மறைந்த நடிகர் தங்கவேல் பேரன் அறிமுகமாகும் கலைந்த கனவுகள்!

மறைந்த நடிகர் தங்கவேல் பேரன் அறிமுகமாகும் கலைந்த கனவுகள்!

பெண் பிள்ளைகளைப் போல, ஆண் பிள்ளைகளையும் கவனமாக வளர்க்க வேண்டும். கண்டுகொள்ளாமல் விட்டால் தவறான பாதையில் சென்று வன்முறையில் சிக்கி அவர்கள் அழிந்து கொள்ளும் நிலை ஏற்படும் என்பதைச் சொல்லும் வகையில் புதிய படம் ஒன்று தயாராகிறது.

படத்துக்குத் தலைப்பு கலைந்த கனவுகள். ஓஎஸ்டி குரூப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மறைந்த நடிகர் தங்கவேல் மகன் அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பிரஸ்னேவ் மற்றும் விஜி என இரு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். நாசரின் தம்பி ஜவஹரும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கதை வசனம் எழுதி இயக்குகிறார் அ கபிலன். சத்யமூர்த்தி இசையமைக்கிறார்.

நாமக்கல், பொள்ளாச்சி, திருச்சி, கொடைக்கானல் மற்றும் மூணாறில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்கிறது.

 

விஜய்யின் தலைவா எப்போது ரிலீஸ்?

விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரிலீஸ் தேதி மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் ரம்ஜான் ஸ்பெஷலாக படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய்யின் தலைவா எப்போது ரிலீஸ்?

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்க சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள படம் தலைவா. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.

ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என ஓவர்சீஸ் விநியோகஸ்தர்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை. டால்பி அட்மாஸ் தொழில்நுட்பப் பணிகள் இரப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும், சென்சார் சான்று பெற வேண்டியிருப்பதாலும் மேலும் ஒரு வாரம் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளதாக இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விஜய் - எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு!

விஜய் - எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு!

விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்குமான பனிப்போர் இன்னும் தீரவில்லையாம்.

இருவருமே நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் அதிருப்திகளை வெளியில் கொட்டிவிடுகிறார்களாம்.

சமீபத்தில் நடந்த தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பாதியில் கிளம்பிவிட்டது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 3 அன்று, விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

செலக்டிவ்வாக கொஞ்சம் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்திருந்தனர். "என்ன சார்... கூட்டம் குறைவா இருக்கு. விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லையா?'' என்று ஒரு நிருபர் கேட்க, ''பிறந்த நாள்னாலே சிலருக்குப் பிடிக்க மாட்டேங்குதே... எதுக்கு கூப்பிட்டு கஷ்டப்படுத்தணும்'' என்றார்.

இந்த முறை விஜய் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அதற்காக செய்யப்பட்டிருந்த அத்தனை ஏற்பாடுகளும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு, ஜில்லா ஷூட்டிங்கில் உடன் வேலை செய்பவர்களுக்கு பிரியாணி பரிமாறி பிறந்த நாளை சுருக்கமாக விஜய் கொண்டாடியது நினைவிருக்கலாம்!

 

ஏய் இரண்டாம் பாகம்: நான்கு வேடங்களில் சரத்குமார்?

சரத்குமார் - நமீதா நடித்து சூப்பர் ஹிட்டான ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ்.

இந்தக் கதையில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமீதாவின் கவர்ச்சி ப்ளஸ் காமெடி, வடிவேலுவின் வெடிச் சிரிப்பு மற்றும் சரத்குமாரின் ஆக்ஷன் போன்றவற்றால் இன்றும் பார்க்கப் பார்க்க திகட்டாத பொழுதுபோக்குப் படமாகத் திகழ்கிறது ஏய்.

ஏய் இரண்டாம் பாகம்: நான்கு வேடங்களில் சரத்குமார்?

சிங்கம் 2 படத்தின் வெற்றி, இப்போது ஏய் படத்துக்கும் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் தூண்டியுள்ளது.

அதற்கான பக்கா ஸ்க்ரிப்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ். இந்தப் படத்தில் சரத்குமாரை நான்கு வேடங்களில் நடிக்க வைக்க இயக்குநர் வெங்கடேஷ் முயற்சித்து வருகிறார்.

நமீதா, வடிவேலு ஆகியோரையும் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பது உண்மையா என இயக்குநர் வெங்கடேஷிடம் கேட்டபோது, 'அதற்குத்தான் முயற்சி செய்து வருகிறோம். அவர் தேதிகளைப் பொறுத்துதான் எல்லாமே," என்றார்.

 

குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்கிறார்... நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி பரபரப்பு புகார்: விவாகரத்து

சென்னை: நடிகர் ஆனந்த் பாபுவிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை, ஆகஸ்ட் 20 க்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆனந்த் பாபு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனாவார். ஆனந்த் பாபுவுக்கும், சாந்தி என்பவருக்கும், 1985ல், கிறிஸ்தவ முறைப்படி, திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சாந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், கூறியுள்ளதாவது: திருமணமான பின், மூன்று மாதம் மட்டுமே சந்தோஷமாக இருந்தேன். என்னிடம் அவர் சுமூகமாக இல்லை. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். படப்பிடிப்புகளுக்கு செல்வதாக நினைத்திருந்தேன்.

குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்கிறார்... நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி பரபரப்பு புகார்: விவாகரத்து

என் மாமனார், எங்களை அன்புடன் பராமரித்து வந்தார். அவருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் என் குழந்தைகளுடன் தனியாக வசித்தேன். அப்போதும், அவர் எங்களை கவனிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக, வேலை தேடினேன். ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்தேன். என் சுய சம்பாத்தியத்தில், ஈக்காட்டுத்தாங்கலில் வீடு வாங்கினேன்.

ஆனந்தபாபு கடந்த 8 ஆண்டுகளாக, வீட்டிற்கு வரவில்லை. அவரது தந்தையின் சொத்துகளை விற்றுவிட்டார்; எங்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. மீண்டும் எங்களைத் தேடி வந்தார். குழந்தைகளுக்காக அவரை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அவர் திருந்தவில்லை. குடித்துவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டுவார். என்னையும், குழந்தைகளையும், சித்ரவதை செய்கிறார். எனவே, அவரிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும்'' இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல கோர்ட் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆனந்த் பாபு ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது

ஆனந்தபாபு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலச்சந்தரின் வானமே எல்லை, கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். உடல்நலக்குறைவினால் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் வெளியான, ஆதவன் படத்தில், நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!

பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!  

இந்த மாதம் வெளியாகவிருக்கிற முக்கிய படங்களுள் ஒன்று தனுஷின் மரியான்.

இந்த மாதத்தின் முதல்வாரத்தில் வெளியான சிங்கம் 2 பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியின் காரணமாக, தொடர்ந்து வெளியாக வேண்டிய சில படங்கள் தள்ளிப் போய்விட்டன. எனவே இந்த வாரம் முழுவதும் எந்த போட்டியும் இல்லாமல் கல்லா கட்டிக் கொண்டிருக்கப் போகிறது சிங்கம் 2.

இதற்கிடையில் இந்த வாரமா அடுத்த வாரமா என ஊசலாடிக் கொண்டிருந்த தனுஷின் மரியான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது.

வரும் ஜூலை 19.. அதாவது இந்த வெள்ளிக் கிழமை மரியான் உலகமெங்கும் வெளியாகவது தியேட்டர் லிஸ்டுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

படம் குறித்து அவர் கூறுகையில், "மரியான் படம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மிக அருமையான விஷுவல்ஸுக்கு உத்தரவாதம் தருவேன். ரசிகர்களுக்கு மிகவும் புதிய அனுபவமாக இந்தப் படம் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்னும் மூன்று தினங்களில் வெளியாகவிருக்கும் படத்துக்கு பெரிதாக எந்த விளம்பரமும் இல்லாதது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சூர்யா கொடுத்த பார்ட்டியில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஆட்டம்

சூர்யா கொடுத்த பார்ட்டியில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஆட்டம்

சென்னை: சிங்கம் 2 வெற்றியைக் கொண்டாட சூர்யா கொடுத்த பார்ட்டியில் அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சூர்யா பார்ட்டி கொடுத்தார்.

பார்ட்டிக்கு பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பார்ட்டிக்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் லிங்குசாமி, கௌதம் மேனன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் பிரபு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள அனுஷ்கா ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு துவங்கிய பார்ட்டி மறுநாள் காலை வரை நடந்துள்ளது. பார்ட்டி துவங்கியதில் இருந்து முடியும் வரை அனுஷ்கா ஆர்யாவின் கையை பிடித்துக் கொண்டே சுற்றினாராம். மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து அதிர வைக்கும் ஆட்டமும் போட்டாராம். அவர்களுடன் சேர்ந்து லிங்குசாமியும் டான்ஸ் ஆடினாராம்.

இந்த ஆர்யாவை புரிந்துகொள்ளவே முடியவில்லையே!

 

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள்

சென்னை: சென்னையில் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் சாதனையாளர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஷாரூக்கான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய சினிமா தொடங்கி நூறாண்டுகள் நிறைவடைகின்றன. இதற்கான விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட்டின் சாதனை நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நேரு உள் விளையாட்டரங்கில், மூன்று நாள் நிகழ்ச்சிகளாக நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையினர் பங்கு பெறுகிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் முதல்வர்களுக்கம் நேரில் அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் மலையாளத்துறைக்கும், இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் தெலுங்கு, கன்னடத் திரைத்துறையினருக்கும், மூன்றாவது நாள் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தபால்தலைகள் வெளியிடவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிலிம்சேம்பர் தலைவர் சி கல்யாண் தெரிவித்துள்ளார்.

 

இளையராஜாவும் ஏஆர் ரஹ்மானும் இணையும் பாடல்!

இளையராஜாவும் ஏஆர் ரஹ்மானும் இணையும் பாடல்!

இசை ரசிகர்களுக்கு இது நிச்சயம் தெவிட்டாத இனிய செய்தியாகத்தான் இருக்கும். ஆம்.. இந்திய சினிமா இசையின் ஜாம்பவான்கள் இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கப் போகிறார்கள்.

இது படத்துக்காக அல்ல... இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட!

இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவர் சி கல்யாண் தெரிவித்தார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இந்தப் பாடல் இடம்பெறவிருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.

இருவருமே இந்தக் கோரிக்கையை புன்னகையுடன் கேட்டுக் கொண்டாலும், இன்னும் அதுகுறித்து உறுதியான பதிலைச் சொல்லவில்லையாம்.

இதுகுறித்து கல்யாண் கூறுகையில், "பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்த உன்னதமான பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்தப் பாடல் அரங்கத்தில் நிகழ்த்தப்படும்," என்றார்.