விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

சென்னை: ஹிந்தியில் ‘ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கோத்ரா என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இப்படத்தில் இவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கிறார்.

இளைய தளாபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா படத்தில், அவருடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த விஷயம் தான். இந்நிலையில், கோத்ரா என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடிக்க இருக்கிறாராம் பரத்.

பரத் ஏற்கனவே மலையாள மக்களுக்கு அறிமுகமானவர் தான். அவர் நடிப்பில் வெளிவந்த ‘போர் த பீப்பிள்' படம் கேரளாவில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் கோபிகா பரத்தின் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் அனுபவம் குறித்து பரத் கூறுகையில், ‘இது ஒரு நல்ல அனுபவம். மோகன்லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடிப்புத் திறமையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. கேயார் வெற்றி, தாணு தோல்வி

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. கேயார் வெற்றி, தாணு தோல்வி

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் கேயார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தயாரிப்பாளர் தாணு தோல்வியடைந்தார்.

2013-2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், குஷ்பு என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் கேயார் 449 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட கலைப்புலி தாணு 252 வாக்குகளும் பெற்றனர். இதனால் கேயார் வெற்றி பெற்றார்.

இரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407 வாக்குகளுடனும், டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

இரு செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இப்பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார்.

மொத்தத்தில் கேயார் அணியினரே பெரும் வெற்றியைப் பெற்றனர்.