சென்னை: நடிகர் கார்த்தி அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக ஃபேஸ்புக்கில் படம் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நடிகர்களில் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் எந்தக்கட்சிக்கும் ஆதரவு தருவதாக கூறியதில்லை.
ஆனால் விழுப்புரம் தனித்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து, நடிகர் கார்த்தி வாக்கு கேட்பது போல புகைப்படத்தை போட்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கார்த்தி சகுனி திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பார். வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருவார் அந்த போட்டோவை எடுத்து இரட்டை இலையோடு ஒட்ட வைத்துவிட்டனர். ஆனால் இந்த விபரம் நடிகர் கார்த்திக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினருடன் நட்பு பாராட்டி வருபவர் முதல்வர் ஜெயலலிதா, அந்த நம்பிக்கையில் அதிமுகவினர், கார்த்தியின் படத்தை எடுத்து அதிமுகவிற்கு வாக்கு கேட்பது போல இணைத்து விட்டனர்.
ஃபேஸ்புக்கில் இதனைப் பார்த்த நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.