'இது என் பாலிசி'.. ஆரம்பம் பட விளம்பர நிகழ்ச்சிகளில் அஜீத் பங்கேற்கப் போவதில்லை

சென்னை: அஜீத் குமார் ஆரம்பம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையுடன் இருப்பவர் அஜீத் குமார். நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று நினைப்பவர் அவர்.

இந்நிலையில் வரும் 31ம் தேதி ரிலீஸாகும் ஆரம்பம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளப் போவதில்லையாம். ஆனால் ஆரம்பம் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அவரது ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 'இது என் பாலிசி'.. ஆரம்பம் பட விளம்பர நிகழ்ச்சிகளில் அஜீத் பங்கேற்கப் போவதில்லை

விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருமாறு தயாரிப்பாளரும் அஜீத்திடம் கேட்டாராம். அதற்கு அவர், தன்னால் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்றும், தான் வராமல் இருப்பது பெரிய விஷயம் இல்லை என்றும் தெரிவித்துவிட்டாராம்.

பாலிவுட் படங்களை நடிகர், நடிகைகள் ஓடி ஓடி விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போது அந்த பழக்கம் கோலிவுட்டுக்கும் வந்துவிட்டது.

 

எனக்கு விஜய், சூர்யாவை ரொம்ப பிடிக்கும்: ஏமி ஜாக்சன்

சென்னை: நடிகை ஏமி ஜாக்சனுக்கு விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் பிடிக்குமாம்.

மதராஸபட்டினம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் இங்கிலாந்து அழகி ஏமி ஜாக்சன். இதையடுத்து அவர் பாலிவுட் பக்கம் சென்றார். காதலில் விழுந்தார். கோலிவுட் வந்து விக்ரமுடன் சேர்ந்து ஐ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஏமி ஜாக்சன் கூறுகையில்,

எனக்கு விஜய், சூர்யாவை ரொம்ப பிடிக்கும்: ஏமி ஜாக்சன்

தமிழ் சினிமாவில் ஏராளாமான திறமைசாலிகள் உள்ளனர். தனுஷுக்கு சிறந்த நடிப்புத் திறன் உள்ளது என்று நினைக்கிறேன். எனக்கு சூர்யா மற்றும் விஜய் மிகவும் பிடிக்கும். அண்மையில் தியேட்டரில் ராஜா ராணி பார்த்தேன். ஆர்யா அருமையாக நடித்திருக்கிறார்.

இரண்டு கதைகள் கேட்டு ஓகே செய்துள்ளேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அது பற்றி தெரிவிப்பேன். யாராவது ஆக்ஷன் கதைகள் வைத்திருந்தால் என்னை அணுகலாம். குதிரையேற்றம், யோகா, ஷாப்பிங் மற்றும் எனது குடும்பம், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது பிடிக்கும் என்றார்.

 

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல்: வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல்: வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

மும்பை: இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு யார், என்ன மிரட்டல் விடுத்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

சர்ச்சையே உந்தன் பெயர் ராம் கோபால் வர்மாவோ என்று கூறும் அளவுக்கு சர்ச்சைகளில் சிக்குபவர் இந்த இயக்குனர். அவர் ஏதாவது கருத்து தெரிவித்தால் கூட அது பெரும் சர்ச்சையில் முடிந்துவிடும்.

இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால் யார், என்ன மிரட்டல் விடுத்தார்கள் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டார்கள்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டர் கூறுகையில்,

பல காரணங்களால் மும்பை போலீசார் எனக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். என்ன மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதை நான் தெரிவிக்க முடியாது. இந்த மிரட்டல் சத்யா 2 படம் தொடர்பாக விடுக்கப்பட்டதா என்பதையும் என்னால் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வர்மாவின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமான சத்யா 2 இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை நிழல் உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வரும் சத்யா என்பவரைச் சுற்றி தான் கதை நகரும்.

 

சரிதாவை விவாகரத்து செய்த நடிகர் முகேஷுக்கு 2வது திருமணம்!

சரிதாவை விவாகரத்து செய்த நடிகர் முகேஷுக்கு 2வது திருமணம்!

கொச்சி: நடிகை சரிதாவை மணந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்ட நடிகர் முகேஷ், இப்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் நடனக் கலைஞராக உள்ள தேவிகாவை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

முகேஷுக்கும், நடிகை சரிதாவுக்கும் 1989-ல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்த இருவரும் 2007-ல் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். சரிதா சென்னையில் வசிக்கிறார்.

முகேஷ் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள மெதில் தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தேவிகா மோகினியாட்டம், கதக்களி, குச்சிபுடி நடனக் கலைஞராக உள்ளார். நடனத்தில் டாக்டர் பட்டம் பெற தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி கட்டுரையும் சமர்பித்து உள்ளார்.

முகேஷும் தேவிகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கேரளாவில் திரிபுனிதரா பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

 

'தன்னை நம்பாதவன் கடைசிவரை ஜால்ரா அடிச்சிட்டுதான் இருக்கணும்!'- கமல் அதிரடி

சென்னை: சினிமாவில் தன்னை நம்பாதவன் கடைசிவரை ஜால்ரா அடிச்சிட்டுதான் இருக்க வேண்டி வரும், என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

ஜீவா, த்ரிஷா, வினய், ஆன்ட்ரியா, சந்தானம் நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் நேற்று மாலை நடந்தது.

'தன்னை நம்பாதவன் கடைசிவரை ஜால்ரா அடிச்சிட்டுதான் இருக்கணும்!'- கமல் அதிரடி

சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாஸன் பங்கேற்று இசைத் தட்டை வெளியிட்டார். இயக்குநர் பாலா பெற்றுக் கொண்டார்.

பின்னர் கமல்ஹாஸன் பேசுகையில், "இந்த மேடைக்கு நான் வந்திருப்பதே அன்பிற்காகத்தான். மேடை அலங்காரத்துக்காக நான் இதை சொல்லல... வர இயலாததற்கான எல்லா இடையூறுகளும் இருந்த போதிலும் இவர்களுடைய விடாப்பிடியான அன்பின் காரணமாகத்தான் வந்தேன்.

பொதுவா ஒரு தடவை முயற்சி பண்ணி அது நடக்கலேன்னா உடனே வேற வேலையை பார்க்கப் போயிடுவாங்க, ஏன்னா படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணனும். நிறைய வேலைகள் இருக்கும்.

ஆனாலும் விடாப்பிடியாக அவர்கள் என்னை வந்து பார்த்தபோது இப்படித்தான் படத்தையும் எடுத்திருப்பார்களோ? என்று எண்ணத் தோன்றியது. அதாவது எது வேண்டுமோ அதை இந்தப் படத்துக்காக தேடித் தேடி சிறப்பாக எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். அந்தமாதிரி அடம்பிடிக்கும் போது கொஞ்சம் காலதாமதமானாலும் அதுவே வெற்றிக்கு வித்தாக அமையும்.

இதுதான் வேண்டுமென்று நம்புவதே மிகவும் அபூர்வம். இங்கே வெற்றி வேணும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா அது எங்கிருந்து வருதுன்னு சொல்லத் தெரியாது. அதிலும் சினிமாவைப் பொருத்தவரை நான் என்னுடைய சொற்ப அனுபவத்தில் தெரிந்து கொண்டது, நம்பி இது நல்லாருக்குன்னு நாம சிரிச்சி, நாம அழுது, நாம நம்பிக்கையோடு எடுத்த படங்கள் 90 சதவீதம் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. தன்னை நம்பாதவன் கடைசி வரைக்கும் ஜால்ரா அடிச்சிட்டுதான் இருக்கணும்!

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். அந்தக் கோட்டைப் புரிந்து கொண்டுதான் இந்தப்படத்தை எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அந்த வெற்றியெல்லாம் உங்க (ரசிகர்கள்) கைலதான் இருக்கு.

இந்தப் படத்தில் நடித்த வினய் முன்பு ஒருமுறை என்னை சந்தித்த போது தவறுதலாக எனக்கு ஆல் த பெஸ்ட் சொன்னதாகச் சொன்னார். அவர் சரியாத்தான் சொன்னார். எனக்கும் எல்லோருடைய வாழ்த்துகளும் வேணுமே. காரணம் அடுத்து என்னுடைய படம் ரிலீஸாகப் போகிறது அதற்கு உங்களுடைய வாழ்த்துகளும் எனக்கு தேவை.

இது அப்படிப்பட்ட ஒரு பரிமாற்றம்தான். இந்த விழாவுக்கு நான் வந்ததற்கு காரணமே புதிதாக ஒரு கூட்டம் வந்து நல்ல படம் எடுத்து, நன்றாக செயல்படுகிறார்கள். அவர்களை வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் இந்த வாழ்த்தை நானும் எதிர்பார்க்கிறேன். இங்கே அதற்காகத்தான் வந்திருக்கிறேன்.

வெற்றி இருக்கும் போது செய்யக்கூடிய விஷயங்கள் எப்போதுமே ரொம்ப பிரமாதமா வரும். அது எப்படின்னு தெரியாது, ஆச்சரியமா இருக்கும். ரசிகர்கள் கைதட்டும் போது தான் நமக்கு நம்மீது ஒரு நம்பிக்கை வரும். அவர்களின் கைத்தட்டல்களில் அப்படி ஒரு பலம் இருக்கிறது.

ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்குமான இடைவெளியில் இதுபோன்ற விழாக்களுக்கு வந்து ரசிகர்களின் கைதட்டல்களை கேட்க வேண்டும். அது அடுத்த படத்துக்கான ஒத்திகையாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் அடுத்த கைதட்டல் எப்போதும் வரும் என்று நமக்கு தெரியாது. அதற்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். ரசிகர்களின் அந்த கைதட்டல்கள் தான் எங்களுடைய சம்பளம். பாக்கி எல்லாமே செலவாகிடும், வரியாகப் போய்விடும்!," என்றார் கமல்.