ராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு!

Tms Ashes Strewn Rameshwaram Ocean

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் டிஎம் சவுந்திரராஜனின் அஸ்தி, ராமேஸ்வரம் கடலில் நேற்று கரைக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட உலகின் பிரபல பின்னணி சாதனைப் பாடகர், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட டி.எம்.சவுந்தர்ராஜன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை விட்டு சென்றுள்ள டி.எம்.எஸ். உடலுக்கு உலகத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையை சேர்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் சென்னையில் வசித்தாலும், அவருக்கு மதுரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனி ரசிகர் மன்றமே வைத்துள்ளனர் டிஎம்எஸ்ஸுக்காக.

இந்த ரசிகர்கள் டி.எம்.எஸ். அஸ்தியை ராமேசுவரத்தில் கரைப்பதற்காக மதுரை கொண்டு வந்தனர். இந்த அஸ்தி கலசத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்ட டி.எம்.எஸ். அஸ்தியை அவரது மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் அக்னி தீர்த்த கடலில் அஸ்தி கரைக்கப்பட்டது.

அஸ்தி ஊர்வலத்தில் மதுரை சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

 

விஜய்யின் தலைவாவை வெளியிடும் வேந்தர் மூவீஸ்!

எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தலைவா படத்தின் உரிமையை வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தலைவா. அமலா பால் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது.

vendhar movies release thalaivaa

இதன் கேரள விநியோக உரிமையை துப்பாக்கி படத்தை வெளியிட்ட தமீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கர்நாடக உரிமையை கே மஞ்சு பெற்றுள்ளார்.

இதனிடையே படத்தின் ஆடியோவை விஜய் பிறந்த நாளான அதாவது ஜூன் 22ம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

வேந்தர் மூவீஸ் நிறுவனம் ஏற்கெனவே 5 படங்களின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனம் வாங்கி வெளியிட்ட எதிர்நீச்சல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி விழாவை ஜெனீவாவில் பாரிவேந்தர் தலைமையில் நடத்தவிருக்கின்றனர்.

 

தல, கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்: நேரில் சென்று அழைத்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

Gv Prakash Invites Ajith The Big Day

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் அஜீத் குமாரை நேரில் சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை அளித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது நீண்டநாள் காதலியான பாடகி சைந்தவியை வரும் ஜூன் மாதம் 27ம் தேதி மணக்கிறார். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமனாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு காதல் ஜோடி தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வருகிறது.

இந்நிலையில் அவர்கள் அஜீத் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளனர். அஜீத் நடித்த கிரீடம் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார்.

அந்த படத்தில் வரும் அக்கம் பக்கம் பாடல் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெப்சி போராட்டம் வாபஸ்... இன்று முதல் படப்பிடிப்பு நடக்கும்!

சென்னை: கடந்த இரண்டு தினங்களாக நடந்த ‘பெப்சி' தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொருளாளர் அங்கமுத்து சண்முகம், நிர்வாகி தனபால் ஆகிய இருவரையும் திரைப்பட கார் டிரைவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதை தொடர்ந்து, ‘பெப்சி' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டன. விஷால் நடித்த ‘பாண்டிய நாடு, கார்த்தி நடித்த ‘பிரியாணி' உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

fefsi withdraws strike

‘பெப்சி' தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 2- வது நாளாக தொடர்ந்தது. இதனால் நேற்றும் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருடனும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

‘பெப்சி' தொழிலாளர்கள் நேற்று மாலை தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள்.

இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

பெப்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதாகவும், தாக்குதலில் தொடர்புள்ள மேலும் ஒருவரையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டத்தை தொடங்குவோம் என்றும் ‘பெப்சி' சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன்...! - மோசடி ராணி லீனா நீதிமன்றத்தில் கதறல்!

Leena Mariya Paul Bursts Before Magistrate

டெல்லி: பல கோடி மோசடியில் கைதாகியுள்ள பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகருடன் லிவிங் டுகெதர் முறையில் மனைவியாகவே வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன். என்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம்," என்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கதறி அழுதார் நடிகை லீனா மரியா பால்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை எஞ்ஜினீயர்.

லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர்.

இதுதவிர, இதே ஐஏஎஸ் அதிகாரி முகமூடியுடன் பலரிடம் கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்றுள்ளனர் பாலாஜியும் லீனாவும்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக கனரா வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.

பாலாஜியையும் சேர்த்தே கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வந்தபோது அவர் தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நான் கர்ப்பமாக உள்ளேன்.. ஜெயிலுக்கு அனுப்பாதீங்க!

நடிகை லீனாவை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார்.

"நான், சுகாசுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், மோசடியில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, விட்டு விடுங்கள்," என்று கெஞ்சினார்.

சென்னைக்கு...

ஆனால் மாஜிஸ்திரேட்டு, 72 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நடிகை லீனாவை பாதுகாப்பாக ரெயிலில் சென்னை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அவருக்கு துணையாக இருக்க, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள இன்ஸ்பெக்டர் விஜயகுமாரும், நடிகை லீனாவை அழைத்துக்கொண்டு நேற்று இரவு டெல்லியில் இருந்து ரெயிலில் சென்னை புறப்பட்டனர். அவர்கள் வரும் ரெயில் இன்று வியாழக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலுக்கு வருகிறது.

 

மது அருந்துவது, புகைக்கும் காட்சிகளில் நடிக்காத எம்ஜிஆர் கடவுளாகப் பார்க்கப்பட்டார்! - நீதிபதி

Hc Judge Hails Mgr Sivaji Movies Its Honest And Content

சென்னை: மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் ஒருபோதும் நடிக்காத எம்ஜிஆரை மக்கள் கடவுளாகப் பார்த்தனர். இறக்கும் வரை அவரை முதல் அமைச்சராகவே உயர்த்தி வைத்தனர், என்று உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் கூறினார்.

மடிசார் மாமி படத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இன்றைய படங்களின் கதை, ஹீரோக்களின் தன்மை மற்றும் தலைப்புகளை ஒரு பிடிபிடித்தார்.

நீதிபதி தன் உத்தரவில், "பாசமலர், பணமா பாசமா, அன்புக் கரங்கள், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, எதிர் நீச்சல், கப்பலோட்டிய தமிழன் என்று கடந்த காலங்களில் படங்கள் வெளியாயின. சட்டத்தை மதிப்பவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், நேர்மை, அர்ப்பணிப்பு உடையவர்களாகவும் கதாநாயகர்கள் சித்தரிக்கப்பட்டனர். இதனால்தான் அந்த கால கதாநாயகர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

மது அருந்துவது போலவும், புகைப்பிடிப்பது போலவும் என்றுமே நடிக்காத எம்.ஜி.ஆரை இறக்கும் வரை முதல்- அமைச்சராக மக்கள் உயர்த்தி வைத்தனர். இன்றைக்கு குற்றங்கள் செய்யும் கதாநாயகர்கள் கடைசியில் தப்பி விடுவது போல காட்டுகிறார்கள். கதாநாயகர்களை பின்பற்ற அவர்களின் ரசிகர்கள் விரும்புவதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பணம் சம்பாதிக்க செக்ஸ், வன்முறை கொடூர காட்சிகளை காட்டுவதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. திருட்டு பயலே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, போக்கிரி, சண்டைகோழி, மங்காத்தா, ரத்த சரித்திரம் என்ற தலைப்புகளில் படங்கள் வருகின்றன. நல்ல தலைப்புகளை படங்களுக்கு வைக்க வேண்டும். தணிக்கை துறை செயல்படுகிறதா என்று நம்புவதற்கு கடினமாக உள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவு திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் படத் தலைப்புகளை மறுபரிசீலனை செய்யவும் தயாராகி வருகின்றனர் மனசாட்சியுள்ள சில தயாரிப்பாளர்கள்.

 

பாத்ஷா ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினி முயற்சி

Rajini Tries Make Dhanush As Baadshah

சென்னை: ஜூனியர் என்.டி.ஆர். நடித்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படமான பாத்ஷா தமிழ் ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினிகாந்த் முயற்சி செய்து வருகிறாராம்.

ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படமான பாத்ஷா சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தைப் பார்த்த ரஜினி ரொம்பவே இம்பிரஸ் ஆகிவிட்டாராம். ரஜினி பாத்ஷாவை புகழ்ந்ததைப் பார்த்து அவர் தான் அதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் தனது மருமகன் தனுஷை நடிக்க வைத்தால் அவருக்கு ஒரு பெரிய ஹிட் கிடைக்குமே என்று நினைத்து அதன் உரிமையை வாங்க முயற்சி செய்து வருகிறாராம்.

பாத்ஷாவை தமிழ் மற்றும் இந்தியில் வெளியிடவும் ரஜினி திட்டமிட்டுள்ளாராம். தனது மாமனாருக்கு தன் மீது தான் எவ்வளவு அக்கறை. தனக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்று தனுஷ் நெகிழ்ந்து போயுள்ளாராம்.

 

இரண்டு பாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் 'வித்தையடி நானுனக்கு'!

இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் என்ற அறிவிப்போடு வருகிறது வித்தையடி நானுனக்கு.

பானுமுரளி - சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ராமநாதன் கே பகவதி.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "இது ஒரு சைக்கோ திரில்லர் படம். கதாநாயகன் கதாநாயகி என்று யாரும் இல்லை. இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவே. ஒரு ஆண், ஒரு பெண் இருவரைச் சுற்றியும் கதை நடக்கிறது.

a film with just two characters

பெண் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் செளரா சையத் நடித்திருக்கிறார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை மிகவும் சரளமாக எழுத, வாசிக்க மற்றும் பேசவும் திறன் பெற்ற நடிகை.

ஆண் கதாபாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டியதாகிவிட்டது... சில நடிகர்களை அணுகினோம்... அவர்களது தேதி ஒத்து வரவில்லை... வேறு வழியில்லாமல் நானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டேன்...

நாயகன் - நாயகி இல்லை என்பதால் டூயட்லாம் இல்லை. ஆனால் பாடல்கள் இருக்கின்றன... எங்களது கதைக்கும் கிளாசிக்கான ரொமான்ஸ் சூழ் நிலைக்கும் ஏற்ற பாடலைத் தேடிய போது மகாகவி பாரதியின் 'பாயும் ஒளி நீ எனக்கு...' என்கிற பாடல் எங்களுக்காகப் பாடப்பட்டது போலவே இருந்தது. இது தவிர இரண்டு சிறிய பாடல்கள் இருக்கின்றன. எல்லாமே மாண்டேஜில் தான் படமாக்கியிருக்கிறோம்.

படத்தின் கதை என்ன..?

வீட்டை விட்டு ஓடி வரும் பெண்ணின் கார் பழுதாகி விடுவதால் வழியில் ஒரு ஆண் அவளுக்கு லிஃப்ட் கொடுக்கிறன். கார் நேராக கொடைக்கானலில் ஒரு பங்களாவுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் திகிலான சம்பவங்கள்தான் மீதிப் படம்.

முழுப் படத்தையும் முடித்து ரஃப் கட் பண்ணிய பிறகு படம் 2.45 மணி நேரம் ஓடியது. படம் முழுவதும் இரண்டு பேர் பேசும் வசனங்களையும் உணர்ச்சிகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் குறைத்து 1.40 மணி நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு விறு விறுப்பான சைக்கோ திரில்லராக கொண்டு வர இருக்கிறோம். விவேக் நாராயணின் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ரெண்டு நடிகர்கள் தாம் என்றாலும். ஒளிப்பதிவாளர், ஒப்பனைக் கலைஞர், உடை என்று ஆரம்பித்து உதவி இயக்குனர் வரை கிட்டத்தட்ட 30 பேர் 25 நாட்கள் இரவு பகலாக உழைத்துப் படப்பிடிப்பு நடத்தி வந்தோம்," என்றார்.

மீடியா மர்ச்சென்ட்ஸ், ஐஎஸ்ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.

 

பெப்சியிலிருந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகியது - ராதிகா தலைமையில் புதிய அமைப்பு!

Small Screen Producers Splits From Fefsi

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பில் (பெப்சி) இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகி கொள்கிறது. இனி சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்கி தனித்து இயங்குவோம் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் நேற்று காலை நடந்தது. சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பெப்சி தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

முடிவில், பெப்சி அமைப்பில் இதுவரை இணைந்து செயல்பட்ட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம், இனி பெப்சி அமைப்பில் இருந்து விலகி கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியில், "கடந்த 2 நாட்களாக பெப்சி அமைப்பு தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னறிவிப்பு எதுவும் இன்றி சின்னத்திரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டார்கள்.

சீரியல் தயாரிப்பது என்பது தினசரி பத்திரிகை நடத்துவது மாதிரி. தினமும் படப்பிடிப்பு நடத்தி சேனலில் ‘டேப்' கொடுத்தால்தான் சீரியல்களின் ஒளிபரப்பு தடையில்லாமல் தொடரும். இப்படி திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது எங்களால் சேனலுக்கு குறித்த நேரத்தில் டேப்பை கொடுக்க முடியாமல் போய் விடுகிறது. அதனால் சேனலுக்கு தயாரிப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

எனவே இந்த மாதிரியான நிலைமை இனியும் தொடராமல் இருக்க சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்குவது குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதற்கான ஆக்கபூர்வ வேலைகள் தொடங்கவிருக்கிறது.

இந்த முடிவில் எங்களோடு சின்னத்திரையின் இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம், அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கமும் கைகோர்த்திருக்கிறது.

இது திடீர் முடிவு அல்ல. இந்த முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை. திடீர் திடீரென பெப்சியால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது தயாரிப்பாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது நான் தயாரித்து வரும் ‘வாணி ராணி' தொடருக்கு நாளைக்கு கொடுக்க என்னிடம் ‘டேப்' கிடையாது. பெரிய தயாரிப்பாளரான என் போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால், சிறிய தயாரிப்பாளர்களின் நிலை என்ன? தொடர்களில் பணியாற்றுகிறவர்களின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிக்கப்படத்தானே செய்யும்.

கடந்த 19-ந்தேதியும் இதுமாதிரி திடீரென படப்பிடிப்பை நிறுத்த சொன்னார்கள். இப்படி அடிக்கடி படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது எங்களுக்கு ஏற்படும் சிக்கலை பெப்சி தலைவரிடம் நானே ஒரு முறை போனில் பேசி தெரிவித்தேன். கடிதம் அனுப்பியும் எங்கள் நிலையை விளக்கினோம். ஆனாலும் ஸ்டிரைக் தொடரவே செய்கிறது.

இதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்ற நிலையில் தான் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறோம்.

தமிழ் சின்னத்திரைக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி கொண்டு அதில் எல்லாரும் இணைந்து வேலை செய்யவிருக்கிறோம். இதற்காக 7 கமிட்டி ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை கொடுத்து செயல்படுத்த இருக்கிறோம்.

ஏற்கனவே கர்நாடகம், கேரளா, ஆந்திராவிலும் இம்மாதிரி சின்னத்திரைக்கென தனி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஒரே நேரத்தில் பல்வேறு சேனல்களுக்குமாக 38 சீரியல்கள் தயாராகி வருகின்றன. இதில் ஒவ்வொரு சீரியலிலும் சுமார் 200 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தனை பேரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இது முடிந்த முடிவு. எங்களால் இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் போகமாட்டோம்,'' என்றார்.

முன்னதாக நிறைவேறிய பொதுக்குழு தீர்மானத்தில், பெப்சியில் இருந்து விலகல் தீர்மானத்தை தொடர்ந்து, மொழிமாற்ற தொடர்கள் சில சேனல்களில் ஒளிபரப்பாகி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

எப்படியோ, தயாரிப்பாளர்கள் தங்களின் பெரும் வில்லனாகப் பார்க்கும் பெப்சியை உடைப்பதற்கான முதல் அடியை நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார் எடுத்து வைத்துள்ளார் என்பதுதான் கோடம்பாக்க டாக்!

 

தங்க மீன்களுக்கு யு சான்று- சென்சார் குழு பாராட்டு

Thanga Meengal Gets Clean U Certificate

ராம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் தங்க மீன்கள் படத்துக்கு எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளித்துள்ளது சென்னை தணிக்கை குழு.

கற்றது தமிழ் மூலம் அறிமுகமான ராம், சில ஆண்டுகள் கழித்து, அப்பா - மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ள படம் தங்க மீன்கள்.

முதல் படமான கற்றது தமிழ் வணிக ரீதியில் சுமார் என்றாலும், அந்தப் படம் தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இப்போது தங்க மீன்கள் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குநர் ராம் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வரும் தங்க மீன்கள் படத்தை சமீபத்தில் தணிக்கைக் குழுவினர் பார்த்தனர்.

வெகுவாகப் பாராட்டிய தணிக்கைக் குழு உறுப்பினர்கள், இந்தப் படத்துக்கு எந்த வெட்டோ, ஆட்சேபமோ தெரிவிக்காமல் யு சான்று அளித்தனர்.

விரைவில் படம் திரையைத் தொடவிருக்கிறது.

 

பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் 49 வயதில் மரணம்!

Rituparno Ghosh National Award Winning Filmmaker Dies

கொல்கத்தா: பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் 49 வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

கணைய பாதிப்பால் அவதிப்பட்ட அவர், மாரடைப்பால் மரணத்தைத் தழுவியதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் 1963-ம் தேதி பிறந்தவர் ரிதுபர்னோ கோஷ். இவரது தந்தை ஒரு டாக்குமென்டரி பட இயக்குநர். தாயாரும் திரைத் துறையைச் சேர்ந்தவரே.

1994-ல் ஹிரேர் அங்டி என்ற வங்க மொழி படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் ரிதுபர்னோ கோஷ். அதே ஆண்டில் யுனிஷே ஏப்ரல் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும், அதில் நடித்த தேபஸ்ரீ ராய்க்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தன.

அதன் பிறகு ரிதுபர்னோ கோஷ் இயக்கிய அத்தனை படங்களும் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் ஆண்டு தோறும் விருது பெறுவது வழக்கமாகிவிட்டது.

ரிதுபர்னோ கோஷ் படமா... இந்த ஆண்டு நிச்சயம் ஒரு தேசிய விருது உண்டு எனும் அளவுக்கு மிகச் சிறந்த படங்களை அவர் உருவாக்கினார்.

இதுவரை அவர் 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் இரண்டு இந்திப் படங்கள், மற்றவரை வங்காளப் படங்கள். இவற்றில் 16 படங்கள் 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன!

அபோஹோமன் என்ற படத்துக்காக ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

இயக்கத்தோடு நில்லாமல், நான்கு படங்களிலும் நடித்துள்ளார் ரிதுபர்னோ கோஷ். அவற்றில் ஒரு ஒரிய மொழி படமும் அடங்கும்.

49 வயதில் அகால மரணத்தை ரிதுபர்னோ கோஷ் தழுவியிருப்பது இந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையற்ற வார்த்தைதான்.

பெருமளவு படங்களை அவர் வங்க மொழியில் உருவாக்கினாலும் அவற்றின் தாக்கம் இந்தியா முழுக்க விரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Read in English: Director Rituparno Ghosh passes away
 

ஏய் புருஷா.. ஞாபகம் இருக்கா... 'படம்' அனுப்பி கணவரை சீண்டிய நடிகை!

லாஸ் ஏஞ்சலெஸ்: வேலை வேலை என்று எப்பப் பார்த்தாலும் பிசியாக இருந்த கணவரை வழிக்குக் கொண்டு வர தன்னுடைய நிர்வாணப் படங்களை அவருக்கு மெசேஜ் செய்து கிளுகிளுப்பூட்டியுள்ளார் அமெரிக்க நடிகை மில்லா ஜோகோவிச்.

ஹாலிவுட் நடிகையான மில்லாவின் கணவர் பால் ஆண்டர்சன். இவர் திரைப்பட இயக்குநர் ஆவார். எப்பப் பார்த்தாலும் தனது கணவர் பிசியாக இருப்பதையும், அடிக்கடி தன்னுடன் தங்காமல் ஷூட்டிங் ஷூட்டிங் என்று பறந்ததாலும் கவலைக்குள்ளானார் மில்லா.

milla jovovich sends photographs to lift

சரி கணவரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று யோசித்துப் பார்த்த அவருக்கு நூதனமான ஒரு ஐடியா தோன்றியது. உடனே தனது நிர்வாணப் படங்களை சேகரித்தார். அவற்றை மெசேஜ் மூலமாக கணவருக்கு அனுப்பி வைத்தார்.

இதைப் பார்த்து பால் சிரித்தாரே தவிர உடனே கிளம்பி ஓடி வரவில்லையாம். மாறாக அவரும் பதிலுக்கு நான் ஸ்பாட்டில் இருக்கேன், ரொம்பப் பிசி என்று பதில் மெசேஜ் அனுப்பி மில்லாவை மேலும் சூடாக்கினாராம்.

நல்ல புருஷன், நல்ல பொண்டாட்டி...!

 

சாந்தனு பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: காவல் ஆணையரிடம் புகார்

Fake Facebook Id My Name Santhanu

சென்னை: சாந்தனு என்ற தன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு மோசடிச் செயல்கள் அரங்கேறி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையரிடம் சாந்தனு பாக்யராஜ் இன்று புகார் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் சித்து பிளஸ் டூ, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களின் மூலம் பிரபலம் ஆனார்.

இன்று சென்னை காவல் ஆணையரைச் சந்தித்த, சாந்தனு புகார் மனு ஒன்றைக் அளித்தார். அதில், அவர் ரியாஸ் என்பவரைக் குற்றவாளியாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், புகாரில் சாந்தனு கூறியுள்ளதாவது...

'என் பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்றைத் துவக்கி, அதன் மூலம் மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசச் செய்தி அனுப்புவது, பணம் வசூல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் இப்புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

சிம்புவின் திருமணம் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சாம்!

My Marriage Is Almost Done Simbu

சென்னை: சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்க்கிறார்கள் என்று பேச்சு அடிபட்ட நிலையில் அவர் புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

சிம்புவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சிம்பு சம்மதத்துடன் பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. அவருக்கு வேலூரில் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும் அவரைப் பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சிம்புவிடம் அண்ணா, உங்களுக்கு கல்யாணம் எப்பொழுது என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிம்பு அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ரகசிய திருமணமா அல்லது பெண்ணை முடிவு செய்து விட்டீர்களா?

பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு தற்போது ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.