3/23/2011 10:29:30 AM
வைஜயந்தி மூவீஸ் சார்பில் அஸ்வினிதத் தயாரிக்கும் படம் 'சக்தி'. தெலுங்கில் ரிலீசாகியுள்ள இந்தப் படத்தை தமிழில் 'ஓம் சக்தி' என்று டப் செய்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர், இலியானா நடித்துள்ள மெஹர் ரமேஷ் இயக்கி உள்ளார். மணிசர்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பி.வாசு வெளியிட, கே.எஸ்.ரவிகுமார் பெற்றார். விழாவில், பிரபு பேசியதாவது:
இந்தப் படம் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காகவே பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். ஒரு காலத்தில் படங்கள் செட்டுகளில் உருவானது. ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் வந்தால் ஒரு புறம் எனது தந்தை படம், மறுபுறம் சித்தப்பா எம்.ஜி.ஆர் படம், இன்னொரு புறம் ஜெமினி மாமா, ஜெய்சங்கர் படம் நடந்து கொண்டிருக்கும் மதிய வேளைகளில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். பிறகு ரஜினி, கமல், காலகட்டம் வந்தது. பிறகு சினிமா அரங்கத்தை விட்டு வெளியே போனது. உறவுகளும் பிரிந்தது. சினிமா, மீண்டும் செட்களுக்கு வரவேண்டும். நிறைய படங்கள் செட்டில் எடுக்க வேண்டும். அப்போது 'மாமன் மச்சான்' என்று உறவுகள் மலரும். இவ்வாறு பிரபு பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், பிறைசூடன், ஸ்டன்ட் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.