சென்னை: படத்தை தலைகீழாக படமாக்கியதால், உணர்ச்சிகளை வெளிக்காட்ட தனுஷ் மிகவும் சிரமப்பட்டார் என மரியான் பட இயக்குநர் பரத்பாலா தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மரியான் படம் பற்றி கூறும்பொழுது, "மரியான் என்பவன் ஒரு மீனவன். அவன் சாதாரண மீனவன் போல படகில் போய் மீன் பிடித்து வருபவன் அல்ல. ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவன்.
அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதற்கு அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் தனுஷ் கற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்தார்.
ஆடுகளம் பார்த்து வியந்தேன்...
2 வருடத்திற்கு முன்பு தேசிய விருது தேர்வாளாராக பணியாற்றி வந்தேன். அப்போது தனுஷ் நடித்த ‘ஆடுகளம்' படத்தை பார்த்தேன். அதில் தனுஷ் அந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உண்மையான நடிப்பை பார்த்து வியந்தேன்.
தனுஷ்க்கு பிடித்த மரியான்....
முன்பே ‘மரியான்' படத்தின் கதையை எழுதிவிட்டேன். தனுஷ்-க்கு இந்த கதை ரொம்பவும் பிடித்துவிட்டது. எனவே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவே படத்தை எடுக்கத் துவங்கி விட்டோம். 50 அடி ஆழ்கடலில், ஆக்ஸிஜன்கூட இல்லாமல், உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.
சூப்பர் லொகேஷன்ஸ்...
இந்த படத்துல லொகேஷன்ஸ் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். பாதி படம் கன்னியாகுமரி பக்கத்தில் நீரோடி என்ற கிராமத்திலும் மீதிப்படத்தை ஆப்பிரிக்காவில் சூடானிலும் படமாக்கியுள்ளோம். ஆப்பிரிக்கா பாலைவனம், அந்தமான் ஆழ்கடல் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும்போது அங்குள்ள சூழ்நிலை சரியில்லாததால் நமீபியாவில் படப்பிடிப்பை நடத்தினோம்.
நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் நண்பர்கள்...
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஏற்கெனவே நண்பர்கள். இந்த படத்தில் காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி என 5 விதமான எமோஷன்ஸ் இருக்கும். அந்த 5 உணர்வுகளையும் உள்வாங்கித்தான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் திரைக்கதையோடு ஒட்டியே ஒவ்வொரு பாடலும் பயணிக்கும். வாலி 2 பாடல்களும், கபிலன், தனுஷ், குட்டி ரேவதி ஆகியோர் தலா 1 பாடலும் எழுதியுள்ளனர்.
பிரான்ஸ் ஒளிப்பதிவாளர்...
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மார்க் கோனிக்ஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவு செய்த ‘ஜான் மேட் டாக்' என்ற பிரெஞ்ச் படத்தை பார்த்தபோது, அந்த படத்தில் இருந்த காட்சியமைப்புகள் இந்த படத்திற்கும் தேவைப்பட்டது. எனவே, அவரை தொடர்புகொண்டு சென்னைக்கு வரவழைத்தேன். அவருக்கு முழுக் கதையையும் விளக்கினேன். அவரும் ஒப்புக்கொண்டார். அவருடைய ஒளிப்பதிவில் இப்படத்தின் காட்சியமைப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
தலைகீழா படமாக்கினோம்...
படத்தை அப்படியே தலைகீழாக படமாக்கியுள்ளோம். அதாவது, கிளைமாக்ஸ் காட்சியை முதன்முதலாகவும், முதல் காட்சியை கடைசியிலும் படமெடுத்துள்ளோம். எனவே, கிளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கவேண்டிய உணர்ச்சிகளை முதலிலேயே கொடுக்கவேண்டும். இதற்காக தனுஷ் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
மே ரிலீஸ்..
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் பணிகளை முடித்து இந்த மாதம் இசையை வெளியிடவிருக்கிறோம். மே மாத முதல் வாரத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்."என்று அவர் கூறினார்.
ஆஸ்காரின் பாடல்...
இப்படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பது இசை ரசிகர்களுக்கு ஓர் இன்பஅதிர்ச்சி செய்தி.