மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!


சுற்றி குடிசைகளாக இருக்கும்போது நாமும் குடிசைதான் கட்டணும் என்று தனக்கு சூப்பர் ஸ்டாரும் தனது மாமனாருமான ரஜினிகாந்த் கூறியதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அவரது இந்த பாப்புலாரிட்டியால் வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். கொலவெறிக்குப் போட்டியாக ஒருபாட்டை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு என்னென்னமோ காமெடி செய்து வருகிறார்கள்.

ஆனால், 'கூல்' தனுஷுக்கோ கேட்காமலே தேடி வருகிறது கவுரவங்கள். ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், 'கொலவெறி பாடலுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும், மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த அளவுக்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும்தான் காரணம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

'உங்கள் மாமனார் (ரஜினிகாந்த்) சமீபத்தில் உங்களுக்கு சொன்ன அறிவுரை என்ன?' என்று அவரிடம் கேட்டதற்கு, "சமீபத்தில் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொல்லவில்லை. என் கல்யாணம் நடந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார். 'சுற்றி குடிசைகள் இருக்கும்போது, நாமும் குடிசைதான் கட்டணும்'' என்றார். அதற்கு அப்புறம் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை" என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.

உங்கள் மாமனாரும் நீங்களும் சேர்ந்து நடிக்கும் காலம் வருமா? என்ற கேள்விக்கு, "அதை சார் (ரஜினிகாந்த்)தான் சொல்லணும். இதை நான் மருமகனாக சொல்லவில்லை. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில், நானும் ஒருவன். அவரை பிரமிப்பாக பார்க்கிற கூட்டத்தில், நானும் ஒருவனாக சொல்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.
 

பாங்காக் போகும் விஷால் - த்ரிஷா ஜோடி!


சமரன் படத்துக்காக பாங்காக் போகின்றனர் நடிகர் விஷாலும் ஹீரோயின் த்ரிஷாவும்.

சிம்புவின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பெரும் தோல்வியைத் தழுவிய ஒஸ்தி படத்துக்குப் பிறகு பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் புதிய படம் சமரன். விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தந்த திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை இயல்பானது. ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அதனால் அவன்படும் பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பார்க்காத புதிய அனுபவத்தை இந்தப் படம் உங்களுக்குத் தரும் என்கிறார் இயக்குநர் திரு. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் நடந்தது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் ஐரோப்பாவின் சரித்திர பிரசித்தி இடங்களில் சண்டைக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
 

நடிகை பிரதியூசா கொலை வழக்கு: காதலருக்கான தண்டனை 2 ஆண்டாக குறைப்பு


ஹைதராபாத்: பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. ஆனால், அபராத தொகையை மட்டும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மனுநீதி, தவசி, உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரதியூஷா. இவர், கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஷம் அருந்திய நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிரதியூஷாவுடன் விஷம் அருந்தியதாக, அவருடைய காதலர் சித்தார்த்த ரெட்டியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார்.

பிரதியூஷாவும், சித்தார்த்த ரெட்டியும் குழந்தை பருவத்தில் இருந்தே அறிமுகமானவர்கள். சித்தார்த்த ரெட்டி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சித்தார்த் ரெட்டியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சித்தார்த்த ரெட்டி கூறினார். அந்த திட்டத்தை செயல்படுத்தியபோது, பிரதியூஷா உயிரிழந்தார். சித்தார்த்த ரெட்டி பிழைத்துக்கொண்டார்.

5 ஆண்டு தண்டனை

முதலில், இதை மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் கொலை வழக்காக மாற்றினர். பிறகு, இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

நடிகை பிரதியூஷாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும் சித்தார்த்த ரெட்டி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஐதராபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தண்டனை குறைந்தது

இந்த தீர்ப்பை எதிர்த்து, சித்தார்த்த ரெட்டி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரவிசங்கர், சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை 2 ஆண்டு தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். அபராத தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்தும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் காஜல் காட்சிகளை பயன்படுத்த தடை!


பிரபல நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் காஜல் அகர்வாலின் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

நான் மகான் அல்ல, மகதீரா படங்களின் நாயகியான காஜல், பிரபல நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் விளம்பர படத்தில் நடித்திருந்தார். ஒப்பந்தம் முடிந்த பின்னும் அந்த நிறுவனம் காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்தை பயன்படுத்தியது.

இதை எதிர்த்து நடிகை காஜல்அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால். அதில், "ஒப்பந்தம் முடிந்த பிறகும் நான் நடித்த விளம்பரத்தை அந்த தேங்காய் எண்ணெய் நிறுவனம் பயன்படுத்துகிறது. இதனால் நான் மற்ற நிறுவனங்களுடன் செய்து கொண்ட விளம்பர ஒப்பந்தங்கள் பாதிக்கப்படுகிறது.

அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே நான் நடித்த விளம்பரத்தை பயன்படுத்த அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் எனக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ரூ.2 .5 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வினோத் கே.சர்மா விசாரித்து நடிகை காஜல் அகர்வால் இடம் பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோவை விளம்பரத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் இல்லாத விளம்பரத்தை பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து நடிகை காஜல் அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்தார்.

அப்பீல் மனுவை நீதிபதிகள் பானுமதி, மாலா ஆகியோர் விசாரித்து தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்காக காஜல் அகர்வால் நடித்து கொடுத்த விளம்பர படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.
 

அட்டகத்தி - சென்னையின் புறநகர வாழ்க்கையை மையப்படுத்தி வரும் முதல் படம்!


தமிழ் சினிமாவில் தொன்னூறு சதவீதப் படங்கள் மதுரை அல்லது தூத்துக்குடி பின்னணியில்தான் வருகின்றன. அதை மீறி வரும் படங்களில் வட சென்னை- காசிமேடு - மீனவர் வாழ்க்கை என காட்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் முதல் முறையாக மதுரை, வட சென்னை பின்னணி இல்லாமல், சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்குகளை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு அட்டகத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியிருப்பவர்கள்தான் என்பதால், கலவையான பேச்சு வழக்கு, தனித்த வாழ்க்கை முறை என இருப்பார்கள்.

இதைத்தான் அட்டகத்தியில் படம்பிடித்துள்ளாராம் இயக்குநர் பா இரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர். அட்டகத்திதான் இவருக்கு முதல் படம்.

ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோ ரோலுக்கு ஆறு புதுமுகங்களை தேர்வு செய்து, அவர்களில் இறுதியாக தினேஷ் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். புதுமுகம் ஸ்வேதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு தாய்மொழி கன்னடம். ஆனால் தமிழ் சரளமாகத் தெரியும் என்பதால் தேர்வு செய்தார்களாம்.

மானாட மயிலாட ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னையின் புறநகர்களான பழந்தண்டலம், பூந்தண்டலம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர் என சுற்றிச் சுற்றி படமாக்கியுள்ளார்களாம்.
 

ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிகர்கள்!


ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் இருந்தவர்களுக்கு இலவசமாக தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இது அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பினர் நிருபர்கள். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதிலளிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைமுகமாக தாக்கும் விதத்தில், "கறுப்புப் பணத்தில் கட்டிய மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடக்கிறது. அப்படியும்கூட 10 பேர்தான் அங்கே வந்திருக்கிறார்கள். மண்டபத்தைக் கொடுத்தவருக்கு இது புரிந்தால் சரி", என்று கிண்டலடித்திருந்தார்.

இளங்கோவனின் இந்த பதிலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், அவரது உருவர் படங்களை எரித்தனர் ரசிகர்கள்.

“தலைவர் நல்ல விஷயம் என நம்பி இந்த மண்டபத்தைக் கொடுத்தார். அவருக்கு வேறு உள்நோக்கமில்லை. ஊழல் ஒழிய வேண்டும் என்பது மட்டும்தான் தலைவர் ரஜினியின் இலக்கு. ஹஸாரே என்றல்ல, யார் இந்த நல்ல காரியத்தில் இறங்கினாலும் அவர் ஆதரவு கிடைக்கும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல், ரஜினி அவர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து கட்டிய ஒரு மண்டபத்தைப் பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கேவலமாகப் பேசியதை ரசிகர்களான எங்களால் பொறுக்க முடியவில்லை.

இந்தியத் திரையுலகிலேயே நேர்மையாக அரசுக்கு வரி செலுத்துபவர்களில் முதலில் இருப்பவர் எங்கள் தலைவர் என்பதை இளங்கோவன் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்,” என்றார், இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சோளிங்கர் என் ரவி.
 

'மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3'! - தனுஷ்


மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3' என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

கொலவெறி பாடலுக்குப் பின் படுபாப்புலராகி, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததற்கும், என் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குநர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்க சண்டை போட்டுக்கொண்டதுண்டு. இது, எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான்.

ஐஸ்வர்யா தொடர்ந்து இனி படங்கள் இயக்குவார். ஆனால், அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். வெளி கம்பெனிகளுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார்.

இதுவரை பல நடிகைகளுடன் நடித்துவிட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர். மற்றபடி, 'கெமிஸ்ட்ரி' என்று சொல்கிறார்களே, அதன்படி நயன்தாரா பொருத்தமானவர்.

எனக்கு கிடைக்கும் பெருமைகள், விருதுகள் போன்றவற்றுக்குக் காரணம், எதையும் எதிர்ப்பார்க்காமல் நான் என் வேலையைச் செய்வதுதான்.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வார்கள். அதன்படி, நான் என் வேலையை செய்கிறேன். எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்ய வேண்டும். என் வேலைகளை சந்தோஷமாக செய்கிறேன். கடவுளும், மக்களும் கொடுக்கும் வரவேற்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
 

முதல் கெட்டப் போடுகிறார் விஜய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை எந்த வித கெட்டப்பும் போடாத இளைய தளபதி விஜய், முதன் முறையாக 'துப்பாக்கி' படத்தில் வித்தியசமான கெட்டப் போடுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் 'துப்பாக்கி'. படத்தின் முதல் கட்டம் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தனக்கு புதிய இமேஜை ஏற்படுத்தி தரும் என விஜய் தெரிவித்துள்ளாராம். அதுமட்டுமின்றி குறித்த நேரத்தில் படத்தை தர வேண்டும் என்று நினைத்த விஜய் அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.


 

கோலிவுட்டில் பிடித்தாட்டும் டைட்டில் பிரச்சனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீபத்தில், கோலிவுட் படங்களை எடுப்பதை விட அந்த படத்திற்கு ¬ட்டடில் வைப்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறதாம். முன்னதாக வேங்கை டைட்டிலுக்கு ஹ‌ரியும், அறிமுக இயக்குனர் ஒருவரும், வாதம் செய்து வந்தனர், இது போல் விஜயை வைத்து 'மதுர' படத்தை இயக்கிய மாதேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மிரட்டல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். வினய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் முதலில் 'தில்லு முல்லு' என வைத்தார் மாதேஷ். ஆனால் பெரிய பார்ட்டிகள் இந்த டைட்டிலை வைக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் படத்தின் டைட்டிலை 'மிரட்டல்' என்று மாற்றி அமைத்தார் மாதேஷ்.


 

மன்மோகன் சிங்குக்கும் பிடித்த 'கொலவெறி'... தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!


ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார்.

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.
 

'முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மெளனம்... ஹஸாரே போராட்டத்துக்கு மட்டும் ரஜினி ஆதரவா?'


தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல்லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓடி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத்துள்ளனர்.

சினிமா தவிர்த்து சமூக- அரசியல் ரீதியாக ரஜினியின் நடவடிக்கைகள் தொடர்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என எந்த முன்னணி நடிகரும் தமிழகத்தில் இப்படியொரு விஷயமே நடப்பது போல காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் 'கெழவிய தூக்கி மனையில் வை' என்ற வழக்குச் சொல்லை மெய்ப்பிப்பது போல, ஹஸாரேவின் உண்ணாவிரதத்துக்கு ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகக் கொடுத்துள்ளார் ரஜினி இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவு உண்டு என்றும் அறிவித்துள்ளார் (ஆனால், இதில் 10 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!).

இதுதான் முல்லைப் பெரியாறுக்காகவும் கூடங்குளத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

'கேரளத்தின் வஞ்சகத்தனத்தால் தமிழகத்தின் ஒரு பகுதியே வறண்டு பாலையாகும் அபாயம் உள்ளது. தமிழகமே ஒட்டுமொத்தமாக கொந்தளித்து எழுந்துள்ள இந்த சூழலில், அதுகுறித்து வாய் திறக்காத, தமிழர்களின் உரிமைகளுக்காக கிஞ்சித்தும் குரல் கொடுக்காத ரஜினி, நாடாளுமன்ற அமைப்பையே கேலிக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் ஹஸாரேவுக்கு ஆதரவளிப்பதா?', என முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுவினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

டெல்லிக்குப் போய் ஹஸாரேவுக்கு ஆதரவு காட்டத் தெரிந்த விஜய்க்கு இங்கிருக்கும் தேனிக்குப் போய், முல்லைப் பெரியாறு அணை காக்க போராடும் நம் உறவுகளுக்கு குரல் கொடுக்கத் தெரியாதா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர் முல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள்.

ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நபர்களுக்கு ரஜினி தன் மண்டபத்தைக் கொடுத்திருப்பதற்கு திரையுலகினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதிராஜா, தங்கர் பச்சான் போன்றவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ரஜினியின் ரசிகர்களே கூட இதை பெரிதாக வரவேற்கவில்லை என்பது, இந்த உண்ணாவிரதத்துக்கு வந்த 10 பேரைப் பார்த்தபோதே புரிந்துவிட்டது.
 

3 வார யோசனைக்குப் பின் நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!


கன்னடப் படத்துக்காக உடலில் ஒட்டுத் துணியின்றி நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார் முன்னணி நடிகை பூஜா காந்தி.

தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் 'தண்டுபால்யா' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமாகியுள்ளது.

இது ஒரு க்ரைம் த்ரில்லர். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "நான் இயக்கும் முதல் க்ரைம் த்ரில்லர் இந்தப் படம்.

தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதை இது. 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இதைப் படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன்.

3 வார யோசனைக்குப் பிறகு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார். சமீபத்தில் அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. யூனிட் ஆட்களில் சிலர் மட்டும் இருக்க, ரகசியமாக படமாக்கினோம். பயமோ கூச்சமோ இல்லாமல் நடித்தார் பூஜா. இந்தக் காட்சியை அருவருக்கும்படி இருக்காது," என்றார்.
 

எனக்கு நிறைய பாய் ப்ரெண்ட்ஸ்! - செரீன்


தமிழில் சீஸனுக்கேற்ப வந்து போகும் நடிகைகளில் ஒருவர் செரீன். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகமானவர், தொடர்ந்து பரபரப்பாக சில படங்களில் நடித்தார்.

பின்னர் திடீரென காதல், பெற்றோருடன் தகராறு, தனிக்குடித்தனம் என்று போனவர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். உற்சாகம் போன்ற சில படங்களுக்குப் பின் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மீண்டும் இப்போது அபாயம் படத்தின் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ளார்.

இந்தப் படம் தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் வெளியான டேஞ்சர் என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பாகும்.

தான் மீண்டும் நடிக்க வந்தது குறித்து செரீன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "படிப்பதற்காக இத்தனை நாள் வெளிநாட்டுக்குப் போயிருந்தேன். ஆஸ்திரேலியாவில் ஓவியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட கோர்ஸ் படித்தேன் (குறிப்பாக எந்த படிப்பு என்று அவர் சொல்லவில்லை!).

இனி நடிப்பில் கவனம் செலுத்துவேன்," என்றார்.

அவரிடம், உங்களுக்கு ஏகப்பட்ட காதலர்கள் இருக்கிறார்களாமே... இப்போது யாருடன் காதல் என்று கேட்டதற்கு, "எனக்கு நிறைய பாய் ப்ரெண்ட்ஸ் உள்ளனர். அது கணக்கே இல்லை. ஆனால் யாருடனும் காதல் இல்லை. இப்போதைக்கு என் காதல் வீட்டில் நான் வளர்க்கும் நாயுடன்தான். அந்த நாய்க்குப் பெயர் வெண்ணிலா," என்றார்.
 

முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் செல்வராகவன்


பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கிறார்.

செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்.

இப்போது இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இந்தப் படத்தை, ராஜபாட்டை தயாரித்த பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஹாரிஸுடன் இணைவது உண்மைதான். நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்பவர்கள். சிறு வயதிலிருந்தே நானும் ஹாரிஸும் நண்பர்கள். அப்போது நான் முரட்டுப் பையன். ஹாரிஸ் அமைதியாக இருப்பார். இப்போது இருவரும் இணைந்து படம் பண்ணுகிறோம். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்," என்றார்
 

அன்னா உண்ணாவிரதத்திற்கு ரஜினி ஆதரவு- சென்னை போராட்டத்துக்கு கல்யாண மண்டபத்தைக் கொடுத்தார்


சென்னை: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர். உண்ணாவிரதத்தில் அவரும் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னைக்கு அன்னா ஹசாரே வந்திருந்தபோது தொலைபேசி மூலம் அவரிடம் பேசி அவரது போராட்டத்துக்கு அன்னா வாழ்த்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும், ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ர ஜினி.

இந்த நிலையில் அன்னா ஹசாரே மும்பையில் இன்று மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அதேசமயம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்திய ஊழல் ஒழிப்பு அமைப்பினரும் உணணாவிரதம் தொடங்குகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலவசமாகவே இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் மீடியா ஒருங்கிணைப்பாளர் பானு கோமஸ் கூறுகையில், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை எங்களுடன் பத்து நிமிடங்கள் இருந்து நேரில் பார்த்தார் ரஜினிகாந்த். ஊழலுக்கு எதிராக தானும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று எங்களிடம் தெளிவுபடுத்தினார்.

டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தனது மண்டபத்தை இலவசமாக கொடுத்துள்ளார் ரஜினி. அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

3 நாள் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு முடிவடையும்.இதுவரை 200 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முன்வந்து பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றார் கோமஸ்.

ரஜினியும் உண்ணாவிரதம் இருப்பாரா?

ரஜினிகாந்த் தனது மண்டபத்தைக் கொடுத்திருப்பதன் மூலம் அவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், மண்டபத்தை கொடுத்துள்ளார். ஆனால் உண்ணாவிரத்தில் பங்கேற்பாரா என்பது குறித்துத் தெரியாது. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்குக் களமாக ராகவேந்திரா மண்டபம் திகழப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறி. நல்லது யார் செய்தாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்றார்.
 

அமைதி வழி போராட்டம்- அன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு இ-மெயில்


சென்னை: வலுவான லோக்பால் மசோதா கோரி மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.

நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது. ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் இவ்வாறு தனது இமெயில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 

குடப்புழா முருகன் கோவில் காவடித் திருவிழாவில் பங்கேற்ற நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு


திருவனந்தபுரம்: முருகன் கோவிலில் நடந்த காவடித் திருவிழாவின்போது கலந்து கொண்ட மலையாள நடிகர் கலாபவன் மணி, போலீஸ்காரர் ஒருவரை இடித்துத் தள்ளியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணியின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியாகும். அங்குள்ள குடப்புழா முருகன் கோவிலில் காவடி திருவிழா நடந்தது. இதில் நடிகர் கலாபவன்மணியும் கலந்து கொண்டார்.

சாலக்குடி-ஆதிரப்பள்ளி சாலையில் காவடி ஊர்வலம் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் உமேஷ் வாகனங்களுக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நடிகர் கலாபவன்மணி உமேஷை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலாபவன் மணி பிரபலமான மலையாள நடிகர் ஆவார். இருப்பினும் ஜெமினி படத்தில் அவர் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் பிரபலமான வில்லனாக, காமெடியனாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒரே நாளில் 13... ஆனால் பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு!


இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.

இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 13 படங்கள்:

1. மதுவும் மைதிலியும்

2. பாவி

3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்

4. பதினெட்டான்குடி

5. வினாயகா

6. மகான் கணக்கு

7. வழிவிடு கண்ணே வழிவிடு

8. அபாயம்

9. வேட்டையாடு

10. மகாராஜா

இந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.

இவை தவிர, 'வேட்டை நாயகன்,' 'ஸ்பீட்-2,' 'புயல் வீரன்' ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.

ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:

நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம். இந்தியில் வெளியான '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.

வேட்டை

ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.

தமிழகத்தில் மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
 

'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்!


துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.

பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.

'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.

இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.

மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.
 

கார் மோதி பைக்கில் வந்தவர் பலி - பிரபல மலையாள நடிகை கைது!


திருவனந்தபுரம்: கருநாகப்பள்ளி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணி பலியான சம்பவம் தொடர்பாக நடிகை சங்கீதா மோகன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் கூறுகையில், "கேரள மாநிலம் தழவா குதிரைப்பந்தி பகுதியை சேர்ந்தவர் ஷிபு கோபிநாத் (வயது 43). இவர் கடந்த 22 ந் தேதி இரவு, ஒரு மோட்டார் சைக்கிளில் கருநாகப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா மருத்துவ மனை பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷிபு கோபிநாத் மீது ஒரு லாரி ஏறிவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த ஷிபு கோபிநாத், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

விசாரணையில், ஷிபு கோபிநாத் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது, மலையாள சினிமா மற்றும் டி.வி. நடிகை சங்கீதா மோகன் ஓட்டிய கார் மோதியது தெரிய வந்தது. இந்த நிலையில், நடிகை சங்கீதா மோகன் கருநாகப் பள்ளி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடிகை சங்கீதா மோகனை கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விபத்தில் சிக்கிய காரையும் போலீசார் கைப்பற்றினர்.

குடித்துவிட்டு கார் ஓட்டியவர்

நடிகை சங்கீதா மோகன் இதற்கு முன்பு ஏற்கனவே ஒருமுறை இதே முறையில் விபத்து ஏற்படுத்தியவர். குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது 2009ம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே இந்த முறை அவருடைய டிரைவிங் லைசென்சை ரத்து செய்வது குறித்து போலீசார் பரிசீலனை நடத்தி வருகிறார்கள்.
 

'மண்டோதரி' நயன்தாரா?


ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா மண்டோதரி வேடத்தில் நடிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தை அவரே இயக்குகிறார்.

இந்தப் படத்தில் வரும் மண்டோதரி (ராவணன் மனைவி) பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் ராம்கோபால் வர்மா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில்தான் தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்தார் நயன்தாரா. இதனால் மீண்டும் புராணப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், சமீபத்தில் அவருக்கு தெலுங்கில் வந்த பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டார். எனவே ராம் கோபால் வர்மாவின் இந்த வாய்ப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரும் ஆண்டில் நயன்தாரா - பிரபு தேவா திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்து செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.
 

கேரள அரசின் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்கள்!


திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் மலையாள சினிமா நடிகர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், அரசு ஊழியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இதற்காக அந்தந்த மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள், மேலே வசிப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வறுமைகோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டு மாதம் 25 கிலோ அரிசி, ரூ.25க்கு வழங்கப்படுகிறது. மற்ற கார்டுதாரர்களுக்கு கிலோ அரிசி ரூ.2 விலையில் ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியல் போலியாக பல பெயர்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பட்டியலை சரிபார்க்கும் பணி சமீபத்தில் நடந்தது.

போலியான பெயர் நீக்கம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள உணவு துறை அமைச்சர் சிபு பேபி ஜான், வறுமைகோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சினிமா நடிகர்கள் பெயர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது என தெரிவித்தார். அவர்களது பெயரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்தார். 23 ஆயிரம் அரசு ஊழியர்கள் பெயரும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. பட்டியலில் இடம் பெற்றிருந்த நடிகர்கள் பெயரை வெளியிட அமைச்சர் மறுத்து விட்டார்.