தான் விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பிக் கேட்பதும்," என்றார்.

 

விஸ்வரூபம் 2 தாமதம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை- கமல் அதிரடி

சென்னை: விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை என்று கமல் ஹாஸன் இன்று தெரிவித்தார்.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது.

விஸ்வரூபம் 2 தாமதம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை- கமல் அதிரடி  

அப்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கமல், "எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது.

ஆனால் இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை.

அவர் பணக் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை," என்றார்.

விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை முடித்துவிட்டிருந்தார் கமல். ஆனால் படம் வெளிவந்தபாடில்லை. அந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் படங்களில் நடித்துவிட்ட கமல், மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார்.

ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் வர்த்தகம் எதிர்ப்பார்த்த அளவு இல்லாததால், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை திரும்ப கமலிடமே திருப்பித் தந்துவிடும் முடிவில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.

 

11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தப்பா யோசிக்காதீங்க!

சினிமா என்றவுடனே தப்புத் தப்பாக கணக்குப் போட்டு படமெடுத்து, தப்பாகவே முடிந்து போகிறார்கள் இன்றைய நாட்களில்.

ஆர்வக் கோளாறு காரணமாக ஏதாவது சாதனை செய்வதாகக் கூறி, அவசர கோலத்தில் எதையாவது எடுத்து வைப்பார்கள்.

இந்த நிலை இன்னும் மாறவில்லை போலிருக்கிறது. 11 மணி நேரத்தில் ஒரு முழுப் படத்தையும் எடுத்திருப்பதாக ஒரு குழு வந்திருக்கிறது. படத்துக்கு தலைப்பு: தப்பா யோசிக்காதீங்க.

11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தப்பா யோசிக்காதீங்க!

நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் ஒரு வீட்டில் வைத்து படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம்.

நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு -எஸ்.ஆர். வெற்றி , இசை- ஸ்டீபன் சதீஷ்.

'தென்றல்' தொடரில் நடிக்கும் ராஜாதான் நாயகன். ஜோதிஷா, சனிலா நாயகிகள். சிசர் மனோகர், பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் சுல்தான்ஸ் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஏவிஎம்மின் 13 தொலைக்காட்சித் தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.

11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தப்பா யோசிக்காதீங்க!

இந்தப் படம் குறித்து சுல்தான் கூறுகையில், ''ஒருமனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தப்படும்போது சந்திக்கும் இன்னல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் சமாளிக்க எதைக் கையாள்கிறான் என்பதை படம் விளக்கும். இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு உயர்வானது. அது சிறப்பாக நின்று நிலைக்க விட்டுக் கொடுத்தல் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்,'' என்றார்.

11 மணி நேர படப்பிடிப்பு அனுபவம் பற்றி சுல்தான்ஸ் கூறும்போது "இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாக யோசித்து முன்தயாரிப்புக்கு சரியாகத் திட்டமிட்டோம். ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன.

இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவர்க்கு வேலைகள் அப்படி. ஆனாலும் படப்பிடிப்பு நாளில் இன்று எல்லாரும் சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப் படும். இதில் 2பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறோம்," என்றார்.

தயாரிப்பாளர் அனில் குமார் கூறுகையில் " இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பினேன். செய்து காட்டி விட்டார்." என்றார்.

 

என் அபிமான தலைவரை இழந்த நாள் கறுப்பு தினம்!- நடிகர் ரஜினிகாந்த்

என் அபிமான தலைவரை இழந்த நாள் எனக்கு கறுப்பு தினமாகும். சிங்கப்பூர் மக்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ நேற்று மரணமடைந்தார்.

ரஜினிகாந்துக்கு மிகப் பிடித்த தலைவர் லீ க்வான் யூதான்.

என் அபிமான தலைவரை இழந்த நாள் கறுப்பு தினம்!- நடிகர் ரஜினிகாந்த்

அவரைப் பற்றி தனது பல பேட்டிகளில் உயர்வாகப் பேசியுள்ளார் ரஜினி. மக்கள் மீது அக்கறை கொண்ட அவரைப் போன்ற சிறந்த தலைவர் இங்கு உருவானால், அவருடன் இணைந்து அரசியல் செய்வேன் என்று ரஜினி கூறியிருந்தார்.

நேற்று லீ க்வான் யூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினி.

அதில், "என் அபிதான தலைவராகிய லீ க்வான் யூ மறைந்த இந்த நாள் உண்மையாகவே கறுப்பு தினம். சிங்கப்பூர் மக்களுக்கு என் அனுதாபங்கள். புதிய பாதை அமைத்துக் கொடுத்த அவரது மறைவு உண்மையான இழப்பு," என்று ரஜினி தெரிவித்துள்ளார்.