சென்னை: விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்பில் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் வ கவுதமன்.
2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை. அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை. ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000க்கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உ லகம் முழுதும் அறிந்த உண்மை.
2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை. அது மட்டுமிலாமல் வரும் மார்ச் மாதம் ஐநாவில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளானோம்.
அதே நேரத்தில் (வரும் மார்ச்10) ஜெனிவாவில் நீதி கேட்டு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பதுதான் வேதனையானது.
மார்ச்1, 2 தேதிகளில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிலோன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்துகிறது.
பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.
இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்துக்குக் காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாகத்தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது.
தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு, சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.
இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும், அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம். இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.