ராஸ் 3 படத்துக்காக 'ரவுசான' போஸ் கொடுத்ததில் தப்பில்லை... பிபாஷா

No Qualms Going Bold Raaz 3 Bipasha Basu    | ராஸ் 3  

டெல்லி: ராஸ் 3 படத்துக்காக நான் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்ததில் எந்தத் தப்பும் இல்லை என்று கூறியுள்ளார் பிபாஷா பாசு.

விக்ரம் பட் இயக்க. மகேஷ் பட், முகேஷ் பட் தயாரிக்க உருவாகியுள்ள படம் ரஹாஸ் 3. ரொமான்டிக் திரில்லர் படமான இதில் பிபாஷா பாசு நாயகியாக நடித்துள்ளார். படு கவர்ச்சிகரமாக செக்ஸியாக நடித்துள்ளார்.

ராஸ் படத்தின் தொடர்ச்சியான இதில், இம்ரான் ஹஷ்மியும் நடித்துள்ளார். ஈஷா குப்தாவும் படத்தில் இருக்கிறார். இப்படத்தை செப்டம்பரில் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் படத்தின் போஸ்டர்கள் இப்போதே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. காரணம், பிபாஷாவின் கவர்ச்சிகரமான போஸ்கள்.

இப்படத்தில் கவர்ச்சிகரமாக, கிட்டத்தட்ட ஒட்டுத் துணியில்லாமல் கூட பிபாஷா நடித்துள்ளாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிபாஷா கூறுகையில், இதில் என்ன வெட்கப்பட வேண்டியுள்ளது. படத்தின் கதையில் அப்படி உள்ளது. அப்படி இருக்கும்போது நடிப்பதில் என்ன தயக்கம். நான் ஒரு நடிகை, கதை என்ன சொல்கிறதோ, கேட்கிறதோ அதைத் தர வேண்டியது எனது கடமை என்றார்.

உண்மையில் சில துணிச்சலான கவர்ச்சிகர் காட்சிகளில் பிபாஷாவை நடிக்க வைக்க இயக்குநருக்கே தயக்கம் இருந்ததாம். ஆனால் பிபாஷாதான் தட்டிக் கொடுத்து தைரியமா எடுங்க, நான் நடிக்கிறேன் என்று கூறி திரில்லைக் கொடுத்தாராம்.

 

வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...?

An Article On Vaali

கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான் என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.

"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.

எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?

சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.

""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.

இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.

இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.

சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?

கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?

கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?

வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!

சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?

திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...

சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.

சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.

கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.

"சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது -
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்த
நிட்காமிய ஞானம் - என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!'

இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?

இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.

கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!

நன்றி: தினமணி

 

ஆன்மீகத்திற்கு 'ஷிப்ட்' ஆன தனனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வந்தார்!

Thanushree Dutta Acts Again   

பெங்களூர்: ஆன்மீகத்திற்கு மாறி விட்டதாக கூறப்பட்ட இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை கன்னடத்தில் நடிக்க போயிருக்கிறார்.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளைப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அதில் ஆண்களை வெறுக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் திடீரென ஆன்மீகத்திற்கு மாறினார். சினிமாவில் தான் பெரும் சிரமப்பட்டு விட்டதாகவும், இங்கு எல்லாமே போலி என்றும் அதிரடியாக கூறிய அவர் சினிமாவால் தான் இழந்தது அதிகம் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் மொட்டை போடவும் முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் மொட்டையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் தத்தா. கன்னடத்தில் உருவாகும் ஏனிது மனசல்லி என்ற படத்தில் நடிக்கிறாராம் தத்தா.

இருப்பினும் இப்படத்தில் தத்தாவின் தங்கச்சி இஷிதாதான் அறிமுகமாகிறாராம். முக்கிய வேடத்தில் தத்தாவும் நடிக்கவிருக்கிறார். ஏன் திடீரென மறுபடியும் வந்து விட்டீர்கள் என்று தத்தாவிடம் கேட்டால், என் தங்கச்சி இப்போதுதான் நடிக்க வந்துள்ளாள். அவளுக்கு இது புதுசு. எனவேதான் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறேன் என்றார்.

அது சரி, இவர் பட்ட கஷ்டத்தை, இவரது தங்கையும் படட்டும் என்ற நோக்கில் உதவிக்கு இருக்கிறாரோ என்னவோ...

 

அதுக்குள்ள ஏன் முத்திரை குத்துறீங்க... பார்வதி ஓமனக்குட்டன் விசனம்!

Parvathy Omanakuttan Is Worried Over Billa 2

நான் நடிச்சதே ஒரே ஒரு படம்தான். அதற்குள்ளாகவே என்னை ராசியில்லாத நடிகை என்று கூறுவது நியாயமா என்று விசனத்துடன் கேட்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

கேரளத்து பார்வதி தமிழில் பில்லா 2 படம் மூலம் நடிக்க வந்தார். நடிக்க வந்த முதல் படத்திலேயே அவருக்குக் கெட்ட பெயராகி விட்டது. பில்லா 2 படம் குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருவதோடு, பார்வதி நடிச்ச ராசிதான் படம் இப்படியாகிப் போச்சு என்றும் பேச ஆரம்பித்துள்ளனராம்.

இது பார்வதியின் காதுகளையும் எட்ட கடும் கவலைக்குள்ளாகியுள்ளாராம் பாரு. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்ததே ஒரு படம்தான். அது சரியாகப் போகவில்லையென்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக என்னை ராசியில்லாத நடிகை என்று கூறினால் எப்படி, இது நியாயமே இல்லையே என்று விசனப்படுகிறாராம்.

மேலும், எனக்கு இந்த ராசி, சென்டிமென்ட் இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. திறமையை மட்டுமே நம்புபவள் நான். எனவே ராசியில்லாத நடிகை என்று என்னைக் கூறாதீர்கள் ப்ளீஸ் என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக கேட்டுக் கொள்கிறார் பார்வதி.

இன்னும் ரெண்டு படம் பார்த்துட்டுக் கருத்தைச் சொல்லுங்கப்பா ஜோசியர்களே...!

 

ஸ்ரீதேவி படத்தில் அஜீத்!

Ajith Kumar S Cameo Sridevi S English Vinglish

ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் அஜீத் முக்கிய ரோலில் தலை காட்டவுள்ளாராம்.

இது கெஸ்ட் ரோல் என்றாலும் கூட முக்கியமான ரோலாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். பால்கி தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில், ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.

இதில் அஜீத் கெஸ்ட் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பகுதிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனராம். ஸ்ரீதேவியின் ரசிகர் அஜீத் என்பதால் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் ஒத்துக் கொண்டாராம் அஜீத்.

தமிழ்ப் பதிப்பில் அஜீத் நடித்துள்ளாராம். இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பலில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைக்கு வருகிறது.

 

கமல்ஹாசன் படத்தை மீண்டும் இயக்குகிறார் சக்ரி டோலட்டி?

Chakri Toleti Helm Kamal Hassan Thalaivan Irukkindran

கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான பில்லா 2 பாக்ஸ் ஆபீஸில் இரு வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் தற்போது வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்துப் போன இப்படம் மற்றவர்களைக் கவரத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்ரி டோலட்டி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அது கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்று கூறப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் பட இயக்கம் தொடர்பா சக்ரியுடன் பேச்சு நடந்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனுடன் நல்ல நட்பில் இருப்பதோடு, உன்னைப் போல் ஒருவனை ஹிட் படமாக்கியவர் என்பதாலும் சக்ரிக்கே தலைவன் இருக்கின்றான் படம் கிடைக்கும் என்று தெரிகிறது.

சக்ரி சலங்கை ஒலியில் கமல்ஹாசனை பாடாய்ப்படுத்திய குட்டிப் பையன் என்பது நினைவிருக்கலாம். இப்போது இயக்குநராகியுள்ள இவர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மறுபக்கம், தலைவன் இருக்கின்றான் படத்தை கமல்ஹாசனே இயக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை இதுகுறித்து தெளிவு ஏற்படாது என்றே தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு சக்ரியின் பெயர்தான் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதன் மூலம் தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமலும், ஆஸ்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான், ஊழல், கருப்புப் பணம் குறித்த கதை என்பதை கமல்ஹாசனே பூடகமாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 

'பெட்டிங்' குறித்து படம் எடுக்கும் 'ரோஸ்' வெங்கடேசன்!

Rose Venkatesan Debut Direction

கிரிக்கெச் சூதாட்டம் குறித்து படம் இயக்கப் போகிறார் ரோஸ் வெங்கடேசன். அரவாணி ஒருவர் படத்தை இயக்குவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.

அரவாணியான ரோஸின் இயற் பெயர் ரமேஷ் வெங்கடேசன். அரவாணியான பின்னர் இவர் ரோஸ் வெங்கடேசன் ஆனார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் வந்த இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானார். இப்போது சினிமாவுக்கு வந்துள்ளார். ஒரு படத்தில் குத்தாட்டமும் போட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான படத்தை இயக்கப் போகிறாராம் ரோஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில், மெக்கானிகல் என்ஜினீயரிங் படித்தேன். பின்னர், அமெரிக்கா சென்று லூசியானா பல்கலைக்கழகத்தில்,பயோ மெடிகல் படித்தேன். அரவாணியாக மாறியபின், என் பெயரை ரோஸ் வெங்கடேசன் என்று மாற்றிக் கொண்டேன்.

ஒரு சினிமா படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்பது, ரொம்ப வருட கனவு. அந்த ஆசை எனக்குள் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கான சந்தர்ப்பம் இப்போது அமைந்து இருக்கிறது.

என் நீண்ட கால நண்பர் செந்தில்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தியாவிலேயே ஒரு சினிமா படத்தை இயக்கும் முதல் அரவாணி, நான்தான்.

படத்துக்கு, கிரிக்கெட் ஸ்கேன்டல் என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கிரிக்கெட் சூதாட்டத்தை கருவாக கொண்ட கதை. படம், ஆங்கிலத்தில் தயாராகிறது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்.

கிரிக்கெட் சூதாட்டத்துடன், திருநங்கைகள் பற்றியும் 30 சதவீத கதை இருக்கிறது. அதில், ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ஆங்கிலம் பேச தெரிந்த-கிரிக்கெட் ஆர்வம் உள்ளவர்களை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறோம். பிரபலமான சில நடிகர்களும் பங்கு பெறுவார்கள்.

படப்பிடிப்பை சென்னையிலும், இலங்கையிலும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார் ரோஸ்.