'கதை ரெடி பண்ணுங்க!'- ஷங்கருக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

'கதை ரெடி பண்ணுங்க!'- ஷங்கருக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

சென்னை: கோச்சடையான் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்த ரஜினி, அதற்கான கதையை தயார் செய்யுமாறு ஷங்கரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது கோச்சடையான் படத்தின் வேலைகளை முடித்துவிட்டார். அடுத்து அவர் ஈராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்குத்தான் படம் பண்ணுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் ரஜினிக்கு எவ்வளவு கொடுத்தாவது தங்கள் நிறுவனத்துக்காக ஒரு படம் தயாரிக்க காத்திருக்கிறது.

தயாரிப்பாளர் யார் என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், முதலில் இயக்குநரைத் தீர்மானிக்கலாம் என முடிவு செய்த ரஜினி, உடனடியாக ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.

ஐ பட வேலைகள் குறித்து விசாரித்த ரஜினி, அது டிசம்பருக்குள் முடிந்துவிடும் என்பதைத் தெரிந்து கொண்டு, உடனடியாக தனக்காக ஒரு கதையைத் தயார் செய்யுமாறு கூறினாராம்.

ஷங்கருக்கு இது ஆனந்த அதிர்ச்சியாகிவிட்டதாம். காரணம், நண்பன் முடிந்த பிறகு ரஜினியை மீண்டும் இயக்கக் காத்திருந்தார் ஷங்கர். ஆனால் ரஜினி உடல்நிலை, கோச்சடையான் படம் போன்றவை காரணமாக, ஐ படத்தை ஆரம்பித்துவிட்டார்.

 

வெள்ளித்திரையில் அறிமுகமாகும் டாடி எனக்கு ஒரு டவுட்டு ஜோடி!

வெள்ளித்திரையில் அறிமுகமாகும் டாடி எனக்கு ஒரு டவுட்டு ஜோடி!

சென்னை: டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சரவணன்- செந்தில் இணை பெரிய திரையில் காமெடியன்களாக கலக்க வருகிறார்கள்.

ஆதித்யா சேனலில் வரும் டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சி மிகப் பிரபலம். இதில் திண்டுக்கல் சரவணன் டாடியாகவும் செந்தில் மகனாகவும் வருவார்கள். டாடி ஏதாவது தத்துவம் அல்லது பழமொழியைச் சொல்ல, அதைக் கலாய்த்து சந்தேகம் கேட்பது மகனின் வழக்கம்.

கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கு வாண்டுகள் மத்தியில் ஏக வரவேற்பு.

டாடி எனக்கு ஒரு டவுட் சரவணனும் செந்திலும் இப்போது பெரிய திரையில் வெண்ணிலா வீடு என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்கள்.

படத்தின் அறிமுக விழாவில் இருவரும் பங்கேற்றுப் பேசினர். சரவணன் பேசுகையில், "டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சி பார்த்துவிட்டு இந்த வாய்ப்பை எனக்கு இயக்குநர் வெற்றிமகாலிங்கம். என்னோடு செந்திலையும் சேர்த்தே இந்தப் படத்தில் காமெடியன்களாக அறிமுகப்படுத்தியுள்ளனர். மிக நல்ல வித்தியாசமான கதை. இதில் அவ்வப்போது நாங்களும் ஏதாவது புதிய காட்சிக்கான ஐடியா கொடுப்போம். அதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொள்வார் இயக்குநர். ஆனால் கடைசி வரை எந்த ஐடியாவையும் அவர் சேர்க்கவில்லை. தான் நினைத்ததை எடுத்து முடித்தார்," என்றார்.

 

மம்முட்டி மகனுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!

தமிழில் அறிமுகமாகும் மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.

‘காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதால் அடுத்து இவர் இயக்கப்போகும் படத்திற்கும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மம்முட்டி மகனுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!

தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க நஸ்ரியா நசீம் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் தற்போது ‘சலால மொபைல்ஸ்' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

 

மதகஜராஜாவை தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்த விஷால்!

சென்னை: ‘மதகஜராஜா' படத்தை தானே வெளியிட முயன்ற விஷால் அதில் ஏக சிக்கல் இருப்பது தெரிந்ததும், படத்தை அதன் தயாரிப்பாளர்களான ஜெமினி நிறுவனத்திடமே திருப்பிக்கொடுத்து விட்டார்.

விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கிய படம், ‘மதகஜராஜா.' இதில் விஷாலுக்கு ஜோடிகளாக அஞ்சலியும், வரலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மதகஜராஜாவை தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்த விஷால்!

படம் முடிவடைந்து 8 மாதங்களாக வெளிவராததால், படத்தை வெளியிட விஷால் முன்வந்தார். இதற்காக ஒரு பெரும் தொகை கொடுத்து அந்த படத்தை வாங்கி, தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

நஷ்ட ஈடு கேட்டு நெருக்கடி

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ‘‘ஜெமினி நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த 3 படங்களில் வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை சரி செய்த பிறகே படத்தை வெளியிட அனுமதிப்போம்'' என்று வினியோகஸ்தர்கள் கூறினார்கள்.

இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

வழக்கு

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சந்தானம் ‘மதகஜராஜா' படத்துக்காக தன்னிடம் வாங்கிய ரூ.60 லட்சம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை, படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், ‘மதகஜராஜா' படத்தை வருகிற 10-ந்தேதி வரை வெளியிட தடை விதித்தார்.

திருப்பி கொடுத்தார்

‘மதகஜராஜா' படத்துக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த படத்தை தயாரிப்பாளரிடமே விஷால் திருப்பிக்கொடுத்து விட்டார். தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தந்துவிடுமாறு கூறிவிட்டார்.

வருகிற 13-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ஜெமினி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்தப் படத்துக்காக கடந்த ஒரு மாதமாக பெரும் விளம்பரம் செய்து வந்தார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹோட்டலில் பரோட்டோ போடும் நடிகையின் தந்தை

சென்னை: இந்த ஆண்டு பத்தாவது படித்து முடித்த மேனன் நடிகையின் தந்தை உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் பரோட்டா போடுகிறாராம்.

கேரளாவில் இருந்து வந்து தமிழில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சிம்பிள் அழகி மேனன். இந்த ஆண்டு தான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரும், அவரது அம்மாவும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சொகுசாக இருக்கின்றனர். ஆனால் நடிகையின் அப்பாவோ உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் பரோட்டா போடுகிறாராம்.

தினமும் பழைய சைக்கிளில் சென்று பரோட்டா போட்டுவிட்டு வருகிறாராம். நடிகையின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தாய்க்குலம் கணவரை விரட்டிவிட்டதாம். ஆனால் நடிகைக்கோ அப்பா மீது ஒரே பாசமாம். அதனால் அம்மாவிடம் நமக்கு தான் இப்பொழுது வசதி வாய்ப்பு வந்துவிட்டதே அப்பாவை நம்முடன் சேர்த்துக்கொள்வோமே என்று கூறி வருகிறாராம்.

ஆனால் அம்மாவோ மகள் கூறியதை கேட்டும் கேட்காதது போன்று உள்ளாராம்.

 

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு: விஜய் அறிக்கை

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு: விஜய் அறிக்கை

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தான் எந்த குறிப்பிட்ட அணியையும் ஆதரிக்கவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் ஒரு அணிக்கு நடிகர் விஜய்யின் ஆதரவு உள்ளதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நான் ஹைதராபாத்தில் நடக்கும் ‘ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அணியை நான் ஆதரிப்பதாக வதந்தி பரவியுள்ளது. பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட வண்ணம் உள்ளனர். நான் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டு அணிகளிலும் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் உள்ளனர். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நான் பொதுவானவன். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.