சென்னை: தமிழின் முன்னணி திரைப்பட நிறுவனங்களின் கவனம் தற்போது ஆங்கிலப் படங்களின் மீது திரும்பியிருப்பதால் ஆங்கிலப் படங்களின் தமிழ்நாடு உரிமையை வாங்க தற்போது கோடிக்கணக்கில் பணம் செலவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
எல்லாம் இந்த அவென்ஜெர்ஸ் மற்றும் பாஸ்ட் பியுரியஸ் படங்களால் ஆரம்பித்தது. தற்போது ஜூன் மாதம் 12 ம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தை வாங்க திரைப்பட நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
முன்பு லட்சக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய ஆங்கிலப் படங்களின் உரிமை தற்போது கோடிக்கணக்காக மாறியிருக்கிறது. ஜுராசிக் வேர்ல்ட் படத்தை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டதில் தற்போதைய விலை இரண்டரைக் கோடியாம்.
இவ்வளவு விலை கொடுத்து வாங்க என்ன காரணம் என்று விசாரித்தால் ஆங்கிலப் படங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதால் கண்டிப்பாக நஷ்டம் இல்லை,விளம்பரம் செய்ய தேவை இல்லை படம் நன்றாக இருந்தால் ஒன்றிலிருந்து ஒன்றரைக்கோடி வரை லாபம் பார்த்து விடலாம் போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள்.
இந்த படம் யார் கைக்கு செல்லும் என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.