சென்னை: சினிமா விமர்சனம் என்ற பெயரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு டிவியில் திட்டிக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது, என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
மாஸ்டர் மகேந்திரனை நினைவிருக்கிறது... இப்போது வளர்ந்து இளைஞர் மகேந்திரன் ஆகிவிட்டார்
அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் விழா. பாரதிபாலகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேருக்கு நேராகவே விமர்சித்தார், அதாவது கோட் சூட் போட்டுக் கொண்டு முன்பு டிவியில் அவர் திரைவிமர்சனம் செய்ததற்காக!
கேஎஸ் ரவிக்குமார் பேச்சிலிருந்து...
மாஸ்டர் மகேந்திரனை ‘நாட்டாமை' படத்தில் 3 வயசு பையனா அறிமுகப்படுத்தினேன். இப்போ ஹீரோவா வளர்ந்திருக்கான். வாழ்த்துகள்.
இந்தப்படத்தோட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை எனக்கு முதல்ல சுத்தமா பிடிக்காது. ஏன்னா ஒரு டிவியில கோட் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு என்னமோ சினிமாவையே அவர்தான் கண்டுபிடிச்ச மாதிரி பேசுவார். ரொம்ப கடுப்பா இருக்கும்.
அது எவ்ளோ நல்ல படமா இருந்தாலும் கடைசியில தெனாலி - சுண்டெலி, பஞ்ச தந்திரம் - மாய மந்திரம்னு திட்டுவாரு. நல்லா ஓடற படத்தைக் கூட இப்படித்தான் கமெண்ட் அடிப்பாரு.
அதையெல்லாம் இவரே எழுதினாரா அல்லது வேற ஆள் எழுதிக் கொடுத்துப் படிச்சாரா தெரியல.. ஆனா கோபம் இவர் மேலதான்.
ஆனா அவரே ‘சுப்ரமணியபுரம்' படத்தில் அத்தனை பேரையும் தலையாட்ட வெச்சிட்டார். அவருக்குள்ள இப்படி ஒரு இசைத் திறமை இருப்பது தெரியாத காலகட்டத்தில் அவரை வெறுத்தேன். இப்போது ரசிக்க வச்சிட்டார்.
நல்லவேளையா மியூசிக் டைரக்டரா ஆனதுக்கப்புறம் அவர் அந்த கோட்டை கழட்டி வெச்சிட்டு வந்திருக்கார், நல்லது," என்றார் ரவிக்குமார்.
இதையெல்லாம் என்ன ரியாக்ஷன் காட்டுவது என்றே தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.