காஜலுக்கும் கல்தா... ஜூனியர் என்டிஆர் ஜோடியானார் த்ரிஷா!


தெலுங்கில் தயாராகும் தம்மு படத்தின் நாயகி வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது.

ஸ்ருதிஹாஸன் நடிப்பதாக இருந்த வேடம் இது. இந்திப் பட வாய்ப்பு கிடைத்ததால், ஜூனியர் என்டிஆருடன் நடிக்க மறுத்துவிட்டார் ஸ்ருதி.

எனவே உடனடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.

இப்போது தம்மு படத்தின் நாயகி வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது. இது ஜூனியர் என்டிஆரின் வழக்கமான பொழுதுபோக்குப் படம் என்பதால், இன்னும் ஒரு ஹீரோயின் தேவைப்பட, அதற்கு கோ மூலம் பிரபலமான கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரிஷாவைப் பொறுத்தவரை இது அவருக்கு மிகப் பெரிய பிரேக் ஆக பார்க்கப்படுகிறது. கல்யாணம், ஓய்வு என்றெல்லாம் பேசப்பட்டு வந்த அவர், இப்போது மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளது திரையுலகில் ஆச்சர்யத்தையும், போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளதாம்!
 

வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்


எஸ். ஷங்கர்

நடிப்பு: விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி, சந்தானம்
இசை: விஜய் ஆன்டனி
ஒளிப்பதிவு: ப்ரியன்
கதை, திரைக்கதை, இயக்கம்: எம் ராஜா
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்
மக்கள் தொடர்பு: ஜான்சன்

மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.

ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!

கதை?

பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).

ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!

ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள்.

கத்திக் குத்தோடு ஜெனிலியா தப்பிக்கிறார். அப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கப் போகும் அபாயம் அவருக்கு தெரிய வருகிறது, தன்னைத் தாக்கிய ரவுடிகள் மூலம்.

எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகள் ஒரு விபத்தில் எரிந்து போகின்றனர். அப்போதுதான் கற்பனையாக வேலாயுதம் என்ற பாத்திரத்தை அவர் உருவாக்குகிறார். இந்த ரவுடிகளைக் களையெடுத்தது வேலாயுதம்தான் என்று பரப்பிவிடுகிறார் ஜெனிலியா.

ஒவ்வொரு விபத்து நேரும் முன்னும் மக்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். காரணம் வேலாயுதம் என்று ஜெனிலியா பரப்ப ஆரம்பிக்க, வேலாயுதம் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தும் அளவுக்குப் போகிறார்கள் மக்கள்.

யதேச்சையாக நடக்கும் இந்த விஷயங்களின் போதெல்லாம், யதேச்சையாகவே சம்பந்தப்படுகிறார் ஒருவர். அவர் பெயரும் வேலாயுதம்தான்... நம்ம ஹீரோ பால்கார விஜய். சிட்பண்டில் போட்ட பணத்தை தங்கை திருமணத்துக்காக எடுக்க கிராமத்திலிருந்து சென்னை வரும் அவர், தனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பிலிருந்து மக்களைக் காக்கிறார்.

சூழ்நிலை, அவரையும் ஜெனிலியாவையும் சந்திக்க வைக்கிறது. தான்தான் மக்களைக் காப்பாற்றினோம் என்பதே தெரியாமல், யாருங்க அந்த வேலாயுதம் என ஒருமுறை ஜெனிலியாவை இவர் கேட்க, 'அது நீங்கதான்' என ஜெனிலியா கூற, ஷாக் அடித்து நிற்கிறார் விஜய். ஆனாலும் இதெல்லாம் வேலைக்காகாது ஆளை விடுங்கள் என கிராமத்துக்கு போகும் விஜய், பின்னர் பொங்கியெழுந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாகிறார்.

அது எப்படி, ஏன் என்பது நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான முடிச்சுகள்!

ஜனரஞ்சகப் படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருந்தே தீர வேண்டும் என்பது நமது ஹீரோக்களும் இயக்குநர்களும் மனதில் வரித்துக் கொண்ட விஷயங்கள். அதற்கு சரியான உதாரணம் வேலாயுதம் படத்தின் இறுதியில் விஜய் ரயிலை நிறுத்தும் அந்தக் காட்சி. சான்ஸே இல்லை... இது அசல் ஆந்திரத்து இறக்குமதி என கட்டியம் கூற இது ஒன்று போதும்!

வழக்கமான மசாலா படம்தான் என்றாலும், காட்சிகளில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருப்பதில் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா, தனித்துத் தெரிகிறார்.

சாதாரணமாகவே காமெடியில் புகுந்து விளையாடுவார் விஜய். உடன் சந்தானம் வேறு சேர்ந்தால் கேட்கவா வேண்டும். ரகளை பண்ணுகிறார்கள்.

அதுவும் உடைமாற்றும் அறையில் ஜெனிலியாவை 'முன்னே' பார்த்துவிடும் விஜய், சண்டைக் கோழியாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவிடம் வேணும்னா நீயும் பார்த்துக்க என தன் முன்பக்கத்தைக் காட்ட, அதற்கு சந்தானம் அடிக்கும் கமெண்ட் அக்மார்க் கவுண்டர் குறும்பு. அரங்கம் சிரிப்பில் வெடிக்கிறது!

தங்கையோடு அவர் பாசமலர் படம் பார்க்கும் காட்சி, இன்னொரு டைமிங் காமெடி வெடி!

முதல்பாதி எப்படி போகிறதென்றே தெரியவில்லை. அத்தனை பரபர வேகம். கலகலப்பான காட்சிகள். ஆனால் பின் பாதியில் ஏக ஆக்ஷன், தேவையற்ற பஞ்ச்கள், அல்லக்கைகள் உசுப்பேத்தும் காட்சிகள் என ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம்.

அதிலும் கடைசி காட்சியில் விஜய் வெற்றுடம்போடு வந்து போகிறார். இந்தக் காட்சியின் அவசியத்தை இயக்குநர்தான் விளக்க வேண்டும். அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், இப்போதைக்கு வெளியில் காட்டினால் ஆபத்து என விஜய்யின் உள்மனது சொல்வது, வசனங்களில் பிரதிபலிக்கிறது!

விஜய்யின் நடிப்பில் வழக்கத்தை விட கூடுதல் துள்ளல். வசன உச்சரிப்பு கூட இதில் வித்தியாசமாக உள்ளது. வரவேற்கத் தக்க மாறுதல்தான்!

இன்னும் ஓரிரு காட்சிகள் அதிகமாக வந்திருந்தால் கூட, ஹீரோ சந்தானமாப்பா என்று கேட்டிருப்பார்கள். மனிதர் அப்படி போட்டுத் தாக்குகிறார்.

ஒரு டெலிவிஷன் பத்திரிகையாளராக ஜெனிலியா ஓகேதான். அவரும் விஜய்யும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு கொடுத்த வேலை ரசிகர்களுக்கு மயக்க மருந்து அடிப்பது. அதற்கு தனது உடல் அழகை கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.

தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் திருப்பாச்சியை நினைவுபடுத்துகின்றன. எம்எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி, பாண்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்துள்ளனர்.

ப்ரியனின் ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் இயக்குநருக்கு மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் அந்த சொன்னா புரியாது பாடலை மட்டும் வேறு பாடகரை பாட வைத்திருக்கலாம்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை.

மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் வேலாயுதம்.

ஆனாலும் எடுத்த வரை, நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் ராஜாவும்!
 

நடிகை அஞ்சலியை மிரட்டுவதா? - கரண் கண்டனம்


தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் நடித்ததற்காக நடிகை அஞ்சலியை மிரட்டுவதா என கண்டித்துள்ளார் நடிகர் கரண்.

நடிகர் கரண்-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். விசி வடிவுடையான் இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள தமிழ் நாடு லயன் பால் அசோசியேஷன் அமைப்பு படத்தின் தயாரிப்பாளர் செந்தில்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கரண் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "குமரி மாவட்டம் கேரள எல்லையில் வாழ்ந்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் வாழ்க்கையை படமாக்கி உள்ளோம். நான் வெட்டோத்தி சுந்தரமாக நடித்துள்ளேன். இதன் படப்பிடிப்பிலேயே சிலர் கலாட்டா செய்தனர். அஞ்சலியை தாக்க முயற்சியும் நடந்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த படம் குமரி மாவட்டங்களின் பெருமையை சொல்லும். எவ்வித அவதூறான காட்சிகளும் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

வருகிற 10-ந்தேதி படத்தை வெளியிட உள்ளோம். இந்த நிலையில் இப்படத்தை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, போராட்டம் நடத்துவது என சிலர் ஈடுபட்டுள்ளனர். எங்களை மிரட்டுகிறார்கள். படத்தில் யாரையும் புண் படுத்தவில்லை. திட்ட மிட்டபடி படம் வெளியாகும்," என்றார்.

"இந்தப் படம் குமரி மக்களையும் மண்ணையும் அடையாளப்படுத்தும் படமாக இருக்கும். தவறாக எதையும் சித்தரிக்கவில்லை," என்றார் உடனிருந்த இயக்குநர் வடிவுடையான்.
 

சில்வஸ்டர் ஸ்டலோன் படப்பிடிப்பில் விபத்து - ஸ்டன்ட் நடிகர் பலி!


சோபியா: பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோனின் 'எக்ஸ்பேண்டபிள்ஸ் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் அவரது ஸ்டன்ட் நடிகர் மரணமடைந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டலோன், இப்போது 'தி எக்ஸ்பேண்டபிள்ஸ்-2' என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படகு சண்டை காட்சி அங்குள்ள ஆக்னியானோவ் அணையில் படமாக்கினர். காட்சிப்படி படகுகள் போலி குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

அதில் ஒரு குண்டு பயங்கரமாக வெடித்ததில் படகு விபத்துக்குள்ளானது. இதில், ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அதே இடத்தில் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். உடனே, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து நடைபெறும் போது நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டலோன் அங்கு இல்லை. வேறு ஒரு இடத்தில் நடந்த படப்பிடிப்பில் இருந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.
 

தொடரும் மோதல்.... ஜீவாவுடன் நடிக்க ரிச்சாவுக்கு சிம்பு தடை!


நடிகர் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதல் இன்னும் முற்றிவிட்டது. இதன் விளைவாக, தனக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடிக்கும் ரிச்சா, ஜீவாவுடன் நடிகக் கூடாது என தடை விதித்துள்ளார் சிம்பு.

'கோ' படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதையில் சிம்புவின் தலையீடு இருந்ததால், அந்த வாய்ப்பை ஜீவாவுக்குக் கொடுத்தார் கேவி ஆனந்த்.

கோ சூப்பர் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது.

தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுஷுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த 'வாமணன்' படத்தை இயக்கியவர்.

ஜீவா ஜோடி என்பதால் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ரிச்சா. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றும் உறுதியாக சொன்னாரம்.

அதை நம்பி பட வேலைகளை இயக்குநர் அகமது தொடங்கிய நிலையில், திடீரென அகமதுவுக்கு போன் செய்த ரிச்சா, ஜீவா ஜோடியாக நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். முதலில் சந்தோஷமாக கால்ஷீட் தருவதாக கூறிய ரிச்சா திடீரென மனம் மாறிய காரணம் புரியாமல் இயக்குனர் குழம்பி போனார்.

இப்போது ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார் ரிச்சா. சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என ரிச்சாவைத் தடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜீவா படத்துக்குப் பதில் வேறு வாய்ப்பு தருவதாகவும் சிம்பு உறுதியளித்துள்ளாராம். எனவே ரிச்சா ஜீவாவை உதறியதாகச் சொல்கிறார்கள்.
 

வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்ட ரஜினி!


உடல்நிலை சரியான பிறகு மூன்று மாதங்கள் ஓய்வெடுத்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் சகஜமாகப் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார்.

உடல்நிலை சரியான பிறகு, ரஜினியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

அப்படியும், தனது ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் தினசரி உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி.

அடுத்து வெளியில் செல்லத் தொடங்கியுள்ளார். முன்பு மும்பைக்கு ஷூட்டிங் போனவர், அடுத்து தெரிந்த நண்பர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.

பொதுவாக எந்தப் புதிய படம் வெளியானாலும் ரஜினி அதைப் பார்த்து பாராட்ட வேண்டும் என திரையுலகினர் எதிர்ப்பார்ப்பது வழக்கம். அவரும் அதைத் தவறாமல் செய்து, இளைஞர்களை ஊக்குவித்துவந்தார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது நின்று போனது. தனது சிஷ்யன் அஜீத்தின் படத்தையே அவர் தன் வீட்டில்தான் பார்த்தார்.

இப்போது அவர் பழையபடி சுறுசுறுப்பாக, இயல்பாக உள்ளதால் மீண்டும் வெளியில் வந்து படம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

அப்படி அவர் பார்த்துள்ள முதல்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ஏழாம் அறிவு. சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் அவர் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்தார். அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார்.

ரஜினியை வரவேற்க படத்தின் ஹீரோ சூர்யாவும் அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.

படம் பார்த்து முடித்த ரஜினி, 'எக்ஸலென்ட்' என்று பாராட்டினார். முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர் கடுமையாக உழைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரை சூர்யாவும் ஜோதிகாவும் வழியனுப்பி வைத்தனர்.
 

எம்ஜிஆர் - ரஜினி பாணியில் 'வேலாயுதம்'! - விஜய்


எம்ஜிஆர், ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால், அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நான் நடிச்ச 52 படங்களை விட 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம் ரவியும் கதை விவாதத்துக்கு வந்தார்...

ஜெயம்ரவிக்கும் நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். அவரும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ராஜாவின் தந்தை எடிட்டர் மோகனும் பல ஆலோசனைகள் சொன்னார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்து கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுவதாக செய்திகள் வருகின்றன. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி," என்றார் விஜய்.

அப்போது ஒரு நிருபர், "உங்கள் படங்களில் எம்ஜிஆர் பாணியில் வந்தது இந்தப் படம்தான் என்பது சரியா?" என்றார்.

உடனே விஜய், "எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவார்கள். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் படம் பண்ணுவது சாதாரணம் அல்ல. அது போல நடிக்க நல்ல கதை அமையணும். அது 'வேலாயுதம்' படத்தில் இருக்கு," என்றார்.

தொடர்ந்து, " ஆரம்பத்தில் நீங்கள் ரஜினி பாணியில் நடிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது எம்ஜிஆர் பாணி என்கிறீர்கள்," என்றனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த விஜய், "எம்ஜிஆர், ரஜினி படங்களின் பார்முலா என்றுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே இதை சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்தியுள்ளேன். மறுக்கவில்லை," என்றார்.

நெட்டில் விடாதீங்க...

மேலும் அவர் கூறுகையில், "கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல.

இந்தப் படம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை மகிழ்வித்துள்ளது. நான் இப்போதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஹேப்பியா சார் என்று கேட்டேன். அவரோ, "கவலையே இல்ல.. படம் சூப்பர் ஹிட். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்.

இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. 'காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். யோஹன் அடுத்த வருடம் ஆரம்பமாகும். சீமான் படம் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜா கூறுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.
 

தாசரி நாராயணராவின் மனைவி தாசரி பத்மா மரணம்


ஹைதராபாத்: பிரபல இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவின் மனைவி தாசரி பத்மா நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

கடந்த 25-ந் தேதி அவர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசமும், தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

கணவர் தாசரி நாராயணராவ் மற்றும் 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

தாசரி பத்மா, திரைப்பட தொழிற்சங்கங்களில் தலைவியாகவும், பட அதிபராகவும் இருந்தார். கணவர் தாசரி நாராயணராவ் இயக்கிய செய்த பல படங்களை அவரே தயாரித்தார். அவர் தயாரித்த 'தாரக பிரபு' என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சிவரஞ்சனி, மேகசந்தேசம், மஞ்சு, ஒசே ராமுலம்மா, கொண்டவீட்டி சிம்மாசனம் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களை அவர் தயாரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் திகழ்ந்தவர் தாசரி பத்மா.

அவருடைய மறைவு தெலுங்கு பட உலகை அதிர்ச்சி அடைய செய்தது. தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொட்சா சத்யநாராயணா ஆகியோர் தாசரி பத்மாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் தாசரி வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.