நஸ்ரியாவுக்கு நேரம் சரியில்ல!

நஸ்ரியா நஸீம்... இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் 'மோஸ்ட் வாண்டட்' நாயகி இவர்தான். சமீபத்தில் இவர் நடித்த நேரம் வெளியாகி நல்ல பெயரைச் சம்பாதித்தது.

இப்போது தனுஷ், ஆர்யா போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே கால்ஷீட் சொதப்பலில் டிகிரி வாங்கிவிட்டார் அம்மணி. விளைவு தயாரிப்பாளர்கள் புகாருடன் சங்கத்தில் நிற்கிறார்கள்.

நஸ்ரியாவுக்கு நேரம் சரியில்ல!  

அட்லீ இயக்கத்தில் ஆர்யா - நயன்தாரா நடிக்கும் 'ராஜா ராணி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிரார் நஸ்ரியா. அதேபோல சற்குணம் இயக்கி வரும் 'நய்யாண்டி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர்தான் நடிக்கிறார்.

'ராஜா ராணி' படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 'நையாண்டி' படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடக்கிறது. ஆனால் இவரோ இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்துவிட்டார்.

இதனால் எந்த படப்பிடிப்பிற்கு செல்வது என்ற குழப்பத்தில், இரண்டு படங்களுக்குமே போகாமல் டிமிக்கி கொடுத்துவிட்டாராம்.

அதைவிட கொடுமை, அந்த தேதியில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கப் போய்விட, இரண்டு படங்களின் ஹீரோக்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏகக் கடுப்புக்குள்ளாகிவிட்டார்களாம்.

இப்போது நஸ்ரியா மீது புகார்க் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தில்.

 

உடம்பு சரியில்ல.. விலகிக்கிறேன்! - 'பாஸ்' நடித்த தலைவன் பட இயக்குநர்

உடம்பு சரியில்ல.. விலகிக்கிறேன்! - 'பாஸ்' நடித்த தலைவன் பட இயக்குநர்

சென்னை: சமீப நாட்களாக மோசடி உள்ளிட்ட பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தலைவன் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாக டிஎஸ் ரமேஷ் செல்வன் அறிவித்துள்ளார்.

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன், தன் பெயரை பாஸ் என்று மாற்றிக் கொண்டு முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் தலைவன்.

இந்தப் படத்தை சித்திரைச் செல்வன் என்பவர் தயாரித்தார். டிஎஸ் ரமேஷ் செல்வன் இயக்கினார்.

இந்தப் படம் குறித்து சமீப நாட்களாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் நடித்த பாஸ்கரனை மோசடி குற்றங்களுக்காக கைது செய்தனர். அதன் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வனும் ரூ 1.20 கோடி மோசடி வழக்கில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரமேஷ் செல்வன் அறிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "'டிஎஸ் ரமேஷ் செல்வன் ஆகிய நான் தமிழ்நாடு திரைப்படக்கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் பெற்றுள்ளேன். எனது முதல் திரைப்படம் உளவுத்துறை, அதற்கு பிறகு ஜனனம் திரைப்படத்தை இயக்கினேன்.

இப்போது கலவரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். அது தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளது.

இதற்கிடையே தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. இரவுபகல் பாராமல் தலைவன் திரைப்படத்தின் பணிகளை கவனித்து வந்தேன். திரைப்பட வேலைகள் அதிகமாக இருந்ததால் என்னால் எனது உடல் நிலையை கவனிக்க முடியாமல் இருந்து வந்தது.

எனது உடல் நிலையை கவனிக்காமல் பணி புரிந்து வந்ததால் எனக்கு சர்க்கரை , பிளட் பிரஷர் மற்றும் மன அழுத்தம் அதிகமாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எனது மருத்துவர் கட்டாய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

எனவே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது இயக்குனராக பணிபுரியும் தலைவன் திரைப்படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்.

இதனை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியா?

பாஸ்கரன், படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கைதாகி வரும் நிலையில், ரமேஷ் செல்வன் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மலையாளத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி!

மலையாளத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி!

தன் தந்தை கங்கை அமரனைப் போலவே இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் தேறியவர் பிரேம்ஜி.

இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், இசையமைப்பது, படம் இயக்குவது போன்றவற்றை நீண்ட காலத் திட்டங்களாக வைத்திருக்கிறார் மனிதர்.

வெங்கட் பிரபு படங்களில் காமெடியனாக வந்தாலும், கிட்டத்தட்ட படத்தின் ஹீரோ லெவலுக்கு ரசிகர்களைக் கவர்ந்துவிடுபவர் பிரேம்ஜி. ஆனால் மற்ற இயக்குநர்களிடன் படங்களில் அவ்வளவாக எடுபடவில்லை.

இந்த நிலையில் தமிழைத் தாண்டி மலையாளத்திலும் கால்பதிக்கிறார் பிரேம்ஜி.

அனில் ராதாகிருஷ்ண மேனன் என்பவர் இயக்கத்தில் பகத் பாஸில் - ஸ்வாதி ரெட்டி நடிக்கும் நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தில் பிரேம்ஜியும் நடிக்கிறார். இது அவரது முதல் மலையாளப் படமாகும்.

இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், "எங்கள் படத்தில் பிரேம்ஜிக்கு சின்ன வேடம்தான். ஆனால் அவருடன் பணியாற்றியது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எதிர்காலத்தில் அவருடன் மேலும் பணியாற்ற ஆசையாக உள்ளது," என்றார்.

 

'எரியறத புடுங்கினா... தானா அடங்கப் போகுது!'

கவுண்டமணி, வடிவேலு இல்லாத கேப்பில் கொடி கட்டிப் பறந்து வரும் காமெடி நடிகர் மீது உச்சகட்ட கடுப்பிலிருக்கிறார்கள் பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்.

காரணம், நடிகர் கிர்ரென்று ஏற்றி வரும் சம்பளம் மட்டுமல்ல, படம் நடித்துக் கொடுத்துவிட்டு, வேறு எதையும் கண்டு கொள்ளாமல் பறந்துவிடுவதுதானாம்.

படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகள், அட.. குறைந்தபட்சம் குழு நேர்காணலுக்குக் கூட வர மாட்டேன் என்கிறாராம்.

சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளரின் பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது, வேறு ஒரு படத்துக்கு கால்ஷீட் தந்திருக்கிறேன். வந்தால், அந்த ஒரு நாள் கால்ஷீட்டுக்கான நஷ்ட ஈட்டைத் தரமுடியுமா என்று திருப்பிக் கேட்டாராம். அது பல லட்சங்களைத் தாண்டுவதால், தயாரிப்பாளர் அமைதியாக திரும்பிவிட்டாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் காரசாரமாக விவாதித்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அப்போது, 'அட ஏன்யா, நாமளே வளர்த்துவிட்டு இப்போ குத்துது குடையுதுன்னு... இனி படத்துக்கு அக்ரிமென்ட் போடும்போதே, விளம்பரத்துக்கும் ஒரு வார கால்ஷீட்னு சொல்லி புக் பண்ணிடுவோம். இல்லன்னா புது காமெடியன்களை உருவாக்குவோம்... எரியிறதைப் பிடுங்கினா தானா அடங்கப் போகுது," என்றாராம் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

 

கடல் நடிகைக்காக ‘வலை’ வீசும் அம்மா

பெரும் எதிர்பார்ப்புகளுடனும், பில்டப்களுடன் வெளியான மீன்பிடிக்கும் இடத்துப் படம் காலை வாரி விட்டதில் பெரும் கவலை நாயகியின் அம்மாவான முன்னாள் நாயகிக்குத் தானாம்.

நாயகனின் மகனான ஹீரோ அடுத்தடுத்து மூன்று படங்களில் புக்காகி விட, பாவம் பாப்பாக்குத் தான் படம் ஒன்றும் சிக்கவில்லையாம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படமும், முன்னொரு காலத்தில் புக்கானதாம்.

மகளின் திறமையைப் பார்த்து, வரிசைக் கட்டி நிற்பார்கள் என எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்ததாம்.

சூர்ய புத்திரரின் நட்சத்திரப்படத்தில், பள்ளி மாணவி வேடம் ஹீரோயினுக்கு என்பதால், இண்டஸ்ட்ரீலயே இவ தான சின்னப் பொண்ணு, சோ இந்த வாசனைச் செடியத் தான் தேடி வருவாங்கனு நினைச்சுட்டு இருந்தாங்களாம்.

ஆனா, வாய்ப்பு வசந்தமான நடிகைக்குப் போய் விட வருத்தத்தில் உள்ளாராம் அம்மா.

ஏன் மேடம், உண்மையச் சொல்லுங்க, நீங்க காலேஜ் கேர்ளா நடிக்கும் போது, உண்மையிலேயே உங்களுக்கு எத்தனை வயசு?

 

காதலனைக் கைப்பிடிக்கும் நடிகை மித்ரா குரியன்!

காதலனைக் கைப்பிடிக்கும் நடிகை மித்ரா குரியன்!

சென்னை: பிரபல தமிழ் / மலையாள நடிகை மித்ரா குரியன் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

மலையாளத்தில் குலுமால், பாடிகார்ட், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர், லேடீஸ் அண்ட ஜென்டில்மேன் போன்ற பல படங்களில் நடித்தர் மித்ரா.

தமிழில் காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கரிகாலன், நந்தனம், கந்தா போன்ற படங்களிலும் நடித்தார்.

அவருக்கும் இசைத்துறை டெக்னீஷியன் வில்லியம் பிரான்சிஸ் என்பவரும் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியில் சந்தித்த போது காதல் மலர்ந்தது.

இதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இப்போது பிருத்விராஜ் ஜோடியாக லண்டன் பிரிட்ஜ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் மித்ரா. தமிழில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வாராம்.

சமீபத்தில் மித்ரா குரியன் பங்கேற்ற ஒரு டிவி ஷோவில் அவரை நேரடியாகக் குறைகூறி ரசிகர் ஒருவர் கடுமையாகப் பேசியது, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

 

ஜியா தற்கொலை வழக்கு: சூரஜ் பன்சாலிக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

ஜியா தற்கொலை வழக்கு: சூரஜ் பன்சாலிக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

மும்பை: நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் சூரஜ் பன்சாலிக்கு ஜாமீன் வழங்கி மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம், மும்பையில் தனது வீட்டில் நடிகை ஜியாகான் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணமாக, ஜியாகான் எழுதியதாக ஆறு பக்க கடிதம் ஒன்றை அவரது தாயாரும், சகோதரியும் போலீஸில் ஒப்படைத்தனர்.

அதில், தனது காதல் தோல்வியே தற்கொலைக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. அதனை ஆதாரமாக வைத்து, நடிகர் சூரஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சூரஜின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையில் ஜியா எழுதியதாக 5 காதல் கடிதங்கள் சிக்கின.

இரண்டு கடிதங்களுக்குமிடையே கையெழுத்து வித்தியாசம் இருப்பதால், அதனை கையெழுத்து நிபுணரிடம் கொடுத்து உண்மையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது மும்பை போலீஸ். இந்நிலையில் சிறையில் இருந்த சூரஜ் பெயில் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்று, ரூபாய் 50,000க்கான பிணையத்தொகையுடன் சூரஜ்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது மும்பை நீதிமன்றம்.

 

நான் தான் பர்ஸ்ட்.. முற்றுகிறது 2 இயக்குநர்களின் சண்டை!

சென்னை: சிறுத்தை நடிகரை வைத்து படம் எடுத்துள்ள இயக்குனர்கள் இருவர் தங்கள் படத்தை தான் முதலில் வெளியிட வேண்டும் என்று மோதிக் கொண்டிருக்கிறார்களாம். தற்போது இந்த மோதல் முற்றியுள்ளதாம்.

சிறுத்தை நடிகர் கிரிக்கெட் சூதாட்ட பட இயக்குனரின் படம் மற்றும் ஒரு கல் இயக்குனர் படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது அவர் 2 படங்களிலும் நடித்து கொடுத்துவிட்டார். படங்களின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து யார் படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்று 2 இயக்குனர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

நான் தான் படத்தை முதலில் ரிலீஸ் செய்வேன் என்று இருவரும் அடம் பிடித்தனர். தற்போது இந்தப் பிரச்சினையை சங்கத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனராம். அதேசமயம், இதற்கிடையே பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்க சிங்கம் நடிகர் தரப்பு பெரும் முயற்சி செய்து வருகிறதாம். என்ன இருந்தாலும் தம்பி நடித்த படமாச்சே...

வெல்லப் போவது சிறுத்தையா அல்லது சாப்பாடா என்பதை வேடிக்கை பார்க்க தயாராகி வருகிறதாம் கோலிவுட்.

 

அஜீத் படத்தின் தலைப்பு என்ன?: இன்று மாலை...

அஜீத் படத்தின் தலைப்பு என்ன?: இன்று மாலை...

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்தின் தலைப்பை இன்று மாலை இறுதி செய்கிறார்களாம்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படத்தின் ஷூட்டிங் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முடிந்தது. படம் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகளும் ஜரூராக நடந்தும் இன்னும் படத்தின் தலைப்பை மட்டும் விஷ்ணுவர்தன் சொல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

படத்தில் அஜீத் ஹேக்கராக வருவதால் தலைப்பு வலை என்று இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை மறுத்துவிட்டனர். அப்படி என்றால் படத்தின் தலைப்பு தான் என்ன, அதை தயவு செய்து சொல்லுங்களேன் என்று ரசிகர்கள் கெஞ்சாத குறையாத வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தலைப்பை வைக்காவிடில் பேசாமல் அஜீத் 53 என்றாவது தலைப்பு கொடுங்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அஜீத் படத்தின் தலைப்பு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறதாம். அப்படி என்றால் விரைவில் தலைப்பை அறிவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். விஜய்யின் தலைவா படத்தை வெளியிடும் வேந்தர் மூவிஸ் தான் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வெளியிடும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

'அன்னக்கொடி'... விஷமிகள் புகுகிறார்கள்.. உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்!

'அன்னக்கொடி'... விஷமிகள் புகுகிறார்கள்.. உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்!

சென்னை: அன்னக்கொடி திரைப்படம் தொடர்பாக சிலர் விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை மக்கள் உணர்ந்து, உண்மை தெரிந்து செயல்பட வேண்டும். அவர்களின் விஷமத்தனத்திற்கு பலியாகி விடக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கோரியுள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா கூறியிருப்பதாவது:

மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை.

நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம்.

"ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்" என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே "கோவலனை கொண்டு வா" என்ற வார்த்தையை தவறாக கொண்டு, " கொன்று வா" என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு.

எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை.

கருமாத்தூர் கோவிலை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும். நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு.

மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் "அன்னக்கொடி" திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் "அன்னக்கொடி" படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.

சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்னக்கொடி படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பார்வர்ட் பிளாக் கட்சியினர் சிலர் நேற்று தேனியில் உள்ள பாரதிராஜாவின் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பினார்கள் என்பது நினைவிருக்கலாம்.