தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.
ஜிஜே பிலிம்ஸ் பெயரில் ஏப்ரல் மாதத்தில், தவசி உள்பட பல படங்களைத் தயாரித்தவர்கள் ஜெயப்பிரகாஷ், ஞானவேல்.
பின்னர் தயாரிப்பு நிறுவனத்தைக் கலைத்துவிட்டு இருவரும் பிரிந்தார்கள்.
மாயக்கண்ணாடி படத்தில் நடிகராக அறிமுகமான ஜெயப்பிரகாஷ், தொடர்ந்து பசங்க படத்தில் பிரபலமானார். நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்று குணச்சித்திர நடிகர்களில் முதல் இடம் ஜெயப்பிரகாஷுக்குத்தான்.
இந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் மீது பட அதிபர் ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில் நானும் ஜெயப்பிரகாஷும் இணைந்து பல படங்கள் தயாரித்தோம். இதில் பலருக்கு கடன் கொடுக்க வேண்டி இருந்தது. கடன் முழுவதையும் என் மேல் சுமத்திவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரித்தது.
ஞானவேலுக்கு ரூ.1.25 கோடியை ஜெயப்பிரகாஷ் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.41 லட்சம் ‘செக்' கொடுத்ததாகவும் அது பணமின்றி திரும்பி வந்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கத்திடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.