பிறந்த நாளில் பெண் குழந்தை - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ஆன்டனி

பிறந்த நாளில் பெண் குழந்தை - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ஆன்டனி

சென்னை: இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆன்டனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் ஆன்டனி பிறந்த நாளிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ‘நான்' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர் விஜய் ஆண்டனி.

இவர், தற்போது ‘சலீம்', ‘திருடன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருபடங்களுக்கும் இவரே தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.

விஜய் ஆண்டனிக்கு நேற்று பிறந்த நாள். அன்றுதான் அவரது மனைவி பாத்திமா பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தான் பிறந்த நாளிலேயே தனக்கு குழந்தை பிறந்திருப்பது விஜய் ஆன்டனியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே விஜய் ஆன்டனிக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

 

நானிக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்!

நானிக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்!

நான் ஈ நாயகன் நானிக்கு, தன் ஆதர்ச நடிகர் கமல்ஹாஸனைச் சந்திக்க வேண்டும் என்று சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே ஆசை.

ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு, தனது ரோல்மாடலாக நினைத்தது கமல்ஹாஸனைத்தான்.

அப்போதும் கூட கமலைச் சந்திக்கும் வாய்ப்பு நானிக்கு அமையவில்லை.

சமீபத்தில் ஹைதராபாதில் யாஷ்ராஜ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நானிக்கு, பக்கத்து ப்ளோரில் கமல்ஹாஸன் தன் விஸ்வரூபம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தகவல் தெரிந்தது.

இதுதான் கமலைச் சந்திக்க சரியான சமயம் என்று முடிவு செய்து, அனுமதி கேட்டார் நானி.

உடனே வரச் சொன்ன கமல், நானியை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அதுமட்டுள்ள, தன்னுடன் நடித்துக்கொண்டிருந்த நாயகிகள் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்கும் நானியை அறிமுகப்படுத்தியதோடு, சிறிது நேரம் நானி நடிக்கும் படங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாராம்.

அவரது இந்த அன்பும் உபசரிப்பும் பேச்சும் தனக்கு வானில் பறப்பது போன்ற உணர்வைத் தந்ததாக நானி தெரிவித்தார்.

 

மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு

மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு

சென்னை: சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார். அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட புகழ் கீர்த்திக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதாம். கீர்த்தியின் அம்மா ஜெயந்தி ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். அப்போது தான் கீர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

வாழ்த்துக்கள் சாந்தனு.

 

கேரளா சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலுமேனன் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளா சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலுமேனன் ஜாமீன் மனு  தள்ளுபடி

திருவனந்தபுரம்; கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட நடிகை ஷாலுமேனனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் சோலார் பேனல் கருவி அமைத்துத் தருவதாக மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்கில், தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதாநாயர், கேரள டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்த ஊழலில், கேரள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உதவியாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரை பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு வக்கீல், ‘திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராசிக் அலி என்பவரிடம் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிஜு ராதாகிருஷ்ணன் மோசடி செய்ததாகவும், அந்த பணத்தில் ரூ.46 லட்சத்தை ஷாலுமேனன் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். வக்கீலின் வாதத்தைத் தொடர்ந்து நடிகை ஷாலு மேனன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

 

என் தம்பியை கொலை செய்ய முயன்றேன்: நவ்யா நாயர் பகீர் தகவல்

என் தம்பியை கொலை செய்ய முயன்றேன்: நவ்யா நாயர் பகீர் தகவல்  

சென்னை: சிறு வயதில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக நடிகை நவ்யா நாயர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

ராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் கோலிவுட் வந்த கேரளத்து அழகி நவ்யா நாயர். அவர் மாயக் கண்ணாடி, ராமன் தேடி சீதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.

நவ்யா ரசங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் அவர் அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சிறு வயதில் பெற்றோரின் அன்பை பெற பிள்ளைகள் போட்டி போடுவது சகஜம். அப்படி தான் நவ்யாயும் தனது பெற்றோரின் அன்பை பெற தன்னுடைய தம்பியுடன் போட்டி போட்டுள்ளார். அந்த போட்டியால் தம்பி மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கே இதுவரை தெரியாமல் இருந்ததாம்.

 

சென்னையில் கொள்ளை வழக்கில் நடிகர் கைது: கொள்ளையடித்த பணத்தில் ஹீரோவாகியுள்ளார்

சென்னை: சென்னையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் கைது செய்யப்பட்டார். திருடிய பணத்தில் சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சென்னை வட பழனி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தது. இதில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளி செந்தில் என்ற குபேரனை(32) போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். அவருக்கு திருட்டு வழக்குகளிலும் தொடர்பு உண்டு.

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். முதலில் வாய்ப்பு கிடைக்காததால் திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். இருப்பினும் சினிமா தான் எனது கனவு ஆகும். கொள்ளையடித்த பணத்தில் ரூ.20 லட்சத்தை அளித்து சினிமா வாய்ப்பை பெற்றேன். விடலைப்பட்டாளம் என்ற படத்தின் நாயகனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முன்னதாக வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக நடித்துள்ளேன் என்றார்.

இதையடுத்து சினிமா இயக்குனர் ஒருவரையும் மற்றும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம்!

சென்னை: நடிகை மஞ்சுளாவின் உடல் சென்னை போரூரில் உள்ள மின்சார மயானத்தில் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

எம்ஜிஆர், சிவாஜி, ராமாராவ், ரஜினி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த மஞ்சுளா சில தினங்களுக்கு முன் கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.

அடி வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம்!

மஞ்சுளாவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட மஞ்சுளா உடல் போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கான இறுதிச் சடங்குகளை கணவர் விஜயகுமார் செய்தார்.

போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம்!
 

சேனல் யு.எஃப்.எக்ஸ் - ‘ஹை ஆன் டிரெண்ட்ஸ்'

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் லைஃப் ஸ்டைல் சார்ந்த ஒர் நிகழ்ச்சி ‘ஹை ஆன் டிரெண்ட்ஸ்' .

மாறிக்கொண்டே இருப்பது தான் ஃபேஷன் உலகம். பொட்டிக், பேஷன் ஷோக்கள்,

சேனல் யு.எஃப்.எக்ஸ் - ‘ஹை ஆன் டிரெண்ட்ஸ்'

புதிய ஷாப்பிங் மையங்கள், புதிய உற்பத்தி பொருட்களின் அறிமுகம் என ஷாப்பிங் தொடர்பான தற்கால நிகழ்வுகளை பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி இது.

அழகுணர்வோடு ஆடை அணிவோருக்கு அவ்வப்போது நிலவும் ஃபேஷன் டிரெண்டு குறித்த தகவல்களை ஹை ஆன் டிரெண்ட்ஸ்' நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சேனல் யு.எஃப்.எக்ஸ் - ‘ஹை ஆன் டிரெண்ட்ஸ்'

இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 1, வியாழக்கிழமை மாலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகிறது . இதன் மறு ஒளிபரப்பை ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரையும், ஆகஸ்ட் 5, திங்கட்கிழமை காலை 11.30 முதல் 12.00 மணி வரையும், மற்றும் ஆகஸ்ட் 7, புதன்கிழமை மாலை 4.00 மணி முதல் 4.30 வரையும் மறுஒளிபரப்பாக பார்க்கலாம்.