இதய நோய் பாதித்த 100 குழந்தைகளுக்கு உதவும் சல்மான்கான்!

மும்பை: இதய நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு உதவப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

நடிகர் சல்மான்கான் நேற்று ரம்ஜான் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் அவர் இதய நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் ‘ட்விட்டர்' சமூக வலைதளத்தில் ஒரு தகவலை பதிவு செய்தார்.

இதய நோய் பாதித்த 100 குழந்தைகளுக்கு உதவும் சல்மான்கான்!

அதில், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வசதி இல்லாத குடும்ப பின்னணியை கொண்ட 100 குழந்தைகளுக்கு தான் உதவி செய்ய விரும்புவதாகவும், அவர்களது சிகிச்சை செலவினை தானே ஏற்பதாகவும் தெரிவித்துளார். பீயிங் ஹ்யூமன் என்ற அறக்கட்டளை மூலம் இதனை அவர் செய்யப் போகிறார்.

தனது இந்த திட்டத்தில் பயனடைய விரும்புகிறவர்கள் தன்னை சமூக வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ள சல்மான், இதைப் பயன்படுத்தி யாரும் தன்னை மோசடி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சல்மானின் புதிய படம் கிக் குறுகிய காலத்தில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க!!- இது ஒன்இந்தியா வாசகர்களின் ஏகோபித்த முடிவு

சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியதும், அதில் விஜய்க்கு முதலிடம் என்று கூறி, அதற்காக தனி விழாவே நடத்தப் போவதாகவும் அறிவித்ததும், அதனால் வெடித்துள்ள சர்ச்சைகளும் நினைவிருக்கலாம்.

இதை மையப்படுத்தி நமது ஒன்இந்தியா தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தினோம்.

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க!!- இது ஒன்இந்தியா வாசகர்களின் ஏகோபித்த முடிவு

கருத்துக் கணிப்பின் தலைப்பு: 'விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், மதுரையில் விழா.. இதெல்லாம் சரிதானா?'

இந்த கருத்துக் கணிப்பு, நமது தளத்தில் தொடர்ந்து மூன்று தினங்கள் நடந்தது.

இதில் 42,114 பேர் பங்கேற்று வாக்களித்தனர். 233 கருத்துகள் பதிவாகி இருந்தன.

சமீபத்திய ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் மிக அதிகம் பேர் பங்கேற்றதும் கருத்துக்களிட்டதும் விஜய் பற்றிய இந்த கருத்துக் கணிப்புக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுப்பது, மதுரையில் விழா எடுப்பதில் தவறில்லை என்று வாக்களித்தவர்கள் 18.63 சதவீத்ததினர் மட்டுமே.

இப்படி செய்வது தப்பாச்சே என்று 21.35 சதவீதத்தினரும்,

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க, என்று 60.02 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர். அதாவது 81.37 சதவீதத்தினர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதுமட்டுமல்ல, மிக காரசாரமான கருத்துகளை இந்த கருத்துக் கணிப்பில் காண முடிந்தது. பெருமளவு கருத்துகளில் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, "சூப்பர் ஸ்டார் என்பது பதவி நாற்காலி அல்ல. அது ஒரு நடிகருக்கு தரப்படும் சிறப்பு பட்டம். எப்படி புரட்சித் தலைவர், மக்கள் திலகம், நடிகர் திலகம் பட்டங்கள் குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டும் என வழங்கப்பட்டதோ, அப்படி ரஜினிக்கு வழங்கப்பட்டதே சூப்பர் ஸ்டார்.

அவருக்கு இது நிரந்தரமான அடைமொழி. அதைப் பறித்து தனக்கு சூட்டிக் கொள்ள நினைப்பது விஜய்க்கு அழகல்ல. அவர் தனது இளைய தளபதி பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும்," என ஒருமித்த கருத்துக்களைக் காண முடிந்தது.

"ஒரே ஒரு சூரியன் தான் பகலுக்கெல்லாம்!
ஒரே ஒரு சந்திரன் தான் இரவுக்கெல்லாம்!
ஒரே ஒரு பாஷா (சூப்பர் ஸ்டார் ) தான் உலகுக்கெல்லாம்!"

-என பாட்ஷா படப் பாடலையே இந்த விவகாரத்துக்கு முத்தாய்ப்பாகவும் சில வாசகர்கள் எழுதியுள்ளனர்.

 

கார்த்தி படத்தில் நடிக்கிறார் வடிவேலு.. ஸ்ருதியைக் காதலிப்பது போல காட்சிகள்!

சென்னை: தெனாலிராமனுக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்கக் கதை கேட்டு வரும் வடிவேலு, கார்த்தியின் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

இந்தப் படத்தில் அவர் ஸ்ருதி ஹாஸனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறாராம்.

கார்த்தி படத்தில் நடிக்கிறார் வடிவேலு.. ஸ்ருதியைக் காதலிப்பது போல காட்சிகள்!

தெனாலிராமன் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், வடிவேலுவின் கவுரவத்தைக் குறைக்காத படமாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, இரு புதிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு. அதே நேரம் புதிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கவும் சம்மதித்துள்ளார்.

ரௌத்ரம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் படம் முழுக்க வரும் நகைச்சுவை வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். வடிவேலுவும் கதையைக் கேட்ட பிறகு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இந்தப் படத்தில் நாயகி ஸ்ருதி ஹாஸனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.

வடிவேலு இதே போல ஏற்கெனவே போக்கிரி படத்தில் நடித்தது நினைவிருக்கலாம். அதில் அஸினைக் காதலிப்பது போல நடித்திருப்பார். போதாக்குறைக்கு சூர்யா - அஸின் நடித்த கஜினி படத்தின் புகழ்பெற்ற சுட்டும் விழிச் சுடரே பாடலைப் பாடி ஆடுவது போல காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்திலும் அப்படி காட்சிகள் வைத்தால், ஏழாம் அறிவு பட டூயட்டைப் பயன்படுத்துவார்களோ?

 

நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்

நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படமான ஜிகினாவை இன்று தொடங்கி வைத்தார் இயக்குநர் லிங்குசாமி.

கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி போன்ற படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. ஆனால் எந்தப் படமும் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை.

நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்

ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். படத்துக்கு சினிமாவில் ரொம்ப பழக்கப்பட்ட பெயரான ஜிகினா என்பதைத் தலைப்பாக வைத்துள்ளார்.

இந்தப் படத்தை இன்றைக்கு சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் லிங்குசாமி தொடங்கி வைத்தார்.

'ஜிகினா' படத்தை ராகுல் பிக்சர்ஸ் சார்பில் கே டி கே தயாரிக்கிறார்.

நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்

விஜய் வசந்த் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் சானியா. இவர்களோடு சிங்கம் புலி,'கும்கி' அஷ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நந்தா பெரியசாமி இந்த படத்தின் கதை,திரைகதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.

பாலாஜி ரங்கா ஒளிபதிவில், ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் யுக பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்து அறிமுகமாகிரார்.

 

நான் ஒன்றும் போதைக்கு அடிமை இல்லை: ஷாருக்கான் மனைவி கோபம்

மும்பை: தான் போதைக்கு அடிமையானவள் இல்லை என்று நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் படத் தயாரிப்பாளராக உள்ளார். இது தவிர அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். 3 குழந்தைகளுக்கு தாயான அவர் போதைப் பொருள்களுக்கு அடிமை என்று செய்திகள் வெளியாகின.

நான் ஒன்றும் போதைக்கு அடிமை இல்லை: ஷாருக்கான் மனைவி கோபம்

அவர் வெளிநாடு சென்றபோது விமான நிலையத்தில் சோதனை நடத்தியபோது அவரிடம் போதைப் பொருள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் ஒன்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவள் அல்ல என்று கௌரி கான் தெரிவித்துள்ளார்.

கௌரி கானின் நெருங்கிய தோழியான நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனும் போதைப் பொருளுக்கு அடிமை என்று கூறப்பட்டது. அவரது போதைப் பொருள் பழக்கமும் அவரும், ரித்திக்கும் பிரிய ஒரு காரணம் என்று பாலிவுட்டில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடும்பத்தினருக்கு பிரியாணி விருந்தளித்து ரம்ஜான் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா

இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு முதல் முறையாக ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார் யுவன் சங்கர் ராஜா.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் இளைய மகன்.

குடும்பத்தினருக்கு பிரியாணி விருந்தளித்து ரம்ஜான் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா

தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்' படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசையில் ‘தரமணி', ‘வை ராஜா வை', ‘வானவராயன் வல்லவராயன்' ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றன. சூர்யாவின் அடுத்த படமான மாஸ்-க்கும் யுவன்தான் இசை.

யுவன் சங்கர் ராஜா திடீரென சமீபத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாகவும், அதில் தனக்கு நிம்மதி கிடைத்திருப்பதாகவும் அறிவித்தார். இந்த முடிவிற்கு இளையராஜா உள்ளிட்ட தன் குடும்பத்தினர் ஆதரவு தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலருக்கும் அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சியளித்தது. மசூதிக்கு செல்வது, தொழுகை செய்வது என்று இஸ்லாம் மத வழக்கங்களுக்கு முழுமையாக மாறிவிட்டார் யுவன்.

இந்த ஆண்டு யுவனுக்கு முதல் ரம்ஜான் பண்டிகை ஆகும். நேற்று யுவன் சங்கர் ராஜா, காலையில் மசூதிக்கு சென்று தொழுதுவிட்டு, வீட்டுக்கு வந்ததும் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்தார்.

இதில் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன் கார்த்திக் ராஜா, சகோதரிகள் பவதாரிணி, வாசுகி, சகோரதரர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

 

ஜெயம் ரவியின் தனி ஒருவன்... முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி!

சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறாராம் அரவிந்த சாமி.

தளபதியில் மணிரத்னத்தால் அறிமுகமாகி, பின்னர் ரோஜா மூலம் பெரிய கதாநாயாக உயர்ந்தவர் அரவிந்தசாமி.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து அடியோடு ஒதுங்கினார். வியாபாரத்தில் மும்முரமாக இறங்கினார்.

ஜெயம் ரவியின் தனி ஒருவன்... முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி!

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது மறுபிரவேசமும் மணிரத்னம் மூலமே நிகழ்ந்தது. அவர் இயக்கிய கடல் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்தார் அரவிந்தசாமி.

இப்போது முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தி - தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், தமிழில் ஜெயம் ராஜா இயக்க, ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

அவர் வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறை.

பட வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், அனைத்தையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் அரவிந்தசாமி, தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவற்றைப் பற்றி அவ்வப்போது ட்விட்டரிலும் எழுதி வருகிறார்.

 

எனக்கு ஒண்ணுமில்ல... நல்லாருக்கேன்! - கார்த்தி

சென்னை: எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது... நன்றாக இருக்கிறேன் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

எனக்கு ஒண்ணுமில்ல... நல்லாருக்கேன்! - கார்த்தி

அத்துடன் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டதால் சோர்வும் ஏற்பட்டது. டாக்டர்கள் கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று காலையும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானது.

இதுகுறித்து கார்த்தி தனது பேஸ்புக்கில், "எனது உடல்நிலை பூரண குணமாகிவிட்டது. தற்போது நலமுடன் இருக்கிறேன். எல்லோருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி தற்போது ‘கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஒரு மாதமாக கமுதியில் நடந்தது.

கார்த்தியும், லட்சுமிமேனனும் அங்கு முகாமிட்டு நடித்து வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டு கார்த்தி சென்னை திரும்பிய பிறகுதான் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டது.

 

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார் அபிராமி

ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை அபிராமி.

திவ்யா கோபிகுமார் என்ற பெயரில் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்த அபிராமி, தமிழில் 2000-ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார் அபிராமி

கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004-ல் இப்படம் வந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார் அபிராமி.

ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வாழ்க்கை மலையாளத்தில் படமாகிறது.

இதில் குட்டியம்மா வேடத்தில் போலீஸ் அதிகாரியாக அபிராமி நடிக்கிறார். இதைத் தொடர்ந்து கமல் ஹாஸன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் டப்பிங் பேசியுள்ளார். அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

நான் பேயை நம்புகிறேன்... - அஞ்சலி வாக்குமூலம்

நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகும் நபர்கள் ஆவியாக உலா வருவார்கள் என்பது உண்மைதான் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி' படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகளைப் பற்றிய கதை.

அப்படியெனில் அஞ்சலிக்கும் பேய் நம்பிக்கை உண்டா...?

இதுகுறித்து அஞ்சலி கூறுகையில், "உண்டு. எனக்குப் பேய் நம்பிக்கை ரொம்பவே உண்டு,

நான் பேயை நம்புகிறேன்... - அஞ்சலி வாக்குமூலம்

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகிறவர்கள் ஆவியாக மாறுகிறார்கள். தனது நட்சத்திரத்தில் பிறந்தவர்களைத் தேடி பிடித்து பேய்கள் பயமுறுத்தும் என்பது உண்மைதான். அதே நேரம் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பேயால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆஞ்சநேயரை கும்பிட்டால் பேய் தொல்லை இருக்காது என்பது நம்பிக்கை. சிறு வயதில் இருட்டை பார்த்து பயந்து இருக்கிறேன். ஏதோ உருவம் இருட்டில் நடந்து போவதை பார்த்து இருக்கிறேன். வளர்ந்த பிறகு அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் பேய் பிடித்தவர்களை பார்த்து இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை பேய் இருக்கிறது. பேயால் பாதிப்பும் நிறைய உள்ளது," என்றார்.

அஞ்சலி இப்போது தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மதகஜராஜா படத்துக்குப் பிறகு தமிழில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அவருக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரே தொல்லை இப்போதைக்கு இயக்குநர் மு களஞ்சியம்தான். அவரது ஊர் சுற்றிப் புராணத்தில் சில காட்சிகள் மட்டும் நடித்துவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதால், அந்தப் படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.