சென்னை: தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு மற்றும் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை கோரி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
இதில் பங்கேற்க அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் அமீர் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு உடனே நடை முறைப்படுத்த வேண்டும்.
போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இலங்கையில் தமிழர் பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.
இனப்படுகொலை செய்த இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 19.3.2013 செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 6 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறது.
இந்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கில்டு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் 19.3.2013 அன்று ஒருநாள் படப்பிடிப்பு மற்றும் தங்களது பணிகளை தவிர்த்துவிட்டு, போராட்டத்தில் பங்கெடுத்து முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.