கத்தி ரிலீசாகுமா? நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவைச் சந்திக்கும் ஏ ஆர் முருகதாஸ்!!

சென்னை: கத்தி படம் சுமூகமாக வெளிவர வேண்டும் என்று கோரி தமிழ் இயக்கத் தலைவர்கள் நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்களைச் சந்தித்து சமரசம் பேசி வருகிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

விஜய் நடிக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அவர்களுக்கு துணையாக அய்ங்கரன் நிறுவனம் செயல்படுகிறது.

லைக்கா நிறுவனத்துக்கு இது முதல் தமிழ்ப் படம் கிடையாது. ஏற்கெனவே வேறு பெயரில் பிரிவோம் சந்திப்போம் என்று படமெடுத்தார்கள். கரு பழனியப்பன், சேரன் போன்றவர்கள் அதற்கு உதவியாக இருந்தார்கள்.

கத்தி ரிலீசாகுமா? நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவைச் சந்திக்கும் ஏ ஆர் முருகதாஸ்!!

இப்போது நேரடியாக லைக்கா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படமெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் இலங்கை அதிபரும் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்றழித்தவருமான மகிந்த ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் விமான சேவைக்கு ராஜபக்சேதான் அனுமதி அளித்தார். ராஜபக்சேவின் மருமகன் இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்.

இப்படிப்பட்ட தொடர்புகளைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் படத்தில், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் விஜய் நடிப்பதாக செய்தி வெளியானதுமே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும், திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு கடிதங்களும் அளித்துள்ளன.

இப்போது கத்தி படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிறது. ஆனால் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன.

இதனால் படத்தை வெளியிட சுமூகமான சூழலை உருவாக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார் முருகதாஸ். அவரும் அய்ங்கரன் கருணாவும் சேர்ந்து தமிழ் இயக்கத் தலைவர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் பழ நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமானைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அடுத்து வைகோவைச் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

லைக்கா நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தத் தலைவர்களிடம் விளக்கி வரும் முருகதாஸும் கருணாவும், படம் தீபாவளிக்கு சிக்கலின்றி வெளிவர உதவுமாறு கோரி வருகின்றனர்.

 

ஆகஸ்ட் 29-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

ஆர் பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகிறது.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், வித்தகன் படத்துக்குப் பிறகு இப்போது மஇயக்கியிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 29-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

மேலும் இதில் ஆர்யா, விஷால், பரத், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலாபால், சினேகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தில் பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் ஆரம்ப கால பார்த்திபன் படங்களில் இருந்த ஒரு அழுத்தம் மற்றும் வித்தியாசத்தைக் காட்டுவதாக இருந்தன.

படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படம் நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நாளை சித்தார்த்தின் ‘ஜிகர்தண்டா', ‘சரபம்' மற்றும் சண்டியர் படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. எனவே இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 

சிங்கம் 3... காக்கிச் சட்டை அணியாத போலீஸ்.. ஹரியின் கதைக்கு ஓகே சொன்னார் சூர்யா!

சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தை உருவாக்குகிறார்கள் இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும்.

தமிழ் சினிமாவில் வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர் ஹரி. இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிங்கம் 3... காக்கிச் சட்டை அணியாத போலீஸ்.. ஹரியின் கதைக்கு ஓகே சொன்னார் சூர்யா!

இருவரும் முதலில் இணைந்த படம் ஆறு. அந்த வெற்றியைத் தொடர்ந்து வேல் படத்தில் இணைந்தனர். அந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2 படங்களில் இணைந்தனர். இரு படங்களுமே வசூலில் சாதனைப் படைத்தன.

சிங்கம் 2 படத்தின் க்ளைமாக்ஸில், அடுத்த பாகத்தைத் தொடர்வதற்கு வசதியாக காட்சியமைத்திருந்தனர். இப்போது சிங்கம் 3-க்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இயக்குனர் ஹரி ‘சிங்கம் 3' படத்திற்காக நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்துள்ளார். அவற்றில் ஒரு கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்து அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

இந்தக் கதையில் முழுக்க முழுக்க காக்கிச் சட்டை அணியாத ஒரு போலீசாக வருகிறாராம் சூர்யா.

தற்போது ஹரி, விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்ட முடிவுசெய்துள்ளனர். அதேபோல சூர்யா, வெங்கட் பிரபுவின் மாஸ் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் ஹரியும் சூர்யாவும் ‘சிங்கம் 3'-யைத் தொடங்கவிருக்கின்றனர்.

 

லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து சென்னையில்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்காவின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு சென்னையில் முகாமிடுகிறார்கள் ரஜினி மற்றும் குழுவினர்.

கோச்சடையான் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார்.

லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து சென்னையில்!!

கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மைசூரில்

இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் 40 நாட்கள் நடத்தினர். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் சரித்திர கால செட் அமைத்து படமாக்கி வந்தனர்.

ஹைதராபாத்

இந்நிலையில் நேற்றுடன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.

சென்னையில்

இந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது.

ஏமாற்றம் வேண்டாம்

லிங்கா படப்பிடிப்பு ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் படமாகாமல் வேறு மாநிலங்களிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இது இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. தற்போது அந்தக் குறையைப் போக்குவதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதென முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி.

ரசிகர்கள்

தமிழகத்தில் ரஜினியின் ஷூட்டிங் என்றால் ரசிகர்கள் படையாகத் திரண்டு வந்துவிடுவது வழக்கம். இந்த முறையும் அப்படி நடக்கும் என்பது தெரிந்திருப்பதால், ரசிகர்களுக்கென ஒரு நேரம் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.

 

கத்தி, புலிப் பார்வை.. இலங்கை அரசுக்கு துணைபோகும் அறமற்றவர்களின் வணிகம்! - திருமுருகன் காந்தி

சென்னை: விஜய் நடிக்கும் கத்தி, பாலச்சந்திரன் கொலையை வைத்து எடுக்கப்பட்டுள்ள புலிப்பார்வை போன்ற படங்கள் இலங்கை அரசுக்கு துணை போகும் அறமற்றவர்களின் வணிக முயற்சிகள். இதன் மூலம் தமிழர்களின் போராட்ட உணர்வை சிதைக்கப் பார்க்கிறது இலங்கை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கத்தி, புலிப் பார்வை..  இலங்கை அரசுக்கு துணைபோகும் அறமற்றவர்களின் வணிகம்! - திருமுருகன் காந்தி

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

ஈழ விடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொது மக்களிடத்தில் இவர்களின் ஈழ ஆதரவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.

2009க்கு பின் தமிழகத் திரைத்துறையின் ஈழ ஆதரவு அரசியலை உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழாவின் தோல்விலிருந்து இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தமிழக திரைத்துறையில் இருக்கும் நிதி முதலீட்டு நெருக்கடியையும், வணிக நோக்கமாக இருப்பவர்களையும் இலங்கை பயன்படுத்த எண்ணியது. FICCIயின் (வர்த்தக கூட்டமைப்பு) துணை கொண்டு பல ஒப்பந்தங்களை இந்திய திரை உலகுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டது.

இதன் விரிவான திட்டமாக நாம் புரிந்து கொள்ள கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில்
1. திரைத்துறையில் முதலீடு
2. திரையுலக கலைஞர்களை தமது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்வது.

லைகா மொபைலும் ராஜபக்சேவும்

இதன் அடிப்படையிலேயே தற்பொழுது லைகா மொபைல் நிறுவனத்தின் முதலீடு திரைத்துறையில் பெரிய பேனரில், வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் நடிகர் விஜய் - முருகதாஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. லைகா மொபைல் ராஜபக்சேவிற்கு ஆதரவாக பல வர்த்தக பணிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். அந்த நிறுவனம் தமிழகத்தில் ‘இலங்கை மீது பொருளாதார தடை இருப்பதை' அறிந்து பின்வாசல் வழியாக நுழைகிறதா?

சந்தோஷ் சிவன் எனும் தரகுப் படைப்பாளி

மற்றொரு புறம் சந்தோஷ் சிவன் போன்ற அரசியல் தரகு படைப்பாளிகளின் வழியே நுணுக்க அரசியல் படங்களை ஈழவிடுதலைக்கு எதிராக கொண்டுவருவது. இந்தவகையான ‘அறமற்ற' தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்திரையுலகில் ஆளுமை செலுத்த வைப்பது. சந்தோஷ் சிவனின் ‘இனம்' திரைப்படத்தினை லிங்குசாமி கொண்டுவந்தார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் காமிரா செய்கிறார்.

பிவிஆர் மூலம்...

மாற்று அரசியல் என்கிற பெயரில் தென்னாப்பிரிக்கவின் மூலமாக மேற்குலகினால் முன்வைக்கப்படும் 'நல்லிணக்கம்' , 'இனப்படுகொலை குற்றவாளிகளை மன்னித்து , இணைந்து வாழ்தல்' என்கிற திட்டத்தினை நுணுக்கமாக அறிவுசீவி சமூகவெளிக்குள் நகர்த்தும் 'வித் யூ, வித்தவுட் யூ' போன்ற படங்களை பி.வி.ஆர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் ‘புரட்சி'யும் இங்கு நிகழுகிறது.

புலிப் பார்வை எனும் கருத்தியல் சிதைவு

தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாலச்சந்திரனின் அந்த ‘இறுதிப் பார்வை' புகைப்படம் இன்றளவும் பலரை துன்புறுத்தும் இனப்படுகொலை பதிவு. இந்த மனப்பதிவினை சிதைப்பதுவும், பாலச்சந்திரன் பற்றியான பிம்பத்தினை உடைப்பதுவும் இந்திய-இலங்கை அரசிற்கு மிக மிக அவசியமான உடனடித் தேவை. இப்பிம்பம் முற்றிலும் முறிக்கப்பட்டால் காலப்போக்கில் பல நினைவுகளை அழிக்க முடியும்.

'புலிப்பார்வை' எனும் படத்தின் அறிமுக காணொளியில் உளவியல் ரீதியாக தமிழர்களின் ஆழ்மனதில் புதைந்து நிற்கும், ‘ஏன் இந்த அப்பாவி குழந்தை படுகொலை செய்யப்பட்டான்' என்கிற கேள்வியை சிதைத்து அழிக்கும் காட்சிப்படுத்தலை காணமுடிகிறது. இதை பிரவீன் காந்தி எனும் வணிகரீதியாக மலிவான படங்களை எடுக்கும் நபரைக் கொண்டு செய்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் வழியாக தமிழர்களின் மீது உளவியல் -பொருளியல்-கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் ‘போராக' இது இலங்கை-இந்திய அரசினால் நிகழ்த்தபடுகிறது. இதிலிருந்து தமிழகமும், தமிழ் திரையுலகமும் தப்பிக்குமா எனத் தெரியவில்லை.

இனிமேல் தமிழ் திரையுலகில் ஈழவிடுதலை ஆதரவாளருக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை விட இலங்கையின் நுண் அரசியலுக்கு துணை போகும் அறமற்றவர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.

இம்முயற்சிகளை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. தமிழகமும், திரையுலகுமும் எழுந்து நிற்குமா? அல்லது 2009 போர் முடிந்ததும் எழுந்த உணர்வலைகள் இன்று அடங்கிவிடுமா?

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

'விஐபி'யில் தனுஷ் நச், அனிருத் முறுக் இசை, வெல்டன் வேல்ராஜ்: இயக்குனர் ஷங்கர் பாராட்டு

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் வசூல் படத்தின் தயாரிப்பாளரான தனுஷின் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது.

இந்நிலையில் கோலிவுட்டில் பல காலம் முன்னணி இயக்குனராக உள்ள ஷங்கர் வேலையில்லா பட்டதாரி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த ஷங்கர் அது குறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ஷங்கர் கூறியிருப்பதாவது,

விஐபி பார்த்தேன். படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். தனுஷ் நச் நடிப்பு, அனிருத் முறுக் இசை வெல்டன் வேல்ராஜ். நீண்ட காலம் கழித்து ரசிகர்களை திருப்திபடுத்தும் படம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

சென்சார் ஆனது அஞ்சான்... எந்த வெட்டுமில்லாமல் யு சான்று!

சென்னை: சூர்யாவின் அடுத்த படமான அஞ்சான் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. எந்தக் காட்சிக்கும் ஆட்சேபணை சொல்லாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என யு சான்று அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர்.

சூர்யா, சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். சூர்யா படத்தை லிங்குசாமி இயக்குவது இதுதான் முதல்முறை.

பெரும் பொருட்செலவில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிக அரங்குகளில் வெளியாகிறது.

சென்சார் ஆனது அஞ்சான்... எந்த வெட்டுமில்லாமல் யு சான்று!

வழக்கமாக ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்புதான் தணிக்கை குழுவுக்கு அனுப்புவார்கள். ஆனால் சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால், ரிலீசுக்கு 15 நாட்களுக்கு முன்பே படம் தயாராகிவிட்டது. தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது.

படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காட்சியையும் நீக்கச் சொல்லவில்லை. அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்பதைக் குறிக்கும் யு சான்று வழங்கியுள்ளனர்.

 

மம்முட்டியின் தங்கை மகன் தமிழில் ஹீரோவாகும் 6 பிஎம் டு 6 ஏஎம்!

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் தங்கை மகன் அஸ்கர் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு 6 பிஎம் டு 6 ஏஎம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

மம்முட்டியின் தங்கை மகன் தமிழில் ஹீரோவாகும் 6 பிஎம் டு 6 ஏஎம்!

பி.கே. ஜேம்ஸ் அண்ட் திலகேஸ்வரி மூவிஸ் சார்பில் பி.கே. ஜேம்ஸ், ஷீலாகுரியன் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஜெய்பால் ஷண்டுகம் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். கே.ஏ.லத்தீப் இசையமைத்திருக்கிறார். எம்.டி.தமிழரசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

நாயகிகளாக சூரிய கிரண், கௌரி கிருஷ்ணா நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, சபீதா ஆனந்த், மீரா கிருஷ்ணன், விஜய்மேனன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஒரே இரவில் நடந்து முடியும் நிகழ்ச்சிகள்தான் படம்.

காதல், அமானுஷ்யம் கலந்து உருவாக்கப்படும் இந்தப் படத்தின் கதை இதுதான்:

இரு உயிர் தோழிகளுக்கு ஒரு காதலன் கிடைக்கின்றான். இதனால் தோழிகளுக்குள் போட்டி பொறாமை ஏற்படுகிறது.

இருவரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் அவன் காதலனையும் கொன்று விட்டு தன்னையும் அழிக்கிறார்.

காதல் ஜோடி இன்னொரு ஊரில் மறுபிறவி எடுக்கின்றனர். அவர்களை மீண்டும் கொல்வதற்கு அப்பெண் ஆவியாக வருகிறாள். ஆவியிடம் சிக்கும் காதல் ஜோடியின் நிலைதான் க்ளைமாக்ஸ்.

 

லிப்லாக் விவகாரம்: அம்மாவை விட்டு பாட்டியுடன் நடிகை தனிக்குடித்தனம்

ஒரு படத்தில் லிப் லாக் சீனில் நடித்த மங்களகரமான நடிகை, தொடர்ந்து பல படங்களிலும் அதேபோல நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

விசாலமான நடிகருடன் நடித்த நாயகி பிக் அப் நடிகருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படத்திலும் லிப்லாக் சீனுக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

இதனால் ஏகத்துக்கு சம்பளமும் கிடைப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். வரிசையாக படங்கள் ஹிட் ஆவதால் வாய்ப்புகளும் கதவைத் தட்டுகின்றனவாம்.

ஆனால் நடிகையின் அம்மாவோ நடித்தது போதும் படிப்பைப் பாரு என்று பிரச்சினை ஏற்படுத்தவே, அதை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளாராம்.

விரைவில் வீட்டை விட்டு வெளியேறி பாட்டியுடன் சென்னையில் தனிக்குடித்தனம் வருவார் என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.