சென்னை: சில விஷயங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.. அந்த வகையில் தமிழ் சினிமா காமெடிக்கு புது இலக்கணம் வகுத்தவை என்று சில அம்சங்கள் உள்ளன. அந்தக் கூட்டணிக்கு எப்போதுமே செம வரவேற்புதான்.. பார்த்ததும் ஒன்றிப் போய் சிரிக்க வைக்கும் வெற்றி பார்முலா அவை.
பழைய கவுண்டமணி செந்தில் படங்களில் அவர்களுடன் கூடவே ஒரு குரூப்பும் கூட வரும். வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, குள்ளமணி என சிலர். அந்தக் கூட்டணி வரும் காட்சிகள் எல்லாமே பட்டையைக் கிளப்பியவை. இன்றும் கூட வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைக்கும் குரூப் அது.
அதேபோல வடிவேலு படம் என்றால் அவருக்கென்று ஒரு குரூப் உள்ளது. அந்தக் குரூப் காமெடியை இப்போது பார்த்தாலும் சிரித்து சிலிர்க்கலாம்.
வடிவேலு, சிங்கமுத்து, அல்வா வாசு, தம்பி ராமையா, போண்டா மணி... என. இந்தக் குரூப் சேர்ந்து அதகளப்படுத்திய காட்சிகள் எத்தனை.. எத்தனை.. ஒவ்வொன்றும் ஒரு சுகம்.. ஒவ்வொன்றும் ஒரு ரகம்.
அந்தக் கூட்டணி இப்போது இல்லாமல் போய் விட்டது. சிங்கமுத்து இல்லை, தம்பி இல்லை.. அல்வா வாசுவும் இன்னும் சிலரும் மட்டுமே உள்ளனர். ஆனால் வடிவேலு நடிக்காமல் வனவாசம் இருந்து வந்ததால் இந்தக் கூட்டணியும் சேரும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில் எலி படம் வருகிறது.. கோடை விடுமுறைக்கு வயிறுகளை குடைந்து குடைந்து சிரிக்க வைக்க வருகிறது.. இந்த படத்தின் சில ஸ்டில்களைப் பார்த்தபோது அந்த பழைய கூட்டணியின் நினைவலைகள் வந்து போயின.
இந்த எலி படத்தில் "அடி விழுதுகள்" இரண்டு பேர் "அண்ணனுடன்" அளவளாவும் காட்சி ஒன்றைப் பார்க்க முடிந்தது.
ஒருவர் வெங்கல் ராவ்.. இன்னொருவர் கடலில் கூட ஜாமீன் இல்லைன்னுட்டாங்க புகழ் பாவா லட்சுமணன். இவர்கள் இருவரும் வடிவேலுவுடன் நடித்த அத்தனை காட்சிகளும் அட்டகாசமானவை.. அந்த பஸ் காமெடி... கந்தசாமி படத்தில் வரும்... தேங்காய் வாங்கப் போய் திகைப்பிக்குள்ளாகி சிக்கி "நசுங்கி" புலம்பும் காமெடி... நிறைய நிறைய.
எங்கேயடா போயிருந்தீர்கள் என் கண்மணிகளா என்று வடிவேலு பாணியில் கேட்டு இந்த ஸ்டில்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்வோம்!