கமலுடன் கிஷோர்.. முதல் முறையாக.. தூங்காவனத்தில்!

சென்னை: தூங்கா வனம் படத்தில் நடிகர் கமலுடன் வில்லனாக மோதவிருக்கிறார் கன்னட நடிகர் கிஷோர்.

தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் தூங்கா வனம் படத்தில் ஏற்கனவே இன்னொரு வில்லனாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ள நிலையில் தற்போது கிஷோரும் ஒப்பந்தமாகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை திரையுலகில் அதிகரித்து இருக்கிறது.

Kishore in Kamal Haasan’s Thoongavanam

உத்தம வில்லனைத் தொடர்ந்து பாபநாசம் படத்தை வெளியிட இருக்கும் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக தூங்கா வனம் படத்தில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தை கமலின் நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் இயக்குகிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகர் பிரகாஷ்ராசுடன் கிஷோரும் கலந்து கொண்டதால் படத்தில் மற்றொரு வில்லனாக கிஷோரும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கிஷோரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தூங்கா வனம் படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் படத்தில் நான் என்ன ரோலில் நடிக்கவிருக்கிறேன் என்பது ரகசியம் என்று கிஷோர் கூறியிருக்கிறார்.

தமிழில் மிகச் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் கிஷோர் தற்போது துந்து கைக்கள் சாவாச என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஹைதராபாத்தில் நடந்து வரும் தூங்கா வனம் படத்தின் படப் பிடிப்புக் குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் தூங்கா வனம் படத்தின் தமிழ் படப் பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

தூங்காவனம் முத்தக் களமாக இருக்குமா அல்லது யுத்தக் களமாக மாறுமா..பார்க்கலாம்!

 

நல்ல செய்தி வருது... சிம்பு

சென்னை: தொடர்ந்து 3 வருடங்களாக நடித்த எந்தப் படமும் ரிலிசாகாமல் கவலையில் தத்தளித்த சிம்பு விரைவில் நல்ல செய்தி வரவுள்ளதாக டிவிட் செய்துள்ளார்.

வாலு, வேட்டை மன்னன் மற்றும் இது நம்ம ஆளு போன்ற மூணு படங்களுமே வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டதால் மனிதர் சோகப் பாட்டு பாடிக் கொண்டு திரிந்தார்.

Simbu Said  Good News To Fans

இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் கான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் லேசான நம்பிக்கை துளிர்விட தனது கெட்டப்பை சற்று மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தவர் தற்போது உற்சாக மூடுக்கு மாறி இனிமேல் எனக்கு எல்லாமே நல்ல நேரம்தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்படி என்ன நல்ல விஷயம் என்று கேட்கிறீர்களா வாலு படத்தின் டிரைலருக்கு முன்பாகவே படரிலீஸ் பற்றி முறையாக அறிவிக்கப்படும் மற்றும் இது நம்ம ஆளு படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்தி விரைவில் நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பற்றி விரைவில் முறைப்படி கூறுகிறேன் என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

நல்லது நடந்தா சரிதான்!

 

அட்லீ படத்தில் அப்பாவாக விஜய்

சென்னை: நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் புலி படத்தைத் தொடர்ந்து ராஜா ராணி படப்புகழ் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இரண்டு வேடங்களில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் ஒரு வேடத்தில் போலீசாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னொரு வேடம் ரகசியமாக வைக்கப் பட்டு இருந்தது. தற்போது அந்த இன்னொரு வேடத்தைப் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay plays a dad in Atlee’s film?

முதல் முறையாக இந்தப் படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஒரு படம் முழுவதும் அப்பாவாக விஜய் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை. கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய் தற்போது இந்தப் படத்திலும் இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக காக்கிச்சட்டை அணியவிருக்கிறார்.

புலி படத்தின் டப்பிங் வேளைகளில் பிசியாக இருக்கும் விஜய் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். படப் பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருக்கிறார் இயக்குனர் அட்லீ. அனிருத் இசையமைக்க விருக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் போவது கலைப்புலி எஸ்.தாணு.

பாசமான அப்பாவா வர்றாரா இல்ல பயங்கரமான அப்பாவா வரப்போறாரா...!

 

தமிழில் மிரட்ட வரும் “ஜுராசிக் வேர்ல்ட்“

லாஸ் ஏஞ்செல்ஸ்: 1993 ம் ஆண்டு வெளியாகி உலகையே ஒரு கலக்கு கலக்கிய ஜுராசிக் பார்க் படத்தின் நான்காம் பாகமான ஜுராசிக் வேர்ல்ட் படம் வரும் ஜூன் மாதம் 11 ம் தேதி தமிழில் வெளியாகிறது.

ஹாலிவுட்டின் மெகா இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்தப் படம் டைனோசர்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டிருந்தது, வசூலில் நல்ல வெற்றியைக் கொடுத்ததால் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

‘Jurassic Park’ to Air on NBCU Nets Ahead of ‘Jurassic World’ Release

தற்போது அதன் நான்காம் பாகமான ஜுராசிக் வேர்ல்ட் வரும் ஜூன் மாதம் 11 ம் தேதி அன்று உலகெங்கிலும் வெளியாகிறது, தமிழிலும் இப்படம் 2D, 3D, 3D மாக்ஸ் மற்றும் 4D தொழில்நுட்பங்களில் வெளிவரவுள்ளது.

கோலின் டேரவோராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை யுனிவேர்செல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது, கிரிஸ் பேராட், ப்ரைஸ் டெல்லா ஹார்டி மற்றும் டி சிப்கின்ஸ் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை மைக்கேல் சியாச்சினோ ஒளிப்பதிவு ஜான் ஸ்வர்த் மேன்.

படத்தின் கதை என்னவெனில் 22 வருடங்களுக்கு முன் (முதல் பாகத்தில்) உருவாக்கிய டைனோசர் பூங்காவில் தற்போது நூற்றுக்கணக்கான டைனோசர்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஒருபக்கம் டைனோசர்கள் பற்றிய ஆராய்ச்சியில் மனிதனுடன் இணைந்து வாழும் வகையில் ஒரு டைனோசரை உருவாக்குகிறார்கள்.

ஆராய்ச்சியில் நடந்த ஒரு தவறின் காரணமாக அந்த டைனோசர் மனிதனுக்கு எதிரானதாக மாறுவதுடன் பூங்காவில் இருந்தும் தப்பித்து விடுகிறது, தப்பித்து போன டைனோசரை வேட்டையாடிக் கொல்வதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

டைனோசரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்....!

 

சுருதி இப்போ டாக்ஸி டிரைவர்

சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா தல அஜித்தை இயக்கி வரும் புதிய படத்தில் டாக்ஸி டிரைவராக நடிப்பது அஜித் இல்லையாம், நடிகை சுருதி ஹாசனாம்.

ஆமாம் அஜித்தின் புதிய படத்தில் அஜித்தின் தங்கையாக நடிகை லட்சுமி மேனனும் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதியும் நடித்து வருகிறார்கள், அஜித் இந்தப் படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தில் டாக்ஸி டிரைவராக வருவது அஜித் அல்ல சுருதி என்று கூறுகிறார்கள்.

Shruti Hassan plays taxi driver

முதன்முறையாக சுருதி இந்தப் படத்தில் டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடிக்கிறார், முதற்கட்ட படப் பிடிப்பு பின்னி மில் மற்றும் பழைய மகாபலிபுரம், நாவலூர் போன்ற இடங்களில் தொடங்கி முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் படம் பாட்ஷா படத்தின் ரீமேக் என்று சொல்லப் படும் நிலையில் அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் படப் பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார் சிறுத்தை சிவா.

ஏற்கனவே வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹிட் கொடுத்த சிவா இந்தப் படத்தில் அஜித்தை என்ன வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை, அஜித் மற்றும் லட்சுமி மேனன் சம்பந்தப் பட்ட காட்சிகள் மட்டும் தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ளன, விரைவில் சுருதியை டிரைவராக வைத்து படம் பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.

நெக்ஸ்ட் நம்ம சுருதிய டாக்சி விளம்பரத்துல பார்க்கலாம் போல...!

 

கட்டிடம் முடிஞ்சாதான் கல்யாணம் –நடிகர் விஷால்

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதுமான நிதி இருந்தும் ஏன் இன்னும் சங்கக் கட்டிடத்தை கட்டவில்லை எனத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நடிகர் விஷாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களும் அவருடன் கைகோர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

 Hero Vishal challenges About His Marriage

இதற்கு மேலும் திரிகிள்ளிப் போடும் விதமாக புதுக்கோட்டை நாடக நடிகர்களை சமீபத்தில் நடிகர் விஷால் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். இதனால் நடிகர் சங்கத்தில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் தற்போதைய நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமார் விஷாலின் ஆர்வத்தை நான் மதிக்கிறேன் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது முடியாத ஒன்று இது விஷாலுக்கே நன்கு தெரியும். கட்டிடம் கட்டுவது தொடர்பாக சில சட்டப்பூர்வமான வேலைகள் நடந்து வருகின்றன, ஆனால் விஷால் இதனைப் புரிந்து கொள்ளாமல் தனது பேட்டிகளில் தொடர்ந்து பல தவறான கருத்துக்களை கூறி வருகிறார்.

நடிகர் சங்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக அவர் நடந்து கொள்கிறார், விஷால் சற்று அமைதி காக்க வேண்டும் என்று சரத்குமார் தனது பேட்டியில் கூறியிருந்த நிலையில், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த்து விட்டுத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் விஷால். விஷாலுக்கு தற்போது 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் அலைஓய்ந்து தலை முழுகினார்ப் போலத்தான்...

 

பாகுபாலி படமும் தொடரும் திருமண பந்தமும்

ஹைதராபாத்: பாகுபாலி படத்தின் நடிகை அனுஷ்காவிற்குத் திருமணம் என்று வெளியான செய்தியால் பரபரப்புக்குக்குள்ளான தெலுங்குலகம் மீண்டும் தற்போது அத்தகைய பரபரப்புக்கு ஆளாகியிருக்கிறது.

ஆமாம் அந்த படத்தின் நாயகன் பிரபாசுக்கு இந்த வருடம் டிசம்பரில் கல்யாணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தோட ராசி தொடர்ந்து அடுத்தடுத்து நாயகன், நாயகி இருவருக்கும் திருமணம் நடந்து விடும்போலத் தெரிகின்றது.

Actor Prabhas to get married in December

35 வயதாகியும் திருமணம் பற்றி எதுவும் வாய்திறக்காமல் இருந்து வந்த டோலிவுட்டின் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ் தற்போது பாகுபாலி படத்தை முடித்த கையோடு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.

பெற்றோர் பார்த்து உள்ள பெண்ணை மணம் முடிக்கப் போகிறார் என்று கூறுகிறார்கள். அந்தப் பெண் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவராம். தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாகுபாலி படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டு தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

70% படப் பிடிப்பு இரண்டாம் பாகத்தில் முடிந்து விட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியிருக்கிறார். டோலிவுட்டின் தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் என்ற பட்டப் பெயருக்கு உரியவரான பிரபாசுக்கு திருமணம் என்றவுடன் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள், ஆனால் இந்த செய்தியைக் கேட்டது முதல் அவரது இளம் ரசிகைகள் பலரும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி விட்டனராம்.

சரி சரி அழாதிங்க கேர்ள்ஸ்...கண்ணத் தொடைச்சுக்குங்க...!

 

மேகி விவகாரம்.. நொந்து "நூடூல்ஸ்" ஆகும் அமிதாப் மற்றும் மாதுரி தீக்சித்!

மும்பை: பிரபலமான நெஸ்லே நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பின் அளவு அதிகம் இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் கண்டுபிடித்து, அந்த நூடுல்சைத் தயாரிக்கும் பிரபலமான 5 கம்பெனிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது வழக்கில் ஒரு அதிரடியான திருப்பமாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Maggi noodles row: Case lodged against Nestle, Amitabh Bachchan and Madhuri Dixit

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகிய மூவரும் அந்த நூடுல்ஸின் விளம்பரத்தில் நடித்து இருந்தனர். பணத்துக்காக அந்த விளம்பரத்தில் நடித்ததுடன் அது உடல்நலத்திற்கு நல்லது என்றும் இவர்கள் மூவரும் விளம்பரம் செய்துள்ளனர்,

பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் இவர்கள் மூவரும் ஈடுபட்டிருக்கின்றனர் என்று வழக்கைத் தொடர்ந்தவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த நூடுல்சைத் தடை விதிக்கலாமா என்று மகாராஷ்டிர அரசும் உத்திரப் பிரதேச அரசும் தடை விதிக்கலாமா என்று அந்த மாநில அரசுகள் யோசித்து வரும் இந்த வேளையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இந்தித் திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப்புக்கு நேரம் சரியில்லையோ, மனுஷன் தொடர்ந்து பிரச்சினையில சிக்குறாரு..