ஸ்ருதி ஹாஸனுக்கும், எனக்கும் மோதலா?: பிரபுதேவா விளக்கம்

ஸ்ருதி ஹாஸனுக்கும், எனக்கும் மோதலா?: பிரபுதேவா விளக்கம்

சென்னை: ஸ்ருதி ஹாஸனுக்கும், தனக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர், நடிகர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திரைத்துறையில் ஒரு டான்சர் ஆவேன், நடிப்பேன், படத்தை இயக்குவேன் என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை. எல்லாமே எதிர்பாராமல் நடந்தது தான். ஒரு இயக்குனர் என்ற முறையில் படம் பார்க்க வருபவர்களை சந்தோஷப்படுத்துவது மிகவும் முக்கியம். என்னை பற்றி வரும் கிசுகிசுக்களை நான் கண்டுகொள்வதில்லை.

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். திருமணத்தை பற்றி நினைக்க நேரம் இல்லை. நேரம் கிடைக்கையில் சென்னை வந்து குழந்தைகளை பார்க்கிறேன். இல்லை என்றால் அவர்களை மும்பைக்கு வர வழைக்கிறேன். அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். அண்மையில் என் குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே கிடைக்கும் ஒரு வகை பொம்மை வேண்டும் என்று கேட்டனர். உடனே அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று அந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தேன்.

ராமையா வஸ்தாவய்யா ஷூட்டிங்கின்போது எனக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்ற செய்தி பரவியுள்ளது. அதில் சிறுதும் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ருதி ஒரு நல்ல டான்சர் என்றார்.

 

கவர்ச்சி நடன சர்ச்சை… மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

டெல்லி: மும்பையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஆபாசமாக நடனமாடியதாக தொடரப்பட்ட வழக்கில் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2006 ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மும்பையில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடந்தது. அதில் மல்லிகா கலந்து கொண்டு கவர்ச்சி நடனம் ஆடினார். இது டிவியில் லைவ் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கவர்ச்சி நடன சர்ச்சை… மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

இதையடுத்து மிகவும் ஆபாசமாக மல்லிகா நடனம் இருந்ததாக கூறி வக்கீல் நரேந்திர திவாரி, பரோடா வக்கீல்கள் சங்க முன்நாள் தலைவர் ஆகியோர் 2007ம் ஆண்டு வதோதரா கோர்ட்டில் வழக்குப் போட்டனர்.

இதில் மல்லிகாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினார் மல்லிகா. குஜராத் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் மல்லிகாவைக் கைது செய்ய வதோதரா கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மல்லிகா ஷெராவத். அதை விசாரித்த நீதிமன்றம், பிடிவாரண்ட்டுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

 

மெட்ராஸ் கபே படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு எதிராக எழிலரசு என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்தார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மெட்ராஸ் கபே படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

தனது மனுவில், "ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெளியிடப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். படத்தைத் தயாரிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே நிதியுதவி செய்துள்ளார்.

எனவே, திரைப்படத்தை தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து மறு தணிக்கை செய்ய வேண்டும். அதுவரையில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்," என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

பிரியாணி பாடல்களை சோனியே லீக் செய்தது அம்பலம்- எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!

சென்னை: பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களையும் பப்ளிசிட்டிக்காக சோனியே வெளியிட்ட ரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

கார்த்தி - ஹன்சிகா நடித்துள்ள பிரியாணி படத்துக்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இது யுவனின் 100 வது படம் என்பதால், படத்தின் பாடல்களை அவரது பிறந்த நாளான ஆக 31-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் நேற்றே பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகிவிட்டன.

பிரியாணி பாடல்களை சோனியே லீக் செய்தது அம்பலம்- எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!

இதுகுறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது, பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனமே என்பது தெரிய வந்துள்ளது.

ரஜினி நடித்த சிவாஜி படத்திலிருந்துதான் இந்தப் போக்கு ஆரம்பமானது. அந்தப் படத்தின் ஒரு கூடை சன் லைட் பாடலை இப்படித்தான் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினர்.

அதன் பிறகு பல பெரிய படங்களின் பாடல்கள் அல்லது வீடியோக்களை தயாரிப்பாளர்கள் அல்லது இசை வெளியீட்டு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்களே வெளியிடுவதும், பின்னர் போலீசில் புகார் செய்து ஸ்டன்ட் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.

இந்த முறை இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரியாணி படத்தின் அத்தனைப் பாடல்களையும் பாடலின் வெளியீட்டு உரிமை பெற்ற சோனி நிறுவனமே வெளியிட்டுவிட்டது. ஆனால் இது தெரியாமல் அல்லது காட்டிக் கொள்ளாமல் "அப்படியே ஷாக்காகிட்டேன்," என்று கூறியுள்ளார் யுவன்.

ஏன் இப்படி?

எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். இன்னொரு முக்கிய விஷயம், இந்தப் பாடல்களை இணையத்தில் டவுன்லோடு செய்வதன் மூலம் பாடல் வெளியிடும் நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது என்கிறார்கள்.

தங்களுக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என யாருமே அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கின்றனர்.

இல்லாவிட்டால் இந்நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் பிரஸ் மீட் கூட்டியிருப்பார்களே..

ஆனாலும் யுவனுக்காக அவரது பிறந்த நாளன்று பாடல் வெளியீட்டை நடத்தப் போகிறார்களாம்!

 

ஆக 20-ல் ராஜா ராணி படத்தின் ஒற்றைப் பாடல்... 23-ல் மொத்தப் பாடல்களும் வெளியீடு!

சென்னை: ஆர்யா - நயன்தாரா நடித்துள்ள, ஏகத்துக்கும் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் ‘ராஜா ராணி' படத்தின் ஒற்றைப் பாடல் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகிறது.

ஆக 20-ல் ராஜா ராணி படத்தின் ஒற்றைப் பாடல்... 23-ல் மொத்தப் பாடல்களும் வெளியீடு!

ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் பாடல் உருவாக்கம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் ஒற்றைப் பாடலை இம்மாதம் 20-ந் தேதி வெளியிட உள்ளனர்.

ஆக 20-ல் ராஜா ராணி படத்தின் ஒற்றைப் பாடல்... 23-ல் மொத்தப் பாடல்களும் வெளியீடு!

23-ந் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே ‘ஹே பேபி' என்ற ஒற்றைப் பாடலை வெளியிட்டு, கூடுதல் பப்ளிசிட்டி கிளப்ப படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

அக்டோபர் அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

விஜய்க்காக போராடுவோம்.. சினிமாவுக்கு நீதி வேண்டும் - ட்விட்டரில் பொங்கும் சித்தார்த்!

விஜய்க்காக போராடுவோம்.. சினிமாவுக்கு நீதி வேண்டும் - ட்விட்டரில் பொங்கும் சித்தார்த்!

சென்னை: இளையதளபதி விஜய்யை பலப்படுத்துவோம். சினிமாவுக்கு நீதி வேண்டும், போராடுவோம், என நடிகர் சித்தார் ட்விட்டரில் கூறியுள்ளார்.

தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிட முடியாததால் கைபிசைந்து நிற்கிறது அந்தப் படக் குழு. தயாரிப்பாளர் நெஞ்சு வலி என மருத்துவமனைக்குப் போய்விட்டார். அம்மா, எப்படியாவது படத்தை வெளியிட உதவுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார் விஜய்.

இந்த பிரச்சினையில் தலையிட திரையுலகினர் மிகவும் தயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் தனுஷ் குரல் கொடுத்தனர்.

ஆனால் பிரகாஷ்ராஜ் பின்னர் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். மக்கள் நலப் பணிகள் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து கூறி, பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார் தனுஷ்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ட்வீட்டில், 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இப்போது மோசமான நாட்கள். இளையதளபதி விஜய் மற்றும் அவர் டீமை பலப்படுத்துவோம். சினிமாவுக்கு நீதி வேண்டும். போராடுவோம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலியால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் நடித்துள்ள தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படத்தை வெளியிட உதவி செய்யக் கோரி நடிகர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை வெளியிட உதவி செய்யுங்கள், இல்லை என்றால் நான் கடனாளியாகிவிடுவேன் என்று ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டடார்.

பின்னர் படத்தை ரிலீஸ் செய்யக்கோரி படக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நேற்று மாலை அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஜெயினுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தலைவா பட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

சென்னை: தலைவா படத்தை வெளியில் கொண்டு வர பல தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் விஜய் தரப்பினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை.

முதல்வரைச் சந்தித்து படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்கத் திட்டமிருந்தது விஜய் தரப்பு. ஆனால் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் வந்துவிட்டதாம்.

தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

அடுத்து ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று கூறப்படும் மூத்த பத்திரிகையாளரைச் சந்தித்து உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரோ, தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் என்றும் பதில் கூறி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மூலம் முதல்வரிடம் பேச படத்தை வெளியிடும் தரப்பில் முயற்சித்ததாகவும், அதற்கு, இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு எதற்காக வரிச் சலுகை கேட்கிறீர்கள் என முதல் சந்திப்பிலேயே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

தலைவா விஷயம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை முதல்வர் என்ற நிலையில், இப்போது இன்னொரு முக்கிய தலைவர் மூலம் முதல்வரை அணுக முயற்சித்து வருகிறார்களாம் படத்தின் வெளியீட்டாளர்கள்.

 

கோச்சடையானில் ரஜினியின் டான்ஸ் அற்புதம்: ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: கோச்சடையானில் ரஜினி இளைமையாகத் தெரிவதுடன் அவரது நடனக் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளது என்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரஜினியின் கோச்சடையான் படத்திற்கும், ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திற்கும் இசைப் பணியை கவனிக்கிறார்.

இந்நிலையில் அவர் இந்த 2 படங்கள் குறித்து கூறுகையில்,

கோச்சடையான் படப் பாடல்கள் அருமையாக வந்துள்ன. இது குறித்து நான் மேலும் கூற விரும்பவில்லை. மொத்தத்தில் ரஜினி மிகவும் இளமையாகத் தோன்றுகிறார். படத்தில் அவரது நடன காட்சிகள் அற்புதமாக வந்துள்ளது.

ஐ படத்திற்கு இன்னும் ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்க வேண்டியுள்ளது. இந்த 2 படங்களின் பாடல்களுமே வித்தியாசமாக இருக்கும் என்றார்.

 

விஸ்வரூபம் விவகாரம்: ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு எதிரான மனுக்களை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்தது

விஸ்வரூபம் விவகாரம்: ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு எதிரான மனுக்களை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்தது

சென்னை: விஸ்வரூபம் படம் விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நிறுவனத்துக்கு எதிராக தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், டெல்லியில் உள்ள இந்திய (வர்த்தக) போட்டிகள் கமிஷனில் ஒரு புகார் செய்துள்ளது. அந்த புகார் மனுவில், ‘‘டி.டி.எச். மூலம் விஸ்வரூபம் படத்தை வெளியிட எங்கள் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், விஸ்வரூபத்தை திரையிடமாட்டோம் என்று சட்டவிரோதமான தீர்மானத்தை இயற்றியுள்ளன. இதனால், குறிப்பிட்ட தேதியில் விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்'' என்று கூறியுள்ளார்.

ஆனால், இப்படி ஒரு தீர்மானத்தை எங்கள் சங்கம் இயற்றவில்லை. தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் என்பது பதிவு செய்யப்பட்ட சங்கம் கிடையாது. ஆனால், இந்திய போட்டிகள் கமிஷனில் ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள தீர்மான கடித நகலில், எங்களது சங்கத்தின் பதிவு எண்ணும், முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தின் பதிவு எண், முகவரி ஆகியவற்றை பயன்படுத்த யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை.

எனவே எங்கள் சங்கத்தின் எண் மற்றும் முகவரியை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் 13.4.2013 அன்று புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அதேபோல் மற்றொரு மனுவில் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. பின்னர், தடையை திரும்ப பெறப்பட்டது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஆதரவாக எங்கள் நிறுவனம் செயல்பட்டது. ஆனால், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கிய புகாரின் அடிப்படையில், எங்கள் சங்கத்துக்கு இந்திய (வர்த்தக) போட்டிகள் கமிஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த 2 மனுக்களும் நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மேலும், போலியான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தால், அதுசம்பந்தமாக தங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயக்குனர் ஜெனரலுக்கு இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. எனவே தனியாக ஒரு வழக்கை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட தேவையில்லை என்று ராஜ்கமல் நிறுவனம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஆனால் மனுதாரர் தரப்பு வக்கீல், ‘இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷனில் ராஜ்கமல் நிறுவனம் போலியான தீர்மான நகலை தாக்கல் செய்துள்ளதால், இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அப்போதுதான், உண்மை நிலவரம் வெளியில் வரும்' என்று வாதம் செய்தார்.

ஆனால், ராஜ்கமல் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு எதிராக விசாரணை நடத்தத்தான் இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கத்துக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடவில்லை.

அதே நேரம், புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் பொய்யானதாக இருந்தால், இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன், அந்த புகாரை தள்ளுபடி செய்துவிடும். ஆனால், அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், இயக்குனர் ஜெனரல் விசாரணைக்கு, இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

எனவே ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணம் போலியானதா? என்பதை இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவின்படி விசாரணை நடத்தும் இயக்குனர் ஜெனரல் விசாரித்து, தகுந்த முடிவினை எடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை என்று இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது. ஆனால், மனுதாரர் பிரச்சினையை திசை திருப்ப, இரண்டு விதமாக விசாரணையை கோரி இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர், தன்னுடைய தரப்பு நியாயங்களை, இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் முன்பு தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதி 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

நம்ம கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதே: கவலையில் தளபதி

சென்னை: தளபதி நடிகர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிப் போயுள்ளதாம்.

தளபதி நடிகர் லீடர் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படம் ரிலீஸாவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், தயாரிப்பாளரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் ரிலீஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை.

முன்னதாக உலகநாயகனின் படத்திற்கு திடீர் தடை ஏற்பட்டு பின்னர் தாமதமாக ரிலீஸானபோது அது ஹிட்டானது. அதனால் தடை பட்டுள்ள தனது படமும் ரிலீஸான பிறகு நிச்சயம் ஹிட் தான் என்று தளபதி நம்பியிருந்தார். ஆனால் படத்தின் திருட்டு விசிடி விற்பனை ஜோராக நடப்பதால் மக்கள் அதை வாங்கி படத்தை பார்த்து வருகின்றனர்.

இப்படி திருட்டு விசிடியில் படத்தை பார்த்தால் நாம் படத்தை ரிலீஸ் செய்தாலும் யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்களே என்று நடிகர் கவலையில் உள்ளாராம். நாம் ஒரு கணக்கு போட்டு அது இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே என்று நடிகர் வருந்துகிறாராம்.

 

சத்தியம் டிவியில் சொல்வதற்கு அஞ்சேல்

சத்தியம் தொலைக்காட்சியில் அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களிடம் , நேருக்கு நேர் கேள்விகள் - சுடச் சுட பதில்கள் என்று ஒரு நேர்காணல் நிகழ்ச்சியாக ‘சொல்வதற்கு அஞ்சேல்' தயாராகியுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியின் நாயகர்களாக வந்து மக்கள் முன்னால் தங்கள் மேல் உள்ள அத்தனை சந்தேகங்ளையும் தெளிவாகச் சொல்லி அதற்கான நேர்மையை நிரூபிக்கிறார்கள்

சத்தியம் டிவியில் சொல்வதற்கு அஞ்சேல்

சமூகத்தின் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் விருந்தினர்கள் கலந்து கொள்ளும் சொல்வதற்கு அஞ்சேல் நிகழ்ச்சியானது சனிக்கிழமை தோறும் இரவு 9.00 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை ஞாயிறு காலை 11.30 முதல் 12.00 மணி வரை காணலாம்.

 

பிரியாணியின் எட்டுப் பாடல்களும் இணையதளத்தில் வெளியானது - அதிர்ச்சியில் யுவன்!!

பிரியாணியின் எட்டுப் பாடல்களும் இணையதளத்தில் வெளியானது - அதிர்ச்சியில் யுவன்!!

சென்னை: கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களும் இணையதளத்தில் லீக் ஆனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

யுவனின் இசையில் உருவாகும் 100வது படம் பிரியாணி. யுவனின் சகோதரர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், பிரமாண்ட விழாவில் இசைத் தட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அனைத்துப் பாடல்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவனுக்கு இது மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது. "முழுப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. பைரசியை ஒழித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள"தாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரியாணி படத்தில் கார்த்தி - ஹன்சிகா - பிரேம்ஜி நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்கள் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

முன்பெல்லாம் படத்தின் ஒரு பாடல் அல்லது ஓரிரு காட்சிகளைத்தான் திருட்டுத்தனமாக வெளியிடுவார்கள். ஆனால் முதல்முறையாக இப்போதோ அனைத்துப் பாடல்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

பிரியங்கா சோப்ராவால் நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல்

நியூயார்க்: பாலிவுட் நடிகை பிரியாங்கா சோப்ராவால் நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் பிளென்டர்ஸ் பிரைட் விஸ்கி விளம்பரத்தில் நடிக்க அமெரிக்கா சென்றார்.

பிரியங்கா சோப்ராவால் நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல்  

அங்கு நியூயார்க்கில் விளம்பர பட ஷூட்டிங் நடந்தது. பாலிவுட் நடிகை தானே கூட்டம் கூடாது என்று நினைத்து ஷூட் செய்துள்ளனர். ஆனால் அந்த வழியாகச் சென்றவர்கள் பிரியங்காவைப் பார்த்ததும் அவரை போட்டோ எடுக்க கூடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது.

உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா முதன்முதலாக விஜய்யின் தமிழன் படத்தில் தான் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அவர் ராம் சரண் தேஜாவுடன் நடிக்கும் ஜான்ஜீர் படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.

 

என்னது... தமிழக அரசுக்கு எதிரா விஜய் கேஸ் போடப் போறாரா?

சென்னை: தலைவா படம் ரிலீசாகாததால் தமிழக அரசுக்கு எதிராக விஜய் தரப்பில் வழக்குத் தொடரப் போவதாக பரபரப்பாக செய்திகள் கிளம்பியுள்ளன.

தலைவா படம் பழசாகிவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அதற்கு விஜய் தரப்பு எதிர்த்தும் எதிர்க்காமலும் காட்டும் எதிர்வினைகள்தான் சுவாரஸ்யமான செய்திகளாக உலா வருகின்றன.

நாளை இந்தப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விஜய் தரப்பு அறிவித்து, அரசிடம் அனுமதியும் கோரியது. ஆனால் கேட்ட சில மணி நேரங்களில அனுமதி மறுத்துவிட்டது தமிழக அரசு.

என்னது... தமிழக அரசுக்கு எதிரா விஜய் கேஸ் போடப் போறாரா?

வழக்கு?

இப்போது புதிய திருப்பமாக, கமல்ஹாஸன் ஸ்டைலில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார் என செய்திகள் கிளம்பியுள்ளன.

நாளை உண்ணாவிரதம் கேன்சலான நிலையில், படத்தை வெளியிடும் சூழலை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப் போகிறார்களாம் விஜய் தரப்பில். இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் விஜய் விவாதித்து வருகிறாராம்.

இந்த முடிவு உண்மைதானா என அறிய விஜய்யின் மேலாளர் பிடி செல்வகுமாரைத் தொடர்பு கொண்டோம். அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக மறுமுனையில் அறிவிப்பு வந்தது!