‘மதுர மரிக்கொழுந்து வாசம்...’ எனப் பாடி நடிகையை சுற்றி வரும் வாரிசு

மயக்கும் குரலுக்கு சொந்தமான அந்த இரண்டெழுத்து பாடகரின் மகன் விரைவில் படமொன்றில் கதாநாயகனாக களமிறங்க உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு கலை நிகழ்ச்சியின் போது வாரிசு நடிகர் எப்போதும், எங்கேயும் நடிகை ஒருவருடனேயே வளைய வந்தாராம். அதிலும், விழாவில் கலந்து கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்காக மேடை யின் பின்புறம் பிரமாண்ட அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஏரியாவுக்குள் வாரிசு தன் ஜோடியுடன் மிக நெருக்கமாகக் காட்சி தந்தாராம்.

இந்த நெருக்கம் பற்றி கேள்விப்பட்டு விசாரித்த நண்பர்களிடம் "நாங்க சின்ஸியரா லவ் பண்றோம்' என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டாராம் வாரிசு. நடிகரின் அறிமுகப் படத்தில் அம்மணி தான் ஹீரோயின் என்பது கொசுறுச் செய்தி.

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக முயற்சிப் பண்ணுகிறார்களோ.....

 

அஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது

அஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது

கும்பகோணம்: அஜீத்தின் போஸ்டரைக் கிழித்ததால் ஏற்பட்ட கைகலப்பில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் போஸ்டர்கள் கும்பகோணத்தில் ஒட்டப்பட்டிருந்தன.

இவற்றை யாரோ சிலர் கிழித்தெறிந்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அஜீத் ரசிகர்கள், சிலரைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சில விஜய் ரசிகர்களும் இருந்ததாகக் கூறுகிறார்கள். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் கைகலப்பு அதிகமானது.

இந்த கைகலப்பில் 9 ரசிகர்கள் காயமடைந்தனர்.

சம்பவம் அறிந்த கும்பகோணம் போலீசார், ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் 22 பேரை கைது செய்தனர்.

காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அஜீத் படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஊரில் இத்தகைய கலாட்டாக்கள் நடப்பது வழக்கமாகி வருகிறது. இத்தனைக்கும் அவர் மன்றங்களைக் கலைத்துவிட்டது நினைவிருக்கலாம்.

 

மனிதனுக்கு நல்ல காலம் கெட்ட காலம்.. எதுவுமே நிரந்தரமில்லே!- ரஜினி

சென்னை: ஒரு மனிதனுக்கு கெட்ட காலமும் வரும் நல்ல காலமும் வரும்... எதுவுமே நிரந்தரமில்லை என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி, கமல் நடித்த 16 வயதினிலே படம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகிறது.

மனிதனுக்கு நல்ல காலம் கெட்ட காலம்.. எதுவுமே நிரந்தரமில்லே!- ரஜினி

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.

விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, பாக்யராஜ் என திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்றனர்.

படத்தின் ட்ரைலரை ரஜினியும் கமலும் சேர்ந்து வெளியிட்டனர். விழாவில் ரஜினி பேசுகையில், "தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப் போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் பணம் யாருக்கு போய் சேரும் என்று கேட்டேன். எனக்குத்தான் என்றார். அப்படியெனில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.

ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ராஜ்கண்ணு, அன்றைக்கே சொந்தமாக ரிலீஸ் செய்தார். கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது.

அதுமட்டுமல்ல, ராஜ்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்ல ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் சிக்கலைச் சந்தித்த போது, 'பதினாறு வயதினிலே படத்தை மறுபடியும் வெளியிட்டு அதில் வரும் பணம் முழுவதையும் கமல்ஹாஸனுக்கே தரப் போகிறேன், என்று சொன்னவர் ராஜ்கண்ணு. தான் கஷ்டத்திலிருந்தாலும், அடுத்தவர் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளாத மனம் அவருக்கு.

தற்போது 16 வயதினிலே மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன். மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும்," என்றார்.

 

கோவணத்தை உருவிட்டோம்ல! - கமலை வெறுப்பேற்றிய பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர்

சென்னை: பதினாறு வயதினிலே படம் வெளியானபோது, இந்தப் படம் அவுட் என்றும், கோவணத்தை உருவிட்டோம்ல என்று கமல் காருக்கு முன் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் டான்ஸ் ஆடியதாகவும் கமல்ஹாஸன் தெரிவித்தார்.

இன்று நடந்த 16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், இந்தப் படத்தின் வெற்றி குறித்து குறிப்பிடுகையில், "16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அத்தனை பேரின் தன்நம்பிக்கைக்காகவே நான் இங்கே வந்திருக்கிறேந்.

கோவணத்தை உருவிட்டோம்ல! - கமலை வெறுப்பேற்றிய பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர்

இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, படத்தின் பிஆர்ஓ சித்ரா லட்சுமணன் மாதிரி, நானும் ஒரு பிஆர்ஓ போல ஒவ்வொருவருக்கும் படத்தின் ஸ்டில்களைக் காட்டி நல்ல படம் பெரிய அளவில் போகும் என விளம்பரப்படுத்தினேன்.

ஆனால் ஒருவரும் அதை நம்பவில்லை. அன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர் எனப்பட்ட ஒருவர் இந்தப் படம் ஊத்திக்கும் என்றார்.

படம் வெளியானது. அன்று இதே கோடம்பாக்கம் சாலையில் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பண்டிதர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். காரை நான்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்ததும் கார் பக்கமாக வந்த அவர், படம் அவுட் என்று கூறிவிட்டுப் போனார்.

நான் காரை வேகமாக்கி, அவரை மறித்து என்ன அவுட் என்றேன்.

அவர் கோவணத்தை உருவிட்டோம்ல என்றார். அந்தப் படத்தில் நான் கோவணம் கட்டி நடித்திருந்தேன். சரி, என் கோவணம் போனாலும் பரவால்ல, தயாரிப்பாளர் கோவணத்தை காப்பாத்தியாகணுமே என கவலைப்பட்டேன்.

ஆனால் ரசிகர்கள் கோவணமல்ல... தங்கக் கிரீடத்தையே தலையில் வைத்து காப்பாற்றினர்," என்றார்.

 

கமல் சம்பளம் 27 ஆயிரம்... ரஜினிக்கு..? ஜஸ்ட் 3000 (அதிலும் 500 பாக்கி!) - இதெப்டி இருக்கு!!

சென்னை: 16 வயதினிலே படத்தில் நடித்ததற்காக கமல் ஹாஸனுக்கு ரூ 27 ஆயிரமும், ரஜினிக்கு ரூ 3000 மட்டுமே சம்பளம் பேசியதாக பாரதிராஜா தெரிவித்தார்.

16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசுகையில், " சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் இந்த விழாவுக்கு வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் மனசுதான் காரணம்.

கமல் சம்பளம் 27 ஆயிரம்... ரஜினிக்கு..? ஜஸ்ட் 3000 (அதிலும் 500 பாக்கி!) - இதெப்டி இருக்கு!!

எத்தனை ஆண்டுகளானாலும் அன்று நான் பார்த்த அதே ரஜினியையும் கமலையும் இப்போதும் பார்க்கிறேன்.

இந்த விழாவில் படத்தின் பட்ஜெட் குறித்து பாக்யராஜ் சொன்னார் (ரூ 4.5 லட்சம்). உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம்... இதில் நடித்த கமலுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா... 27 ஆயிரம்.

இந்தப் படத்தில் பரட்டை பாத்திரத்துக்கு யாரை போடலாம் என யோசித்த போது, 'பாலச்சந்தர் படத்துல ஒருத்தர் நடிச்சிருந்தாரே.. அவர் சரியா இருப்பார்' என்றார்கள்.

அப்போதெல்லாம் ரஜினி ஒரு மோட்டார் பைக்கில்தான் வருவார். வேகமா வந்து தலையை சிலுப்பிக் கொண்டு பரபரவென இருப்பார். அவரைப் பார்த்ததுமே அவர்தான் பரட்டை என முடிவு செய்துவிட்டேன்.

இப்போது அவரிடம் சம்பளம் பேச வேண்டும். சம்பளத்தை முடிந்த வரை குறைவாகப் பேச வேண்டும் என்பதால் நான், 'இது ஒரு ஆர்ட் பிலிம்... உங்க சம்பளம் எவ்ளோ'ன்னு தயக்கத்தோட கேட்டேன். திரும்பவும் இது ஆர்ட் பிலிம் என்று சொன்னேந்.

அவர் யோசித்தபடி, ஒரு 5000 என்றார். நான் 3000 தரேன்னு சொன்னேன். அவர் வேறு ஏதும் பேசவில்லை. உண்மையில் நான் அவருக்கு பேசிய சம்பளத்தில் 500 பாக்கி வைத்துவிட்டேன்," என்றார்.

 

விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்: அமலாபால்

சென்னை: தலைவா படத்தில் நடிக்கும் போது, விஜயின் நடனத்தைப் பார்த்து தனக்கு உள்ளூர நடுக்கம் உண்டானதாகத் தெரிவித்துள்ளார் அமலாபால்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தப் படம் ‘தலைவா'. படம் ரிலீசாவதில் பலப் பிரச்சினைகளைச் சந்தித்தப் போதும், அமலாவின் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.

விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்: அமலாபால்   

அத்தோடு, தற்போது தனுஷுடன் வேலையில்லாப் பட்டதாரி படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தவகையில் விஜயுடன் தலைவாவில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் அமலா. அதில் ‘சிறு வயதிலிருந்தே தான் விஜயின் தீவிர ரசிகை என்றும், இவ்வளவு சீக்கிரத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயுடன் நடனக் காட்சிகளில் நடிப்பது குறித்து உள்ளூர படபடப்பாக இருந்ததாம். இது குறித்து அமலா பால் கூறுகையில், ‘விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனது ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான விஜயுடன் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இயக்குநர் விஜய்க்கும் தனது நன்றியை தெரிவித்தார் அமலாபால்.

 

அவதூறு வழக்கு: அஞ்சலி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகி நகலை பெற வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.

அவதூறு வழக்கு: அஞ்சலி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி முன் வந்தது. அப்போது நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். அதற்குகளஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், சுவாதி, பசுபதி, சூரி
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
இசை: சித்தார்த் விபின்
வசனம்: கோகுல் - மதன் கார்க்கி
தயாரிப்பு: விஎஸ் ராஜ்குமார்
இயக்கம்: கோகுல்

ஒரு ஸ்மார்ட்டான காமெடிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாய் வந்திருக்கிறது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (பின்பாதி கொஞ்சம் இழுத்தாலும்!).

ஒரு சின்ன கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையில் சிரிப்புத் தோரணம் கட்டும் சமீபத்திய காமெடிப் படங்களிலிருந்து ரொம்பவே மாறுபட்டு, மூன்று கதைகளை ஒரு நேர்க்கோட்டில் இணைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கோகுல் (ஜீவாவை வைத்து ரவுத்திரம் படம் எடுத்தவர்). அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- விமர்சனம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, இந்த ஓரளவு என்பதே பெரிய விஷயம்தான்!

சுமார் மூஞ்சி குமார் என்கிற குமரவேலுக்கு (விஜய் சேதுபதி) முழு நேர வேலை டாஸ்மாக்கில் சரக்கடிப்பதுதான். அவருக்கு எதிர்வீட்டு நந்திதா மீது ஒருதலையாய் காதல். அவரது காதல் இம்சை தாங்காமல் தாதா பசுபதியிடம் போகிறார் நந்திதாவின் அப்பா.

இன்னொரு பக்கம், சுமார் மூஞ்சி குமாருக்கு கொஞ்சமும் சளைக்காத குடிமகனான பாலா (அஸ்வின்). டேமேஜர் (மேனேஜர்) எம்எஸ் பாஸ்கரின் இம்சையைத் தாங்கமுடியாமல் தவிக்கும் இவருக்கும் ஒரு காதலி, சுவாதி. காதலியிடம் வாயைத் திறந்தால் பொய்யாய்க் கொட்டுவார். குடிபோதையில் ஒரு பெண்ணை விபத்துக்குள்ளாக்கி, அவரது உயிரைக் காக்க அரிய வகை ரத்தம் தேட வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறரா்.

மூன்றாவது கதை கொஞ்சம் கில்மா மேட்டர். ஒரு பேட்டை ரவுடியின் மனைவிக்கு இரண்டு கள்ளக் காதலர்கள். அவர்களை வைத்தே கணவனை போட்டுத் தள்ளப் பார்க்கிறாள் மனைவி.

இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன.

படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஒருவர் விஜய் சேதுபதி. இன்னொருவர் அஸ்வின். சொல்லப் போனால் விஜய் சேதுபதி இரண்டாவதாகத்தான் வருகிறார். ஆனால் பர்பார்மென்சில் இது சுமார் மூஞ்சி அல்ல... சூப்பர் மூஞ்சி என சொல்ல வைக்கிறார் விஜய் சேதுபதி.

ஒரு ஆஃப்புக்காக விஜய் சேதுபதி அலையும் காட்சிகள் சிரிப்பை அள்ளுகின்றன. அதிலும் அந்த ரத்த வங்கியில் நந்திதாவிடம் ரொமான்ஸ் பண்ணும் விஜய் சேதுபதியின் பாடி லாங்குவேஜ், நிச்சயம் இன்றைய ஹீரோக்களில் இவர்தான் பெஸ்ட் என சொல்ல வைக்கிறது.

இன்னொரு ஹீரோவாக வரும் அஸ்வினும் கலக்கியிருக்கிறார். அவரது காமெடி உணர்வு, வசன உச்சரிப்பு பாங்கு.. இன்னொரு நம்பிக்கையான இளைஞர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார்!

நந்திதா, சுவாதி இருவருமே அவர்களின் முந்தைய படங்களை விட சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்துக்கு முக்கிய பலம் கோகுல் - மதன் கார்க்கியின் ஒன்லைனர்கள். அவற்றை அத்தனை பாத்திரங்களும் உணர்ந்து உச்சரிப்பது, தியேட்டரை அடிக்கடி குலுங்க வைக்கிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- விமர்சனம்

(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - படங்கள்)

ரொம்ப நாளைக்குப் பிறகு பசுபதி. சர்க்கரை வியாதி தாதாவாக வரும் அவர், விஜய் சேதுபதியின் காதலுக்கு பஞ்சாயத்து பண்ணும் இடங்களெல்லாம் அள்ளுகின்றன சிரிப்பை.

சூரி, எம்எஸ் பாஸ்கர் இருவரும் பார்ப்பவர் வாய்களையும் வயிற்றையும் கூடுதலாக வலிக்க வைத்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமியின் கேமிரா, சித்தார்த் விபினின் இசை படத்தை உறுத்தலின்றி ரசிக்க உதவுகின்றன. காதலிக்காக வேண்டிக் கொள்ளும் அந்த மகா லந்துப் பாட்டுதான் இனி ப்ளஸ் டூ, காலேஜ் பையன்களின் விருப்பப் பாடலாக இருக்கும் போல!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- விமர்சனம்

இனி டாஸ்மாக்கின்றி அமையாது தமிழ் சினிமா என்றாகிவிட்டது. ஒன்றும் சொல்வதற்கில்லை.

பொதுவாக புதிய இயக்குநர்கள் முதல் படத்தில் இமாலய வெற்றி பெற்று இரண்டாம் படத்தில் அந்த பிரஷர் தாங்காமல் சறுக்குவார்கள். கோகுலின் அப்ரோச் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்தில் கோட்டை விட்டார். அடுத்த படத்தை கூலாக எடுத்து கலக்கலாகத் தந்திருக்கிறார்.

இது சுமார் மூஞ்சி அல்ல... சூப்பர் மூஞ்சி. பார்த்து ரசிக்கலாம்!